டோரதி
- பரிவை சே.குமார்
இப்போதெல்லாம் எல்லோருக்கும் பிடித்த, எல்லோரும் பாராட்டிய படங்களைப் பற்றிப் பேசும்போதோ, எழுதும்போதோ மாற்றுக் கருத்தை வைத்தோம் என்றால் நம்மையும் நம் குடும்பத்தையும் என்ன பேசுவதென்று இல்லாமல் பேசும் கலாச்சாரம் வேகமாகப் பரவிவருகிறது. அதுவும் சமூக வலைத்தளங்களில் மாற்றுக் கருத்தை வைத்துவிட்டால் அவ்வளவுதான், கருத்தில் வந்து ரொம்பக் கருத்தாய் பேசுவார்கள். சமீபத்தில் வந்த சூப்பர் ஸ்டாரின் படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் எழுதிய நண்பர்களின் பதிவுகளின் கீழ் வந்த கருத்துக்களெல்லாம் கேடுகெட்ட கருத்துக்கள். அப்படிக் கருத்திட்டவர்கள் அவரின் ரசிகர்களாக இருந்தால் கூட சரி தலைவன் மீதான அன்பில் இப்படி எழுதியிருக்கிறார்கள் என நினைக்கலாம். எழுதியவர்கள் எல்லாமே… சரி விடுங்க. நாரதர் கவிராஜ் சொல்வது போல் அரண்மனைக் கோழி முட்டை அம்மிக்கல்லையும் உடைக்கும். நமக்கெதுக்கு இவங்க அரசியல்…?
நானெல்லாம் புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம் என நிறைய எழுதிக் கொண்டிருந்தவன்தான். சமூக வலைத்தளங்களின் போக்கை மனதில் கொண்டு அதையெல்லாம் இப்போது அங்கே எழுதுவதில்லை. குறிப்பாக, இப்போது முகநூலில் பெரும்பாலும் எதுவும் எழுதுவதில்லை. சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் தாங்கள் போட்டி வைத்துத் தேர்ந்தெடுத்த சிறுகதைகளில் இருந்து ஒரு பெண் எழுத்தாளரின் கதையைப் பகிர்ந்திருந்தார். விருப்பம் இருப்பவர்கள் வாசிக்கலாம் என்றுதான் சொல்லியிருந்தாரே ஒழிய, என் பக்கம் வருபவரெல்லாம் வாசித்துத்தான் ஆகவேண்டும் எனக் கட்டளை எதுவும் இடவில்லை. அங்கு வந்த ஒருவர் ரொம்பத் தரக்குறைவாய் கருத்துப் போட்டிருந்தார். அதுவும் அந்தப் பெண் எழுத்தாளரை ஒருமையில் விளித்து… நாமெல்லாம் பெரியவர்களை மட்டுமல்ல முக்கியமானவர்களையும் ஒருமையில் ரொம்பக் கீழ்த்தரமாய் விமர்ச்சிப்பவர்கள்தானே… முகம் தெரியாத ஒரு எழுத்தாளரை விமர்ச்சிப்பதைக் கேட்கவும் வேண்டுமா…?
முதல்லயே சொல்லிடுறேன் எனக்கு டோரதி ஆஹா ஓஹோன்னு எல்லாம் இல்லை. அதுவும் படம் முடிஞ்சிருச்சுன்னு நினைச்சப்போ அடுத்து ஒரு கிளைமேக்ஸ் முத்தம் வச்சான் பாருங்க… அட… அட… அதுக்குச் சில விளக்கம் வேற.
படத்தை மொத்தமாய் தூக்கி நிறுத்தியிருப்பவர் இளையராஜாதான். சட்டி, முட்டிகளை உருட்டுவோர் மத்தியில் இதமான இசை படம் முழுவதும் விரவிக் கிடப்பது மனதுக்கு மகிழ்ச்சி. அவர் கூட இந்தப் படத்துக்கு ரொம்பச் சந்தோசமாக இசை அமைத்திருக்கிறார் என்பதுபோல்தான் இருந்தது. வனக்கிளியே என அவர் ஆரம்பிக்கும் போது மனம் மகிழ்கிறது. குறிப்பாக ‘கைக்குள் இருந்த ஓர் கனகமணி’ பாடல், ராஜாவின் குரலில் ரொம்பவே மனசை உலுக்கியது.
தொன்னூறுகளில் தன் உடலில், உணர்வுகளில் மாற்றம் வருவதை ஒருவனோ ஒருத்தியோ இப்போது போல் உடனே சொல்லிவிட முடியாது. மாறியும் விட முடியாது. அந்த அவஸ்தையை மனசுக்குள் அடக்கி வைத்துப் புழுங்கத்தான் வேண்டும். அதுதான் இக்கதையின் நாயகனுக்கும் நடக்கிறது. ஊருக்கும், வீட்டுக்கும், நட்புக்கும் பயந்தே தனக்குள் மலர்ந்த பெண்மையை மறைக்கப் போராடி, ஒரு கட்டத்தில் தான் இதுதான் என வெளிக்காட்டி விடுகிறான். அதன்பின்தான் இந்த ஆணாதிக்கச் சமுதாயம் அவனை அழிக்கத் துடிக்கிறது. ஆணாதிக்கம் நிறைந்த குடும்பம் என்பதால் பெண்களை எல்லாம் கொன்று விடுவார்கள் போல.
ரிஷிகாந்தும் சனந்த் ரெட்டியும் படத்தில் கார்த்தி, சுப்பு என்ற நண்பர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக சனந்த் ரெட்டி தனது பெண் தன்மையை வெளிக்காட்டும் இடங்கள், பெண்ணாய் மாறி நிற்கும் காட்சிகள் என எல்லாவற்றிலும் ரிஷியைப் பின்னுக்குத் தள்ளி உயர்ந்து நிற்கிறார். நல்ல நடிப்பு… அதுக்காக கமல், பிரசாந்த் போட்ட பெண் வேடங்களை எல்லாம் குறைத்து மதிப்பிட்டு எழுதப்படும் விமர்சனங்கள் அளவுக்கெல்லாம் இல்லை. திருநங்கையாக மாறி நிற்கும் சனந்த் அவர்கள் அளவுக்குச் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.
குடும்பத்துல எல்லாரும் ரவுடிங்கிறானுங்க… வட்டிக்குக் கொடுத்து ஊருக்குள்ள ஏதோ சின்னச் சின்ன காரியம் பண்ணிக்கிட்டு இருப்பானுங்க போல. அதெல்லாம் விரிவாப் பேசலை இயக்குநர். அவரின் கவனமெல்லாம் சனத்தை டோரதியாக மாற்றுவதில் இருந்ததால் அதெல்லாம் எதுக்குன்னு நினைச்சிட்டார் போல. இதேபோல்தான் ரிஷி மற்றும் சனந்தால் கொலை செய்யப்படும் நபரும், பெரிய ரவுடி என்பதாய் காட்டப்படும் ஆனால் அவர் என்ன செய்தார் என்பது மட்டும் காட்டப்படமாட்டாது. தங்கையைக் காதலிப்பவனைப் போட்டு அடிப்பார்…. காரிலும் புல்லட்டிலும் வருவார்… கத்தியால் குத்துப்பட்டுச் செத்தும் போவார்… அவ்வளவே.
டோரதியாக வரும் கீர்த்தி சுரேஷ் எதற்காக இந்தப் படத்தில் வருகிறார் என்பதே புரியாத புதிர்தான். நம்ம தமிழ்ச் சினிமாவைப் பொறுத்தவரை படித்த, அழகான பெண்கள் ரௌடியையும், கொலைகாரனையும் படிக்காமல் ஊருக்குள் காட்டானாய்ச் சுற்றுபவனையும் விரட்டி விரட்டிக் காதலிப்பதும், அவர்களைக் கல்யாணம் செய்து கொள்வதும் சகஜம்தான். இதில் ரவுடியான ஒருத்தன் கேரளா போனபோது அழகான கீர்த்தி சுரேஷை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திடுறான். அதுக்கு அவன் சொல்ற காரணம் ‘என்னைய புடிச்சிருக்கு, அவுக அப்பாம்மாவைப் புடிக்கலைன்னு சொன்னா, அதான் கூட்டியாந்துட்டேன்’ அவ்வளவுதான். அதுவும் கேரளாவில் ஆள் கிடைக்காமல் தமிழ்நாட்டுக்கு…. சரித்தான்.
டோரதி அந்த வீட்டில் ரொம்ப நாளெல்லாம் வாழ்ந்துவிடவில்லை. சில நாட்கள்தான்… கிழவன் திரும்பி வந்ததும், சுப்பு அவளுடன் இருக்கும் நெருக்கத்தைப் பார்த்து போட்டுத் தள்ளிடுறான்… அப்படித்தான் நாம எடுத்துக்கணும். அவள் எதற்காகச் செத்தாள் அல்லது கொல்லப்பட்டாள் என்பதற்கான தெளிவான காரணங்கள் எல்லாம் இல்லை. நம்மைப் பொறுத்தவரை சுப்புவுடனான நெருக்கமே கொலைக்கான காரணம்.
டோரதியுடன் கிணற்றில் அமர்ந்து சுப்பு தனது பெண் தன்மையைப் பற்றிப் பேசும் இடம் அருமை. இதற்காகத்தான் கீர்த்தி சுரேஷ் என்றால், சுப்பு அடிக்கடி போய் அழும் அவனது தோழியே போதுமானவளாக இருந்திருக்கலாமே…? எதற்காக கேரளத்தில் இருந்து சேச்சி வரவேண்டும்…? ரவுடியை நல்ல புள்ளைங்க கட்டிக்கங்க எனச் சொல்லும் எங்கள் தமிழ்ச் சினிமாவின் பண்பாட்டைக் காப்பதற்காக கார்த்திக் சுப்புராஜ் வைத்தார் போல.
நண்பனின் நிலை பார்த்து அவனை வெறுக்கும் ரிஷிகாந்த், அவனைக் கொல்வதற்கும் ஒத்துக் கொண்டு பயணப்படும் போது மருத்துவமனையில் ஒரு பிச்சைக்காரன் இறந்து போனப்பவே சரி இவனைத்தான் சுப்புவாகக் காட்டுவான் என நமக்குத் தெரியாமலா இருக்கும்…? அதன்பின்னும் கதை நீளும்… புரட்சி பேசவேண்டுமல்லவா…
சின்ன வயதில் சுப்புவிடம் வீரமும் கார்த்தியிடம் கோழைத்தனமும் இருக்கும் வளர்ந்தபின் அது அப்படியே இடம் மாறியிருக்கும். அதெல்லாம் ரொம்பச் சிறப்பா வந்திருக்கும். அதுவும் லாரியில் பயணப்படும் போது ஓரிடத்தில் சுப்பு திருநங்கையாய் போடும் சண்டை… சிறப்பு. சின்ன வயதில் அடித்துவிட்டு மூக்கில் விரலை வைத்துச் செய்வதைப் போல் அந்தச் சண்டை முடிந்ததும் செய்யும் போது நீண்ட நேரத்துக்குப் பின் சுப்புவின் பெண்மைக்குள் இருந்து மீண்டும் ஆண்மை மலர்ந்து அணையும் இடம் அட போட வைத்தது.
நண்பனை எதிரிபோல் கூட்டிச் சென்று, தன் உயிரைக் காப்பாற்றியதும் அப்படியே மாறி, ‘நீ போடி’ எனச் சொல்லி விட்டுவிட்டு வருவதெல்லாம் கதைக்கு நல்லாயிருந்துச்சு. அத்தோட முடிச்சிருந்தா படமும் நல்லாயிருந்திருக்கும். அதுக்குப் பின்னால நம்மளோட வன்மப் புத்தியைப் புகுத்துனதெல்லாம் தமிழ்ச்சினிமா மூலமாக கலாச்சார மாற்றம் நிகழ்த்தி விடவேண்டும் என்ற ஆசையும் ஆவலுமின்றி வேறொன்றும் இல்லை.
சும்மாவே நம்ம சினிமாக்கள் வன்முறை, பாலியல், போதை, சிறுவயதில் கொலை செய்தல் எனச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நல்ல காலத்தில், நட்பாய் பழகுனவன் பால் மாறி நிற்கும் போது நட்பாய் பார்க்காமல் காதலியாய் பார் எனச் சொல்லிக் கொடுக்க ஒரு படம் அவ்வளவே.
படத்தைப் பார்க்க ஆரம்பித்து அம்பது நிமிடங்கள் கடந்தபோது படம் இன்னேரம் முக்கால்வாசி போயிருக்குமேன்னு பார்த்தா, நீண்ட நேரமாக ஓடி அம்பது நிமிடத்தை மட்டுமே கடந்திருந்தது. ரொம்ப மெதுவாகவே பயணிக்கும் கதையில் லாரியில் கதை ஏறியதும் பாரத்தை வைத்துக் கொண்டு பயணிக்க ரொம்பவே சிரமப்பட்டது.
டோரதி பலருக்குப் பிடிக்கலாம். ஆணாதிக்க சமூகத்தின் முன்னே தன் உடல் மாற்றத்தை ஒருவன் சொல்ல முடியாததும் அவன் சொன்னதும் அவனைக் குடும்பக் கௌரவத்துக்காகக் கொல்ல நினைப்பதும் அதுக்கு அவனோட உயிர் நண்பனையே தேர்ந்தெடுப்பது என நகரும் படத்தின் கதையில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.
புரட்சி பேசுபவர்களுக்கு இப்படம் புரட்டாசியில் அசைவம் சாப்பிடுவதைப் போல, மற்றவர்களுக்கு…. சாம்பார்தான்.
ஏறக்குறைய இரண்டரை மணி நேரத்துக்கு கதையோடு ஒன்றிப் போகிறோமோ இல்லையோ ராஜாவின் பின்னணி இசையில் மயங்கிப் போய்விடுவோம்.
டோரதி – ராஜா இசை.
டோரதி பார்க்க விருப்பம் இருப்பின் பார்க்கலாம்.

