இன்றோடு பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்னமும் அவருடைய புகழ் மங்கவில்லை. மாறாக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அவரைக் காண வருகிறார்கள். அவரின் கதையைக் கேட்டு பார்க்க வந்தவர்களில் பல பேர், அவரது பக்தர்களாக திரும்புகிறார்கள்.
அவ்வளவு எதற்கு, கைப்பேசியே இல்லாத அவருக்கு முகநூலில் இருபதற்கும் மேலாக பக்கங்கள், ஆறு டுவிட்டர் அக்கவுண்ட்கள், இரண்டு இணையத்தளங்கள் என உள்ளன. தினமும் அதில் அப்டேட்கள் வந்தவண்ணமே இருக்கின்றன. சில மூலிகையைப் பொருட்களையும் நீங்கள் அங்கு வாங்கலாம். உலகில் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் உங்களால் இலகுவாகப் பணம் கட்டி ‘சில பல’ மாதங்கள் காத்திருந்து அவர் ஆசிர்வதித்த ருத்ராட்சங்களை பெற்றுக்கொள்ளலாம்.
அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபிகள் பலரின் முகப்பு புகைப்படங்களாக இருக்கின்றன. பல கோவில்களில் அவருடைய திருஉருவம் லெமினேட் செய்து விற்கப்படுகின்றன. அதை வாங்க மட்டுமே அந்தக் கோவிலுக்கு செல்கின்றவர்களும் உண்டு.
இதுவெல்லாம் எப்போது ஆரம்பமானது? எந்தவொரு இயக்கமும் சாராமல் தனியொரு மனிதன் மீது மக்களுக்கு இவ்வளவு பக்தி வருவதற்கு என்ன காரணம் என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருநாள் உலக அமைதிக்காக ஒற்றைக் குரலொன்று ஓங்காரமாய் ஒலித்தது. யாருமே அதனைப் பொருட்படுத்தவில்லை. இவனெல்லாம் சொல்லியா உலகம் கேட்டுவிட போகிறது என்கிற நக்கல்களுக்கு பஞ்சமில்லை. ஒரு நாள் கடந்து ஒரு வாரமாகியது. யாருமே கண்டுகொள்ளவில்லை. அந்த மனிதர் அமர்ந்திருந்த கோவில் வாசலில் அவரையும் ஒரு பிச்சைக்காரன் போலவே கடந்து சென்றார்கள் பக்தர்கள்.
அப்போதுதான் அந்த அசரீரி ஒலித்தது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. கொஞ்ச நேரம் கண்களை மூடியவர்; சட்டென கத்தினார். “உலக அமைதிக்காக … இந்த உலகின் அமைதியை வேண்டி… உலகில் எல்லோரும் நிம்மதியாய் இருக்க… என் பிரார்த்தனையை முன் வைத்து என்னுடைய வலது கையை மேலே தூக்குகிறேன்… என் வேண்டுதல் பலிக்காமல் ஒருபோதும் இந்த வலது கரம் பூமியைப் பார்க்காது….”. கத்தி முடிக்கவும் சம்பந்தமே இல்லாமல் அங்கொரு மின்னலும் தோன்றி பலரையும் ஈர்த்தது.
அன்று தொடங்கியது அவரது தவம். சில நாட்களிலேயே அவருக்கென ஒரு கூட்டம் கூடியது. உண்மையாகவே கையை மேலேதான் வைத்திருக்கிறாரா என்கிற ஆராய்ச்சியில் பலரும் தோல்வி கண்டனர். அவரை எப்படி அழைப்பது என எல்லோருக்குமே குழப்பம். ஒருசேர அவரை ‘கைத்தூக்கி பாபா’ என்று அழைத்து மகிழ்ந்தார்கள் பக்தர்கள்.
எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றார். அதுவும் தன் கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் ஒருவன் தன்னைவிட அதிகமான பக்தர்களையும் சமூக வலைத்தள கவனத்தையும் வைத்திருந்தால் சும்மா விடுவாரா என்ன?
ஆட்கள் யாரும் வருவதற்கு முன்னமே ஒருநாள் ஆண்டவர் தோன்றினார் அவர் முன்னால். வந்த காரணத்தை மறந்து; வழக்கம் போல “பக்தா…! உன் தவத்திற்கு மகிழ்ந்தேன். என்ன வரவேண்டும் கேள்” என்றார். நிலமையைப் புரிந்துகொண்டவர், சட்டென நாக்கைக் கடித்துக்கொண்டு பக்தனின் வரத்திற்கு காத்திருந்தார்.
வந்திருப்பது கடவுள்தான் என கைத்தூக்கி பாபாவும் அறிந்து கொண்டார். ஆழ்ந்த மூச்சினை இழுத்து விட்டவர். கடவுளின் கண்களை ஊடுருவிப் பார்த்தார். உடனே தனக்கான வரத்தைக் கேட்கலானார்
“கடவுளே… ஏதோ உணர்ச்சிவசப்பட்டு கையை தூக்கிட்டேன். அது அப்படியே ‘லாக்’ ஆகிடுச்சி… தயவு செய்து இந்தக் கையை மட்டும் இறக்கி கொடுத்திடு… அது போதுமெனக்கு!!!”


