குரூப் 2 தேர்வு பாஸாகி திருவண்ணாமலையில் போஸ்டிங். வசந்த் அங்கே
ரெண்டு வருசம் வேலை
பார்த்துட்டு
மாற்றலாகி சொந்த ஊருக்கு வரணும். அடுத்த புரமோசன் வேணாம்னு இங்க
வந்தான் வசந்த்.
மதுரைக்குப் பக்கத்துல அதலைப்புதூர் தான்
வசந்த் ஊர். அந்த
ஊர்ல இருந்து படிச்சு அரசு
வேலைக்குப் போன ஆள்.
அதுவும் சுத்துப்பட்டுக் கிராமங்களில் வசந்த் என்றால் நல்லா
தெரியும்.
அவுக அப்பன் யார்ட்ட பேசுனாலும், மொதப்
பேச்சு, “எம் மகன்
பெரிய அதிகாரின்னு” பேசத்
தொடங்குவார்.
கருப்பு எதிரில் யாரும் போக
மாட்டார்கள்.
சாக்கடையும்,
சந்தனமும் ஒன்னா?. சிலர்
நினைப்பு.
இதனால் பலருக்குக் கருப்பக் கண்டாப் பிடிக்காது. “மேவா
உதடியில்லாதவன்
சீங்குழல் ஊத ஆசப்படக் கூடாது”. யாரும் பெரிசா படிக்கல. கருப்பு பேச்சு வேப்பம் காயாக் கசந்தது. காடுகரை நஞ்சை
புஞ்சை மாடுகன்னு ஏறுன
சம்சாரித்தனம்.
இன்னபிற சகல சம்பத்து இருக்கும்.
ஆனா, யாரும் பிள்ளயப் படிக்க வைக்கல? மூனு
நாலு தலமுறையா... என்ன
பேப்பர் படிக்கத் தெரியும். டிகிரி படிக்கல, அரசு
வேலைக்கிப் போகல.
வசந்த் படிக்கிற காலத்தில் இருந்து குருதிக் கொடைக் கொடுக்கிறது பழக்கம். அதனால
அந்தக் குழுவின் தொடர்பில் இருந்தான். அவனுக்கு ஓ நெகடிவ் குரூப்.
நிறைமதி வயது
26. கர்ப்பிணிப்
பெண்ணுக்கு ஆப்ரேசனுக்கு உடனடியா ரத்தம் தேவைன்னு வாட்ஸ்சப்பில் விளம்பரம் பார்த்தான்.
அவன் என்.எஸ்.எஸ்.
மாணவனாயிருந்தபோது
பேராசிரியர்
வேம்புலு யூனிட் 218 P O வாக
இருந்தார். சேவை குறித்து நேரம்
கிடைக்கும்போது
பேசுவார். உதவி செய்யனும் நினைச்சிட்டாயா செய்யி. யார்ட்டையும் ஆலோசனைக் கேட்காதே? தனக்கு நேரம்
கிடைக்கும்போது
செய்வது சேவையல்ல. எப்ப
பிறருக்கு உதவ வாய்ப்புக் கிடைக்கிதோ உதவி
தேவை இருக்கிறவங்களுக்கு மனம்
உவந்து செய்யனும்ன்னு சொன்னது சிலருக்கு மனதில் ஆழப்பதிந்துவிட்டது.
அப்போது இருந்தே நம்மால் முடிந்த அளவுக்கு உதவி
செய்யனும். மிக ஆர்வமாகச் செய்யத் தொடங்கினான். விளம்பரத்தில் இருந்த எண்ணுக்கு அழைத்தான். நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர்
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்.
மீண்டும் அழைத்தான். எதிர்முனையில் இருந்து பேசிய
பெண், பூமா நர்சிங்ஹோம். சின்ன
சொக்கிக்குளம்ன்னு
சொல்லவும் – என் பெயர்
வசந்த். குருதித் தேவையென்று பார்த்தேன். இன்னும் பத்து
நிமிசத்துல வந்துர்றேன்.
உடன் இருக்கும் சக
அலுவலர்களிடம்,
அவசரம் ஒரு மணிநேரத்தில மருத்துவமனைக்குப் போயிட்டு வந்துர்றேன்… பெர்மிசன் சொல்லவும், அப்படி என்னப்பா அவசரம்ன்னுக் கேட்டதும்,
சார், நிறை
மாத கர்ப்பிணிக்கு ஆப்ரேசனுக்கு ரத்தம் தேவைப்படுவதாக விளம்பரம் பார்த்தேன்.
என்னுடைய ப்ளட்
குரூப் ஓ நெகடிவ்… அதுதான் நம்ம
ரத்தம் கொடுத்து ஒரு
வருஷம் ஆயிடுச்சு… போயிக் கொடுத்துட்டு வரலாம்ன்னு சார்.
அவுக சொந்தமா? இல்ல
சார்.
உறவா.. இல்ல
சார்.
அவர் எதுவும் பேசல.
சார் இன்னைக்கு எங்க
அம்மாவோட நினைவு நாள்.
அவர் மறுபேச்சு எதுவும் பேசல?
ஏதாவது சாப்பிட்டுட்டுப் போங்க
வசந்த்ன்னு சொல்ல…
இல்ல சார்,
இன்னைக்கு அம்மாவுக்காக விரதம் சார்.
அவர் விடாமல் ஜூஸ்
குடுச்சிட்டுப்
போங்கன்னு அழுத்தவும்,
சரிங்க சார்
என்றான்.
பூமா நர்சிங் ஹோம்
போய் லேப்ல விசாரித்தான். ரத்தம் கொடுக்க வந்ததையும் முகவரியைக் கொடுத்து உறுதிப்படுத்திட்டு வரவேற்பு அறையில் அமர்ந்து இருந்தான். வந்து
கூப்பிடுவதாகச்
சொன்னதும் அழைக்கட்டும்ன்னு எதையோ
யோசித்துக் கொண்டிருந்தான்.
எதிரே நின்னு பேசிச்சிட்டு இருந்தவர், நம்ம
ஊர் கார்மேகம் அண்ணே
மாதிரியா இருக்கேன்னு பார்த்தான். அவர்தான்னு உறுதிப்படுத்திக் கொண்டு, அவர்களைப் பற்றிய பிம்பம் ஓடி
விரிந்து ஒடுங்கியது.
அவர்களின் தோரணையும் அதட்டியமும், செறுக்கு வளமையும் செருக்கும்…. பணக்காரக்கானப் பேச்சு மொழி…
ஏழைகள் கூலித் தொழிலாளிகளிடம் அவர்களின் உதாசீனப் பார்வை மனதுக்குள் வந்து
மறைந்தன.
வசந்த் எழுந்து போய்
அண்ணே, நல்லாயிருக்கீங்களான்னு கேட்டுட்டு, நான்
கருப்பு மகன் வசந்த்ன்னு அறிமுகப்படுத்திக் கொண்டு அவன் வணங்க, அவரோ
தலையை அசைத்தார்.
அவர் அவனைக் கண்டும் காணாமல், தெரிந்தும் தெரியாதது போல
பேசினார். சின்ன ஆப்ரேசன் சகல
பொண்ணுக்கு. கார்மேகம் பேச்சை நீட்டிக்க விரும்பவில்லை.
வசந்த்
விபரம் தெரிந்து கொள்ளும் ஆவலில் இன்னும் விசாரிக்க, அவர் வேண்டா வெறுப்பாய் விபரம்
சொல்ல, சரிங்க அண்ணேன்னு சொல்லிட்டு நகர்ந்தான். தடுப்புச் சுவருக்கு அந்தப்பக்கம் போகவே,
அவன் போயிட்டான்னு நினைச்சு, இருவரும் பேசிக்கொண்டார்கள்.
அண்ணே அண்ணேன்னு உரிமையாப் பேசுறானே… இவன் யார் சகல… நம்ம
சாதியா?
கார்மேகம் அமைதியாக இருந்தார்.
கார்மேகத்தின்
சகலை அழுத்தி அழுத்திக் கேட்டதால் அவன்
நந்தனர் தெருன்னு அமைதியாகப் பதில்
அளித்தார்.
என்ன சகலே
அந்தத் தெரு பையனா?.
அவர் கேட்க, வசந்த் மனதுக்குள், மனிதர்கள் இன்னும் மனிதர்களாகலேன்னு நினைத்தான். “கல்லுக்குள் இருக்கும் தேரைக்கு உயிர
வைச்சவன், இவுக இதயத்துல சாதிய
வெச்சிட்டான்”
எனச் சொல்லிக் கொண்டான்.
நம்மதான் தேவையில்லாமப் பேசிட்டோம்ன்னு மனசுக்குச் சங்கடமா இருந்தது. என்ன
சுவர் மண் பிடிச்சாலும் வெள்ளையாக மாட்டார்கள். மனசுப்பூராம் சாதி
அழுக்கு.
பக்கத்தில் இருந்த மல்லிகை காபி
பார்க்குப் போய் ஜூஸ்
குடிச்சிட்டு
பழைய நினைவுகள் எப்படி எப்படியோ வந்து
போயின. இன்னும் எவ்வளவு காலம்
இவர்கள் வாழப் போகிறார்கள். அவர்களின் மனதுக்குள் நீர்பூத்த நெருப்பாகச் சாதி
அழுக்கு ஏறிப்போய் இருக்கிறார்கள். வசந்த் தனக்குத்தானே கழிவிறக்கம் கொண்டான்.
என்ன படிப்பு? என்ன
வேலை? அரசு நிர்வாகம்… சாதி
அவலம் மாறாதா…? வசந்தின் மனவோட்டம் ஓடி
அடங்கியது. பாவம் இவர்
இன்னும் பள்ளிப்படிப்பு முழுமையாகப் படிக்காதவர்கள்… அவர்களைச் சொல்லிக் குத்தமில்ல. நெல்லுப் பயித்துல ரெண்டு களை
இருப்பது போல ஊருல
நாலுபேரு இருக்காங்க.
“என்ன சகல
நந்தனர் தெரு வீட்டுப்பய இவ்வளவு சகசமா
வந்துப் பேசீட்டுப் போறான்” அவர்கள் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது.
“எங்க ஊர்ல
வந்துக் கேட்டுப்பாரு… இப்படி எல்லாம் பேசமாட்டாங்க… நம்மன்னாப் பயமிருக்கும். எட்ட
நின்னு என்ன சாமின்னு கேட்டுப் போவாக”
கார்மேகம் என்ன
சொல்லமுடியும்…
உங்க ஊர் மாதிரி நாங்க
கிடையாது. நாங்க எல்லோரையும் அண்ணன் தம்பி
உறவாத்தான் பார்க்கிறோம்ன்னு சொல்லவா முடியும்.. அசலூர்ல போயி
நம்மல அசிங்கப்படுத்திப்பிடுவான்னு… கார்மேகம் கெழுத்தி மீனா
விழுங்கிய கொக்காட்டம் வாய்திறக்காமல் இருந்தார்.
நம்ம வெட்டியா வெறும் பேச்சுப் பேசிட்டு இருக்கம்.
அந்தப் பையன்
படிச்சு முடிச்சு வேலைக்கிப் போயிட்டான். நம்ம
இன்னும் ஆடு மாடு
கோழின்னு வைச்சுக்கிட்டு பந்தயம் கட்டிக்கிட்டு நம்ம
தான் பெரிய ஆளுன்னு பேசிட்டே இருக்கம்.
நம்ம அப்பேன் ஆத்தாப் படிபடின்னு சொன்னபோது பைய
இச்சி மரத்தில
வச்சிட்டு கண்மாயில விளையாட வேண்டியது. வயக்காட்டு வெளியே சுத்த
வேண்டியது. நமக்கு எதுக்குப் படிப்பு.
பள்ளிக்
கூடத்துக்குப் போகாம மட்டம் போட்டுட்டு சுத்துறது வாத்தியார் வீட்டுக்கு ஆள்
விட்டப்பத்தான்
தெரியும்.
அப்பா தூக்கிப்போட்டு அடிக்கவும், அம்மா
ஒன்னும் அடிக்கவேணாம்ன்னு
நிக்கும்… அப்பறம் எங்கிட்டு ஒழுங்காப் படிக்க… பள்ளிக்கூடம். அவ்வளவுதான். ரேஸ்
மாடு, சல்லிக்கட்டு மாடு,
சேவச்சண்டை, சாதிப்பெருமை பேசிக்கிட்டுத் திரிஞ்சி, சீட்டாட்டம், தண்ணின்னு வளர்ந்து நிக்கிறப்போ வீட்டில்
பேசி கல்யாணம் முடிஞ்சு கடைசியாக கூத்தியாவுல வந்து
நின்னுருச்சு…
வெள்ள வேட்டி வெள்ள
சட்டை… வீசுங்கையி வெறும் கையி நம்ம அதிகமாப் போனாச் சுத்தி இருக்கிற இருபது கிலோ
மீட்டருக்குள்ள
பயணம். சாதிப்பெருமை, அதட்டியம், சண்டைச் சச்சரவு, அடிதடி, அரசியல் வில்லங்கம் விவகாரம். கட்டைப் பஞ்சாயத்து. காலம்
ஓடிப்போச்சு…
நம்ம மாதிரி நம்ம
பிள்ளக +2 பெயில்… அதுக்கு மேலப்படிக்க முடியாதுன்னு அவனே
சொல்லிட்டான்.
நம்ம மாதிரிதான நம்ம
பிள்ள, “கரும்பு நட்டக் காட்டுல வாழையா வரும்”.
அது அது சாதிக் கூறுன்னு போக
வேண்டியது.
நம் வம்சத்துக்குப் படிப்பு வரல.
கார்மேகம் பல நேரம்
யோசித்ததுண்டு.
வசந்த் அப்பேன் நாலு
முழவேட்டி, மேல துண்டுக்கூட இல்ல.
ஊருக்குள்ள எம் மகன்
கலெக்டர் ஆபீஸ்ல அதிகாரியா இருக்கார்ன்னு… சொல்லும்போது வெட்கமா இருக்கும்.
என்ன செய்ய
நம்ம படிக்கல…
எண்ண ஓட்டத்தை,
நிறைமதிக்கு வேண்டிய அட்டன்டர் வாங்கண்ணா என இடை மறித்தாள் நர்ஸ்.
“என்னம்மா
விசயம்” எனக் கார்மேகம் கேட்டதும் “ரத்தம் தர்றேன்னு சொன்னவரு இன்னும் வரலை. டாக்டர் உங்ககிட்ட சொல்லச் சொன்னார்”.
கடவுளே மார்நாடு கருப்பா, உப்புலி, சங்கையா, பொன்னழகு பாப்பாத்தி, முத்தையான்னு… வாயில் முனுமுனுத்துக் கொண்டார்கள். எல்லாக் கடவுளையும் வேண்டிக் கொண்டார்கள். மரண
பயம் வரும்போது கடவுளிடம் சாதி
கிடையாது.
ரெண்டு உயிரையும் காப்பாத்திக் கொடுடான்னு வேண்டிக்கிட்டு டாக்டரைப் பார்க்கப் போனார்கள்,
வரவேற்பு அறைப்பக்கம் அவர்கள் இருவரையும் காணவில்லை.
அப்பாடா; வசந்த் மனதுக்குள் இருந்த சாதிப் பாரம்
குறைந்ததுபோல்
இருந்தது. “உள்ளுர்காரனுக்குப் பேய்
பயம். அசலூர் காரனுக்குத் தண்ணில பயம்”.
இதன்னு சேத்துக்கிலாம்.
மருத்துவமனை லேப்க்குப் போனான் வசந்த்… சார்
எங்க போனீங்க… உங்களைக் காணோம்ன்னு தேடினோம். பார்ட்டி
டாக்டர்கிட்ட பேசிக்கிட்டு இருஙக்காங்க என நர்ஸ்
சொல்லவும் அது
எனக்குத் தேவையில்லை என்பதைப் போல், “ஜூஸ்
குடிக்கப் போனேன். இப்பம் ரத்தம் கொடுக்கலாமா?” என்றான் வசந்த்.
ஓ.கே.
சார். அதுக்குத்தானே வந்திருக்கீங்க எனப் பெட்டில் படுக்க வைத்து, ரத்தம்
எடுக்க ஆயத்தமானாள்.
சார், அரைமணிநேரம் படுத்திருங்க… நான் வந்ததும் போகலாம் எனச்
சொல்லிட்டு குருதி அடங்கிய பையை
எடுத்துக் கொண்டு ஆபரேசன்
தியேட்டரை நோக்கி நடந்து போனாள்
நர்ஸ்.
ரத்தம்
கொடுக்க ஆள் வந்துட்டாரு நீங்க வெளியில இருங்க என டாக்டர் சொன்னதால் ஆபரேசன் தியேட்டர்
வாசலில் காத்திருந்த கார்மேகமும் அவரின் சகலையும் நர்ஸையும் அவள் கையிலிருந்த குருதிப்
பையையும் பார்த்து முகம் மலர்ந்தார்கள்.
ரத்தம்
கொடுத்தவரை படுத்திருக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன் என்றாள்.
“நாங்க வேண்ணா அவருக்கு ஜூஸ்
வாங்கிட்டு வரட்டுமா”
என்ற கார்மேகத்தின் கேள்விக்கு, “அவர் குடிச்சிட்டுத்தான் வந்திருந்தார். அவர் எதையும்
விரும்பமாட்டார்ன்னு தெரியுது” என்றாள்.
“எம்மா… அவுகளுக்குப் பணம்
எதுவும் கொடுக்கனுமா…” எனக் கேட்டதுக்கு, “இவங்கள்லாம் விருப்பப்பட்டு
இலவசமாக் கொடுக்குறவங்க. காசு தாரேன்னு சொல்லி வருத்தப்பட வச்சிடாதீங்க. ஆன்ம திருப்திக்காகச்
செய்யிறவங்க. சாதி மதம் பார்க்காம மனுசங்களைப் பார்க்கிறவங்க. நன்றி வேணுமின்னா சொல்லுங்க.
வேற எதுவும் பண்ணிடாதீங்க” சற்றே கறாராய்ச் சொன்னாள்.
இருவரும் பேய்
அறைந்தது போல இருந்தார்கள்.
என்ன சகல
எதுவும் தப்பாக் கேட்டுட்டோமா கார்மேகம்… நம்ம
என்னைக்கிச்
சரியாக் கேட்டம்… விடு
சகல… ஊருக்குள்ள வம்புச் சண்டை
இழுத்துட்டே
இருந்தா…? நமக்கு எப்படி சகல
நடப்புத் தெரியும். நம்ம
அப்படியே வாழ்ந்துட்டம்.
ரத்தம் கொடுத்தப் புண்ணியவான் நல்லா
இருக்கட்டும்ன்னு
இருவரும் ஒருசேர வேண்டிக் கொண்டார்கள்.
நம்ம ரத்தம் நம்மப் பிள்ளைக்குப் பயன்படல பாருன்னு இருவரும் பேசிக் கொண்டே நர்ஸின் பின்னே அந்த அறைக்குப்
போனார்கள்.
இருவரையும் பார்த்து சார்
தான் உங்கப் பொண்ணுக்கு “பிளட்
டொனேட்” பண்ணாங்கன்னு… சொன்னாள்.
இருவருக்கும் கையும் ஓடல?
காலும் ஓடல? வசந்த் என்ன
சொல்லுவதுன்னு
தெரியல?
மரண அமைதி…
மௌனம்.
வசந்த் சூழலைப் புரிந்து கொண்டு சமாளித்தான் கார்மேகத்தைப் பார்த்து. “சார்,
உங்கப் பொண்ணா?. நல்லா
இருக்கட்டும்…
சோணை மதுரை வீரன்
புண்ணியத்தில
தாயும் புள்ளையும் நல்லா
இருக்கட்டும்
சார்” எனச்
சொல்லிட்டு நர்ஸ்சிடம் சொல்லிக் கொண்டு நகர்ந்தான்.
என்னப்பா தம்பி,
கருப்பு மகன் வசந்த் தானே நீ எனக் கார்மேகம் கேட்கவும், “ஆமா சார்” என்றான்.
“ஏன்னப்பா வசந்த் என்னையத் தெரியலயா? என்றார் கார்மேகம்,
“தம்பி
எங்க ஊர்தான். கொஞ்ச நேரம் முன்னாடிக்கூட உங்ககிட்ட
சொன்னேனே. அரசாங்க அதிகாரியா இருக்கு” எனச் சகலையிடம் அறிமுகம் செய்தார்.
வசந்தும்
கார்மேகத்தின் சகலையும் கை எடுத்துக் கும்பிட்டுக் கொண்டார்கள்.
வானம் இடி
இடித்தது. மின்னல் வெட்டியது. அதில்
வசந்த் விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து தெரிந்தான். நம்ம
தான் இன்னும் கிணத்துத் தவளையா இருக்கமோன்னு இருவர் மனதுக்குள் துளிர்த்து இருக்க, பார்த்துப் போங்க
தம்பின்னு இருவரும் சேர்ந்து சொன்னார்கள். வசந்த் அவர்கள் கண்ணில் இருந்து மறைந்தான். இருவர் எண்ணத்திலும் அச்சாய் பதிந்து போனான்…


