கேரளம் தன்னைக் கடவுளின் தேசம் என்றழைத்துக் கொள்வதைப் போல ஓமான் தன்னை ‘அழகின் முகவரி’ என்றடையாளப் படுத்திக் கொள்கிறது. ஓமான் அநியாயத்திற்கு அழகு. இது மிக நீண்ட, அழகிய, வித விதமான கடற்கரைகளையும்; மிகப் பரந்த பாலை மணல் மேடுகளையும்; பெரும் மலைத் தொடர்களையும்; மிக நீண்ட கற்பனைக்கு எட்ட முடியாத அளவிற்குப் பரந்து கிடக்கும் அதி ஆழமான குகைககளையும்; அற்புதமான அருவிகளும், வற்றாத நீரூற்றுகளும் ஊடாடும் உயர்ந்த கணவாய்களையும்; குளிர்ந்த மழைப் பிரதேசங்களையும் இயற்கையன்னையாள் கொடையாக அளிக்கப் பெற்ற ஆசீர்வதிக்கப் பட்ட தேசம்.
ஆனால் இப்படி இயற்கை அளித்த அற்புதக் கொடைகளுக்கு அணிகலன்களை பூட்டி மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் இந்த அமைதியான மற்றும் கனிவான மக்களின் பெரும் உழைப்பில் உருவான மலைக் கிராமங்கள், உலகில் வேறெங்கும் காண முடியாத தனித்தன்மையான பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் தரித்து இணையற்ற பொலிவுடன் மிளிர்கின்றன.
இருநூறு முன்னூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒமானிகளின் பெரும் செல்வம் சுனையில் இருந்து ஊறிவரும் நன்னீரும், அந்த நீரோடைகளுக்கு அருகே பெரும்பாடு பட்டு அவர்கள் உருவாக்கி வைத்த பேரீச்சம் மரத் தோப்புகளும், அவர்கள் வளர்த்து வந்த ஆட்டு மந்தைகளுமே. இந்த உடைமைகளையும் தங்கள் பெண்களையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதே பூர்வாங்க ஓமானிகளின் தலையாய நோக்கமாக இருந்திருக்கிறது.
அதனால் தான் எவராலும் எளிதில் நெருங்க முடியாத மலை உச்சிகளையும் இடுக்குகளையும் தேடித்தேடிப் போய்த் தங்கள் கிராமங்களை நிர்மாணிதிருக்கின்றனர். ஓமானி கிராமங்கள் அனைத்திற்கும் ஒரு சில பொதுவான அம்சங்கள் இருப்பதை முதல் பார்வையிலேயே கண்டு கொள்ள முடியும். இக்கிராமங்களனைத்திலும் தவறாமல் ஒரு கண்காணிப்புக் கோபுரம் இருக்கும். இவை சமவெளிகளிலும் உண்டு. அதே போல இக்கிராமங்களின் நுழை வாயில் மிகக் குறுகியதாகவே இருக்கும்.
அவர்கள் நாற்புறமும் உயர்ந்த மலைகளால் சூழப்பட்டு இயற்கை அரணோடு பாதுகாப்பாக வாழ்ந்து வந்திருப்பதை இன்றும் உணர முடியும். சக்தி வாய்ந்த முரட்டு வாகனங்கள் மற்றும் GPS போன்ற ஏராளமான நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் இக் காலகட்டத்திலும் அக்கிராமங்களை அடைவதற்குள் நமக்கு நாக்குத் தள்ளி, கண்விழி பிதுங்கி குடல் வாய்க்கு வந்துவிடுமெனில் அரை நூற்றாண்டுக்கு முன் இருந்த நிலையைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.
‘அல் ஹுத்தா’ குகையெனும் அற்புதத்தை ரசித்து விட்டு வெளியே வந்தவுடன் வலது புறம் வளைந்து நெளிந்து மேலேறும் தார்ச்சாலையில் அரை மணி நேரம் பயணித்தால் ‘ஷரஃப் அல்மேயன்’ என்ற ஒரு இடத்தை அடைவோம். மலைகள் சூழ்ந்த அந்த இடம் ஹஜர் மலைத் தொடரின் இரு புறங்களை இணைக்கும் புள்ளி.
மேற்கு ஹஜர் மலைத் தொடரின் வடபுறம் இருப்பது ‘ருஷ்டாக்’ நகரைத் தலைமையிடமாகக் கொண்ட ‘அல் பாத்தினா’ மாகாணம். தென்புறத்தில் இருப்பது ‘நிஸ்வா’வைத் தலைமையிடமாகக் கொண்ட ‘அல் தஹ்லியா’ மாகாணம். ‘ஷரஃப் அல் மேயன்’ என்பது இப்படிப்பட்ட இரண்டு புகழ் பெற்ற மாகாணத் தலைநகரங்களுக்கு இடையே மலையுச்சியில் இருக்கும் ஒரு முக்கிய சந்திப்பு.
‘அல் தஹ்லியா’ மாகாணத்தில் இருக்கும் ‘மிஸ்ஃபாத் அல் அப்ரியீன்’, மற்றும் ‘ஹம்ரா’ போன்ற ஊர்களில் இருந்து மலைத் தொடரின் மறுபுறம் இருக்கும் ‘பலத் சீத்’ மற்றும் ‘ஹாத்’ போன்ற கிராமங்களை அடைய ‘ஷரஃபை’க் கடந்தேயாக வேண்டும்.
‘ஷரஃபை’ ஒரு முக்கோணத்தின் மையப் புள்ளியாகக் கருதினால் இந்த மூன்று கிராமங்களையும் அதன் மூன்று முனைகளாகக் கருதலாம். இதில் முதலாவதான ‘மிஸ்ஃபாத் அல் அப்ரியீன்’ தான் ஓமானின் மிக அழகிய கிராமம். சாலைகளும், வாகன வசதிகளும் உருவாவதற்கு முன்பு இக்கிராமங்களின் பூர்வகுடிகள் தலைச் சுமையாகவும், கழுதைகள் மீது பொருட்களை ஏற்றிக் கொண்டும் நெட்டுக்குத்தான கரடு முரடான மலைகளில் ஏறியும் இறங்கியும் உறவும், வணிகமும் பாராட்டி வந்திருக்கின்றனர்.
இன்று வாகனங்கள் ஷரஃபில் இருந்து ‘ஹாத்’ வழியே ‘பலத் சீத்’ செல்ல கரடு முரடான மண்சாலை ஒன்று உண்டு. மேலிருந்து பார்க்கும் போது, கீழே அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு சிறு கிராமங்களும் மலைகளால் சூழப்பட்டு பார்ப்பதற்கு இரண்டு செட் ‘கப் அண்ட் சாஸர்’களை அருகருகே வைத்ததைப் போல இருக்கும்.
ஓமானுக்கு சுற்றுலா வரக்கூடிய அனைவரும் ‘ஆஃப் ரோட்’ பயண அனுபவத்தைப் பெறத் தவறக்கூடாது. கரணம் தப்பினால் மரணம் என்னும் சூழலில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்கக் கூடிய ஏராளமான மலைப் பாதைகள் ஓமானில் உண்டு. அமர்ந்து செல்லும் போது வண்டி ஆடுகிற ஆட்டத்தில் நமது இதயம் வாய்க்கு வந்துவிடும், அது நம்மைப் போன்ற அனுபவம் அற்றவர்கள் மெதுவாக வண்டியை உருட்டும் போது. அதுவே அனுபவம் வாய்ந்த ஓமானிகளது ‘டொயோட்டா ஹில்லக்ஸ்’ பிக்கப்புகளில் தப்பித்தவறி ஏறிவிட்டால் கெட்டது கதை. நாம் குடித்த தாய்ப் பாலையே வெளியே கொண்டு வந்து விடும்படி அந்தக் குண்டும் குழியுமான மண்சாலைகளில் தங்களது வண்டிகளைப் புயல் வேகத்தில் விரட்டுவதில் கால் தேர்ந்தவர்கள் ஓமானிகள்.
உள்ளே இறுக்கிக் கட்டப்பட்ட சீட் பெல்ட்டையும் மீறி உருண்டு கொண்டிருக்கும் நாம் ‘புருஷ லட்சணம்’ படத்தின் இறுதிக் கட்டத்தில் நெக்குருகி உலகில் உள்ள அத்தனை அம்மன்களையும் துணைக்கு அழைக்கும் குஷ்புவையும் மிஞ்சிடும் ஆவேசத்தில் அம்மனோடு சேர்த்து ஈஸ்வரனையும், அல்லாவையும், தேவதேவனையும் உதவிக்குக் கூப்பிட்டுக் கொண்டிருப்போம்.
இந்த இடத்தில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கதையை நினைவு கூற விரும்புகிறேன். அப்போது நாங்கள் நிஸ்வாவிற்குக் குடியேறிய புதிது. ஒரே ஒரு முறை எனக்கு ஹஜர் மலைத் தொடரின் மறுபுறம் இருக்கும் ‘அல் அவாபி’ என்ற ஊரில் இருந்து ‘பலத் சீத்’ வரை வண்டி ஓட்டும் அனுபவம் வாய்த்தது. அது பயமாக இருந்தாலும் பெரிய அளவிற்குச் சிரமமில்லாத பாதை. பாம்புக் கணவாய் (Snake Gorge) எனச் செல்லமாக அழைக்கப்படும் ‘வாதி ஃபானி ஒளஃப்’ என்ற ஓமானின் புகழ் பெற்ற கணவாய்களில் ஒன்றுக்குள் இறங்கும் சாகசத்திற்காக முதல்முறை அந்தச் சாலையில் பயணித்திருந்தேன்.
அன்றே கூடிய விரைவில் அச்சாலையின் வழி நிஸ்வாவில் இருந்து புவனாவையும் ஆதிரையையும் அழைத்துக் கொண்டு ‘பலத் சீத்’திற்கு இறங்கி ஏற வேண்டுமென மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டிருந்தேன். அதனால் என்னுடன் பணி புரிந்து வந்த ‘டாம் ஹ்யூக்ஸ்’ என்ற அமெரிக்கரும் அவரது மகன் ‘ஷான் ஹ்யூக்ஸ்’ம் ‘பலத் சீத்’ செல்கின்றனர் என்றதும் அவர்களோடு நானும் தொற்றிக் கொண்டேன்.
அப்போது ‘டாம்’ ஒரு பழைய ரேஞ்ச் ரோவரை உருட்டிக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு உற்சாகமான விடுமுறை கால வார இறுதியான வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிஸ்வாவில் இருந்து மூட்டை முடிச்சுக்களை ஏற்றிக் கொண்டு மூன்று வண்டிகளில் எங்கள் குழு கிளம்பியது. நிஸ்வா பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ‘ரிக்’ என்ற பிரெஞ்சு தேசத்தவரும் எங்களுடன் இணைந்து கொண்டிருந்தார்.
ஊர்த் திருவிழாவில் வேடிக்கை பார்த்துக் கை தட்டி ரசித்த மரணக் கிணற்றுக்குள் நானே வண்டியோட்டப் போவதைப் போன்றதொரு அதீதப் பரபரப்பில் இருந்தன். வயிற்றுக்குள் கொழகொழவென ஒரு பயப்பந்து கொப்பளித்து உருண்டு திரண்டு மேலேறத் தவித்துக் கொண்டிருந்தது. ஒரு புறம் நகத்திற்குப் பதில் விரலையே கடித்துத் துப்பி விடுமளவிற்குப் பயம் பிடுங்கித் தின்றாலும் மறுபுறம் ‘என்ன சிக்கல் வந்தாலும் கூட இருக்கற வெள்ளைக்காரங்க காப்பாத்துவாய்ங்க… தெம்பா இருடா இனா ரானா’ என எனக்கு நானே தைரியமூட்டிக் கொண்டேன். கீழே போய்க் கூடாரம் அடித்துத் தங்கி இரவைக் கழித்து விட்டு மீண்டும் மறுநாள் மேலேறுவதாகத் திட்டம்.
காலை ஏழு மணிக்கெல்லாம் நாங்கள் ஷரஃபைச் சென்றடைந்து விட்டோம். நாங்கள் அங்கு சென்று சேர்வதற்கும் டாமினுடைய வண்டி புகையத் துவங்குவதற்கும் சரியாக இருந்தது. பானெட்டில் இருந்து குபுகுபுவெனப் புகை கிளம்ப வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி சுற்றிச் சுற்றி வந்தோம். எங்கள் ஒருவருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. ஷரஃபில் இருந்து ஒரு அடி கூட நகர முடியாத அளவிற்குச் சிக்கல் பெரிதெனப் புரிந்தது. ஒன்றும் செய்ய இயலாது கையைப் பிசைந்து கொண்டிருந்தோம். ஒரு Tow truck-ஐ வரவழைத்து வண்டியை நிஸ்வாவிற்கு எடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை எனத் தோன்றியது.
அச்சமயத்தில் 40 முதல் 50 வயதிற்குட்பட்ட நான்கைந்து ஐரோப்பியர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். நாங்கள் பெருங்கவலையுடன் வண்டியைச் சுற்றிச்சுற்றி வந்து என்ஜினைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு பரிதாபப்பட்டிருப்பர் போலும்.
அவர்களில் மிக உயரமாகவும் திடகாத்திரமாகவும் இருந்த ஒரு மனிதர் எங்களை அணுகி “உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனில் நாங்கள் வேண்டுமானால் என்ன சிக்கல் எனப் பார்க்கலாமா?” எனக் கேட்டார்.
“அய்யா இதென்ன கேள்வி… தயவு செஞ்சு பாருங்க பாத்துட்டு முடிஞ்சத செஞ்சு எப்பிடியாச்சும் மெக்கானிக் கராஜ் வரைக்கும் பத்திரமா போறாப்ல ரெடி பண்ணிட்டா போதும் உங்களுக்குப் புண்ணியமாப் போவும்” என டாம் பச்சைக் கொடியசைத்தார்.
அடுத்த கணம் உற்சாகத்தோடு அந்த மிலிடரி பார்ட்டி (பார்க்க அப்படித்தான் இருந்தார்) தனது நண்பர்களை அருகே வரச்சொல்லிக் கை காட்ட நண்பர் குழாம் கூடித் தங்கள் ஆய்வைத் துவக்கியது. ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டனர். ஏதோவொரு புரியாத மொழியில் கைகளை ஆட்டி ஆட்டி உடல் குலுங்கத் தீவிரமாக ஆலோசித்தனர். உண்மையில் சற்றுத் தொலைவில் இருந்து பார்ப்பதற்கு ஏதோ தாமரை மணாளர்களும், உடன் பிறப்புக்களும், தம்பிகளும் கட்டி உருள்வதைப் போலத் தோன்றியது.
ஒரு வழியாக ஆலோசனை முடிந்து குழுத்தலைவர் எங்களை வண்டிக்கருகே அழைத்தார். நீட் தேர்வு எழுதி முடித்துவிட்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவனைப் போல பதைபதைத்துக் கிடந்த டாம் முன்னே செல்ல நாங்கள் பின் தொடர்ந்தோம்.
கூலண்ட் ஆயில் டேங்க் விரிசல் விட்டு ஆயில் ஒழுகியது தான் சிக்கல் எனவும், அதனைக் கழற்றி எறிந்து விட்டுப் புதிய டேங்கை மாட்டுவது முதல் தீர்வெனச் சொல்லிவிட்டு மிலிட்டரி டாமை ஏறெடுத்துப் பார்த்தார். டாமுக்கு முகம் சிவந்து விட்டது. ஓமானில் ரேஞ்ச் ரோவருக்கு ல்பேர் பார்ட்ஸ் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதுவும் கூலண்ட் ஆயில் டேங்க் போன்ற அரிதான பாகங்களெல்லாம் ஸ்டாக்கில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இந்தப் புரிதல் இருந்ததுதான் அவர் அப்படி விதிர்த்துப் போகக் காரணம்.
ஆனால் அந்த மிலிட்டரி மேன், “நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து அனுமதி அளித்தால் நாங்கள் அந்த ஆயில் டேங்கை கழற்றி அதன் வெடிப்பைச் சரி செய்ய முயற்சிக்கிறோம்…” என இழுத்தார். அவர் வாக்கியத்தை முடிக்கும் முன்பே டாமின் முகம் ஆயுள் தண்டனை முடிந்து விடுதலையாகி வெளியே வரும் கணவனைக் கண்ட ஆருயிர் மனைவியின் வதனத்தைப் போல மலர்ந்தது. பள்ளிக்கூடத்தில் அடங்காமாரிப் பயல்களைச் சேர்க்கும் போது முரட்டுப் பெற்றோர் “இவன கண்ணையும் கதையும் உட்டுட்டு பட்டையத் காட்டுங்க சார்” என்பர்களில்லையா அதைப்போல நீங்க என்னவேனும்னாலும் பண்ணுங்க சாமி என வண்டியைப் பிரித்து மேய டாம் அவர்களுக்கு முழு அதிகாரத்தையும் அளித்தார்.
அந்த ஐரோப்பியர் தனது காரின் டிக்கியில் இருந்து டூல் கிட்டை எடுத்து வந்தார். தரையில் ஒரு பாயை விரித்துத் தேவையான உபகரணங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து வரிசையாக அடுக்கினார். தனது கையுறைகளை எடுத்து மாட்டிக் கொண்டார். அவருக்கு இரு உதவியாளர்கள். ஒருவர் தேவையான பொருட்களை எடுத்துக் கொடுக்க மற்றொருவர் அந்த ஆயில் டேங்கைக் கழற்ற ஒத்தாசை புரிந்தார். ஒரு சில நிமிடங்களில் தொப்புள் கொடியை வெட்டி விட்டுப் பூப்போல குழந்தைத் தூக்குவது போல அந்தச் சிறிய வெண்ணிற ஆயில் டேங்கை வெளியே தூக்கினர். மீதம் இருந்த ஆயிலை ஒரு உணவைப் பொட்டலம் கட்டும் ப்ளாஸ்டிக் கண்டெயினருக்கு மாற்றினர்.
அந்த டேங்கை நன்கு கழுவி துடைத்த பின் விரிசல் விழுந்த இடத்தை உப்புத் தாள் கொண்டு நன்கு தேய்த்தனர். அந்தத் தேய்க்கும் வேலைக்குத்தான் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் பிறகு அந்த விரிசலின் நீளத்தை அளந்தனர். ஒரு கருப்பு நிற கெட்டியான அடெசிவ் டேப்பை எடுத்து அளக்கப்பட்ட நீளத்திற்குத் தக்க தேவையான அளவைக் குறித்து இரண்டு துண்டுகளை வெட்டினர். வெட்டப்பட்ட அத்துண்டுகளை ஒன்றின் மீது மற்றொன்று குறுக்கு வாக்கில் கவ்விக் பிடிக்கும் வண்ணம் ஒட்டி அந்த விரிசலை மிக நேர்த்தியாக அடைத்தனர். அவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த மிலிட்டரி, சரி செய்யப்பட்ட கூலண்ட் டேங்கை வாங்கிப் பரிசோதித்தார். பின்னர் மீண்டும் அதனை பானெட்டுக்குள் அதன் இடத்தில் வைத்துப் பொருத்தினார்.
வடித்து வைத்திருந்த ஆயிலை ஊற்றிய பின் அவசரத் தேவைக்காகத் தனது காரில் வைத்திருந்த கூலண்ட் ஆயிலை எடுத்துக் கொண்டு வந்து டேங்கை நிரப்பினார். பானெட்டை மூடிவிட்டு இப்பொழுது வண்டியை ஸ்டார்ட் செய்து பாருங்கள் என டாமைப் பார்த்துக் கட்டை விரலை உயர்த்தினார்.
வண்டி பூப்போல ஒரே திருகில் உயிர்பிடித்து உறுமியது. நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் எல்லையே இல்லை. அனைவரும் மாறி மாறி அந்த ஆபத்பாந்தவர்களுக்கு நன்றி கூறினோம்.
வேலையை வெற்றிகரமாக முடித்த பெருமிதத்துடன், இனிப் பத்தாண்டுகளுக்கு அந்த கூலண்ட் டேங்கைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம் எனக் கூறிக் கொண்டே உளமகிழ்வோடு எங்களது நன்றிகளையும் பாரட்டுக்களையும் ஏற்றுக் கொண்டனர்.
நான் குழுத் தலைவரைப் போலத் தோன்றிய அந்த மிலிட்டரியிடம், “நீங்களெல்லாம் பொறியாளர்களா?” எனக் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே இல்லை இல்லை “நான் ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர்” எனக் கூற எனக்கு ஆச்சரியத்தில் வாய் தன்னால் பிளந்து கொண்டது.
முக பாவனையிலிருந்து எனது வியப்பைப் புரிந்து கொண்டவர், “நாங்கள் அனைவரும் பள்ளிப் பருவத் தோழர்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு துறையைச் சேர்தவர்கள் என்றாலும் எங்களுக்கு வாழ்வின் அடிப்படைத் திறன்களான லேத் வொர்க்; ப்ளம்பிங், கார்ப்பென்டரி, எலக்ட்ரிக்கல் மற்றும் ஆட்டோ மொபைல் குறித்த பயிற்சிகள், பள்ளிப் பாடத்திட்டத்திலேயே அடக்கம். இதில் வியப்படைய ஏதும் இல்லை” என விளக்கினார்.
ருமேனியாவில் இருந்து வந்த அவர்கள் காலத்தால் செய்த உதவி ஞாலத்தின் மாலப் பெரிது என நான் கூற அவர் “அட இது செம்மயா இருக்கே” எனத் தன் புருவங்களை உயர்த்தினார். இதுதாண்டா வாய்ப்பு என, அய்யன் திருவள்ளுவர் குறித்தும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எந்த மதத்தையும் குறிப்பிட்ட கடவுளையும் முன்னிருத்தாது படைக்கப்பட்ட பதினென் கீழ் கணக்கு நூல்கள் பற்றியும் ஆற்றோ ஆற்றென ஆற்றி தாய்நாட்டின் பெருமையை நிலை நாட்டிட முயற்சித்தேன். மீண்டும் ஒரு முறை நன்றி கூறி அவர்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டோம்.
அதன் பிறகு எங்களது சாகசப்பயணம் துவங்கியது. இறங்கும் போது பெரிதாக எந்தச் சிரமத்தையும் எதிர் கொள்ள வில்லை. இறக்கம் என்பதால் கவனமாகவும் மெதுவாகவும் ஓட்ட வேண்டிய தேவையைத் தவிர வேறு சிக்கல் எதுவும் இல்லை. நேரே ‘பலத் சீத்’ ஐ அடைந்தவர்கள் அந்தக் கிராமத்தை ஒரு வலம் வந்தோம். பிற புராதான ஓமானி குடியிருப்புப் பகுதிகளை ஒத்த கல் மற்றும் மண் வீடுகள், குறுகலான தெருக்கள், சிறு சன்னல்கள், பல வண்ணச் சாயங்களாலும் பூ வேலைப் பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்ட இரும்புக் கதவுகள் என கண்களுக்குப் பழகிப் போன காட்சிகளாக இருந்தாலும் மலைச் சரிவில் அடுக்கடுக்காக ஒன்றன் மீது ஒன்றாகக் கட்டப் பட்டிருக்கும் வீடுகளைக் கண்டது எங்களுக்குப் புதிய அனுபவமாகவே இருந்தது.
சுற்றிச்சுற்றி வந்து வளைத்து வளைத்து நிழற் படங்களை எடுத்துக் கொண்டோம். அதைவிட ஜபல் அக்தரில் பார்த்ததைப் போலன்றி ‘பலத் சீத்’ கிராமத்தின் தோட்டங்கள் தடாலென படிப்படியாக சரிந்து இறங்காமல் ஒரளவிற்கு சமதளத்தில் பரந்து விரிந்திருப்பதால் குடியிருப்புப் பகுதியின் உயரத்தில் இருந்து கீழே பார்க்கும் போது மரகதப் பச்சைப் பட்டாடையை விரித்து விட்டதைப் போல மிளிர்ந்தன. ஆண்டின் எக்காலத்திலும் பசுமை மாறாமல் இருக்கும் அந்த வயல்களே ‘பலத் சீத்’ என்ற அழகிய கிராமத்தின் மணிமகுடம் எனக் கருதுகிறேன்.
அன்றிரவு கீழேயே கூடாரம் அடித்துத் தங்கித் தூங்கி எழுந்து மறுநாள் காலை உணவை முடித்துக் கொண்டு பாம்புக் கணவாய்க்குள் இறங்கினோம். பெரும் பாறைகளைக் கடந்து குறுகிய அக்கணவாயின் தெளிந்த நீர்க்குளங்களை அடைந்து ஆசைதீரக் குதித்துக் கும்மாளமடித்து விட்டு மேலேறினோம்.
மீண்டும் ஷரஃபிற்கு ஏற வேண்டும் என நினைத்த உடனே எனது நெஞ்சு பட படவென அடித்துக் கொள்ளத் துவங்கி விட்டது. என்னுடையது 2.4 ட என்ஜின் கொண்ட மிட்ஷூபிஷி outlander. அது 4 x 4 வாகனமாக இருந்தாலும் 4 லிட்டர் என்ஜின் இல்லையாதலால் அந்தச் செங்குத்தான மலையை ஏறிக் கடந்து விடுமா? என்ற சந்தேகம் மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்தது.
அப்படி ஏற முடியாது திணறினால் முதலில் புவனாவையும், ஷான் ஹ்யூக்ஸையும் இறங்கித் தள்ளச் சொல்வதென்றும் அப்படியும் வேலைக்காகாவிட்டால் ருஷ்டாக் சென்று அங்கிருந்து மஸ்கட் சென்று நிஸ்வாவிற்குத் திரும்புவது என்றும் மனதிற்குள் வகுத்து வைத்த அடுத்தடுத்த திட்டங்களோடு எதற்கும் தயார் என்ற மன நிலையிலேயே இருந்தேன். பல இடங்களில் உயிர் போய் உயிர் வந்திடினும் வெற்றிகரமாகத் தம் கட்டி எனது வண்டியை மேலேற்றி விட்டேன். அந்தப் பயணம் கொடுத்த துணிச்சலில் அதன் பிறகு ஓமானின் மூலை முடுக்குகளுக்குளெல்லாம் எனது வண்டி புகுந்து வெளிவந்து விட்டது.
அன்றிலிருந்து “ஆடல் பாடலாக மிகப்பெரிய 4 லிட்டர் என்ஜின் கொண்ட 4 x 4 வாகனங்களை வாங்கி வைத்துக் கொண்டு வாழ்நாளில் ஒரு முறை கூட ஆஃப் ரோட் ட்ரைவிங் போகாத பயந்தாங் கொள்ளிகளோடு ஒப்பிடும் போது நீ ஒரு மாவீரனடா” என எனக்குள் ஒரு பெரிய தலைக்கனம் குடி கொண்டு விட்டது. ஓமானை விட்டுப் போவதற்குள் Jeep wrangler அல்லது Rubicon போன்ற மிகத் திடகாத்திரமான தொரு ஆஃப் ரோட் வண்டியை வாங்கிப் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஓமானிகளைப் போல இந்த அசாதாரணமான சாலைகளில் படம் போட வேண்டும் என்ற ஆசை பல வருடங்களாகக் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
அந்த ஆசையை கவனமாக விதைத்து வைத்துப் பக்குவமாக நீரூற்றி வருகிறேன். காலம் கனிந்தால் அவ் விதையும் விருட்சமாகிக் கனி கொடுக்கும். அப்படிப்பட்ட அழகிய “பலத் சீத்” கிராமத்திற்கு அந்த அபாயகரமான மண் சாலையில் அதி வேகத்தில் உங்களை கீழிறக்கி மேலேற்றி முடிக்கும் போது இருள் கவிந்திருக்கும். அமாவாசைக் கும்மிருட்டில் ஷரஃபின் மலையுச்சியின் விளிம்பிலேயே மேற்கு நோக்கி ஒரு கிலோ மீட்டர் நடந்தால் ஒரு உயரமான அலைபேசிக் கோபுரங்கள் அமைக்கப் பட்டிருக்கும் சிகரத்தை அடையலாம். அங்கிருந்து பார்க்கும் போது முக்கோணத்தின் மூன்று புள்ளிகளும் இரவு விளக்குகளின் ஒளியில் வைர நகைகளைப் போல மின்னுவதைக் கண்டு ரசிக்கக் கண்கள் கோடி வேண்டும்.
உடலை உலுக்கும் குளிர் காற்றில் நடுங்கிக் கொண்டே மீண்டும் கார் நிறுத்தியிருக்கும் இடம் வரை நடந்து வருவதற்குள் மூட்டுக்கள் அத்தனையும் வலி தாங்காது அனத்த ஆரம்பித்திருக்கும். அதிர்ந்து கிடக்கும் மனமும், அசந்து கிடக்கும் உடலும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டுமானால் உங்களை சொர்க்கத்திற்குத் தான் அழைத்துச் செல்ல வேண்டும். அதனால் கார் ஏறியவுடன் எங்கும் நிற்காமல் அழகில் விண்ணுலக சொர்க்கத்தையும் விஞ்சிடும் ‘மிஸ்ஃபாத் அல் அப்ரியீன்’ என்ற பூலோக சொர்க்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்வதுதான் அடுத்த திட்டம். சற்று நேரம் ஒருவர் மீது ஒருவர் தலை சாய்த்து உறங்குங்கள். அடுத்த மாத ‘விண்மீன்’ உதிக்கும் போது மாயலோக மிஸ்ஃபாத்தில் கண் விழிக்கலாம்.


