முகநூல், யூ – ட்யூப் மற்றும் வாட்சப்பில் உலா வரும் மருத்துவக் குறிப்புகள் ஏராளம். காதால் கேட்டது, மனதுக்குத் தோன்றியது என எல்லாவற்றையும் ஆரோக்கிய குறிப்புகள் ஆக்கி சமூக வலைதளங்களில் பலர் உலவ விடுகின்றனர். இலவசமாகக் கிடைக்கின்றதே என இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தினால் உடலுக்கு ஏற்படும் கேடுகளுக்கு அளவில்லை. ஆனால் ஒரு தலைசிறந்த மருத்துவரே மருத்துவக் குறிப்புகள் வழங்கினால் எப்படி இருக்கும்? அதிலும் 33 வருட மருத்துவ ஆசிரியராக அனுபவம் உள்ள, 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் ஏழு மருத்துவ நூல்களை எழுதியுள்ள பொது மருத்துவ நிபுணர் டாக்டர் தா. ரவிக்குமார் எம்.டி அவர்கள் எழுதிய மகத்தான வாழ்வுக்கு மருத்துவக் குறிப்புகள், ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அருமையான நூல்.
படிக்கும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பு. கண்கள், காதுகள், மூக்கு, பாதம், கழுத்து, கல்லீரல், மண்ணீரல், சிறுகுடல், நுரையீரல், நாக்கு, நகம், உதடுகள் போன்ற உடல் உறுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கான காரணங்கள் என்ன என்பதைப் பற்றி விளக்கிச் சொல்வதோடு அவை வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்ற குறிப்புகளையும் கொண்டுள்ளது.
தெளிவான, நகைச்சுவையான நடையில் எழுதப்பட்டிருப்பதால் வாசிக்க மிகவும் இலகுவாக இருக்கிறது. இந்த நூலை வாசித்து முடித்ததும் நமது உடல் உறுப்புகளை எப்படி பத்திரமாக பார்த்துக் கொள்ளலாம் என்பதை பற்றிய ஒரு தெளிவான பார்வை கிடைக்கும்.
சளி, கொரோனா மட்டுமல்ல, தொழு நோய் கூட மூக்கின் வழியாகத்தான் பரவும். நாக்கு நீல நிறத்தில் இருந்தால் அது இதய மற்றும் நுரையீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். தடித்த நாக்கு தைராய்டு குறைபாட்டின் அறிகுறி. துடிக்கும் நாக்கு நரம்புக் கோளாறின் அறிகுறி என்கிற அரிய தகவல்களைக் கொண்டுள்ளது இந்நூல்.
பாத எரிச்சல் ஏன் ஏற்படுகிறது? விட்டமின் பி12 குறைபாடு, ஃபோலேட் குறைபாடு, மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமானால் நரம்பு பாதிக்கப்பட்டு பாத எரிச்சல் ஏற்படும் என்பது போன்ற தெரியாத விஷயங்களையும் பற்றி கூறுகிறது.
கைகளுக்கு மலிவான நகச்சாயம் பூசுவதால் ஏற்படும் விளைவுகளை சொல்லிவிட்டு, மருதாணி இலைகளை அரைத்து இயற்கையாக நகங்களை அழகு படுத்தலாம். அரைக்கும் போது சில சொட்டு நீலகிரி தைலம் சேர்த்தால் சளி பிடிக்காது என்பது போன்று டிப்ஸ்களும் இதில் உண்டு.
கணினி மற்றும் லேப்டாப் முன்பு பணி செய்பவர்கள் எப்படி அமர வேண்டும்? கீ போர்டு பயன்படுத்தும்போது கைகளின் நிலை, (பொசிஷன்), வாகனம் ஓட்டும் போது இருக்க வேண்டிய உடல் தோரணை, குழந்தைகளின் புத்தகப்பை எவ்வளவு எடை இருக்க வேண்டும்? அதை முதுகில் எப்படி மாட்ட வேண்டும் என்பது போன்ற நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற பலவிதமான குறிப்புகளை இந்த நூல் கொண்டுள்ளது.
நம் நாட்டில் பாம்புக் கடியால் மரணிப்பவர் பலர். பாம்பு கடித்தால் கடிபட்ட இடத்திலிருந்து விஷம் பரவாமல் இருக்க, கடித்த இடத்தின் மேலே ஒரு துணியில் கட்டுப் போடலாம். தளர்வான நிலையில் கட்டு அமைய வேண்டும். இல்லையென்றால் அது ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும். பல்லில் எந்த பாதிப்பும் இல்லாமல் வலி எற்பட்டால் அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். பற்களில் ஏற்படும் கிருமித் தொற்று ரத்த குழாய் வழியே பரவி மாரடைப்பு ஏற்படுத்தலாம் போன்ற பகீர் தகவல்களையும் பற்றி சொல்கிறது. மொத்தத்தில் இந்த நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான நூல் என்பதில் சந்தேகமில்லை.
————————————————————–
மகத்தான வாழ்வுக்கு மருத்துவக் குறிப்புகள்
ரவிக்குமார்
புஸ்தகா டிஜிட்டல் மீடியா
விலை – 100
————————————————————–


