நாம் ஏன் சினிமா பிரபலங்களைக் கொண்டாடுகிறோம்?
– புவி
குழந்தைப் பருவத்தில் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்தபடியாகக் கதைகளும் மிக முக்கியமானவை. குழந்தைகளின் அறிவு மற்றும் மனவளர்ச்சியில் கதைகளுக்குப் பெரும் பங்கு உண்டு என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சிறுவயது முதலே கதைகளைக் கேட்டும், கற்பனை செய்தும் வளர்கிறோம். ஒரு கட்டத்தில் கதைகள் வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், நமது சிந்தனையிலும் உணர்வுகளிலும் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. கதைகளில் வரும் கதாபாத்திரங்களுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அவர்களின் வெற்றி, தோல்வி, வீரம், தியாகம் என அனைத்தையும் நம்முடைய உணர்வுகளாகவே பார்க்கத் தொடங்குகிறோம்.
இந்தக் கதை மீதான ஈர்ப்புதான் காலப்போக்கில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறது. சிலர் மதக் கதாபாத்திரங்களையும், சிலர் சமூக ஆளுமைகளையும், இன்னும் சிலர் சினிமா கதாபாத்திரங்களையும் தங்களின் ஆதர்சமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
நமது கலாச்சாரத்தில் மதத்தின் வாயிலாகப் பல கதைகள் தலைமுறை தலைமுறையாக மக்களின் மனதில் விதைக்கப்படுகின்றன. அந்தக் கதைகளில் உருவாக்கப்பட்ட நாயகர்களை நிஜ வாழ்க்கையிலும் தேடத் தொடங்குகிறோம்.
அந்தத் தேடலுக்கு சினிமா ஒரு புதிய களமாக அமைகிறது. ஏனென்றால், நாம் சிறுவயதிலிருந்து கேட்ட கதைகளைச் சினிமா காட்சிகளாகவும், இசையாகவும், உணர்ச்சிகளாகவும் நம் கண்முன்னே உயிர்ப்பிக்கிறது. கதைகளில் கற்பனையாக ரசித்த வீரத்தையும், காதலையும், தியாகத்தையும் சினிமாவில் நேரடியாகப் பார்க்கிறோம். இதனால் கதாபாத்திரங்கள் மீதான நமது ஈர்ப்பு, அவற்றைத் திரையில் கொண்டுவரும் நடிகர்கள் மீதான ஈர்ப்பாக மாறுகிறது.
இப்படிக் கதைகளின் மீது தொடங்கிய நமது ஈர்ப்பு, கதாபாத்திரங்கள் வழியாக நடிகர்கள் மீதான ஈர்ப்பு இறுதியில் அந்த நடிகர்களையே நிஜ வாழ்க்கையின் கதாநாயகர்களாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்குகிறது.
நாம் கதைகளை ரசிக்கிறோமா? கதாபாத்திரங்களை ஆராதிக்கிறோமா? அல்லது அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் நடிகர்களையே நிஜ வாழ்க்கையின் நாயகர்களாக மாற்றிவிடுகிறோமா?
இதன் விளைவுதான் சினிமா பிரபலங்களை அளவுக்கு அதிகமாகக் கொண்டாடும் நமது சமூக மனநிலையோ?

