ஒரிய மொழிக் கவிதைகள்
எழுதியவர்: டாக்டர் மனோரமா
பிஸ்வால் மகோபத்ரா
தமிழாக்கம் : மதுமிதா
கேட்காதே
நீ என்னுடைய நேரங்கள் அனைத்தையும்
பறித்துக்கொண்டாய்
ஒரு வரி எழுத அல்லது
இரண்டு வரிகள் பாட
எனக்கான நேரம் எங்கே உள்ளது?
நீ எப்போதும் வாழ்ந்தாய்
ஒரு மிருகத்தைப் போல
நான் விரும்பியபடி வாழ
நீ என்றும் என்னை அனுமதிக்கவில்லை
எல்லாவற்றுக்கும் பின்னணியில்
ஒரு காரணம் தேட முயன்றாய்
இன்று, நான் அழுதுகொண்டிருக்கையில்
தயவுசெய்து எந்தக் கேள்வியும் கேட்காதே
*
தாயை நாங்கள் பங்கு போட்டுக்கொண்ட நாள்
பெற்றவளைப் பங்குபோட
நாங்கள் முடிவு செய்த நாளில்
வானில் நிலவோ நட்சத்திரங்களோ இல்லை.
சில நேரங்களில்
கடலின் முணுமுணுப்பை மட்டுமே
கேட்க முடிந்தது.
அந்த நாள்,
எங்கள் நிலங்களுடனும் சொத்துகளுடனும்
அனைவரின் முன்பாக
தாயையும் பிரித்துக்கொண்டோம்.
ஈன்றவளைக் கவனிப்பதில் பாதிப்பொறுப்பு
இளைய சகோதரனுக்குச் சென்றது.
மீதி பாதி பெரியவனுக்கு.
சாட்சிகளுடன் நாங்கள்
அன்னையைப் பிரித்துக்கொண்டோம்.
மூழ்கடிப்பதற்காக
கைவிடப்பட்ட தெய்வத்தைப்போல
அம்மா அமைதியாக
அசைவின்றி அமர்ந்திருந்தாள்;
சடங்குகள் முடிந்து
கடலில் ஒப்படைக்கப்படுவதற்காக
அம்மை காத்திருந்தாள்.


