இன்று விடியகாலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்டேன். அவசரசமாக காலைக்கடன்களை முடித்துக் கொண்டு என் மேசை முன் அமர்கிறேன். காரணம் இன்று முக்கியமான மீட்டிங் ஒன்றை நடத்துவதாக கூறியிருந்தேன்.
அதனால் அதற்கான முன்னாயத்தங்களை செய்துக் கொண்டிருகிறேன். கடிகாரத்தை பார்க்கிறேன். மணி எட்டை காட்டுகிறது. நேரம் சென்றதே தெரியவில்லை. மேசை மேலிருந்த பைல் கட்டொன்றை ஒரு பக்கமாக அடிக்கி விட்டு அவசரமாக வேலைக்கு செல்ல ஆயத்தமாகிறேன்.
அலமாரியிலிருந்து என் இராணுவ சீருடையை எடுத்து அணிந்துக்கொள்கிறேன். கட்டிலுக்கு கீழிருந்த சப்பாத்தை தேடி போட்டதும் எழுந்து நிற்கிறேன். என் இராணுவ தொப்பியை இறுக கொண்டு அலுமாரி கண்ணாடி முன் நிற்கிறேன். என் சீருடையிலுள்ள ராணுவ இலச்சினை மின்னுகிறது. எனக்கு சமீபத்தில்தான் ராணுவ தலைமை அதிகாரியாக பதவியுயர்வு கிடைத்திருத்தது . இம்மாதத்தோடு நான் இராணுவத்தில் சேர்ந்து ஐந்து வருடங்களாகிறது. அதற்குள் என் வாழ்க்கையில் எத்தணை யோ மாற்றங்கள். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பூங்குடில் கிராமத்தில் தான். அதுவொரு வயற்கிராமம். எங்களூரின் பொருளாதாரமே விவசாயத்தை நம்பிதான் இருக்கிறது. தற்போது நான் ஆர்மி ஹாஸ்ட்டலொன்றில் தங்கி தான் வேலைக்கு போய் வந்ததுக் கொண்டிருக்கிறேன்.
அறைகதவு தட்டப்படுகிறது . ” யாரது… ” என்கிறேன் சத்தமாக .
“சேர் நான் கணேசன் வந்திருக்கேன் …” மறுபுறத்திலிருந்து பதில் வந்தது .
போய் கதவை திறக்கிறேன். செல்யூட் அடித்துவிட்டு “காலை வணக்கம் சேர்” என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னான் அந்த ராணுவவீரன் . பதில் வணக்கம் சொல்லிவிட்டு என்ன விடயம் என விசாரித்தேன்.
“சேர் இன்றைக்கு மீட்டிங் வைக்கிறதா சொன்னீங்க… எல்லோரையும் எத்தனை மணிக்கு வரச்சொல்ல…” என்றான் .
என் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு “ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கலாம் . எல்லோரையும் நேரத்திற்குவரச் சொல்லு” என்கிறேன்.
“சரி சேர் ” என்றான்.
தலையசைத்தும் அவன் போய் விட்டான். அறைக்கதவை தாழிட்டுவிட்டு திரும்புகிறேன்.
என் போன் சிணுங்குகிறது.
மேசைக்கருகில் போய் போனை எடுத்துப் பார்க்கிறேன்.
“டார்லிங்” என்றிருந்தது. என் காதல் மனைவி சுஸ்மித்தா. ஒருவகை சந்தோஷம் என் இதயத்திலிருந்து புறப்பட்டு உடல்பூராக பரவிச் செல்கிறது .
“ஹலோ டார்லிங்“ என்கிறேன் புன்னகைத்தப்படி. மறுபுறத்திலிருந்து அவள் குரல் கேட்கவில்லை. அதற்கு பதிலாக விம்மலுடன் கலந்த அழுகைதான் கேட்கிறது. ஒருகணம் பதறிப்போய் விட்டேன். மீண்டும் மீண்டும் அவள் பெயர் சொல்லி சத்தமாக பேசினேன்.
“என்னங்க அத்தைக்கு …”என்றுவிட்டு விம்மினாள்.
” சொல்லு சுஸ்மி… எதுக்கு இப்போ அழுவுற…. எனக்கு ஒன்றும் விளங்குது இல்ல” என்றேன் சற்று காரமாகவே.
காரணம் அவன் அழுகை என்னை என்னவோ செய்தது.
“சுஸ்மி… நீ பேசவேணாம்… .என் அம்மாட்ட போனை குடு… என்கிறேன் .
” என்னங்க அத்தைக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. .. ” என்றுவிட்டு விம்மினாள். பெருமூச்சு விட்டப்படி, “அதுதானே டாக்டர் சுஸ்மித்தா பக்கத்திலேயே இருக்காங்களே… இரண்டு மாத்திரை கொடுத்தா எல்லாம் சரியாகிடும்” என்றேன் சிரித்தப்படி .
ஆம் என் மனைவி ஒர் டாக்டர் .
கடைசியாக சென்ற வருடம் தைப்பொங்களுக்கு தான் ஊருக்கு போய் வந்தேன் .
சுஸ்மிக்கு சின்னவயதிலிருந்தே அம்மா கிடையாது . எல்லாம் அவள் அப்பா மட்டும்தான் . அதனால் என் அம்மாவுக்கும் அவளுக்கும் என்றுமே மாமி மருமகள் சண்டை வந்ததேயில்லை .
என் அம்மாவுக்கும் சுஸ்மிக்கும் என்னை நேரில் பார்க்க வேண்டுமென்றால் இப்படியொரு குட்டிநாடகம் போடுவது வழமைத்தான் . ஆனால் சுஸ்மி ஒருபோதும் அழுதுக்கொண்டு என்னிடம் முறையிட்டது கிடையாது .
“அப்போ போனை வைக்கட்டா டாக்டர் ” என்கிறேன் நக்கலாக சிரித்தப்படி .
” வேணாம்ங்க நிஜமாகததான் காலையிலிருந்து அத்தைக்கு பேச்சு மூச்சு ஒன்னுமில்ல ”
என்னை ஒருவகை பயம் தொற்றிக்கொண்டது.
“உங்க அப்பாகிட்ட போனை கொடு” என்றதுமே உடனே மாமா பேசினார் .
“கோபிக்க வேணாம்ப்பா . லீவு போட்டு விட்டு அம்மாவ வந்து பார்த்துட்டு போயிடு” என்றார் .
” சரி மாமா …”என்றுவிட்டு அழைப்பை துண்டித்தேன் .
என் அப்பா இறந்து போன பிறகு எங்க குடும்பத்தை தலைதூக்க வைச்சதே எங்கம்மாதான் . அவளுக்கு சுகமில்லை என்றதும் என் உள்ளம் பதறியது. உடனடியாக என் மேலதிகாரி திலீபனிடம் போய் லீவு தரும்படி கேட்டேன் .
யார் லீவு கேட்டபோதிலும் உடனடியாக கையெழுத்தை போட்டு அனுமதி கொடுத்துவிடுவார் . ஆனால் இன்று எதிர்பாராத விதமாக மறுத்து விட்டார்.
“இன்றைக்கு முக்கியமான மீட்டிங் வைக்கிறதா சொல்லிட்டு இப்படி பொறுப்பில்லாம லீவு கேட்டு வரலாமா” என கூறிவிட்டு கண்களையே உற்றுநோக்கினார் . என்னால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. மௌனமாக இருந்தேன்.
பின் “பிளீஸ் சேர் . எங்க அம்மாக்கு ரொம்ப சுகமில்ல. காலையில் தான் போன் வந்திச்சு “என பணிவுடன் சொல்லி விட்டு கொஞ்சம் பதறினேன் .
எங்களுடைய லீவு புத்தகத்தை ஒருகணம் நோட்டமிட்டப்படி, ” இங்க ஒரு சைன் பண்ணி விட்டு லீவு எடுங்க..”என சொல்லி விட்டு ஒருவிதமாக புன்னகைக்கிறார் .
“இதுவரைக்கும் மேலதிகமாக எந்த லீவும் நீங்க எடுத்ததில்லை .ஆகையால் நீங்க போயிட்டு வாங்க. அடுத்த வாரம் மீட்டிங்கை வைக்கலாம் “என்றார் திலீபன்.
“ரொம்ப நன்றி சேர் ” என்றுவிட்டு லீவு புத்தகத்தில் கையெழுத்தை போட்டேன் .
“போயிட்டுவரேன் சேர் “என சொல்ல அவர் தலையசைக்கவும் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறேன் .
பாக்கெட்டில் இருந்த என் போன் மீண்டும் சினுங்குகிறது . எடுத்து பார்க்கிறேன் . அந்த அழைப்பு சுஸ்மித்தா விடமிருந்துதான் . அழைப்பை துண்டித்து விட்டு என் அறைக்குள் விரைந்தேன் . என் வருகையை உறுதிப்படுத்துவதற்காக தான் மீண்டும் அவள் போன் பண்ணியிருக்கக் கூடும் .
ஊருக்கு வந்து கொண்டியப்பதாக குறுஞ்செய்தியொன்றை அவளுக்கு அனுப்பி விட்டு அவசரமாக ஆயத்தமாகி ரயில் நிலையத்தை நோக்கி விரைகிறேன். அங்கு சனக்கூட்டம் அதிகமாக இருக்கிறது.
சீக்கிரமாக டிக்கெட்டை வாங்கிக் கொண்டு ஓடிப்போய் ரயிலில் ஏறிக்கொள்கிறேன்.
நேரே நடந்து யன்னலோரமாக போய் அமர்ந்துவிட்டேன் . புகையை கக்கிய வண்ணம் பூங்குடில் நோக்கி விரைகிறது ரயில் . என் எதிர்பக்கமாய் ஓடிக்கொண்டிருக்கும் காட்டுமரங்களை கண்டு ரசிக்கிறேன் . என் எதிர்புறத்திலே ஒரு பெண்மணி வந்தமர்ந்தாள் .
இடபற்றாக்குறையினால் தன் இருமகன்களையும் மடியில் வைத்துக் கொண்டாள் . அவளை பார்க்கும் போது என் தாய் ஆனந்தியின் ஞாபகம் வருகிறது. திக்குதிசைக்கு அறியாமல் பயணித்த என் வாழ்க்கைக்கு நேர்வழி காட்டியவள் . முரடனாக இருந்தவனை வீட்டுக்கும் நாட்டுக்கும் சேவைசெய்யும் நற்பிரஜையாக மாற்றியவள் என் தாய் ஆனந்தி . எல்லாவற்றுக்கும் அவள் எல்லையில்லா அன்பும் பொறுமையும் தான் காரணம்.
யன்னலுக்கு வெளியே பார்கிறேன் . என் நினைவுகள் பின்னோக்கி சூழல்கிறன.
அன்று அந்த ஒற்றை தொலைபேசி அழைப்புக்காய் அங்கிருந்தவர்கள் கார்த்துக் கொண்டிருந்த நேரமது . வீட்டுக்குள் அங்குமிங்குமாக நடமாடிக் கொண்டிருந்தான் கார்த்திக் .
அவன் தாயோ தலைவிரிகோலாமாக ஒருபக்கம் சரிந்திருந்தாள்.
“தம்பி கார்த்திக்… ஹோஸ்ப்பிட்டலிருந்து போன் வரயில்லையா?” என்றுவிட்டு உள்ளே வந்தார் ஒருவர்.
“இன்னும் வரயில்லை…” என சொல்லிவிட்டு தன் தாயை பார்த்தான் கார்த்திக். அவள் சிவந்த கண்களும் வீங்கிய கன்னங்களும் அவள் அழுதிருக்கிறாள் என்பதை காட்டியது. கார்த்திக் நடந்தவற்றை ஒருகணம் சிந்தித்து பார்த்தான்.
காலையில் வெகுநேரமாகியும் தம்பி கதிர் கண்விழிக்காததால் பயந்து அவன் தாய் கத்தியழுதாள். இந்த சத்தத்தை கேட்டு ஒடிவந்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்து விட்டான். காரணம் பேச்சு மூச்சு ஒன்றுமில்லாமல் மல்லாந்து கிடந்தான் கதிர் .அதனால் அவசரமாக ஹாஸ்பிட்டலில் கொண்டு போய் சேர்த்தார்கள் . கதிர் கண்விழித்ததும் ஹோஸ்ப்பிட்டலில் போன் பண்ணுவதாக சொல்லியிருந்தார்கள்.
கதிர் பிறந்த கொஞ்சநாட்களிலே கார்த்திக்கின் அப்பா எதிர்பாராதவிதமாக
மாரடைப்பினால் இறந்துப்போனார் . இதனால் கார்த்திக்கின் தாய் குடும்பசுமையை தாங்க முடியாது மிகவும் கஷ்டப்பட்டாள் . ஆடைதொழிற் சாலை ஒன்றில் வேலை செய்தே தன் பிள்ளைகளை வளர்த்து வந்தாள் . சிலநேரம் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்படும் நிலை காணப்பட்டது . ஆனாலும் அவன் தாய் தன் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தாள்.
கார்த்திக் சாதாரண தர பரிட்சையில் நன்கு சித்தி பெற்ற போதிலும் உயர்கல்வியை அவனால் தொடர இயலவில்லை .காரணம் அவன் தாய் திடீரென நோய்வாய்பட்டாள் . இதனால் குடும்பசுமையை கார்த்திக் ஏற்க வேண்டியிருந்தது . இதனால் பல இடங்களுக்கு வேலை கேட்டு போனான் .
இதன் காரணமாக அவன் பல்வேறு இன்னல்களுக்கும் அவமானங்களுக்கும் முகம் கொடுக்க நேரிட்டது . அந்த சமயம் அவன் தந்தையின் நண்பர் என அறிமுகமானார் ஒருவர் . முன்அறிமுகமில்லாத அந்த நபரின் நட்பு கார்த்திக்கை தப்பான ஓர்பாதையில் இட்டுச் செல்லக்காரணமாக அமைந்தது .
பின் சிலமாதங்களுக்குளேயே கார்த்திக் நன்றாக சம்பாரிக்கத் தொடங்கி விட்டான் .
“அம்மா நீ இனி திரும்ப வேலைக்கு போக வேண்டியதில்லை . நானே எல்லா செலவு களையும் பார்த்துக் கொள்வேன்” என தன் தாயிடம் கூறினான் கார்த்திக்.
அன்றிலிருந்து காத்திக்கின் செலவிலே குடும்பம் நகரத்தொடங்கியது. சிலநாட்களில் வாடகை வீடு சொந்த வீடாக மாறியது. அத்தோடு பல்வேறு விதமான புதிய பொருட்கள் வீட்டை அழகுப்படுத்தின. பதினேழு வயது தன் மகனுக்கு இவ்வளவு பணம் எப்படி வருகிறது. ஒரு கணம் சிந்தித்தாள் அந்த தாய். ஆனால் இதை பற்றி அவனிடம் துருவி விசாரிக்க அவளுக்கு சற்று தயக்கமாகவே இருந்தது.
அன்று காற்பந்து விளையாடியப்படி வீட்டுக்குள் வந்தான் கதிர் . பாதிதிறந்த அறை கதவு வழியாக கார்த்திக் தன் அறைக்குள் ஏதோ வேலை செய்து கொண்டிருப்பது வெளியே தெரிந்தது .
கதிர் பந்தை கைகளால் நிலத்தில் அடித்து விளையாட அதுதவறி கார்த்திக்கின் அறைக்குள் போய்விட்டது .
உடனே கதிர் தன் அண்ணனின் அறைகதவை நன்றாக திறந்துக் கொண்டு உள்ளே போனான் .”எத்தணை தடவை சொல்லி இருக்கேன் . என் ரூம்க்குள் வர வேணாம்ன்னு ” என கார்த்திக் சத்தமாக கத்தினான் . உடனே பயந்தபடி தன் கண்களால் பந்தை காட்டினான் கதிர் . ” எடுத்துட்டு போ …” என்றுவிட்டு அவன் போனதும் அறைகதவை “தடால்..” என அடைத்துவிட்டான் கார்த்திக் .
கதிர் அந்த அறையை விட்டு வெளியே வந்த போதிலும் தன் அண்ணன் கையில் உள்ள இனிப்பு பண்டபெட்டி அவன் மனதை விட்டு அகலவில்லை .
தொலைபேசி சினுங்க கார்த்திக் போய் எடுத்து ” ஹலோ …” என்றான் .
“நாங்க ஹாஸ்ப்பிட்டலிருந்து பேசுறம்” என மறுபுறத்திலிருந்து பதில் வந்தது .
” சொல்லுங்க . நான் கதிரோட அண்ணன் பேசுறன் “என்றான் கார்த்திக்.
தலைவிரிகோலமாக இருந்த அவன் தாய் ஓடிவந்து அவனருகே நின்று கொண்டாள் . “கதிர் அளவுக்கதிகமாக போதைமாத்திரை சாப்பிட்ட காரணத்தினால் அவரை எங்களால் காப்பற்ற இயலவில்லை “
” என்ன சொல்லுறீங்க…” என பதறினான் கார்த்திக். “ஆமா உண்மைதான் . ஆனால் அவர் பாடியை பொலிஸ் விசாரனைக்கு பிறகுதான் வீட்டுக்கு அனுப்புவாங்க” என்றுவிட்டு அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. கார்த்திக்கின் தலை ஒருகணம் சுற்றியது.
“பத்து வயசு பையன் எப்பிடிடா போதை மாத்திரை சாப்பிட்டான் . உண்மையை சொல்லு…” என கார்த்திக்கின் சேட்டை பிடித்து ஆட்டினாள் அவன் தாய் . கார்த்திக் மெளனமாக இருந்தான்.
கார்த்திக்கின் தாய் தலையை பிடித்தப்படி மயங்கி விழ அங்கிருந்த பெண்கள் அவளை தாங்கி பிடித்துக் கொண்டனர் . கார்த்திக்கின் மனம் உருத்தியது . காரணம் தான் விற்பனை செய்ய வைத்திருந்த போதைமாத்திரை கதிர் இனிப்புபண்டமாக நினைத்து அளவுக்கதிகமாக சாப்பிட்டிருக்க வேணும். தன் அறைக்குள் விரைந்தான் கார்த்திக் .
கட்டிலுக்கு கீழ் தான் வைத்திருந்த பெட்டியை எடுத்து திறந்தான் . அவன் ஊகம் சரியாய் போய்விட்டது . பெட்டிக்குள் இரண்டு மாத்திரைகள் மட்டுமே எஞ்சியிருந்தன . தான் செய்த பெரிய பிழை தன் உடன்பிறப்பின் உயிரையே பறித்து விட்டது .அவன் கண்கள் கலங்கின. அவனால் அதை ஜீரணிக்க முடியவில்லை . அதற்கிடையே வேகமாக பொலிஸ் ஜீப்பொன்று வந்து வீட்டுவாசல் முன் நின்றது . அதிலிருந்து தடதடவென நான்கைந்து பொலிஸ்காரர்கள் வீட்டை சுற்றிக் கொண்டார்கள் . கார்த்திக்கின் தாயை பார்த்து “அம்மா விசாரணைக்கு பிறகு குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டதும் தான் உங்க பையனோட பாடி வீட்டுக்கு வரும் ” என்றார் தலைமை பொலிஸ் அதிகாரி .
கார்த்திக்கின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது. அவன் அறையிலிருந்து சில போதைமாத்திரைகளுடன் வெளியே வந்தார் பொலிஸார் ஒருவர். அவன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கார்த்திக்கின் கரங்களுக்கு விலக்கிடப்பட்டன.
தன் உடன்பிறப்பின் உயிரை பறித்தற்கு மேலாக அவனின் இறுதிச்சடங்கு கூட என்னால் தடையாக இருக்க முடியாது என தன் தாய் முன்னே கார்த்திக் பொலிஸரிடம் கைகளை நீட்டி தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான் .
” என்னை மன்னிச்சுடும்மா …பெரிய தப்பு பண்ணிட்டேன் “என்றதுமே அவன் கண்கள் கலங்கி கண்ணீர் துளிர்த்தது . “கார்த்திக் உங்கப்பா நேர்மையாக கூலிதொழில் செய்தே குடும்பத்தை காப்பாத்தினாரேடா… நீ எங்க குடும்ப மானத்தையே வாங்கிட்ட” என தன் தலையில் அடித்துக் கொண்டாள் கார்த்திக்கின் தாய் .
சுவரில் மாட்டியிருந்த அப்பாவின் உருவப்படத்தை பார்த்தான் . அவன் கண்கள் குளமாகின. ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டோமே என உள்ளம் நோந்தான். பொலிசார் கார்த்திக்கை ஜீப்பில் ஏற்றவும் கதிரின் சவப்பெட்டி சுமந்த அம்பூலன்ஸ் வீட்டுக்கு வரவும் நேரம் சரியாய் இருந்தது .
கார்த்திக் ஆறுமாதகாலமாக சிறையில் இருந்தான் . அவன் விதவை தாய் ஒரு மகனை இழந்ததிருந்தாலும் மற்றவன் உயிரோடு இருக்கிறான் என்ற நினைப்பு மட்டுமே அவளை ஆறுதல்படுத்தியது. அதனால் அடிக்கடி கார்த்திக்கை பார்க்க சிறைச்சாலைக்கு சென்று வந்தாள் .
வழமைபோல அன்றும் அவனுக்கு சாப்பாடு செய்து எடுத்து வந்திருந்தாள் . அடிப்பட்டு நிலத்தில் சுருண்டு படுத்திருந்தான் கார்த்திக் . “உங்கம்மா வந்திடுங்காங்க . போய் பாரு ” என தன் கம்பினால் கார்த்திக்கின் முதுகை தட்டினார் பொலிஸாரொருவர் . அவன் மெதுவாக எழுந்து தன் தாயருகே போனான் .
“கார்த்திக்.என்னடா முகம் இப்பிடி கறுத்து போயிருக்கு ” என இருவருமிடைபே இருந்த கம்பியை பிடித்தப்படி கேட்டாள் ஆனந்தி . இன்னும் தன்மேல் அவள் வைத்திருக்கும் பாசத்தை கண்டு வியந்தது அவனுள்ளம் .
“வேணாம்மா … நீ இனி இங்கு வர வேணாம் . உன்னை இதுக்கு மேல கஷ்டப்படுத்த நான் விரும்பல “என சொல்லிவிட்டு தலை குனிந்தான் .
“என்ன குற்றம் செஞ்சாலும் நீ என்றைக்கும் என் பிள்ளைதான் . உனக்கு வயசா போயிடுச்சு . யாருடைய காலை பிடிச்சாவது உன்ன வெளியில் எடுப்பன் கார்த்திக் . ஆனா நீ மறுபடியும் படிக்கணும். படிச்சதுக்கு அப்பறம் கிடைக்கிற வேலைய தான் நீ செய்ய வேணும் ” என அவன் தாய் உத்தரவிட அதற்கு அவனும் உடன்பட்டான்.
அதன்பிறகு தான் வேலை செய்த ஆடைதொழிற்சாலை கம்பனி முதலாளிடம் போய் கடனுக்கு ஒரு தொகை பணம் கேட்டாள் . “உன்ன நம்பி எப்படியம்மா ஒரு லட்சம் பணத்தை கொடுக்குறது ” என முதலாளி வினவ மெளனமாக இருந்தாளவள். பின் தன் தங்கத்திலான தாலியையும் தோடுகளையும் கழற்றி மேசை மேல் வைத்தாள் .
“காசு முழுவதையும் கட்டினா பிறகு இதை எடுத்துக்கிறேன் முதலாளி” என பணிவுடன் சொன்னாள்.முதலாளி ஒரு கணம் சிந்தித்து விட்டு “அதை எடுங்க . அது உங்ககிட்ட இருக்கட்டும் . இந்தாங்க நீங்க கேட்ட காசு ” என ஒரு லட்சம் பணத்தை நீட்டினார்.
பல வருடங்களாக அவள் அதே கம்பனியில் வேலை செய்தமையாலும் மனிதாபினத்தோடும் அவர் அந்த பணத்தை அவளுக்கு கொடுத்தார்.
” ரொம்ப நன்றிங்க. காசை விடவும் நீங்க செய்த உதவி பெரிசு “என்றுவிட்டு தன் மகனை சிறைச்சாலையில் இருந்து மீட்கச் சென்றாள் அந்த தாய் .
சில காலங்கள் உருண்டோடின . கார்த்திக் உயர்தரத்தில் கற்று சிறந்த மதிப்பெண்களை பெற்றான் . இதனால் அவன் இராணுவ பல்கலைகழகத்திற்கு தெரிவானான் .
” அம்மா லீவில் வந்ததும் ஏதாச்சும் வேலை பார்க்கலாம்டு நினைச்சன். நீ விட மாட்டீங்கிறீயே …” என அலுத்தபடி கூற, “வேணாம் ராசா . அம்மா பார்த்துறன். நீ படிச்சு முடிச்சதும் வேலைக்கு போ ” என்றபடி அவன் தலைமுடியை ஒரு பக்கமாக படிய வாரிவிட்டாளவள்.
” ஆறு மாசமா கேம்பஸ் போய் வந்துட்டு இருக்க . இன்னும் ஒரு பொண்ண பார்க்கலாடா ” என்றுவிட்டு சிரித்தாள் கார்த்திகின் தாய் .
“நீயாம்மா இப்பிடி கேக்குற…” என தன் புருவங்களை உயர்த்தினான்.
“ஏன்டா உனக்குன்னு ஒரு துணை வேணாமா ” என்றாள் .
கார்த்திக் போனில் ஏதோ துலாவியப்படி ” பார்க்கலாம் . ஆனா உனக்கும் பிடிச்சாதான் கட்டிகுவன் ” என கூறியப்படி பின்னால் இருந்து அவள் தோளை கட்டியணைத்துக் கொண்டான். “சரி விடு கார்த்தி .. ” என செல்லமாக கூறியபடி அவன் கரங்களிலிருந்து நழுவி சமையறைக்குள் புகுந்தாள் .
கார்த்திக் விடுமுறை முடிந்ததும் மீண்டும் பல்கலைகழகத்திற்கு சென்றான் . இரண்டு நாட்களின் பின் வைத்திய பீடத்தில் கற்கும் தன் உயிர்தோழன் சசிகுமாரை சந்திக்கப் போயிருந்தான் .
“ஹாய்டா சசி … ”
” ஹாய் கார்த்திக் என்னடா இந்த பக்கம்… ” என கூறியப்படி அருகே வந்தான் சசிகுமார்.
“சும்மா உன்ன பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்றுவிட்டு அங்குமிங்குமாக பார்த்தான் கார்த்திக் .
“என்னை பார்க்கணும் வந்த . ஆனா வேற யாரையோ உன் கண் தேடுதே ” என சிரித்துக்கொண்டே கூறினான் சசி .
“அது …வந்து “எனும் போதே, ” வா கார்த்திக் அங்க போய் பேசுவம்“என ஒரு பூந்தோட்ட பக்கமாக அழைத்துக் கொண்டு போனான் சசிக்குமார் . இருவரும் அங்கிருந்த படிக்கட்டொன்றில் உட்கார்ந்துக் கொண்டார்கள்.
“உன்ன ஒருமுறை பார்க்க வந்த போ இங்க ஒரு பொண்ண பார்த்தேன்டா ” என்ற கார்த்திக், அவளை பற்றி தன் நண்பனிடம் விபரித்தான்.
“ஓ… அந்த பொண்ணா…அவ பேரு சுஸ்மித்தா. நல்லபொண்ணு. போய் பேசி பாருடா” என கார்த்திக்கை உற்சாகபடுத்தினான் சசிகுமார்.
” இல்லடா கொஞ்சம் தயக்கமா இருக்கு . பிறகு ஒருநாள் அந்த விஷயமாக பார்க்கலாம் “என்றான் கார்த்திக் .
ஓரிரு மாதங்களுக்கு பின் சுஸ்மித்தாவை கார்த்திக் காண நேரிட்டது. சீனியர் மாணவர்களிடம் மாட்டிக் கொண்டு தவித்தாள் சுஸ்மித்தா . இதுதான் சரியான தருணம் என எண்ணியவனாக அவர்கள் பக்கமாய் போய் விசாரித்தான் .
“விக்னேஷ் … என்ன பிரச்சினை..”என்றான் . ” வாடா கார்த்திக் இந்த பொண்ணு கையில ஐநூறு ரூபா வைச்சிருக்கு . கேட்டா தரமாட்டேங்குது ” என விக்னேஷ் முறையிட்டான் .
இப்படி போவோர் வருவோரிடம் இடைமறித்து பணம் கேட்டு வாங்கி திண்பது
விக்னேஷினதும் அவன் நண்பர்களிதும் வழக்கம் .இன்று சுஸ்மித்தா வசமாக மாட்டிக் கொண்டு விட்டாள் .அதுவும் கையிலே பணத்தை வைத்துக் கொண்டு தரமாட்டேன் என்றால் நம்ம பையன்கள் விடுவான்களா . சுஸ்த்தா தன் கையில் வைத்திருந்த புத்தகங்களை பிடுங்கி கொண்ட கார்த்திக், “பணத்தை அவன்களிடம் கொடு ” என அவளை மிரட்டினான்.
ஒருகணம் அவள் முகமே மாறிவிட சீக்கிரம் பணத்தை கொடுத்து விட்டாள் . அதன்பின் விக்னேஷும் அவன் நண்பர்களும் போய் விட்டார்கள் . ஒரு கையில் அவள் புத்தகங்களை வைத்துக் கொண்டு மறுகையால் அவள் மென்மையான கரங்களை பற்றிக் கொண்டு சிறிது தூரம் நடந்தான் கார்த்திக்.
” கையை விடுங்க கார்த்திக்“
“என் பேரு எப்படி தெரியும்?”
“அதுதான் உங்க கள்ளகூட்டம் பேர் சொல்லி கூப்பிட்டாங்களே “என நக்கலாக சென்னாள்.
“மரியாதையா பேசுங்க ” என்றுவிட்டு தனது ஐநூறு ரூபாய் நோட்டை அவள் புத்தகதிற்குள் செருகி வைத்தான் கார்த்திக் .
அவளிடம் புத்தகங்களை கொடுத்துவிட்டு திரும்பி பாராமல் போய்விட்டான். அப்போது கார்த்திக் செருகிய நோட்டு கீழே விழவும் அதை கணநேரமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் சுஸ்மித்தா. இந்த சம்பவத்திற்கு பின்னால் சுஸ்மித்தாவின் மனதில் இடம் பிடித்துக் கொண்டான் கார்த்திக்.
இதனால் பாடநேரம் தவிர மற்றைய பொழுதெல்லாம் வைத்திய பீடத்திலே காலம் கழித்தான் கார்த்திக் . அவர்களின் காதல் பயணத்தில் இடையிடையே பல முரண்பாடுகள் தோன்றி சிறு சிறு விரிசல்கள் ஏற்படலாயின . ஆயினும் அது அவர்கள் காதலை அதிகரிக்கச் செய்ததே தவிர பிரிவை ஏற்படுத்த வில்லை .
கார்த்திக்கிற்கு வேலைக்கிடைத்ததும் தன் தாய் ஆனந்தி சகிதம் சுஸ்மித்தாவின் தந்தையை சந்திக்கச் சென்றான் . ஒரே மகள் என்பதால் சுஸ்மித்தாவிற்கு சம்மதம் என்றால் தனக்கும் இஷ்டம் என்றுவிட்டார் . இதனால் அவ்விருவருக்கிடையே இனிதே திருமணம் முடிந்தது.
கார்த்திகின் வாழ்கை மகிழ்ச்சியடையக் காரணம் ஒன்று அவன் தாய் மற்றவள் அவன் தாரம்.
“கிறீச்…”என்ற சத்ததுடன் ரயில் நிற்கவும் என் கடந்தகால நினைவுகள் கலைந்தன.
ரயிலிருந்து ஒவ்வொருவராக இறங்கிக் கொண்டிருந்தார்கள் . என் காதல் மனைவி சுஸ்மியையும் அம்மாவையும் பார்க்கும் ஆர்வத்தில் என் மனம் துள்ளிக்குதித்தது . ரயிலிருந்து குதித்து கீழே இறங்கினேன் . எங்கிருந்தோ வீசிய குளிர்காற்று என் மேனி வருடியது .
கலைந்திருந்த என் கேசத்தை ஒரு பக்கமாக என் கரங்களால் படிய வாரி விடுகிறேன். அடிக்கடி என் தாய் ஆனந்தி தன் கரங்களால் இப்படி வாரிவிடுவது வழக்கம் . அதுவே என் பழக்கத்திற்கு வந்துவிட்டது . ஏனோ அவள் முகம் இன்று அடிக்கடி நினைவில் வந்த போகிறது . ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி நடைபாதையோரமாக போய் கொண்டிருக்கிறேன் . வீதியில் ஆட்டோவொன்று போக கையசைத்து அதை நிறுத்துகிறேன் .
” எங்க போகணும் தம்பி . ” என ஆட்டோக்காரர் கேட்டதும் என் வீட்டு முகவரியை சொன்னேன் . “அங்கேயா அப்போ ஏறுங்க ” என்றார் . ஆட்டோக்கார் பக்ககண்ணாடி வழியே என்னை அடிக்கடி பார்க்கிறார் . அதை நான் புரிந்துக்கொண்டதும் ” உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கு தம்பி” என்கிறார் .
” நானும் இந்த ஊர்காரன்தான் . ஆர்மியில் சேர்ந்ததிலிருந்து நாற்பதுநாள் லீவுக்கு மட்டும்தான் ஊருக்கு வந்துட்டு போவேன் “
” நீங்க ஆர்மின்னு சொல்லும் போதுதான் எனக்கு ஞாபகம் வருது . பூங்குடில் பள்ளியில் உங்க போட்டோ ஒட்டிருக்கு . அதனால் தான் எங்கோ உங்கள பார்த்த ஞாபகம் “என ஆட்டோக்காரர் சொன்னதும் என் மெய்சிலிர்த்து போகிறது. மௌனமாக இருந்தேன் .பின் “உண்மையாகவா..” என்கிறேன் .
“ஆமா தம்பி எங்க பள்ளில படிச்சு நல்ல பதவில் இருக்கிறவங்க எல்லோரையும் போட்ட ஒட்டியிருக்காங்க ” என்றார்.
ஆட்டோ நான்படித்த பாடசாலையை கடக்கையில் அவர் சொன்னது உண்மை என்பதை நேரிலே கண்டுக்கொண்டேன் . என் தாயை எண்ணி உள்ளுக்குள்ளே அவளுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் .
“அண்ணா இங்க நிறுத்துங்க ” என்றுவிட்டு இறக்குகிறேன் . என் பையை தோளில் போட்டப்படி பணத்தை கொடுத்ததும் மீதிபணத்தை நீட்டினார் ஆட்டோக்காரர் .
“அதை நீங்களே வைச்சிகங்க” என்றுவிட்டு அப்போது தான் என் வீட்டுபக்கம் திரும்பி பார்கிறேன் . இரண்டு அடுக்குமாடி வீடு . என் கனவுகளை நிஜமாகிய என் தாயை பார்க்க விரைகிறேன் . வீட்டு முன்னே சனக்கூட்டம் ஆங்காங்கே கதிரைகளில் அமர்ந்தபடியும் நின்றபடியும் ஏதேதோ கதைக்கொண்டிக்க
“சுஸ்மி..” என்றபடி முன்வாயில் வழியே வீட்டுக்குள் நூழைந்தேன் . நூழைந்ததும் தான் தாமதம் உள்ளேயிருந்து “கார்த்திக்…” என கத்தியழுதப்படி சுஸ்மி ஓடிவர கிட்ட போய் அவளை கட்டியணைத்துக் கொண்டேன் .
அங்கே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. “கார்த்திக் அத்தை எங்களை விட்டுட்டு போயிட்டாங்க..”எனும் போதே எனக்கு விஷயம் விளங்கி விட்டது . அவளை அணைத்தப்படி உள்ளே சென்றேன் . என் வீரத்தாய் வெள்ளை போர்வைக்குள் கண்களை இறுக மூடியப்படி தூங்கியிருந்தாள் . ஓடிப்போய் அவள் காலை பிடித்தப்படி கனநேரமாய் அழுதேன் . என் பதவிபட்டமெல்லாம் மறந்து நிலத்தில் அப்படியே வெகுநேரமாய் உட்கார்ந்திருந்தேன் .
” என் தாயின் இறுதிமூச்சு விட முன்பாவது அருகில் இருக்க ஆசைப்பட்டேன். நீ போன் பண்ணியிருக்க கூடாதுதா “என சுஸ்மியுடன் வேண்டுமென்றே சண்டை பிடித்தேன் .
“உங்களுக்கு இரண்டாவது முறை போன் பண்ணவும் நீங்க தான் கட் பண்ணிட்டீங்க” என்றுவிட்டு விம்மினாள் .
போன உயிரை அவளால் பிடித்து வைக்கதான் முடியுமா ஆனாலும் சுஸ்மியுடன் பேசாமல் மௌமாக இருந்தேன் . அம்மா இறந்து இன்றோடு நான்கு நாளாகிறது . சுஸ்மியுடன் பேசும்படி மாமா எத்தனை தடவை சொல்லிட்டு போனாலும் கட்டிலில் சாய்ந்தபடி பேசாமல் இருக்கிறேன் . சுஸ்மி என்னை பார்த்தப்படி ” என்னங்க ஒரு விஷயம் சொல்லனும்” என்றாள் . மௌனமாக இருந்தேன் . கட்டிலில் மறுகரையில் மெதுவாக அமர்ந்தாள்.
பின் மீண்டும் “என்னங்க…” என அவள் பேச , “பேசாம இங்கிருந்து போடி…” என கர்ஜித்தேன் . கட்டிலில் இருந்தப்படி மேசை மேலிருந்த பொட்களை கீழே வீசி எறிதேன்.
அவள் அழுதுக்கொண்டே போய் விட்டாள். வாழ்க்கையில் எத்தனையோ எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படதான் செய்யும். அதனால் எதற்கும் தைரியமாக எதிர்கொள்ள வேணும். என் தாயின் இறப்பு இயற்கையானது . அதனால் சுஸ்மித்தாவுடன் முரண்படுவது முறையல்ல . ஆகவே அவளை சமாதானப்படுத்தினேன்.
அடுத்த நாள் காலைவேளை என் லீவு முடிந்த காரணத்தினால் வேலைக்கு போக ஆயத்தமாகிறேன். சுவரில் மாட்டியிருந்த என் அம்மாவின் படத்தை வெகுநேரமாய் பார்த்துக் கொண்டிருந்தேன் . நிழலாய் ஓர் உருவம் என் பின்னே நின்றது . திரும்பி பார்த்தேன் . அங்கே காலையுணவு பொதியுடன் நின்றிருந்தாள் சுஸ்மித்தா .
” நீ என்னமோ சொல்லனும் சொன்ன…” என அவளிடமிருந்து அந்த பொதியை வாங்கிக் கொண்டே கேட்க , அவள் வெட்கிச் சிரித்தப்படி தலை குனிந்தாள் . அவள் தாடையை உயர்த்தி கண்களால் என்னவென கேட்டேன்.
“அம்மா வர போறாங்க… ” என்றுவிட்டு தன் வயிற்றை மெதுவாக தடவினாள் .
என்னால் அந்த சந்தோஷத்தை விபரிக்க இயலவில்லை . ஒரு துள்ளலுடன் அவளை அப்படியே தூக்கிக் கொள்ள “விடுங்க விழுந்துட போறன்” என்றாள்.
மெதுவாக அவளை கீழே இறக்கி அவள் நெற்றியை முத்தமிட மீண்டும் திலீபன் சேரிடமிருந்து போன் வந்தது.
“இதோ வந்துக் கொண்டிருக்கிறேன் சேர் ” என்றுவிட்டு பையை தூக்கி தோளில் போட்டேன்.
“எதுக்கும் மனசை போட்டு குழப்பிக்காம தைரியமா போயிட்டு வாங்க “என என் தலை முடியை ஒருபக்கமாக படியவாரி விட்டாளவள் . அவளை பிரிய மனமின்றி கடமையுணர்வுடன் வேலைக்கு விரைகிறேன்.


