பசித்த மானுடம் (1978)
ஆசிரியர்: கரிச்சான் குஞ்சு
சிறந்த நாவலாகப் பல இலக்கியத் தளங்களில் பரிந்துரைக்கப்பட்ட கரிச்சான் குஞ்சுவின் “பசித்த மானுடம்” நாவலை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நானும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதாலும், இந்த நாவலின் கதைக்களம் தஞ்சையை ஒட்டியே நகர்வதாலும் அறிமுகமான ஊரின் மண்வாசனையோடு நகரும் காட்சிகள், வாசிப்பை இன்னும் இனிமையாக்கின.
நாவலைத் தொடங்கும் போது அதன் கருப்பொருள் என்னவென்று புரியவில்லை என்றாலும், வாசிக்க வாசிக்க மனிதர்களின் உடல், பணம் மற்றும் அதிகாரம் சார்ந்த ஆசைகள் (பசிகள்) ஒருவரது வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகின்றன என்பதை நாவல் மிக அழகாகக் காட்டுகிறது. இத்தகைய துணிச்சலான கதைக்கருவை அந்தக்காலத்திலேயே தேர்ந்தெடுத்தது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும். குறிப்பாக, அன்றைய காலக்கட்டத்தில் ஓர்பாலின உறவு குறித்துப் பேசிய மிக முக்கியமான படைப்பாக இது கருதப்படுகிறது.
கணேசன் மற்றும் கிட்டா என்ற இரு நண்பர்களின் வாழ்க்கை பயணமே இக்கதையின் மையக்கருவாகும். கிட்டா சிறுவயது முதலே பணத்தின் மீது தீராத தாகம்கொண்டு, கடினமாக உழைத்து ஒரு பெரிய தொழிலதிபராக மாறுகிறான். ஆனால், அவனது ஓட்டத்தில் பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்ததால், இறுதியில் குடும்ப அன்பையும் நிம்மதியையும் இழக்கிறான். ஒருகட்டத்தில் அவனது சொந்த மகனே அவனை வெறுத்து அடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவது அவனது வாழ்வின் சோகம்.
கணேசன் ஆரம்பத்தில் படிப்பில் சிறந்தவனாகவும், அனைவராலும் நேசிக்கப்படுபவனாகவும் இருக்கிறான். ஆனால், அமைதியான குணமுடைய கணேசன், ஒரு பணக்காரரின் சகவாசத்தால் திசைமாறிச் செல்கிறான். அதன் விளைவாக வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்து, இறுதியில் தொழுநோயால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுகிறான். இவர்களின் வாழ்வியல் மாற்றங்களை எந்தவித ஒளிவுமறைவுமின்றி இந்த நாவல் வெளிப்படையாகப் பேசுகிறது.
கதையின் சில பகுதிகள் மிகவும் வெளிப்படையாகவும் ஒருவிதமான மன அழுத்தத்தைத் தரக்கூடியதாகவும் இருப்பதை உணர முடிகிறது. இது ஒரு சராசரி நாவலைப் போல மகிழ்ச்சியான முடிவைத் தருவதில்லை; மாறாக, வாசித்து முடித்த பிறகு ஒருவித கனத்த மனநிலையையும், வாழ்க்கையைப் பற்றிய நீண்ட சிந்தனையையுமே நமக்குள் விட்டுச் செல்கிறது.
அதீத ஆசைகளுடன் எதன் பின்னாலாவது ஓடிக்கொண்டே இருந்தால், இறுதியில் நிம்மதி கிடைக்காது என்பதையும், ஒருகட்டத்தில் மிஞ்சுவது வெறுமைதான் என்பதையும் இந்த நாவல் ஆழமாக உணர்த்துகிறது.


