“இனி வாய்ப்பில்ல, அவ்வளவு தான். வீட்டுக்கு தூக்கிட்டுப் போயிருங்க” என்று மருத்துவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் காதுகளுக்குள் அடங்காமல், ஏதோ தெளிவற்ற ஒன்றாய் கண் முன்னே மிதக்கிறது, அப்பாவை வீட்டுக்கு கொண்டு வந்த பின்னும். இருண்ட அறைக்குள் அப்பாவின் ஏறி இறங்கும் நெஞ்சுச் சத்தம் நடுநடுங்க வைக்கிறது. இந்த இரவின் கனத்தைப் போன்றதொரு பாரத்தை என் வாழ்வில் நான் உணர்ந்ததேயில்லை.
“தந்தை இறக்கப் போகிறார்” என்பதால் மட்டும் ஏற்பட்டுவிட்ட வலி அல்ல இது, என்னும் உண்மை மனதை இன்னும் இன்னும் அறுக்கிறது. ‘அப்பா இறந்து போனதுக்கப்புறம், இறுதிச் சடங்கு செய்ய காசுக்கு எங்க போவேன்?’ என்ற அழுத்தத்தின் வலி, தந்தையின் பிரிவின் வலியைக் கூட பின்வரிசையில் நிறுத்தி ஏளனமாய் பார்க்கிறது.
தோற்றுப்போன ஒரு இழிவானவனாய், நானே என்னிலிருந்து பிரிந்து என் கண்முன் அமர்ந்திருப்பது போல் தோன்றுகிறது. காரி உமிழ்ந்து தனக்குத் தானே சாபமிட மனம் கொந்தளிக்கிறது. முப்பந்தைந்து வயதில் ஒருவன் தந்தையின் மரணத்தைக் கடக்கும் பாதையில் இருக்கிறான், கையில் காசு இல்லாமல். இது, அது என எதையேனும் விற்கலாமா, அடகு வைக்கலாமா எனத் தேடவெல்லாம் எதுவும் இல்லை. கனவைத் தேடிப்பிடிக்கிறேன் எனக் கரைத்ததில் மிஞ்சியது, எனதும், என்னைப் பெற்றதுமான தந்தையின் உயிர்களும் தான். அதிலும் ஒன்று இன்று கரையக் காத்திருக்கிறது.
கடன் வாங்கும் தகுதியில் கடைநிலை ஆதாரம் கூட இல்லாதவன் என்பதால் கடன்கள் மறுபேச்சின்றி மறுக்கப்படும். “ஒரே ஒரு வாரம் நேரம் கிடைக்குமா?” மனம் கதறுகிறது. அதோ அந்த ஷோரூமில் வேலை கிடைக்குமே! அந்த கடையில்? மோகன் மாமா சொன்ன அந்த சின்ன அலுவலகத்தில்? என எதையெல்லாம் அவமானமாக நினைத்ததோ, அதையெல்லாம் கிடைக்காதா என ஏங்குகிறது மனம். மெல்ல மனதுக்குள் வேண்டுகிறேன், “அப்பா செத்துடாத ப்ளீஸ்”. ஆமை, கோட்டை அடைந்துவிட்ட பிறகு, விழித்த முயலால் என்ன செய்து விட முடியும்!
“நேற்று ஓடிக் கொண்டிருந்த மனிதன், இன்று மரண வாசலில் கிடக்கும் இந்த வாழ்கையில் என்ன தான் இருக்கிறது. ஏதோ ஒரு கனவைத் தூக்கிக்கொண்டு ஓடி மிதிபட்டு, அவமானச் சேற்றில் அமிழ்ந்து நினைத்ததை அடைந்தாலும், இறுதியில் அடைபடப்போவது அடியில் தானே. “நதியோடு ஓடாமல், நகர்ந்து குன்றாகத் துடிக்கும் எண்ணம் எதற்கு இந்த பாழாய்ப்போன மண்ணுக்கு?” கேவலமான தொனியில் எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன்.
என்றோ ஒருநாள் அப்பாவின் கடைசி சேமிப்பையும் அவர் எனக்காகத் தந்தார். “சாரிப்பா, உன் மொத்த உழைப்பையும் வீணாக்கிட்டேன், ரொம்ப மனவேதனைக்கு உள்ளாக்குறேன்” என்று நான் சொல்லிய போது, “எனக்கு என்ன கஷ்டம். ஓட ஓட விழுகுறப்ப உனக்கு வர்ற கஷ்டத்த விடவா? பணம் தான போகுது. நீ ஜெயிச்சுட்டு வா” என்றவரை, துடிதுடிக்க உயிரை அறுக்கும் ரணத்தோடு திரும்பிப் பார்க்கிறேன்.
“அவன்ட்ட என்னத் தூக்கிப் போடக் கூட காசில்ல. இன்னும் கொஞ்சம் கால அவகாசம் குடு” என்று எமனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டிருப்பதாய் அவரின் மேலேறி கீழிறங்கும் நெஞ்சு சொல்லுவது போல் உள்ளது.
பெரிதாய் சம்பாதித்து, சாதித்து, தந்தைக்கு சிறப்பு செய்யாத போதும், தான் இறந்தால் தன்னில் பிறந்தவன் தனக்கு நன்முறையில் இம்மண்ணிலிருந்து விடை தருவான் என ஒரு சாதாரண தந்தையின் மனம் தவிக்காதா?
“ச்சீ, நீயெல்லாம் ஒரு பிறவியா?” என்று சொல்லியபடி, மாறி மாறி என் முகத்தில் அடித்துக் கொள்கிறேன். அடித்ததில் மூக்கு கிழிந்து கொட்டும் ரத்தத்தோடு அப்பாவின் கால்களைப் பிடித்துக் கொள்கிறேன். “என்ன செய்யன்னு தெரியலப்ப” என விரல்களை விரித்து குழந்தையாய் எச்சில் வடிய அழுகிறேன். எத்திக்கும் தெரியவில்லை. யாருக்கு சொல்வது புரியவில்லை. இரவு நீள்கிறது அப்பாவின் மூச்சு வேகம் குறைகிறது.
“எப்படி உன்ன அனுப்பி வைக்கப் போறேன்ப்பா” அழுதழுது உழன்ற மனதோடு விடியலுக்காகக் காத்திருக்கிறேன்.
“அட நாயே, இத்தன வயசாச்சு பெத்தவனத் தூக்கிப் போட காசு கேட்டு வந்து நிக்குற” என்ற அவமானப் பேச்சுக்களுக்கு தயாராகு என மனம் நெஞ்சுக்குள் எட்டி உதைக்கிறது. இவனப் புள்ளையாப் பெத்தான்ல இந்த ஆளு, அதான் இப்படிப் போறான் என்ற வார்த்தைகளுக்கும், எதுவும் பேசாமலே ஒரே பார்வையில் உடலைக் கூசச் செய்யும் ஏளனப் பார்வைகளுக்கும், “எதாவது பண்ணிருக்கலாம்ல” என்றபடி தோளைத் தொட்டுத் தட்டிச் செல்லும் சிலரின் முகங்களைப் பார்க்க முடியாமல் தலையைக் குனியும் வேதனைக்கும் அஞ்சி உள்ளம் அரற்றுகிறது.
என் இன்றைய இரவை விட, அப்பாவின் இறக்கும் நொடியை விட, நாளைய அந்த நாள், என்னைப் பெற்றவனை நான் பெருங்காடு சேர்க்கும் நாள் என்னைக் கிழித்துக் கொல்லப்போகிறது. நாளைக்கு மட்டுமல்ல, நாளும், நான் வாழும் வரையிலும்.
முகத்தைத் துடைத்துக்கொண்டு அப்பாவைப் பார்க்கிறேன். இந்தப் பார்வைக்குள்ளும், அவரின் இந்த இறுதி மூச்சுக்குள்ளும் இருக்கும் ரணம் இவ்வுலகில் யாரையும் தீண்டிவிடக்கூடாது என வேண்டிக்கொண்டே ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், “கனவைத் தேடுங்கள், பெரும் பணியை நாடுங்கள், ஆனால், உங்கள் தந்தைக்கோ தாய்க்கோ நன்முறையில் இறுதிக் காரியம் செய்யும் அளவுக்கேனும் வாழ்வை அமைத்த பிறகு!”


