இரண்டாம் ஆண்டில் இனிதே…!
வணக்கம்.
நம் எண்ணத்தில் உதிக்கும் விதை ஒன்றை செயல்படுத்தினால் மட்டுமே அது முளைத்து விருட்சமாகும். பெரும்பாலும் நமக்குள் விதைகளாய் குவிந்திருக்கும் ஆயிரம் கனவுகளில் அனைத்தும் முளைப்பதுமில்லை, விருட்சமாய் வளர்வதுமில்லை. சொல்லப்போனால் பல விதைகளை நாம் விதைப்பதேயில்லை, இன்று நாளையென நாளைக் கடத்தி அதை வீரியமற்றதாக ஆக்கிவிடுகிறோம்.
மின்னிதழ் என்பது கேலக்ஸியின் பல வருடக் கனவு, அது செயல்படுத்தப் படாமல் கனவாகவே இருந்த நிலையில் பாலாஜி அண்ணன் மற்றும் சென்பாலனின் ஒரு சிறு சந்திப்பு அந்த விதையை விதைக்க வைத்தது, வீரியமாக இருக்கும் அதன் வளர்ச்சி விருட்சமாகும் என்ற நம்பிக்கையோடு, எம்மால் இயன்றளவு மிகச் சிறப்பாகப் பயணித்து முதல் அடியில் இருந்து இரண்டாவது அடிக்கு நகர்ந்திருக்கிறோம். ஆம், விண்மீன் மின்னிதழ் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடுவதுடன் இரண்டாவது வயதில் இனிதே பயணிக்க இருக்கிறது.
ஏதோ ஆரம்பித்தோம்… பயணிப்போம் என்றில்லாமல் எதற்காக ஆரம்பித்தோமோ அந்த இலக்கை நோக்கி வேகமாக முன்னோக்கிச் செல்கிறோம் என்பதிலேயே எங்களது விண்மீன் வெற்றி பெற்றுவிட்டது. கடந்த பனிரெண்டு இதழ்களில் 86–க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பலர் புதிய எழுத்தாளர்கள் என்பதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. எங்களது எழுத்தாளர்கள் இல்லையேல் நாங்கள் இல்லை என்பதே உண்மை. மாதாமாதம் புதியவர்களின் படைப்புக்கள் அதிகம் வருவதிலேயே விண்மீன் பரவலாய் தன் ஒளியைப் பாய்ச்சியிருக்கிறது என்பதை உணர்ந்து நகர்கிறோம் உங்களது அரவணைப்போடு.
வளரும் எழுத்தாளர்களின் நேர்காணல் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்து முதல் இதழிலிருந்து செயல்படுத்தியும் வருகிறோம். இதுவரை வந்த பனிரெண்டு நேர்காணல்களில் ஒரிருவர் மட்டுமே அறிந்த எழுத்தாளர்கள், மற்றவர்கள் எல்லாருமே அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர்களே. அந்த வகையில் தனக்கு முந்தைய தலைமுறையின் கதையை எந்தவிதப் பூச்சுமின்றி எழுதும் எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களின் பேட்டி இரண்டாம் ஆண்டின் தொடக்க இதழை அலங்கரிப்பது விண்மீனுக்குப் பெருமை.
விண்மீனின் வெற்றிக்கு வித்திட்ட எங்களின் எழுத்தாளர்களுக்கும், பல்வேறு பணிகளில் இருந்தாலும் வேலைப்பளூவுக்கு இடையே இதழுக்கான வேலைகளையும் செய்து முடிக்கும் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி.
தொடர்ந்து பயணிப்போம்.


