பாடல்களுக்கும் ஞாபகங்களுக்கும் நெருங்கி தொடர்பு. என்னைப் பொறுத்த வரைக்கும் கேட்கிற எல்லா பாடலும் ஏதோ ஒரு ஞாபகத்துக்கு இழுத்துட்டுப் போகும்… அதுலயும் குறிப்பா இசைஞானியின் பாடல்களுக்கு ஒரு தனிச் சிறப்பே உண்டு.
எங்க பெரியவரின் பாடல் கேட்கும் போது அந்த பாடலை முதல் முதல்ல கேட்டதோ, இல்ல அடிக்கடி கேட்ட நாட்களோ, ஏதோ ஒரு நல்ல நினைவுகளையோ இல்ல ஒரு வருத்தமான நினைவையோ இல்லை ஏதோ ஒன்றை ஞாபகத்திலிருந்து மீட்டெடுக்கும்.
அப்படித்தான் இந்த ”பேசக்கூடாது”ன்ற பாடல் பற்றி சொல்லணும்னு தோணுது.
அது ஒரு ஹாஸ்டல் காலம், பெஸ்கி ஹாஸ்டல்.
மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் பெஸ்கி ஹாஸ்டல்.
அங்க படிச்சிட்டிருக்கும்போது ஹாஸ்டலுக்கு ஒரு வார்டன், ஒரு உதவியாளர், ஒரு மருந்தாளுநர் என இவ்வளவு பேர்தான் இருப்பாங்க…. பெரும்பாலான நேரங்களில் வார்டன் ஒருத்தர் இருப்பார் இன்னொரு உதவியாளர் இருப்பார் அவ்வளவுதான்.
ஆனா அத்தனை மாணவர்களையும் சமாளிக்கணும் இல்லையா!? அதுக்காக ஒவ்வொரு வேலையையும் பிரிச்சு, அதுக்கு ஒரு மானிட்டர்னு ஒருத்தரை போட்டிருவாங்க. மானிட்டர்தான் லீடர். அவருக்கு எல்லா விதமான அந்த வேலைசார்ந்த அதிகாரமும் கொடுக்கப்படும். அவர் எல்லாமே அங்க பார்த்து கவனமா ரிபோர்ட் கொடுப்பார் வார்டனுக்கு…
அன்றைய காலத்தில் உன்னுடைய குறிக்கோள் என்னானு கேட்டா, எப்படியாவது மானிட்டர் ஆகிடணும்னுதான் இருந்துச்சு.
என்னென்ன மாதிரி மானிட்டர் இருப்பாங்கன்னா, காலையில குளிக்கிறதுக்கு அந்த ஷவர் ரூம் மானிட்டர்ல இருந்து மியூசிக் போட்றதுக்கு ரேடியோ மானிட்டர், காலைல குளிக்கிற நேரம், சாப்பிடுற நேரம், லெய்சர் பீரியட் போன்ற நேரங்களிலெல்லாம் அவர் பாட்டுப் போடுவார்…
அதும் காலைல குளிக்க எழுப்புறதே ஒருநாள் எல்லார் ஈஸ்வரியோ சீர்காழி கோவிந்தராஜனோ எழுப்புவாங்க, ஒரு நாள் நாகூர் ஹனிபா எழுப்புவார், ஒரு யாராவது கிறிஸ்தவப் பாடகர் மேரியம்மாவையும் இயேசுவையும் பாடி எங்களை எழுப்புவார்… இப்படித்தான் காலை விடியும்… நாங்க குளிச்சு முடியிற வரைக்கும் பாடுவாங்க…
அந்த வகையில, விளையாட்டுப் பொருட்கள் எடுத்துத்தர திரும்பி வாங்கி வைக்க கேம்ஸ் ரூம் மானிட்டர், அசெம்ப்ளி வரிசைல நிக்க லைன் மானிட்டர், அப்புறமா பெட் நைட்டு தூங்கப் போகும்போது அந்த பெட் ஹால் அதுக்கு ஒரு மானிட்டர் இருப்பார். அவர் எல்லாரும் ஒழுங்கா படுத்தாங்களா அவங்கவுங்க டெய்லி பிளேஸ்ல படுத்திருக்காங்களான்னு பார்த்துட்டுதான் அவர் படுப்பார். படுக்கிற இடம் சரியில்லை, வேற இடம் மாத்தணும்னு அந்த மானிட்டர்ட்டதான் கேட்டு அனுமதி வாங்கணும்.
அன்னைக்குப் பழகுன அந்த டெய்லி ப்ளேஸ் பழக்கம்தான் இன்னைக்கும் எங்க போயி கார நிறுத்துனாலும் பக்கத்துலயே இடம் காலியிருந்தாலும் தொடர்ந்து நிறுத்துற தூரமான இடத்துலயே நிறுத்த வைக்குது…
அதே போல ஸ்டடி ரூம் மானிட்டரு அட்டண்டன்ஸ் மானிட்டரு. இப்படியாக எல்லாத்துக்குமே மானிட்டர் இருப்பாங்க. அந்த மானிட்டர் வந்து எல்லாமே கவனமா பார்த்து ரிபோர்ட் எடுப்பார். இந்த எல்லா மானிட்டர்களுக்கும் பொதுவான ஒரு வேலை இருக்கும்… யாரையும் பேச விடாம பாத்துக்கிறதுதான் அந்த வேலை…
அந்த மானிட்டர்களின் வரிசையில் மெஸ் ஹால் மானிட்டரும் இருப்பாரு.
மெஸ்ல நம்ம தட்டையும் டம்ளரையும் எடுத்துக் கொண்டு போயி டேபிள்ல வரிசையில உட்கார்ந்திருப்போம், எங்களுக்கான சாப்பாடு வரிசையா கொண்டாந்து சமையல் அலுவலர்கள் வந்து பரிமாறுவாங்க… அந்த சாப்பாட்டைப் பற்றியே தனியா எழுதணும். பெஸ்கி ஹாஸ்டல் சாப்பாடு மாதிரி ஒரு சிறந்த சாப்பாடு இன்னவரைக்கும் நான் சாப்பிடல. அந்த சாப்பாட்டைப் பற்றி இன்னொரு பதிவு எழுதணும்.
சரி, விசயத்துக்கு வாரேன்… சாப்பிடும்போது பேசக் கூடாது. அவங்கவங்க இடத்துல உட்கார்ந்து சாப்பிடணும், பேசாம சாப்பிடணும். ஏன்னா நாலைஞ்சு பேர் பேசினாலே சத்தமா இருக்கும் ஒரே ஹால்ல இருநூறு இருநூத்தம்பது மாணவர்கள் ஒரே நேரத்துல பேசினா என்ன ஆகிறது ?!
அப்ப மெஸ்ஹால் மானிட்டர் வேலை யாரும் பேச விடாமா பாத்துக்கிறது! சில நேரங்கள்ல ரேடியோ ரூம் மானிட்டர் பாட்டுப் போட்டுருவாரு. அது மெஸ் ஹாலுக்குள் இருக்கும் ஸ்பீக்கர்ல கேட்கும். சாப்பிடுற நேரத்துல பாட்டுக் கேக்கலாம், ஆனா பேசக் கூடாது. பாடக் கூடாது. என்றாவது ஒரு நாள் பெரும்பாலும் சனிக்கிழமை இரவு உணவு நேரத்தில் அந்த விதிகளை தளர்த்துவார் மானிட்டர்… அதாவது பேசிக்கிட்டே சாப்பிடலாம்…
அப்படியாக அன்றொரு நன்னாளில் எங்களுடைய மெஸ் ரூம் மானிட்டர் வந்து இன்னைக்கு எல்லாரும் பேசலாம்னு சொன்னாரு. அதே நேரத்துல தற்செயலா மெஸ்ரூலிருந்து சுமார் 100 மீட்டர் தள்ளி இருக்கும் ரேடியோ ரூமிலிருந்து ரேடியோ மானிட்டர் ”பேசக் கூடாது” ங்கிற பாட்டைப் போடவும் ஒரே சிரிப்பும் கூச்சலுமா கொண்டாட்டமுமாகிப் போச்சு மெஸ் ஹால்…
பெரியவரின் பாடல்கள் பெரும்பாலும் முப்பது நொடி முன்னிசையுடன் தொடங்கும்… என்னைப் போன்றவர்களுக்கு அந்த முன்னிசையே நிறைந்து விடும்… அதன் பிறகு வரும் பாடல் கூடுதலான இனிப்புதான்… தித்திக்கும்…
இந்த “பேசக்கூடாது” பாடல் எந்த முன்னிசையும் இல்லாமல் உடனே தொடங்கக் கூடிய வெகு சில பாடல்களில் ஒன்று… பேசக் கூடாதுனு எஸ்பிபி சொன்னப்பிறகு கொஞ்சம் இசை வரும்… அந்த இசை அன்று எங்கள் காதுகளில் விழவேயில்லை … ஏன்னா அவ்ளோ குதுகலமா நாங்க சிரிச்சிக்கிட்டிருந்தோம்….
ஆகவே மெஸ் ஹால் மானிட்டர் அனுமதிச்ச உடனே ரேடியோ ரூம் மானிட்டர் இந்தப் பாட்டைப் போடவும் ஒரே சிரிப்பும் கொண்டாட்டமுமாகிப் போச்சு…
இன்னைக்கும் இந்தப் ”பேசக்கூடாது” பாட்டைக் கேட்டால் நான் உடனே பெஸ்கி ஹாஸ்டல் மெஸ் ஹால்ல போய் உக்காந்திருவேன்…

