பெரிதினும் பெரிது கேள்
தமிழ்க்காதலன்
வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதொ றூழிதொ றுலகங் காக்க
அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு,
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி
– சிலப்பதிகாரம், காடுகாண் காதை:15-22
உலக உருண்டையின் காலவெள்ளத்திலும் கடல் வெள்ளத்திலும் மூழ்கி மூச்சடைத்து நீந்தி கறையேறி உலகின் நிலபரப்பெங்கும் கால்தடம் பதித்து ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கான தொப்புள்கொடியின் வேர்களின் அடையாளங்களை பதியவிட்டு, விழுதுகளாய் வளர்ந்து செழித்து வாழும் காலத்தில், இடம், பொருள், தொழில் முறையால் மொழிகள் மாற்றம் கண்ட உலக தமிழனின் வாழ்வியலை புரட்டிப் பார்க்கிறேன். என்னோடு நீங்களும் வருகை தந்தால், இனம்புரியா இடர்கள் கலைந்து தொலைந்தவைகளில் தொலைந்து, தொலைத்தவற்றை தெரிந்து, கலந்தவை கலைந்து, மறந்தவை நினைந்து, மாற்றம் நிகழ்த்தவோ, மாற்றம் நிகழவோ, காரணமாகலாம் அல்லது கருவியாகலாம்.
நெடுங்கடல் சூழுலகில் நிலப்பிரிவு நிகழும் காலத்தில் தோன்றிய உயிர்களின் கடைநிலை உயிர்தான் மனிதன். தன் இயல்பில் வாழ்வதற்கு இயற்கை உயிர்களுக்கு எப்பொழுதும் தன் ஒத்துழைப்பை நல்கியே வந்திருக்கிறது. இயல்பில் திரிதல் இயற்கையில் இல்லை. திரிந்தால் அது இயற்கையாய் இல்லை. இயற்கை சீறி சீற்றமெடுத்த எல்லா காலத்திலும் மனித இனம் நாற்றமெடுத்திருக்கிறது. மீன்களோடு போட்டியிட்டு நீந்தி மீள்கரைத்தேடி கரையேறி தப்பிதப்பிப் பிழைத்த மாபெரும் இயற்கை நிகழ்வுகள் தமிழ் இனத்துக்கு மட்டுமே உலகில் நிகழ்ந்திருக்கிறது. அங்கு கிடைத்த அனுபவத்தை தனது அறிவாக்கிக் கொண்டு, நிலத்தையும், நீரையும் தன்பிடியில் வைத்துக்கொள்ள கற்றான். பட்டுப்பட்டு பட்டதன் பலனாய் பட்டறிவை பெற்று, அறிவை வளர்த்து, ஆகச்சிறந்த மொழியை வளர்த்து, மொழிக்குள் உலகப்பொருள் வைத்து, பெயரிட்டு, செம்மாந்த கூட்டமாய் செம்மாந்து இருந்தவன் பிள்ளைகள், பிளவுற்று பிளவுற்று தமக்குள் பிணக்குற்று முட்டிமோதிக்கொண்ட வாழ்வியலே பின்வரும் தலைமுறைக்கு வரலாறாக மாறிப்போனது.
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும்
அகிலும் தென்கடல் முத்தும் குணகடல்துகிரும் கங்கை வாரியும்
காவிரிப்பயனும் ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் அரியவும்
பெரியவும் நெரிய ஈண்டி வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு”
-பட்டினப்பாலை வரிகள் 185-193
உயிர் ஓம்புதல் கற்று, உணர்வு விழிப்புற்று, மொழியாலும், பண்பாலும் தன்னை உயர்த்திக்கொண்டு, சமூக வாழ்வியலின் உச்சம் தொட்ட தமிழன் உலகமெங்கும் பரவிப்பரவி, புரவி முதல் புல்லின வித்துகள் வரை வணிகம் செய்து, ஆடைகள், கருவிகள் கொடுத்தும் பெற்றும் தெற்காசியாவின் தலைமகனாய், உலகின் உற்ற நண்பனாய் விளங்கி வாழ்ந்த செழுமைமிகு இனம் இன்று காலவோட்டத்தாலும், கலப்பாலும் தன்முகம் அழிந்து, அடையாளம் இழந்து, மாறுவேடமிட்டு மறுகிக் குறுகும் மானுடப்பிழை காணப்பொறுக்கவில்லை. கலைகள் வளர்த்து கலைவழி தன்னை மறுபடிமறுபடி புனரமைத்துக்கொண்டு, தலைமுறைகள் தடம் மாறாதிருக்க வழிகண்ட மரபின் வார்ப்புகள், அறிவுத்துருப்பிடித்து அலையும் நிலையில் எது சரியான வாழ்வியல் என்பதை மறுபடியும் முன்னிறுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு கடமையாகிறது.
உலகின் பேரினங்களில் எஞ்சி இருப்பது தமிழரும், சீனருமே. மற்றவை காலத்தில் காணாமல் போய்விட்டது. நம்முடைய வாழ்வியல் வரலாறு மறைக்கப்பட்டதும் மறுக்கப்பட்டதுமே அதிகம். வெளிப்பட்டதும் ஏற்கபட்டதும் குறைவே. அந்த குறைந்த காலப்பதிவேடுகளில் கிடைக்கும் ஆதாரங்களே உலகை வாய்பிளக்க வைக்கிறது. சொல்லிக் கொண்டிருப்பதல்ல வரலாறு, சொல்லாமல் விட்டதே வரலாறு என்ற வரலாறு படைக்கும் பெருமைக்கு தமிழினம் உரிமையாகிறது.
“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர்கெண்டை,
வலியினால் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்”
– கலித்தொகை 104
தனக்கொரு எதிரி இல்லாதவாறு வாழ்ந்தவர்கள், எதிரியாக எவரும் வரிந்துக்கட்டி வந்தால், எல்லையிலே தடுத்து புறமுதுகிட வைத்து, இனம் காத்த வீரமும் மானமும் குருதிக்கொடையாய் தலைமுறைக்கு கொடுக்கப்பட்டது. மன்னர்கள் முதல் மக்கள் யாவரும் மாண்புமிக்க ஒழுங்கியலை வாழ்வியலாக வகுத்துக்கொண்டு, அறத்தின் வழியில் மறத்தை முன்னிறுத்தி மரபியல் தொடர்ச்சியை மண்ணுக்கு தந்தவர் மிச்சமும் சொச்சமுமாய் இன்று நாம் நிற்கிறோம். பதினான்காம் நூற்றாண்டுக்கு பிறகு நிகழ்ந்த பல்வேறு குழப்பக் கலப்புகளில் குழம்ப தொடங்கி, தெளிவற்ற நிலையிலேயே தொடர்கிறோம். இதுவொரு வழிமாறிய பயணம் என்பது புரியாமலே வளர்த்து விடுகிறோம் அடுத்தடுத்த தலைமுறைகளை. இரண்டாம் உலகப்போருக்கு பின் வந்த பேரரசுகள், அரசுகள் யாவையும் தனது ஆளுமையிலும், அதிகாரத்திலும் போக்கை மாற்றிக்கொண்டன. அதன்படி அனைத்து நாடுகளும் அதிகார மையங்களாக திகழ வலியுறுத்தப்பட்டு, அரசாட்சி முறை முழுமையாய் மாறிப்போனது.
நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நல்நெஞ்சினோர்
வடுஅஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூம் மிகைகொளா கொடுப்பதூம் குறைகொடாது
. . . . . . . . . . . . . மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்துஇனி துறையும்
-பட்டினப்பாலை (வரிகள்: 206-217)
ஆட்சியாளர்கள் மெல்லமெல்ல உலக பெரும்வணிகர்களின் கைப்பாவையாக மாற்றப்பட்டார்கள். இதற்கு தனித்த தத்துவங்களை முன்வைத்து அரசாள்பவர்கள் உடன்படாமல் விலகி நின்றார்கள். ஆனால், மக்களாட்சி முறையை ஏற்றுக்கொண்ட நாடுகளில் உலக வல்லாதிக்கம் எளிதாக தனது அதிகார இரும்புக்கரத்தை நீட்டி, அவர்களை தங்களின் கைப்பாவைகளாக மாற்றிக்கொள்ள முடிந்தது. வணிகத்தை முன்னிறுத்தி, அரசியலை பின்னுக்குத் தள்ளி, கொள்கைகள் யாவும் வர்த்தகத்தை முன்னிலைபடுத்தியே வகுக்கப்பட்டு அதற்கேற்ப அரசாங்கங்கள் அமைக்கபட்டன. ஏற்காத நாடுகளுக்கு இட்டுக்கட்டி கதை சொல்லி தலைவர்களை அழிப்பது அல்லது மாற்றுவது. அதற்கு ஜனநாயகம் என்று அவர்களே பெயர்வைத்து பறைசாற்றிக்கொள்வது வல்லாதிக்க சக்திகளின் வரலாறாக மாறி இருக்கிறது. வர்த்தகம் என்பதும் இப்பொழுது நிலத்தையும், வளத்தையும் தனக்கு பயன்படும்படியாய் ஒப்பந்தம் போட்டு கொள்ளை அடிப்பதாக மாறி நிற்கிறது. இப்படி உலகின் வல்லரசு வல்லாதிக்கங்கள் பொருளாதாரத்தை முன்னிறுத்தும் போர்முறைக்கு மாறிவிட்ட உலக சமுதாயத்தில் தமிழர்களின் நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு.
-குறள் 381
பதினான்காம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழர்களின் நிலவுடமைகள் வலுக்கட்டாயமாக கைமாற்றப்பட்டன. இங்கிருந்து தொடங்குகிறது தமிழர்களின் வீழ்ச்சி. தமிழர்கள் அரசியலிலும், அதிகாரத்திலும், வர்த்தகம் மற்றும் வணிகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டார்கள். மறுபடியும் அவர்கள் இவற்றில் நுழைந்து தலையெடுத்து விடாமல் தடுக்கப்பட்டார்கள். தொடர்ந்து நான்காம்தர குடிமக்களாய் வாழவைக்கப்பட்டார்கள். உரிமையும் உடைமையும் இல்லாதவர்களாக தொடர்ந்து பார்த்துக்கொள்ளப்பட்டார்கள். அடிப்படை வாழ்வியலை அடிப்படை வேலைகளை மட்டுமே அவர்களின் தொடர்ச்சியான தொழிலாக மாற்றிவிடப்பட்டார்கள். அவர்களுடைய அறிவுடமைகள் யாவையும் பார்த்துப்பார்த்து திருடப்பட்டும், கைப்பற்றப்பட்டும், பிறமொழியில் பிரதி எடுத்துக்கொண்டு பின்பு தீயிலிட்டு அழிக்கப்பட்டன. மருத்துவமும் அவ்வண்ணமே பெயர் மாற்றம் பெற்றது. கலையை பேசும் நூல்கள் தூள்துளாக்கப்பட்டன. நூலகங்கள் எரியூட்டப்பட்டன. இலக்கியங்கள் அழிக்கப்பட்டன. கலைகளின் மூலங்களாக விளங்கிய கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. வரலாறுகள் சிதைக்கப்பட்டன. எஞ்சி மிஞ்சிய இலக்கியங்களிலும் முடிந்தவரை இடைச்செருகள்கள் செருகப்பட்டன. உண்மை பொருள் மறைக்கப்பட்டு பொய்யான விளக்கங்கள் விளக்கவுரைகளாக கூறப்பட்டன. பின்வரும் தலைமுறைகளுக்கு அதையே பாடமாக்கி படிக்க வைத்தனர்.
இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
-குறள் – 385
இன்றைய தலைமுறைகளும் உலகமெங்கும் தமிழர் குடிகளாய் பரவி வாழ்ந்தாலும், அவர்கள் தங்கள் வாழ்வியல் சார்ந்தும், பொருளாதாரம் சார்ந்தும் வாழும் சூழலிலேயே வைக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் கூலிகளாக மட்டுமே தமிழர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். பெருமுதலாளிகள் என்கிற இடத்திற்கோ, வலிமை மிக்க அதிகாரம் உடையவர்களாகவோ தமிழர்கள் எங்கும் இல்லை. சொந்த மண்ணிலும் சரி, சென்ற மண்ணிலும் சரி தமிழர்கள் அதிகாரமற்ற ஏதிலிகளாகவும், பொருளாதாரமற்ற கூலிகளாகவும் தான் இருக்கிறார்கள். கற்றுத்தரும் இடத்தில் இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் இடத்தில் வைக்கப்படுகிறார்களே தவிர, தலைமை இடத்தை தக்கவைக்க முடியவில்லை. சொல்லும் வேலையை செய்யும் பணியாளர்கள் என்ற அளவில்தான் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களின் நிலையும் இருக்கிறது. தலைமை பண்பை இழக்கவில்லை என்றாலும், தலைமை தாங்கும் இடத்தை அடையமுடியாமல் அல்லாடுவதுதான் உண்மை நிலையாக இருக்கிறது. தமிழகம் என்ற பெயர் தாங்கும் நிலப்பரப்பில் இன்னும் நிலைமை மோசமாக இருக்கிறது. மொத்த வணிகத்திலும் சரி, சில்லரை வணிகத்திலும் சரி தமிழர்கள் துடைத்தெறியப்பட்டுவிட்டார்கள். எல்லா வணிகமும் தமிழர் அல்லாதவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. பெருமைமிக்கதாக அல்லது அதிக வருமானம் வரும்படியான கலைத்துறைகளிலும் தமிழர்கள் இல்லை. தமிழர்களுக்கென்று தங்கம், வெள்ளி போன்ற வணிக நிறுவனங்கள் கிடையாது. இப்படி எதை எடுத்துப்பார்த்தாலும் தமிழர்களின் நிலை மிகவும் பின்தங்கியே இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு சிறந்த பொருளாதார மையமாக விளங்குகிறது. அது யாருக்கான பொருளாதாரம் என்பதே கேள்வியாகிறது.
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
-குறள்-421
தமிழ்நாட்டின் தலைநகராக இருக்கும் இடம் தமிழர்களுக்கான தலைநகராக இருக்கிறதா..? என்றால் இல்லை என்பதே பதில். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து தங்கியவர்கள் ஆளுமை மிக்கவர்களாகவும், அதிகாரமிக்கவர்களாவும், அரசியல் பலம் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் 10 மாநகராட்சிகளில் முழுக்க முழுக்க பிறமாநிலத்தவர்கள் ஆக்கிரமிப்பில்தான் இருக்கிறது. மொத்த பொருளாதாரத்தின் கட்டுப்பாடும் அவர்கள் கைகளில் இருக்கிறது. உடனே சிலர் கேட்கக்கூடும், தமிழர்கள் மட்டும் வெளிமாநிலங்களில் வாழவில்லையா..? வெளிநாடுகளில் இல்லையா..? இது என்ன பிரிவினை வாதம் போல் இருக்கிறதே என்று வினவக்கூடும். கேள்வியில் தவறில்லை. புரிதலில்தான் இருக்கிறது. உதாரணமாக கர்நாடகாவில் சுமார் 36 இலட்சம் (அதிகாரப்பூர்வமாக 21 இலட்சம்) தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களின் நிலை எப்படி இருக்கிறது..? சட்டப்பாதுகாப்பு கிடைக்கிறதா..? பாதுகாப்பு கேட்க முடிகிறதா..? உரிமைகள் என்று எதையும் பேசிவிட முடியுமா..? தேர்தலில் நிற்க தடை. சின்ன சின்ன பதவிகளுக்கு நின்று வென்றாலும் அவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை. பேச அனுமதிப்பதில்லை. எவ்வித எதிர்ப்பும், உரிமைக்கோரலும் இல்லாமல் தங்கள் தமிழ் அடையாளங்களை மறைத்துக்கொண்டு, கன்னடம் கட்டாயமாக பேசிக்கொண்டு வாழவேண்டிய சூழல்தான் நிலவுகிறது.
இப்படிதான் மகாராஷ்டிரா, மற்றும் இன்னபிற மாநிலங்களிலும். வெளிநாடுகளிலும் இதே நிலைதான். கூலியாக உலகமெங்கும் தமிழர்கள் வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் ஆளுமைகளாகவோ, அதிகாரமிக்கவர்களாகவோ முன்னிலை பெறுவதை உலகம் விரும்பவில்லை. நிறைய தடைகள், குறுக்கீடுகள், தண்டணைகள். குற்றசாட்டுகள் என பல்வேறு இன்னல்களை அனுபவமாக்கிக் கொள்வதை யதார்த்த வாழ்வில் கண்டுணர முடியும். உண்மைகளை பேசாமல் தவிர்ப்பதனாலோ, கண்டும் காணாதது போல் விலகி நிற்பதாலோ அந்த உண்மை இல்லை என்றோ, அது உண்மை இல்லை என்றோ ஆகிவிடாது. பூனை வேண்டுமானால் கண்ணை மூடிக்கொள்ளலாம். அதற்காக பூலோகமே இருண்டு விடாது. பக்கத்தில் இருக்கும் பங்களாதேஷ் முதற்கொண்டு தொலைவில் இருக்கும் ஜப்பான் வரையிலும் தமிழர்கள் உழைப்பவர்களாக இருக்கிறார்கள். ஆளுமைகளாக அதிகாரமிக்கவர்களாக இல்லை என்பதே யதார்த்தம்.
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினை
ஐந்துடன் மாண்ட தமைச்சு.
-குறள்-632
தமிழர்களுக்கென்று நிலமில்லை, இருக்கும் நிலத்தில் உரிமை இல்லை. அதிகாரமற்ற ஏதிலிகளாக, அரசாங்கத்தை அண்டிப்பிழைக்கும் அடிமைகளாக, உழைப்பிலிருந்தும், உரிமையிலிருந்தும், ஒதுக்கப்பட்ட, வாக்களிக்க மட்டுமே அடை காக்கப்படும் நாமக்கல் கோழிகளாக மக்கள் மாற்றப்பட்டு வெகுகாலமாகிவிட்டது. உழைப்போடு சம்மந்தப்பட்ட வேலைகள் எல்லாம் கீழ்த்தரமானவை என்று மிக ஆழமான கடவுள் நம்பிக்கை விதைக்கப்பட்டு விட்டது. அலுவலக வேலைகள், அரசாங்க வேலைகள், இதுதவிர இலட்சத்தில் காசு புரளும் சில தொழில்கள்தான் கௌரமான தொழில்கள் என்று ஆழமாக விதைக்கப்படுகிறது. பொழுதை வெட்டியாக போக்கும், சீட்டுக்கட்டும் சிகரெட்டும், கஞ்சாவும் போதை புட்டியும் போதைக்கு போதுமானதாக வாழ்க்கையை வகுத்துக்கொண்ட இளையோர்களை உருவாக்கிவிட்டாச்சு. ஆலமரம், அரசமரம், ஏரிக்கரை, சவுக்குத்தோப்பு, மாந்தோப்பு, ஆற்றங்கரை எங்கும் வீசியெறியப்பட்ட போதைப்புட்டிகள் இவர்களின் வாழ்வியலின் சாட்சியங்களாக சிரிக்கின்றன. இன்று வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை. அதிலும் வேளாண் வேலை என்றால் நிலைமை படுமோசம்தான். வெளிமாநில கூலிகள் வைத்து வேளாண்மையில் ஈடுபட வேண்டியிருக்கிறது.
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
-குறள்-549
தன்மானமிழந்தவனாகத்தான் தமிழன் இன்று உலகில் உலவிக் கொண்டிருக்கிறான். உலகில் வெகுவாக அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களில் தமிழினமும் முக்கிய இடத்தில் இருக்கிறது. இருக்கும் தமிழர்களிடம் தமிழ் இல்லை. கொஞ்சம்நஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழும் தவறாக பொருள் கொள்ளப்படுகிறது. நடைமுறை வாழ்வியலில் இருந்தும், பள்ளிக்கல்வியிலிருந்தும், தொழிலிலும், அலுவலகத்திலிருந்தும் வெளியேற்றப்பட்ட மொழியாக தமிழ் இருக்கிறது. அரசாங்க ஆதரவும் தமிழுக்கோ, தமிழருக்கோ இல்லை என்கிற யதார்த்தை விடமுண்ட கண்டனை போல விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் திக்கித்திணறி சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழர்களுக்கு தமிழறிவும், இலக்கிய அறிவும் துடைத்தெறியப்பட்டுவிட்டது. தமிழில் பேசினால் புரியவில்லை என்கிற குரல்கள் இப்போதெல்லாம் எங்கும் ஒலிக்கிறது. வெளிமாநிலம் அல்லது வெளிநாடு வாழ் தமிழர்கள் ஒருதலைமுறை தங்கள் அடையாளத்தை மறைத்து வாழ்கிறார்கள். அடுத்த தலைமுறையை அந்த வாழிடத்து பிள்ளையாக மாற்றி விடுகிறார்கள். இது இப்படியே போனால் தமிழர்கள் இவ்வுலகில் மரபியல் ஆய்வுகளில் மட்டும் இவர்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை தாங்கி நிற்பார்கள். மற்றபடி எவ்விதத்திலும் தமிழர்களாக இருக்கமாட்டார்கள்.
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு
துட்பகை உற்ற குடி.
-குறள்-888
நாகரிகம் என்றும், நவீனம் என்றும், வளர்ச்சி என்றும் விதவிதமான காரணங்களை கூறிக்கொண்டு, தங்களின் உருமாற்றத்தை நியாயப்படுத்துவார்களே தவிர, உண்மையை உணரவோ ஒத்துக்கொள்ளவோ அவர்களின் மனம் ஒப்பாது. உருமாறி நிற்பவர்கள் எப்படி உண்மையை அடுத்த தலைமுறைக்கு கடத்தமுடியும்..? ஆங்கில, சமஸ்கிருத மோகமும், ஐரோப்பிய வாழ்வியல் ஈர்ப்பிலும் திளைக்கும் ஒருவருக்கு இனமோ, மொழியோ, பண்பாடோ தேவையே படாது. பணம் போதும் என்கிற மனப்பான்மைக்கு வந்துவிட்ட ஒருவருக்கு, வாழ்வியல் ஒழுக்கம் பற்றிய எவ்வித அக்கரையும் இருக்காது. நிலைமாறி திரிபுற்று அலைவதே வளர்ச்சி பெற்ற நவீனமாக கொள்ளப்படும். பிறகென்ன “உன் பிள்ளையும் என் பிள்ளையும் நம் பிள்ளைகளோடு விளையாடிகொண்டிருக்கும் நாகரிகம் நமதென்றாகும். விலை பேசப்படும் விவாகரத்துகளால் (மணமுறிவு) மலினமான விபச்சாரம் சரியென்று ஏற்கபடும். ஆத்தாளுக்கும் மகளுக்கும் அடையாளமற்ற ஓருலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழும் நாடுகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்விதமாக உண்மையான பண்பாட்டில் இருந்தும், பழக்கவழக்கங்களில் இருந்தும், மனிதனின் அடையாளத்தை அழித்துவிட்டு பின்னொரு நாளில் மனித இனத்தையே அழித்து விடுவார்கள். அந்த நிலைக்கு ஆட்படும் முன்பு தமிழர்கள் விழிப்படைய வேண்டும்.
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
-குறள்-967
பொதுவாகவே எந்தவொரு இனமும் தனது தனித்தன்மையை தாங்கி வாழ்வதை, வளர்வதை, தன் அடையாளம் இழக்காத தன்மையை உலக அரசாங்கங்கள் விரும்பவில்லை. இங்கு எல்லோருக்குமே அரசாங்கம் ஒரு முகமூடியை மாட்டிவிட நினைக்கிறது. ஒரே தன்மை, ஒரே மாதிரி மனிதர்கள் உருவாக்கப்பட விருப்பபடுகிறது. சுருங்கச்சொன்னால் அரசாங்கங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் உயிருள்ள ”ரோபோவாக” (இயந்திரமனிதன்) மக்களை இருக்க வைக்கும் பயிற்சியும், முயற்சியும் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது. அரசாங்கங்களுக்கு தெரியாமல் ஒரு குழந்தை பிறந்துவிட முடியாது, ஒரு மனிதன் அசைந்துவிட முடியாது என்கிற பேராபத்தை நோக்கி மனித இனம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாம் விழித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மருத்துவ உதவி இல்லாமல் மகப்பேறு இல்லை என்ற நிலைக்கு பின்னிருக்கும் சதிகளை எண்ணிப்பாருங்கள். உங்கள் நிலை எதுவென்பது புரியும். இங்கே வாக்காளர்கள் தேவைப்படுகிறார்கள். சொல்வதை கேட்கும் பணியாட்கள் தேவைப்படுகிறார்கள். எதிர்த்துப்பேசாத அடிமைகள் தேவைப்படுகிறார்கள். கேள்வியே கேட்காத அறிவாளிகள் தேவைப்படுகிறார்கள். சொல்லும் போது பிள்ளை பெறும் பெண்கள் தேவை. ஆசைக்கும் காசுக்கும் இணங்க ஆர்வமுள்ளவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். முக்கியமாக சிந்தனையற்ற மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கு எதிராக நிற்பவர்கள் தீவிரவாதிகள், சமூக விரோதிகள், தேசத்துரோகிகள் என்று பல்வேறு பட்டங்களுக்கு சொந்தக்காரர்கள் ஆவார்கள்.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
-குறள்-964
தமிழா..?! எப்போது விழிப்பாய்..?! எப்போது இனம் காப்பாய்..?! என்கிற ஏக்கமுடன் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டியிருக்கிறது. நான் சொல்வது புரியவில்லை என்றாலோ..?! அல்லது நம்பிக்கை இல்லை என்றாலோ பின்வரும் நடப்பு நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்.
உதாரணமாக, இஸ்ரவேலர்கள் மற்றும் ஈரானியர்களை பார்த்து தெரிந்துகொள். என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை உற்றுக்கவனி. ஈராக்கின் சதாம் உசேன் என்ன காரணம் சொல்லி படுகொலை செய்யப்பட்டார்..? சொல்லப்பட்டது நிருபிக்கப்பட்டதா..? கவனி. ஆனால் கொல்லப்பட்டது உலகறியும். பாலஸ்தீன மக்களுக்கு ஏன் இந்த நிலை..?? அவர்களின் இன்றைய நிலைக்கு யார்யார் காரணம் என்பதை அறி. இஸ்ரவேலர்கள் நாடற்றவர்களாக இருந்தபோது அவர்களை தங்கள் நாட்டில் தங்கிக்கொள்ள அனுமதித்த நாடு பாலஸ்தீனம். ஒண்ட வந்த பிடாரி இன்று ஊர் பிடாரியை விரட்டுவதை கண்முன்னே காண். இதைவிட கொடுமை பாலஸ்தீனம் என்ற ஒரு நாடே இதற்குமுன் இருந்ததில்லை என்கிறது சில வல்லரசுகள். இஸ்ரவேலர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கவனி. அவர்களின் நரித்தனம், நயவஞ்சகம், மாண்பற்ற மரபற்ற அரசியல் கவனி. ஆக்டோபஸ் போல அவர்கள் அமெரிக்காவை தன் பிடியில் வைத்து, விருப்பம் போல் ஆட்டுவிக்கும் மயக்குவித்தை கவனி. தனக்காக ஒரு வல்லரசு போரிடவும், அவர்களின் இராணுவ பலத்தையும், பொருளாதார பலத்தையும் தன்னுடைய தேவைக்கும், ஆசைக்கும், பாதுகாப்புக்கும் பயன்படுத்திக்கொண்டு தனது எதிரிகளை அழிக்கும் ஈனச்செயலை கவனி. எப்படி அந்த வல்லரசு இதற்கு ஊமையாக உடன்படுகிறது என்கிற சூட்சுமம் புரி. உலக அரசியல் ஓரளவாவது புரிந்துவிடும். பாலஸ்தீன மக்களின் நிலையில்தான் இன்று தமிழர்கள் இருக்கிறார்கள். தண்ணீருக்கும், சோற்றுக்கும் கர்நாடகம், கேரளம், ஆந்திரம் என அண்டை மாநிலங்களிடம் அண்டிப்பிழைக்கும் நிலை இன்னும் எத்தனை நாளுக்கு உதவும் என்று நினைக்கிறாய். ஒரு நாள் மொத்தமாய் முடித்துவிடுவார்கள். அதற்குள் விழித்தால் பிழைக்க முயற்சி செய்யலாம்.
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
-குறள்-975
ஈரானை உற்றுக்கவனி. அவர்களின் இராணுவ நகர்வுகள், அரசியல் அசைவுகள் கவனி. இனம் காக்க, தன் ஆளுமையை நிலைநிறுத்த, தன் அரசியல் தன்னிடமே இருக்குமாறு பார்த்துக்கொள்ள, தன் பண்பாட்டின் மீது மற்றொருவன் பெட்ரோல் ஊற்றுவதை தடுக்க, தன் மக்களின் வாழ்வியலை வழிநடத்த அவர்களின் முயற்சியை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எதிரி எத்தனை வலிமையானவன் என்பதை விட, அவனை எதிர்கொள்வது எப்படி என்கிற யோசனை, அறிவு, பயிற்சி, ஆயுதம், அத்தனையும் கற்க வேண்டிய பாடமாக உலக மனித இனத்துக்கே விளங்குகிறது. கம்சனை வீழ்த்திய கண்ணணாக, கோலியாத்தை வீழ்த்திய ஈசாக்கை போல ஈரானின் வீரமும் செயல்பாடும் தமிழினத்தின் அவசியத்தேவை என்பதை எப்போது புரிந்துக்கொள்வாய்..?? ஒற்றுமையும் தெளிந்த அறிவும், செயல்படும் வீரமும் மட்டுமே நம்மை பாதுகாக்கும்.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.
-குறள்-388
இறுதியாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன். இந்த உலகில் மற்ற எல்லாமும் அழிந்து போனாலும் திருக்குறளும், கம்பராமாயணமும் அழியாமல் பாதுகாத்துவிட்டால், மனித இனத்தையும், நாகரிகத்தையும் காப்பாற்றிவிடலாம் என்று சொன்னவன் கூற்றை நினைவூட்டி சொல்கிறேன் கேள். இதன் பொருள் என்ன..?? தமிழினம் அழியாமல் இருந்துவிட்டால் உலக மனித நாகரிகம் பண்பாடு அழியாமல் மீட்டெடுக்க முடியும் என்கிற வாக்குமூலத்தை தவிர வேறென்ன..?? எப்படிப்பட்ட நாகர்கள் இனத்தின் நீட்சியாக நாம் இருக்கிறோம் என்பதையும், நாகரிகத்தின் உச்சமாகவும் இருக்கிறோம் என்பதை இப்போதேனும் புரிந்து உணர்ந்து இனம் காப்பாய். மானம் காப்பாய். அழியாத தமிழர் தம் வீரம் காப்பாய் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்….
நமக்கான எதிர்காலம் நோக்கி……


