தற்கொலை தீர்வல்ல
சமீபத்தில் பரபரப்பாய் இரண்டு இறப்புக்கள் பேசப்பட்டன. அதில் ஒன்றுதான் திருப்பூர் ரிதன்யாவின் வரதட்சணை தற்கொலை. பலர் பேசினார்… பல விசயங்கள் பேசப்பட்டன.
இப்போது இணையம் உலகத்தை உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விடுவதால் உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அது குறித்த எதிர், ஆதரவு வாதங்கள் இணையமெங்கும் விரவிக் கிடக்கின்றன. இந்த விவாதங்களின் ஆயுட்காலம் அடுத்த பரபரப்பான நிகழ்வு வரையோ அல்லது மிஞ்சி மிஞ்சிப் போனால் அடுத்த நாலைந்து நாள் வரையோதான்.
இந்த வரதட்சணை கொடுமைகள், கொலைகள் இப்போதுதான் நடைபெறுகிறதா என்றால் அப்படியொன்றும் இல்லை. காலம் காலமாய் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்படியான கொலைகள் அல்லது தற்கொலைகள் கிராமங்களில் அதிகம் நடைபெறும். அப்போதெல்லாம் ஊரே பேசி ஒரு முடிவுக்கு வந்து நிகழ்வு வெளியே தெரியாமல் குறிப்பாக காவல்துறை பக்கம் போகாமல் காதும் காதும் வைத்த மாதிரி காரியத்தை முடித்து விடுவார்கள்.
2000-க்கு முன்பு வரை இப்படித்தான் வரதட்சணை சாவுகளும் ஆதிக்கச் சாவுகளும் மறைக்கப்பட்டன. அதன் பின்னான காலங்களில்தான் இந்தச் சாவுகள் எல்லாம் பொதுவெளிக்கு வர ஆரம்பித்தன. அவற்றை எல்லா இடத்துக்கும் அரியச் செய்ததில் சமூக வலைத்தளங்களுக்கு அதீதப் பங்கு உண்டு என்றாலும், சாதி, மதம், அரசியல் பார்த்துத்தான் அவற்றிலும் நாம் கடமையாற்றுகின்றோம் என்பதுதான் வருத்தமான, கேவலமான விசயம்.
ரிதன்யா சாவில் வரதட்சணையாக கொடுத்த நகையில் இன்னும் தரவேண்டிய பாக்கியும் வேணும் எனக் கேட்கும் மனநிலையும், கேவலமான, வக்ரமான தாம்பத்ய கேவலங்களும்தான் காரணம். பணமிருப்பவர்களே இப்படி என்றால் இல்லாதவர்கள் வீடுகளில் நடக்கும் கொடுமைகள் சொல்லவே வேண்டாம். கொடுக்க வேண்டிய ஒரு பவுனுக்காக அடித்துக் கொன்றதையும், குடிகாரனாய் இருக்கிறான் எனச் சண்டை போட்டதால் அடித்துக் கொன்றதையும், தான் பிறந்த வீட்டில் இதற்கு மேல் கொடுக்க முடியாது எனத் தெரிந்ததால் அவர்களின் கொடுமைக்கும் தன்னைப் பெற்றோரின் விடுதலைக்குமாய் தன்னையே மாய்த்துக் கொண்டவரையும் பார்த்திருக்கிறேன்.
படிக்கும் காலத்தில் இன்னும் நிறைய கொலைகள், தற்கொலைகளைப் பார்த்தும், கேட்டுமிருந்தாலும் இவர்கள் எல்லாம் அதிகம் படிக்காத கிராமத்துப் பெண்கள். அவர்களைப் பொறுத்தவரை அது மட்டுமே தீர்வென நம்பும் வெள்ளந்தி, வெகுளி மனசுக்குச் சொந்தக்காரகளாய் வாழ்ந்து விட்டுப் போனவர்கள். ஆனால் இன்றைய பெண்கள் அப்படியா..?
சுயமாய் என்னால் நிற்க முடியும்… நின்று காட்டுவேன் என்பதாய் வாழ எல்லா வகையிலும் தங்கள் தகுதியை உயர்த்தி வைத்திருப்பவர்கள். குறிப்பாக கல்வித் தரத்தில் உயர்ந்திருப்பவர்கள். எந்த விசயத்திலும் தங்களால் தனித்து முடிவெடுக்க முடியும் என்பதை உணர்ந்தவர்கள். அப்படியிருந்தும் கொடுமையில் இருந்து மீள, பிறந்த வீட்டாரும் புரிந்து கொள்ளாத நிலையில் இதுதான் முடிவெனப் போவதுதான் வேதனையாய் இருக்கிறது. நம்மிடம் தனித்து நிற்க எல்லாமே இருக்கும் போது எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு என்னைப் புரிந்து கொள்ளாத யாருமே எனக்கு வேண்டாம் என்று தனித்து வாழ்ந்து காட்ட வேண்டும். சாவல்ல முடிவு, வாழ்வதே நிறைவு.
இப்படியான மரணங்கள் நமக்குச் சொல்வதெல்லாம் நம் பிள்ளைகளை நாம் படிக்க வைத்து விட்டோம், அவள் தனியே சிறகை விரித்துப் பறந்து செல்வதையும் பார்த்து மகிழ்ந்து விட்டோம். இனி இந்தப் பரந்த உலகில் எங்கும் வாழ்ந்து விடுவாள் என்ற எண்ணத்தை மூட்டை கட்டி ஓரமாய் போடுங்கள் என்பதைத்தான். படிப்பு, பதவி என்பதெல்லாம் விடுத்து அவர்களுக்கு வாழ்க்கை என்பது என்ன..? வாழப் போகும் இடத்தில் பிரச்சினைகள் வந்தால் அதை எப்படிச் சமாளிக்கலாம்..? இது அந்தக் காலம் இல்லை கட்டியவனே கோவில் எனத் துன்பங்களைச் சுமந்து வாழ, உனக்கான வாழ்வை நீயே தீர்மானிக்கும் காலமிது என்பதால் கொடுமைகளை அல்லது கொடுமைக்காரர்களைப் புறந்தள்ளி எப்படி வாழப் பழகிக் கொள்ள வேண்டும்… குறிப்பாக தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல, வாழ்ந்து காட்டுவதில்தான் வெற்றி இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.
இனி அப்படியே பெண் குழந்தைகளை வளர்ப்போம், வலி நிறைந்த மரணங்களைத் தவிர்ப்போம்.


