VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: ‘இலக்கியம் வெறுமனே எழுத்து இல்ல… அது ஆன்மாவின் ஜீவன்’–  எழுத்தாளர் மலர்வதி
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > நேர்காணல் > ‘இலக்கியம் வெறுமனே எழுத்து இல்ல… அது ஆன்மாவின் ஜீவன்’–  எழுத்தாளர் மலர்வதி
நேர்காணல்

‘இலக்கியம் வெறுமனே எழுத்து இல்ல… அது ஆன்மாவின் ஜீவன்’–  எழுத்தாளர் மலர்வதி

இப்ப வரைக்கும் பன்னிரெண்டு புத்தகங்கள் எழுதியிருக்கேன். எல்லாமே ஏதோ ஒரு விளிம்புநிலை மனுசர்களை தான் எழுதியிருக்கேன்.

பரிவை சே. குமார்
Last updated: July 28, 2026 2:59 pm
9 Views
Share
18 Min Read
எழுத்தாளர் மலர்வதி
SHARE

‘இலக்கியம் வெறுமனே எழுத்து இல்ல… அது ஆன்மாவின் ஜீவன்’  –  எழுத்தாளர் மலர்வதி

 பரிவை சே.குமார்

எழுத்தாளர் மலர்வதி-

வட்டார வழக்கில் எழுதும் எழுத்தாளருக்கான இந்த வருடத்தின் கேலக்ஸி விண்மீன் இலக்கிய விருது 2026 பெற்றதற்கு முதலில் அவருக்கு விண்மீனின் வாழ்த்துகள்.

எளிய மக்களின் வாழ்வியலை, சமூகப் பார்வையுடன் வட்டார வழக்கில் எழுதும் எழுத்தாளர். ஒரு பெண் எழுத்தாளராய் தான் கடந்து வந்த பாதையின் கடினத்தையும் தனக்கு இலக்கியம் கொடுத்திருக்கும் இடத்தையும், தன் வாழ்க்கையையும் பற்றி இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாத இவர் இலக்கியக் குடும்பத்தை ஏற்றுக் கொண்டதால் நிறைய எழுத்துப் பிள்ளைகளைப் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்.

2012-ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது இவரின் ‘தூப்புக்காரி’ நாவலுக்கு கிடைத்தது. இவரின் எழுத்துக்களை சமூக வலைத்தளங்களில், பத்திரிக்கைகளில் வாசித்திருந்தாலும் நாவல்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவே இல்லை. குறிப்பாக ‘தூப்புக்காரி’ குறித்து சகோதரர் தசரதன் சொன்னபின் அதை  வாசிக்க வேண்டுமென்ற ஆசை நிராசையாகவே இருந்தது. சில மாதங்களுக்கு முன் சகோதரர் ராஜாராம் ஊரில் இருந்து வரும்போது புத்தகத்தை வாங்கி வந்திருந்தார். அதை வாசித்தபோது காட்சிகளில் கண்ணில் விரிய, பூவரசி – மாரியுடன் பயணப்படும் போது பல இடங்களில் மல வாசமும், குமட்டலும் என்னையும் ஆட்கொண்டது. அப்படியான ஒரு எழுத்துக்கு யுவபுரஸ்கார் கிடைத்ததில் வியப்பில்லை.

அருமையான எழுத்து, அருமையான நடை, அற்புதமான வட்டார வழக்கு என இவரின் எழுத்து தனித்துவமானது. விருதுகளால் பெருமைப்படுவோர் மத்தியில் இவருக்குக் கிடைத்ததில் விருதுகள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.  இவர் நாமக்கல் கு. சின்னப்ப பாரதி விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, எழுத்தாளர் சுந்தர ராமசாமி விருது, தந்தை பெரியார் விருது, கவிஞர் கவிமணி தாசன் விருது. எழுத்தாளர் புதுமைப்பித்தன் விருது, அமுதன் இலக்கிய விருது, புதிய தலைமுறை நம்பிக்கை நட்சத்திரம் விருது, கேலக்ஸியின் விண்மீன் விருது  உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இதுவரை கருணை இயேசுவின் கல்வாரி கண்ணீர், கழுமரத்தில் தொங்கிய கடவுளின் அன்பு, சிலுவை வழி சிகரம், இலக்கிய படைப்புகள் உள்ளிட்ட பக்தி இலக்கியங்களையும், காத்திருந்த கருப்பாயி, தூப்புக்காரி, காட்டுக்குட்டி, நாற்பது நாட்கள் உள்ளிட்ட நாவல்களையும், கருப்பட்டி  என்ற சிறுகதை தொகுப்பையும், முதல் காட்சிகள் என்ற கட்டுரைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார். இவரது அடுத்த இரண்டு நாவல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. அந்த நாவல்கள் மலர்வதிக்கு இன்னொரு இரு மகுடமாக அமையட்டும்.

எழுத்தாளர் மலர்வதியின் எழுத்தும் வாழ்வும் சிறக்க கேலக்ஸி விண்மீன் வாழ்த்துகிறது.

இனி…. 

உங்களைப்பற்றியும் இலக்கிய ஆர்வம் தங்களுக்கு ஏற்பட்டது பற்றியும் சொல்லுங்களேன்?

கன்னியகுமரி மாவட்டம், தக்கலை மார்த்தாண்டம் பகுதிகளுக்கு நடுவில் வெள்ளிகோடு என்னும் சிறிய ஊர் எனக்கு. என் அம்மா பேரு ரோனிக்கம், அப்பா எலியாஸ், எனக்கு ஸ்டீபன் என்னும் அண்ணனும், லதா என்னும் அக்காவும் உண்டு. இலக்கிய ஆர்வம் எனக்கு எப்படி வந்ததுன்னு தேர்ந்து தெளிஞ்சி சொல்ல தெரியல. சின்ன வயசுலே எழுதுறது நல்லா பிடிக்கும். எப்பவுமே எங்கூட பேப்பரும், அது சம்மந்தமான சாதனங்களும் வச்சுருப்பேன். அப்பா என்னும் சினேகத்தை இழந்த குழந்தையாகவே வளர்ந்தபடியால் எப்பவும் எங்கிட்ட சோகம் கிடந்துட்டே இருக்கும். கூடவே ஆழமான ரசனை உணர்வு எனக்கு… சோகமும் ரசனையும் கலந்தாகும் போது எனக்குள் எழுத்து தன்னாலே ஆரம்பிச்சி.

மேரி ஃப்ளோரா மலர்வதியானது எப்போது? மலர்வதி என்ற பெயரை தேர்வு செய்தது எதனால?

என் ஊருல, என் கூட்டுக்காரிகளில, என் அம்மாவுக்கு, சொந்தப்பந்தங்களுக்கெல்லாம் நான் ஃப்ளோராதான். எனக்கு அந்த பேரு ரொம்ப பிடிக்கும். ஃப்ளோரா என்கிறதன் அர்த்தம் மலர் தானே. 2008 –ஆம் வருசம் முதமுதலா     ‘காத்திருந்த கருப்பாயி’ நாவல் எழுதினேன். அந்த நாவல் கன்னியாகுமரி மாவட்ட இலக்கிய அமைப்புகளில் அறிமுகம் ஆச்சு. இந்த நாவல் வெளிவருகிற நேரம் தான் பெயரு மாற்றம் நிகழ்ந்து. எங்க தக்கலை பகுதியில் வரலாற்று ஆய்வாளர் பென்னி என்கிறவர் வாழ்கின்றார். அவரு நல்ல ஒரு இலக்கியவாதி. இளம் படைப்பாளிகளை உற்சாகப்படுத்த கூடியவரு. பெண்கள் எழுதுறதுல ரொம்பவே ஆர்வமும் ஒத்துழைப்பும் தருவாரு. நான் நாவல் எழுதியிருக்கேன்னு அறிந்தவுடன் ‘இந்த பேரு ஆங்கிலமா இருக்கு. இந்த ஃப்ளோரா ஒரு தனிப்பட்ட அடையாளமா இருக்கு. எழுத்தாளன் பொதுவா தெரியணும், அதனால ப்ளோரா என்னும் ஆங்கில பெயரை தமிழாக்கினா என்ன?’ என கேட்டாரு. நானும் அதை யோசிச்சேன். மலரைக் குறிக்கும் பல பெயர்களை என்னிடம் சொன்னாரு. எனக்கு ‘மலர்வதி’ பெயரு பிடிச்சிருந்து. சின்ன வயதில் நான் எழுதும்       கதைநாயகிகளுக்கு மலர்வதி என பெயர் வச்சிருக்கேன். அது என்ன அதிசயமோ தெரியல. இந்த பெயர் மீது எனக்கு ஒரு ஈர்ப்பம் சின்ன வயசிலே இருந்து. வரலாற்று ஆய்வாளர் பென்னி சார் முன்னிலையில ‘ஃப்ளோரா’ என்னும் ஆங்கில பெயரை ‘மலர்வதி’ என ஆக்கினோம். ‘இந்த மலர்வதி பெயருக்கு மலருக்குள் வசிப்பவள் என்னும் பொருள் என அர்த்தம் தந்தாரு.

ஆரம்பத்தில் கிறித்தவ பக்தி நூல்களை மட்டுமே எழுதியதும், அதிலிருந்து வாழ்வியல் கதைகளுக்குள் நகர்ந்த பின் எழுதாததற்கும் காரணம் என்ன?

சின்ன வயசில நிறைய புத்தகங்கள் வாசிப்பேன். அப்ப எல்லாம் அதில் வரும் தாக்கங்கள் வெகுகாலம் என் மனசை விட்டு நீங்கவே செய்யாது. அப்ப எல்லாம் நானும்  பின்னாட்களில் நிறைய எழுதுவேன்னு நினைச்சேல. இந்த வாசிப்பின் தாக்கம் ஆரம்பத்தில சமூகம் சார்ந்த நாடகங்களை தான் எழுத வச்சுது. ஐந்து நாடகங்கள் எழுதினேன், அதில நான்கு நாடகங்களை நானே இயக்கி என் வயசுக்கு ஒத்த கூட்டுக்காரிகளை வச்சி எங்க ஊர் ஸ்டேஜில நடித்தோம். இந்த நாடக எழுத்தால் நான் மீறல் மிக்க பெண்ணாக பார்க்கப்பட்டேன். அந்த வயசுல சமூகத்திலிருந்து விலகி நிற்க மிகவும் கஷ்டப்பட்டேன். அப்படியே என் பத்தொன்பது வயசுல என் வீட்டின் அருகே இருக்கும் வியாகுல அன்னை கோயிலில் பாட்டுக்காரியாக போனேன். நீண்ட பத்தொம்பது இருபது வருடங்கள் ஒரு கோயிலும், பலிபீடமும், கோயில் காரியங்களிலுமே என்னை அர்ப்பணிச்சேன். அங்க நான் விரும்புற என் இயேசுவை பாக்க முடியல. அதிகார வர்க்கங்கள் உருவகிச்ச இயேசு இல்ல என்  இயேசு. ஏழைகளுக்கு, பெண்களுக்கு அங்கேயும் இடமில்லை. இது என்னை மிகவும் பாதிச்சு. இந்த அடிப்படையில இயேசுவும் ஏழைகளும் ஒண்ணு என இயேசுவின் கல்வாரி பாடுகளை மையமாக வச்சு தவக்கால வழிபாட்டு நேரங்களில் தியானிக்க ஏற்றவகையில் மூன்று கட்டுரை நூல்களை எழுதினேன். அச்சில் முதன் முதலாக வந்த என் நூல் ‘கருணை இயேசுவின் கல்வாரி கண்ணீர்’ என்ற நூலாகவே இருந்து.

இந்த எழுத்துகளோடு எழுதிய முதல் நாவலும் வெளிவந்தது. ‘தூப்புக்காரி’ என்னை முழுவதும் சமூகத்தின் எழுத்துக்காரி என அடையாளப்படுத்திய பிறகு அந்த கட்டுரை நூல்களை எழுதல. ஆனா நான் எழுதும் எல்லா படைப்புகளும் நான் சார்ந்திருக்கும் சமயத்தின் அறியாமைகளை குத்திக்காட்டுற படியாகவே எழுதியிட்டு இருக்கேன். இனி என் வாழ்க்கையை எழுத நினைச்சிருக்கேன். அப்போ விடுபட்ட பலவற்றை எழுதுவேன்.

பல விருதுகளைப் பெற்றிருக்கும் தங்களுக்கு யுவபுரஷ்ஹார் விருது கிடைத்தப்போது எப்படியிருந்தது? அதற்குப் பின்னான எழுத்தாளர் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

‘தூப்புக்காரி’ வெளிவந்த பிறகு தான் இலக்கியத்திற்கான விருதுகள் பெற்றேன். முதன் முதலாக பெற்ற விருது, நாமக்கல் கு. சின்னப்பாரதி விருது. இதன் அடுத்த விருதாகவே யுவபுரஷ்ஹார் விருது அமைந்து விட்டது. அதன் பின் பல நூறு விருதுகள் பெற்று வருகிறேன். இவ்விருதுக்கு பிறகான வாழ்க்கை அப்படியே முற்றிலும் என்னை மாற்றியிட்டு. என் சிந்தனை, எழுத்து, பேச்சு, என எல்லாமே பொட்டித்தெறிச்சி சமூகத்தை நோக்கி பாய ஆரம்பிச்சு. ஆரம்ப காலங்களில் அதிக தடுமாற்றம் இருந்து. ஏன்னா, இவ்விருது பெறும் வரைக்கும் நாகர்கோவில் கூட எனக்கு அதிக தொலைவு தான். தமிழ் இலக்கிய உலகம் என்னை உச்சிமுகர்ந்தப்ப இன்னும் அதிகமா எழுத கடமைப்பட்டிருக்கேன் என்கிற உத்வேகம் தந்தது ஒரு வகையில் பெரிய சிலுவையும், முட்கிரீடமும், அதே கல்வாரி பாதையும் தான். எனக்கு பின்புலமாக எதுவுமே இல்ல. தனிப்பெண்ணா எழும்பி வருகிறப்ப எத்ர அடிகள் இலக்கியத்திலும், எத்தனை இழுத்து விடல்கள்… சிலப்ப தோணும், எழுத்துக்காரியாக மாறாமலே இருந்துருக்குலாமோ என…

 

தூப்புக்காரி தாங்கள் பார்த்து வளர்ந்த வாழ்வின் புனைவு என்பதால் தான் அது உச்சம் பெற்றது என்று நீங்கள் எப்போதேனும் நினைத்த துண்டா?

கழிவறையும் அதன் அடர்ந்த பீக்களும் பார்த்திருக்கேன். கழிவறை இல்லாமலே இருபத்தியொரு வயசு வரைக்கும் வெளிப்புறங்களில் போயிருக்கேன். அப்ப எல்லாம் பாத்த பீக்கள், ஈச்சிகள் என் நெஞ்சுக்குள் கூடு கட்டி இருந்திருக்கின்றன. என் அம்ம ஒரு பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்தா. ஆனா அது அப்ப என் ஊருக்கே கழிவறையா இருந்த ஒரு கோலமுண்டு. (இன்னிக்கு பள்ளி கழிவறையின் தன்மைகள் மாறி போச்சு). தூப்புக்காரி என் வாழ்க்கையின் புனைவு இல்ல. ஆனா கழிவறைகளும் காட்சிகளும் எனக்கு பரிச்சியமானவை. இந்த நாவல் உச்சம் பெறுமுண்ணு நான் நினச்சதேயில்ல. இந்த படைப்பை எழுதுனதையெல்லாம் அடிக்கடி யோசிச்சிப்பாப்பேன். எப்பிடி இது சாத்தியாமாச்சுண்ணு பிரமிப்பா இருக்கும். தூப்புக்காரி என்னும் சொல் என் மனசை சின்ன வயசுலே பாதிச்சிருக்கு. என் அம்ம பள்ளி வளாகத்தை சுத்தம் செய்துட்டு இருக்கிறப்ப யாரோ ஒருவர் ‘தூப்புக்காரி இஞ்ச வா’ என அழைப்பாங்களா, சக மாணவிகள் முன்னால அழுக்கும் அவலமுமா மோண்டு தூறும் எதோ ஒரு குழந்தையின் அழுக்கை சுத்தம் செய்கிறவளாக, கழிவறையின்  அழுக்குகளை அப்புறப்படுத்துகிறவளாக பாக்கிறப்ப அதிகம் பாதிக்கப்பட்டிருக்கேன். இந்த தூப்புக்காரியை எப்படியேனும் அழகாக்க வேணுமே என எழுதினேன். ஆனா இது உச்சம் தொடும் என்கிறதை இப்பவும் அதிசயமாகவே பாக்கிறேன்.

 

எஸ்.ரா. தனது முதல் நாவலான உப பாண்டவமே எனது எழுத்தின் உச்சம். அதைப் போன்று வேறொரு நாவலை என்னால் இனி எழுத முடியுமா என்று தெரியாது எனச் சொல்வதைப் போல் தூப்புக்காரி உங்கள் எழுத்தின் உச்சம் என்றாலும், அதையும் விடச் சிறப்பான வாழ்வியல் கதையை எழுதும் எண்ணம் இருக்கிறதா?

தூப்புக்காரி என் இயல்பிலே எளிதாக வந்து பிறந்து கொண்டாள். இந்நாவலுக்காக நான் எந்த மெனக்கெடும் செய்யவில்லை. நான் எழுத்துக்காரி என்கிற அடையாளம் பெறுறதுக்கும் முன்னே எதோ ஒரு டயரியில நோட்டுல எம்பாட்டுக்கு எனக்க நிம்மதிக்காக எழுதியிட்டே இருப்பேன். தூப்புக்காரியும் அப்படி தான் எழுதுனேன். எங்க வீட்டு சுவருல சாஞ்சி பின் பக்கம் நிக்கும் மரங்களுக்க அருகில போய் இருந்து கையால பென்னு வச்சி, பென்சில் வச்சி எழுதினேன். இதை அச்சாக்கவும், புத்தகமாக கொண்டு வரவும் பெரும் சிரமமங்கள் இருந்தன. இல்லாம எழுத்து எனக்கு சரளமா வந்து. அதுக்க பிறகு இப்ப வரைக்கும் பன்னிரெண்டு புத்தகங்கள் எழுதியிருக்கேன். எல்லாமே ஏதோ ஒரு விளிம்புநிலை மனுசர்களை தான் எழுதியிருக்கேன். ஆனாலும் இப்ப வரைக்கும் தூப்புக்காரியை பத்தி தான் பேசியிட்டு இருக்காங்க.  தூப்புக்காரி என் வாழ்க்கையின் உச்சம் இல்லை. அந்த கழிவறைகளும் காட்சிகளும் என் சிறுமி பருவத்தில் என்னோடு கலந்து போயிருப்பது உண்மை தான். என் வாழ்க்கை எது என்பதை இனி தான் எழுத நினச்சிருக்கேன்.

 

தங்களின் முதல் நாவலான ‘காத்திருந்த கருப்பாயி‘ பெரிதாகப் பேசப்படாதையும், தூப்புக்காரி இன்று வரை பேசப்பட்டுக் கொண்டிருப்பதையும் தாங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

‘காத்திருந்த கருப்பாயி’ நூல் வெளிவந்த நேரம் மலர்வதி யார் என்றே தெரியாது. தூப்புக்காரி வெளிவந்த இரண்டே வாரத்தில் அதன் போக்கும் வீரியமும் தமிழ் வாசகர்களை அது யார் என தேடவைத்தது. இலக்கியத்தில் இந்த பெயர் புதிதாக இருக்கின்றதே என்ற தேடலோடு தூப்புக்காரியை வாசித்தார்கள். இன்னும் ஒரு உண்மை என்னவென்றால் இந்த நாவல் விருது பெற்ற நாவலாக இருந்த படியால் ஊடகங்கள் என்னை தேடி வந்தன. என் நேர்காணல்கள், அதை மீறிய நாவலின்  உக்கிரம் வாசகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தமிழைப் பொறுத்தவரை பெண் எழுத்தாளர் என்றாலே குடும்பக் கதைகளை மட்டுமே எழுதுவார்கள், சமூகச் சூழலை வைத்து எழுதமாட்டார்கள் என்ற பொதுப்பார்வை இருக்கிறது. அதுபோக எங்கே மட்டம் தட்டலாம் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கிறது. அதை உங்களைப் போல் பலர் உடைத்து இருப்பது மகிழ்ச்சி. தாங்கள் வாழ்வியலையும் சமூகச் சூழலையும் களமாக்கும் போது எதிர்கொண்ட பிரச்சினைகள்?

சமூகத்தின் ஆணி வேர் குடும்பங்கள் தானே. குடும்பங்களிலிருந்து தானே பெண்ணடிமைத்தனம் வளருது. குடும்பக் கதைகள் என்கிறது அடுக்குமுறைகளுக்குள் பெண்களை எழுதி அழகுபார்க்கிறது தானே. அதிகாலை எழும்புறதும், வீட்டில் உள்ள சகல பேரையும் கவனிக்கிறதும், எல்லாருக்க நன்மைக்காகவும் தன் வாழ்க்கையை இழக்கிற     பெண்களை தான் குடும்ப பாங்கான பெண்களென உலகம் விரும்புகிறது. இதை விட்டு கொஞ்சம் வெளியே வந்தாலும் அவா நடத்தை கெட்டவ, குடும்பப்பாங்கு இல்லாதவ என்கிற விமர்சனங்கள் சமூகத்துல வருகிற எல்லா பெண்களுக்கும் ரொம்ப இலகுவா கிடச்சிரும். இதுல நானும் விதி விலக்கல்ல. நிறைய வாங்கி கட்டியிருக்கேன்.  பாலியல் தொழிலாளிகளைப்பற்றி நான் எழுதுன ‘காட்டுக்குட்டி’ நாவல் வெளிவந்த நேரம் ’அது அவா தானே’ என்று சக இலக்கியவாதிகள் விமர்சிச்சாங்க.  எழுத்தை உள்ளபடியே எழுதுகையில் தனிமையாக்கப்படும் சூழல்கள் உண்டு. ஒற்றைப்படுத்தும் கொடுமைகள் உண்டு. இது பற்றிய சவால்களை பெரிய புத்தகமாகவே எழுதும் அளவுக்கு எக்கச்சக்கமான கசப்பான அனுபவங்கள் நிறைய உண்டு.

தங்களின் சிறு வயதில் நண்பர்களுடன் இணைந்து நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறீர்கள். இப்போது நாடகங்கள் அல்லது சினிமா இயக்கும் எண்ணம் இருக்கிறதா?

ஆமா, நாடகக் காலங்கள் என் வாழ்க்கையின் பொற்காலங்கள். அந்த காலங்கள் என் காதலின் காலங்கள். ரொம்ப ரொம்ப துக்கங்களையும் சந்தோசங்களையும் அனுபவிச்ச காலமது. நாடகம் எழுதுறதும் இயக்குவதும் எதோ பெரிய பணி போல எனக்கு அப்பவும் தோணல. இது எல்லாருக்கும் வாற விசயம் போல் தான் நினச்சேன். நான்கு நாடகங்கள் போட்ட பிறகு ஊரளவில சில பல வெறுப்புகளுக்கு ஆளாக்கப்பட்டேன். ரொம்பவே அவமானப்படும் சூழல்கள் நிகழ்ந்தன. இனி நாடகம் கீடகமுண்ணு போய் பாருன்னு அம்ம சொன்ன ஓர்ம இருக்கு. காட்சிகளை இயக்கும் உத்தி இலகுவிலே வருகிற படியால் மனசுக்குள் பல காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கும். அவைகள் தான் என் நாவல்களாக வெளிவருகின்றன. நாடகங்களுக்கும் நாவல்களுக்கும் ஜாடை ஒன்று போலவே இருப்பதாக நினைக்கிறேன்.

சினிமா இயக்கம் என்பதெல்லாம் பெரிய பெரிய விசயங்கள். இதிலெல்லாம் ஆர்வம் இல்லாமல் இல்லை. அதற்கான வாய்ப்பு ஏனோ இன்னும் கூடி வரவில்லை. வந்தால் பார்க்கலாம்.

 

அடித்தட்டு மக்களின் வாழ்வியலையே எனது எழுத்துகள் பேசும் என்ற தங்களின் எண்ணம் சிறப்பானது. இன்னும் பேசப்பட வேண்டிய கதைகள் நிறைய இருக்கின்றன என்பதே என் எண்ணம். இப்போது தாங்கள் எழுதிக் கொண்டிருக்கும் நாவலைப் பற்றியும் அதன் களத்தைப் பற்றியும் சொல்ல முடியுமா?

எழுத்துக்காரியின் கண்கள் சூரியனின் கதிர்களை விட கூர்மையானவை. ஏன்னா, சூரியக்கதிர்கள் ஊடுருவ முடியாத இட த்திலும் எழுத்தாளர்களின் பார்வை ஊடுருவும். எனக்கும் அப்படித்தான், நாள் தோறும் நான் சந்திக்கும் மக்கள் என்னைப்போலவே பாடுசூடுகளோடு வாழ்கிறவர்களாகவே இருக்கிறார்கள். தினம் தினம் நாவலுக்குரிய கருக்கள் எளிய மக்களின் வாழ்க்கையிலிருந்து தான் எடுக்கிறேன். சமீபத்துல எழுதி முடிச்சி அச்சாக்கம் முடித்திருக்கும் ரெண்டு நாவல்களுமே உலகம் பார்க்க மறந்த மனிதர்களின் கதை. ஆலயத்தில் கடைநிலை பணியாளர்கள் உண்டு. இந்த மக்கள் பெரும்பாலும் வெகுளிகளாகவே இருப்பார்கள். மேல் தட்டில் வாழ்கிறவர்கள் இறைவனின் பெயரால் பிழைப்பு நட த்துகிறவர்கள். ஆனால் இவர்களோ இறைவனின் இதயம் போன்று செயல்பட கூடியவர்கள். இப்படிப்பட்ட கடை நிலை ஊழியக்காரர்களைப் பற்றி ‘கோயிலான்’ என்னும் நாவல் எழுதியிருக்கிறேன். காலச்சுவடு பதிப்பகத்தில் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது போல் கல்யாணம் ஆகாத ஆண்களின் வாழ்க்கை சமூகம், மற்றும் குடும்பங்கள் அளவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி எழுதியிருக்கிறேன் ‘குஞ்சுமோனின் கல்யாணம்’ என்னும் நாவலில். இந்த இரண்டு நாவல்களுமே ஆண் கதாப்பாத்திரங்களை முன் நிறுத்துகின்றன.

தங்களது நாயகி பூவரசி போன்ற பெண்களைச் சந்தித்திருக்கிறீர்களா..? இப்போது பூவரசிகள் தங்களது எண்ணத்தை, ஆசையை அடைந்து விட்டதாக நினைக்கிறீர்களா?

பூவரசி போன்ற பெண்களை நாள்தோறும் சந்தித்துக்கொண்டு இருக்கின்றேன். இன்னிக்கு காலைல  கூட பார்த்தேன் என்று சொல்ல முடியும். பூவரசிகள் யாருமே  இன்னுமே தங்களோட ஆசையை, கனவை   அடைந்திருக்கல.     போராடிக்கொண்டே சமூகத்தின் அழுக்குகளை துடச்சி வாழுறாங்க. ஆனாலும் எதோ ஒரு நாள் மாற்றம் வருமென்ற நம்பிக்கையில  இருக்கேன் என் பூவரசியை போல்…

மாரி போன்ற மனிதர்கள் இருக்கும் உலகில்தான் பெண்களுக்கு பெரும் பலமாக இருக்கும் ஆண் நட்புக்களைக் கொச்சைப்படுத்தும் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மாரி எனக்கு மிகவும் பிடித்தமான மனுசன். பெரியாரிசம், பெண்ணியம், முற்போக்கெல்லாம் அவனுக்கு தெரியவே தெரியாது. அவனுக்கு தெரிந்த ஒரே பண்பு அன்பு மட்டுமே. அன்பு செய்யுற பெண் எப்படியான நிலையில் இருந்தாலும் அவளை ஏற்றுக்கொள்ளும் பெரிய மனசு மாரிக்கு. பெண்ணியம் பேசுற பலருமே பேச்சளவில் நின்று விடுறப்ப, இந்த மாரி இருக்கானே தான் காதலிச்ச பெண்ணு அபலையா, அவ காதலில் தோற்று நிற்கிறப்ப நான் உனக்கு இருக்கேன் என அவா கையை பிடிச்சானே அது தானே உண்மையான அன்பு. தனக்கு பிடித்தமானவள் இப்படி தான் இருக்கணும் என்கிற வளையமோ வட்டமோ போடாம அவளை அவா நிலையிலே ஏத்துக்கிட்டானே இதை விட வேற என்ன மாண்பு இருக்க முடியும்..? இலக்கியம் சமூகமென மேட்டிமையான இடத்தில வந்து பாக்கிறப்ப தான் தெரிந்தது சக ஆண் நட்புகளை இங்கேயும் அதிகமாக கொச்சைப்படுத்துறாங்க என்பது பற்றி. எங்கம்மா அடிக்கடி ஒரு சுலோகம் சொல்லும், ‘நரி கூவி நேரம் வெளுக்காது‘ என்று. ஆண் பெண் நட்பை கொச்சைப்படுத்துகிறவர்களை இப்படி தான் பார்க்க வேண்டியிருக்கு.

நாவலாசிரியர் பொன்னீலன் மற்றும் எழுத்தாளர்  நாஞ்சில் நாடன் போன்றோர் உங்களுக்கு அளித்து வரும் ஊக்கம் குறித்து?

2011 ஆம் ஆண்டு என் இலக்கியத்தந்தை பொன்னீலனை தூப்புக்காரி நாவலின் அணிந்துரைக்காக அவரின் இல்லம் போய் சந்தித்தேன். அன்னிக்கு ஆரம்பிச்ச இலக்கிய பாசம் இப்ப வரையும் தொடர்கிறது. உண்மையிலே அவர் எனக்கு இலக்கிய ஆசானாகவே இருக்கார். கடலை விட பெரிய மனசு அவருக்கு. அவருடைய வழிகாட்டுதல் எனக்கு கடவுள் மாதிரி. இது போலவே நாஞ்சில் நாடனின் பாசமும் இருக்கு. என் படைப்புகளை வாசிக்கும் போதெல்லாம் ‘முன்பை விட அதிகமா முன்னேறியிட்டு வாறீங்க’ என சொல்வார்.  இவங்களோட ஊக்கம் என்னை மென்மேலும் வளப்படுத்தியிட்டே இருக்கு.

மறைந்த நாறும்புநாதன் அவர்கள் உங்களது எழுத்துக்களை வெளியுலகுக்கு அறிமுகம் செய்தவர்களில் முக்கியமானவர். அவரின் மறைவு தங்களை அதிகம் பாதித்திருந்தது என்பதை தங்களின் முகநூல் பதிவுகள் வழி அறிந்து கொண்டோம். அவரைப் பற்றிச் சொல்லுங்களேன்?

தூப்புக்காரி நாவலை வாசித்து விட்டு ஒரு வாசகனைப்போல் வாசகர் கடிதம் அனுப்பியிருந்தார் நாறும்பூநாதன். இலக்கிய உலகிற்கு நான் அப்போ ரொம்ப ரொம்பப் புதுசு. என் ஊரைத் தாண்டி எனக்கு எதுவுமே தெரியாது அப்போ. நாகர்கோவில் கூட உலகின் அத்தம் இருக்கு என்று நினைக்கிறவளுக்கு தமிழ்சமூகமே சொந்தமாகி போனப்ப என்னை திடப்படுத்தி இலக்கியத்தில் நிற்க வைக்க பல கரங்கள் கை கொடுத்தன. அதில் முக்கியமானவராக இருந்தவரு நாறும்பூநாதன். திருநெல்வேலியில் நிகழும் எல்லா இலக்கிய கூட்டங்களுக்கும் என்னை அறிமுகம் செய்தாரு. தென்காசி, தூத்துக்குடி, போன்ற பகுதிகளின் இலக்கிய நிகழ்வுகளுக்கு அழைக்க வைத்தாரு. என் எல்லா படைப்புகளுக்கும் முதல் வாசகரா இருப்பாரு. கடைசியாக 2025 டிசம்பர்ல ‘அண்டியாபீசு’ நாவல் வெளியீட்டு நிகழ்வுக்கு வந்துட்டு போனாரு. வெளியில் தெரியும் மலர்வதிக்குள் இன்னொரு சிறுமி உண்டு. அவளை கண்டுப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவு. அந்த குட்டி சிறுமியை கண்டவர்களில் ஒருவர் நாறும்பூநாதன். இந்த வகையில் ஒரு நல்ல குருவை, வழிகாட்டியை இழந்து விட்டதாகவே இப்போதும் நொம்பலப்படுகிறேன்.

உங்களுக்குப் பெரும் துணையாக அம்மா, அக்கா, அண்ணன், அண்ணி ஆகியோர் இருப்பதாகச் சொல்லும் தாங்கள் திருமணம், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கையை நோக்கி நகராததைப் பற்றி எப்போதேனும் யோசித்ததுண்டா? அப்படியான ஒரு வாழ்வைத் தவற விட்டுவிட்டோமெனத் தோன்றுவதுண்டா?

நான் ஏகமாக ஆசைப்பட்டதும் தேடியதும் எனக்கான குடும்ப வாழ்க்கையை மட்டுமே. அதை இழந்தது பற்றி துயரப்படுவதுண்டு. கண்ணுக்குதெரியாத எத்தனையோ வாழ்க்கைச் சாட்சிகள் மெளனமாக என்னை குத்திப்பிடுங்குகின்றன. இதைப்பற்றியெல்லாம் சொல்ல இப்ப எங்கிட்ட குரலில்லை. என் வாழ்க்கையை விடவும் நான் அன்பு செய்த சிலருக்காக இழந்துபோன இந்த வாழ்க்கை இலக்கியத்தை கல்யாணம் செய்து, ஏகப்பட்ட படைப்புக் குழந்தைகளை பெற்றுக் கொடுக்குது. எனக்க சிந்தனை, எனக்க கண்ணீரு இழப்பு என எல்லாமே என் படைப்புக் குழந்தைகள் வழியே உலக்கு பிறந்துட்டு இருக்கு… போனதெல்லாம் போகட்டும். ஒரு வகையில் என் சித்தம் நிறைவேறியிருந்தால் நிச்சயமாக தமிழ் இலக்கியத்தில் மலர்வதி என்னும் படைப்பாளி உருவாகமல் போயிருப்பாள்.

எழுத்தாளர் மலர்வதி பல சமூக செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர் என்பதை அறிவோம். அது குறித்தும், அப்படியான நகர்தலின் போது எதிர்கொள்ளும் சாவால்கள் மற்றும் சாதனைகள் குறித்துச் சொல்லுங்களேன்.

சமூகத்தை மட்டுமே நம்பி வாழ்வதால் சமூகத்துக்கு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் ‘இறகுகள் கலை இலக்கியம்’ என்னும் இலக்கிய அமைப்பை ஆரம்பித்து அது வழியாக முப்பதுக்கும் மேற்பட்ட இளம் மாணவர்கள் இருவருடத்திற்குள் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். இது போக இளையோருக்கான ஆற்றுப்படுத்தல் பணி செய்துட்டு இருக்கேன். இலக்கிய முன்னாலே சமூகம் தானே, இது வழியான எழுத்தாயினும் பேச்சாயினும் வாழ்வாயினும் சாவால்கள் இல்லாமல் இருக்க முடியாதுதானே. சவால்கள் தானே புது தேடலுக்கான வாசல்களாக இருக்கின்றன… எல்லாம் பழகிப்போகுது இப்ப.

 

கேலக்ஸியின் விண்மீன் விருது தங்களுக்குக் கிடைத்திருப்பது குறித்துப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

கேலக்ஸியின் விண்மீன் இலக்கிய விருது எனக்கு ரொம்ப சந்தோசமான விருது. நான் யாருண்ணே தெரியாம என் படைப்புகளை வாசித்து மக்கள் மொழியான வட்டார வழக்குக்காக தாமாகவே கொடுத்திருப்பது ரொம்ப சந்தோசமாகவும் கெளரமாகவும் கொண்டாடுறேன். வட்டார வழக்கு எங்கிறது என் ஜீவனுக்குள்ளே கிடக்கிற அம்மையின் பாசை. எளிய மக்களும் எளிய மொழியும் அப்படியென்ன உனக்கு கொண்டு வந்துரும் என கேட்கிறவங்களுக்கு மத்தியில் இப்படியான விருதுகள் என்னை இன்னும் எழுத வைக்கின்றன. வாழவும் வைக்கின்றன. கேலக்ஸியின் விண்மீன் இலக்கிய விருதுக்கான நன்றியை மனசார தெரிவிக்கிறேன்.

இப்போது எழுதுபவர்களின் எழுத்தை வாசிக்கும் போது தங்களுக்குத் தோன்றும் எண்ணத்தைச் சொல்ல முடியுமா?

இப்ப எல்லாம் ரொம்ப வேகமா எழுதுறாங்க. எழுதுற அளவுக்கு வாசிக்கிறதே இல்ல. வாசிப்பு என்கிறது புத்தகங்களை மட்டும் வாசிக்கிறதில்ல. மனிதர்களை. இவ்வுலகை, பிரபஞ்ச அதிசயங்களையெல்லாம் ஒரு படைப்பாளிக்கு வாசிக்கவும் நேசிக்கவும் தெரியணும். இப்ப எழுதுற பலருக்குமே அழகான வாழ்வியல் கிடச்சிருக்கிறதில்ல. ஆடு மாடுகள் வயல்வெளிகள், ஓடைகள், சோலைகளென இலக்கியத்தின் ஆன்மா பிறக்கும் இடங்களிலிருந்து ரொம்ப தூரமா பிரிஞ்சி போயி எழுதுறாங்க. இதில் பெரும்பாலும் சத்து இருக்கிறதில்லை. ரொம்ப அவசரமான எழுதுறாங்க. கள ஆய்வோ, நிதானமோ  இல்லாம பல எழுத்தாளர்கள் உருவாகிறாங்க. எடுத்த எடுப்பிலே உச்சம் தொடணும். பெரும் விருதுகள் வாங்கணும் என்கிற துருசத்திலே எழுதும் எழுத்துகளும் இருக்கின்றன. இலக்கியம் வெறுமனே எழுத்து இல்ல. அது ஆன்மாவின் ஜீவன். சில நேரங்களில் அது சொந்த ஜீவனை தான் கட்டிப்பிணையும். அப்ப எல்லாம் மூச்சுமுட்டும், தனிமை கொல்லும் எல்லாத்தையும் ருசிச்சி ருசிச்சி சொந்த உயிரை ஒப்புக்கொடுக்கும் இலக்கியம் இறைவனின் இதயம் என்பதை புரிகிறவங்க மிகவும் குறைவு.

தாங்கள் கடந்து வந்த பாதை மலர் படுக்கையால் ஆனதல்ல என்றாலும் இப்போது எழுத்தாளராய், சமூக சேவகராய் தங்களின் பாதையில் மலர்கள் இல்லையென்றாலும் முட்கள் குறைந்திருப்பதாக நினைக்கிறிர்களா..? 

முள்களை பழகியிட்டேன். ஆங்காங்கே மலரும் சில பூக்களுக்காக அவைகளை தாங்கி பழகி விட்டேன். முள்கள் சில நேரங்கள் அழகானவைகள். அதன் முனைகளில் அன்பு     மினுங்குவதால் தானே ஏமாந்தேன். அனைத்து துரோகங்களும் அன்பின் முள்களாக இருப்பதால் அதையும்   பழகிவிட்டேன். ஏன்னா அன்பு மட்டும் தானே வாழ்வு புரட்சி!

*

You Might Also Like

“மாயத்தின் விளைவுதான் உணர்வுப்பூர்வமான படைப்பு” – கரன் கார்க்கி
‘பெண்கள் எழுதுவதே இங்கு சவால் தானே…’ – எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு
‘கற்றதை விட இழந்தவைகள் அதிகம்’ – முல்லை அமுதன்
விண்மீன் ஜூலை 2026 மின்னிதழ்
‘முட்கள் நிறைந்த பாதையில் பயணம்’  – எழுத்தாளர் ஆர்.வி.சரவணன்
TAGGED:Interviewநேர்காணல்பேட்டிவிண்மீன் ஜுலை 2026
Previous Article நல்லதை விதைப்போம்
Next Article எழுதாத பேனாக்கள் தொலைவதில்லை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (14) கட்டுரைகள் (22) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (76) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (13) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (14)

பதிவுகள்

  • July 20268
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?