VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: போராளி
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > போராளி
சிறுகதைகள்

போராளி

அப்பு சிவா
Last updated: May 26, 2026 12:47 pm
20 Views
Share
11 Min Read
போராளி
போராளி
SHARE

காஃபிதூள் குறைவாக இருப்பதை அப்போதுதான் கவனித்தாள் கவிதா. கொஞ்சம் ஸ்ட்ராங்க் கம்மியாக இருந்தாலும், பாபுவுக்கு தொண்டையில் இறங்காது. கோபம் கோபமாக வந்தது. ‘நேற்று அவர்தான் காஃபி போட்டார். இதை சொல்லியிருக்கலாம். அதே குறையாத  அசட்டை’ என்று அவள் மனதில் தோன்றியது.  தனக்கு காஃபி கலக்காமல் அவனுக்கு மட்டும் கலந்து எடுத்து வெளியே வந்தாள். வாக்கிங் போய்வந்து அப்படியே ஹாலில் உட்கார்ந்து,  லேப்டாப்பில் மூழ்கிய பாபு  இன்னமும் எழாமல் பிஸியாகவே இருந்தான்.            

“இந்தாங்க…”            

             அவள் கொடுத்ததை நிமிராமல் வாங்கினான். ஞாயிறு காலை நேரத்தில் அவளோடு சேர்ந்துதான் குடிப்பான். அவள் வெறுமனே இருப்பதை கூட கவனிக்காமல் அப்படி ஒரு வேலையா என எட்டிப்பார்த்தாள். அவன் ஃபேஸ்புக்கில் தீவிரமாக போஸ்ட் போட்டுக்கொண்டிருப்பதை பார்த்ததும் கொஞ்சமாய் இருந்த கோபம் இன்னமும் தலைக்கேறியது. அங்கே பெண் விடுதலை பற்றி ஏதோ  தீவிரமாக பதிவு போட்டுக்கொண்டிருந்தான் பாபு.

 “என்ன பண்ணிட்டு இருக்கீங்க”

 “முக்கியமான போஸ்ட், கொஞ்சம் இரு… சொல்றேன்”

 நிமிராமல் சொன்னவனை கோபமாக பார்த்து கேட்டாள் கவிதா.

 “அப்படி என்ன முக்கியமான போஸ்ட்?”

“பெண்கள் உடை பற்றி, காலேஜ்க்கு இப்படிதான் வரணும்னு, இன்னமும் சில கோயில்லலாம் சுடிதார் போடக்கூடாதுன்னு சொல்றதைப்பத்தி, விமர்சனம். அதாவது… விடு உனக்கு இது கொஞ்சம் புரியாது” என்றவனை பார்க்க பார்க்க டென்ஷன் எகிறியது அவள் மனதில்.

 “ஊருக்கு கவலைப்படறதை கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு ஆகறதை பேசலாமா?”

              அவன் நிமிரவேயில்லை. கேட்கமாட்டான். முழுதாக நினைத்ததை செய்துவிட்டுதான் அவள் சொல்வதையே கவனிப்பான். சட்டென்று அவன் தோளைத் தொட்டு தன் பக்கம் திருப்பினாள் கவிதா.

              கோபமாக நிமிர்ந்தான் பாபு.

 “இப்போ எதுக்கு என்னை இப்படி டிஸ்டர்ஃப் பண்ற? கிடைக்கறது ஒரே நாள். இப்போகூட எனக்கு விருப்பமானதை செய்யக்கூடாதா?”

 “ஆமாங்க, மத்த நாள் எல்லாம் நீங்க ஃபேஸ்புக் பக்கமே போறதேயில்லை. கவனிச்சேன்”

              சட்டென்று லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு அவள் பக்கம் திரும்பினான்.

 “சொல்லு… என்னதான் வேணும் உனக்கு?”

 “எனக்கு ஒண்ணும் வேணாம், இன்னிக்கு உங்க வீட்டுக்கு போகணும். ஞாபகம் இருக்கா இல்லியா?”

 “ஓ… அதுவா. அதுக்கு நான் என்ன செய்யப்போறேன். போலாம் சாயந்திரமா”

 “சும்மா நம்மளை விருந்துக்கு கூப்பிடலை சார், அங்கே செல்வியோட வாழ்க்கைப்பத்திப் பேசப்போறாங்க, தெரியுமா இல்லியா?”

 “இதோ பாரு கவிதா, கல்யாணம் வரைதான் சொந்தம் பந்தம் எல்லாம். இப்போ அவங்க தனிக் குடும்பம், நாம தனி குடும்பம். ஒரு மரியாதைக்கு கூப்பிட்டா போயிட்டு நடுநிலைமையா இருந்துட்டு சத்தமில்லாம வந்திடணும். புரியுதா?”

 “சார், அது ஒரு பொண்ணோட வாழ்க்கை பிரச்னை, உங்க கருத்தை சொல்லவேணாமா?”

 “அவ்ளோ கருத்து கந்தசாமியா நான் இருக்க முடியாது, எனக்குன்னு வேலை இருக்கு. தேவையில்லாத தலைவலியை எல்லாம் நான் இழுத்து போட்டுக்க முடியாது. புரியுதா?”

 “ஆனா சோஷியல் மீடியால அவ்ளோ அனல் பறக்குது?”

              அவன் உடனே எதும் சொல்லவில்லை. எழுந்தான். லேப்டாப்பை எடுத்து டேபிளில் வைத்தான். ரூம் போய், வாக்கிங் பேண்ட்டை கழட்டிவிட்டு லுங்கிக்கு மாறினான். செல்லுடன் வெளியே வந்தவன், அவள் முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்து சொன்னான்,

“டைம்பாஸ் போஸ்ட்லாம் வேற, நிஜ வாழ்க்கை வேற. ரெண்டையும் போட்டு குழப்பிக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டு பால்கனிக்கு போய்விட்டான். இனி அவன் பெண்ணியப் போராளியாக அவதாரம் எடுத்து, கனவில் ஒரு ஆபத்பாந்தவனாக மாறுவான். பாரதியின் பேரனாக வீர உருவம் எடுப்பான்.  பெரியாரின் தோள்மேல் கைபோடுவது போல டிபி வைப்பான். போஸ்ட்டுக்கு வரும் லைக்ஸ், கமெண்டுகளில் மூழ்குபவனை இப்போதைக்கு எழுப்ப முடியாது.

              இத்தனைக்கும் செல்வி, பாபுவின் சொந்த அக்கா. கவிதா பாபு திருமணம் ஆனபோதே செல்வி அவளது கணவனுடன் மனஸ்தாபம் என்று பாபுவின் வீட்டோடுதான் இருந்தாள். முதலில் திருமணத்திற்க்கு வந்திருப்பார்கள் என்றே கவிதா நினைத்தாள். நாளடைவில் இது அடிக்கடி நடக்கும் சண்டை எனவும் வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே கணவன் வீட்டில் அவள் இருப்பாள் எனவும் புரிந்துபோனது.

              பாபுவின் குடும்பம் கொஞ்சம் வசதியானதுதான். எனினும் ஆண் துணை எனில் பாபு மட்டுமே. அவனும் திருமணம் ஆன சில மாதங்களில் தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று முடிவெடுக்க, கவிதாவுக்கு அது பிடிக்கவேயில்லை. அங்கே அவன் அம்மாவை மட்டும் தனியே விட்டுவிட்டு இங்கே வந்து என்ன சாதிக்கப்போகிறோம் என பேசியும் பார்த்தாள். ஆனால் பிரைவஸி அது இது என சொல்லி அவள் வாயை அடைத்துவிட்டான் பாபு. கூடவே கவிதாவின் வீட்டிலும் பாபுவின் முடிவுக்கு சப்போர்ட் பண்ண, வேறு வழியின்றி, தன் மாமியாரின் கலங்கிய கண்களை மறக்கமுடியாமல் இங்கே வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

             முதலில் வாராவாரம் அம்மாவை போய் பார்த்துவிட்டு வந்தவன் அதன் பிறகு மாதாமாதம், இப்போது எல்லாம் ஏதேனும் விஷேசம் என்றால்தான் செல்கிறான். சொன்னாலும் கேட்பதில்லை என கவிதாவுக்கு வருத்தம் உண்டு. அவன் அம்மாவின் கண்ணீராலேயே தனக்கு இன்னமும் வயிற்றில் ஒரு புழு பூச்சி உருவாகவில்லை எனவும் பயம் உண்டு கவிதாவுக்கு.

              அடிப்படையில் பாபு நல்லவன்தான். எனினும் அவனுக்குள் ஒரு உலகத்தை உருவாக்கிக்கொண்டு அதிலேயே வாழ்ந்துவருவான். நிஜ உலகின் நல்லது கெட்டது எதுவும் தன்னை பாதிக்கக்கூடாது என்ற சுயநலம் உண்டு. அதனாலேயே அவன் மேல் கடுமையான கோபம் வந்தாலும், சமயத்தில் அவன் இன்னமும் குழந்தை மனதை விட்டு வெளியே வரவில்லை என கவிதாவுக்கும் தோன்றும்.

             தான் வேலைக்கு போகவேண்டும் என்று கவிதா சொன்னபோது, உறுதியாக மறுத்தான். தான் சம்பாதிக்கும்போது அவள் வேலைக்கு போகத்தேவையில்லை என்பது அவன் கருத்து. வேலைக்கு போவது வெறுமனே பணம் கருதி அல்ல, தனக்கும் ஒரு மரியாதை வேண்டும் என்று அவள் சொல்லும்போது கேலியாக சிரித்தபடி சொல்வான் “வீட்டை கவனிப்பதுதான் பெண்மையின் தத்துவம்”

              செல்வி கவிதாவிடம் அவ்வப்போது பேசுவாள். அவள் மனதை புரிந்துகொள்ளாதவர்களைப் பற்றி, வெறுமனே பணக்காரன் என்று பார்த்து கட்டிவைத்த தன் கணவனைப்பற்றி, அவளது மாமியார், கொழுந்தனார்களைப்பற்றி என்று முழுவதுமாக சோக கீதங்களாக இருக்கும். அவள் என்ன பேசப்போகிறாள், என்ன என்ன வார்த்தைகள் அடுத்து வரும் என மனப்பாடமாக சொல்லிவிடுவாள் கவிதா. எனினும், ஒவ்வொரு முறையும் அவள் சொல்வதை காது கொடுத்து கேட்பதாக, ஒரு நினைவை செல்வி மனதில் தோற்றுவிப்பதை கடமையாகக் கொண்டாள் கவிதா. வெறுமனே பேசுவதைக்கூட கேட்க ஆளில்லாத மன வெறுமை செல்வியை தாக்கிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் கவிதா.

              இப்போது வந்திருப்பது கொஞ்சம் கடுமையான பிரச்னைதான். ஆரம்பத்தில் நல்லவிதமாக நடந்துகொண்ட அவளது கணவன் ராஜேந்திரன், நாளடைவில் தன் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறான். வாரத்தில் பாதி நாள் குடி, வேலைக்கு சரியாக போகாமல் அடிக்கடி வேலையை விட்டுவிடுவது என இருந்த பணம் நகை என்று கரைத்துக்கொண்டே வந்திருக்கிறான். அவன் திருமணம் முன்பே அப்படித்தான் எனவும், சரியான செலவாளி எனவும் மிகவும் தாமதமாகத்தான் செல்வி வீட்டாருக்கு தெரிந்திருக்கிறது. எனினும் முடிந்தவரை அட்ஜஸ்ட் செய்துகொள்ளச் சொல்லி செல்விக்குதான் அறிவுரைகள் சொல்லிவருவார்கள். ஆண் என்றால் அப்படித்தான் என்பது அவர்களது வாதம்.

              திருமணம் முடிந்தவுடன் ராஜேந்திரனின் சொத்தை தனியே பிரித்து தனியாக அனுப்பி புண்ணியம் தேடிக்கொண்டார்கள் ராஜேந்திரனின் வீட்டார். தனிக்காட்டு ராஜாவாக வந்தவன் தன் சொத்தையும், பின் செல்வியின் நகைகளையும் வேட்டையாடி முடித்துவிட்டு, முழுவதுமாக வறுமையின் பிடியில் செல்வியை மாட்டிவிட்டுவிட்டதாக கேள்விபட்டு மனம் வருந்தினாள் கவிதா. பாபுவின் அம்மா அவ்வப்போது கொடுக்கும் பணத்தைக் கொண்டு தன் நான்கு வயது  மகளை சுமாரான பள்ளியில் சேர்த்து செல்வியும் எதோ வாழ்க்கையை நகர்த்தி வருகிறாள்.  நல்ல நிலையில் இருக்கும் பாபு அவளுக்கு உதவும் மன நிலையில் இல்லை என்பது புரிய, ஆதங்கமாக இருந்தது.

             முழுமையாக பணம் கரைந்த நிலையில் ராஜேந்திரனின் இன்னொரு முகமும் செல்விக்கு தெரிந்ததுதான் பிரச்னை. சில பெண்களின் தொடர்பு ராஜேந்திரனுக்கு உண்டென்றும் பணத்தின் பெரும்பகுதியை அவர்களுக்கே செலவளித்துதான் எல்லாவற்றையும் இழந்தான் என்பதையும் ஒரு பெண்ணால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? அதையும் சமாளித்து இருந்திருக்கிறாள் செல்வி. செலவுகளுக்கு அம்மாவையே சார்ந்திருக்க முடியாது என அருகில் இருந்த ஒரு பள்ளிக்கு டீச்சர் வேலைக்கு போயிருக்கிறாள். குறைவான சம்பளம் என்றாலும், நிறைவான வேலை என சொல்வாள் செல்வி.

               இரு நாட்களுக்குமுன்தான் விஸ்வரூபம் எடுத்தது. செலவுக்கு பணம் கேட்டிருக்கிறான் ராஜேந்திரன். இவள் பிடிவாதமாக மறுத்ததோடு இல்லாமல் அவனது பெண் தொடர்புகளை கண்டுபிடித்துவிட்டதாகவும், வெளியே சொல்லி அசிங்கப்படுத்துவேன் என்றும் சொல்லியிருக்கிறாள். ஏதோ நினைத்த அவன், சட்டென்று பேச்சை திருப்பி, பள்ளியின் பிரின்ஸிபாலுக்கும் செல்விக்கும் தொடர்பு என கதை கட்டி அதை செல்வியின் அம்மாவிடம் வந்து சொல்லி ‘ஓ’ வென அழுதிருக்கிறான். தான் செல்வியை விவாகரத்து பண்ண இருப்பதாகவும் அதற்கு செல்வியின் நடத்தையே காரணம் எனவும் கதைகட்டி பஞ்சாயத்து கோரியிருக்கிறான். அதன்படி  இன்று அங்கே போகவேண்டும்.

              வெளியே நடந்து எட்டிப்பார்த்தாள் கவிதா. அங்கே பால்கனியில் படுத்தபடி  தூங்கியிருந்தான் பாபு. அவன் காதில் ஹெட்போன் மாட்டியிருந்தது.

 ******

           “மனசார சொல்றேன், நான் அவளையும், என் பொண்ணையும் என் ரெண்டு கண்ணாதான் பாக்கறேன். அவங்களுக்காக்தான் ஓடி ஓடி உழைக்கிறேன். என் நேரம் சரியில்லாம சில நஷ்டம் வந்திருக்கு, அது எல்லாருக்கும் வரதுதானே, சமாளிச்சு வரதுக்குள்ள இவளுக்கு வேற துணை வேண்டியிருக்கு… நான் என்னபாவம் செய்தேன்” என்று ராஜேந்திரன் அழுத அழுகையை , அவனைப் பற்றி சரியாகத் தெரியாத முதல் தடவையாக கவனிப்பவர் யாராக இருந்தாலும் நம்பியே விடுவார்கள்.       

             பாபுவின் அம்மா, அவரது அண்ணன் முறையில் ஒருவர், அவருடன் ஊர்பெரியவர் ஒருவர் இருந்தார்கள். ராஜேந்திரனின் வீட்டில் இருந்து அவனது அம்மாவும் ஒரு அண்ணன் அண்ணியும் வந்திருந்தார்கள். செல்வி உள் அறையில் இருந்தாள். கவிதா போனவுடனே அவளின் தோளில் சாய்ந்துகொண்டு அழுது தீர்த்துவிட்டாள். எப்படியாவது ராஜேந்திரனின் பிடியில் இருந்து தப்பித்தால் போதும் என்பதாக இருந்தது அவளது அழுகை. அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அவளது குழந்தையை தூங்கவைத்துவிட்டு கவிதா ஹாலுக்கு வந்தாள். அங்கே ராஜேந்திரன் எல்லோரிடமும் மெதுவாக ரகசியம் சொல்வதுபோலவும், சமயங்களில் சத்தமாகவும் அழுகை கலந்தும் செல்வியின் மேல் வரிசையாக புகார்களை சொல்லிக்கொண்டே இருந்தான். பாபு எப்போதும் போல அவர்களை கவனிப்பதாக காட்டிக்கொண்டு தன் செல்லில் போஸ்ட் போடும் வேலையில் கவனமாக இருந்தான். அவன் கவலை அவனுக்கு. கவிதாவுக்குக் இப்படியே விடக்கூடாது என்று மனதில் ஒரு வேகம் கிளம்பியது.  தன்னிடம் செல்வி சொன்ன பல விஷயங்கள் இங்கே பலருக்கும் தெரியாது என்பதே ஒரு உறுத்தலாக இருந்தது.

 “நீங்க எதுவுமே பண்ணலியா?” என்று ஆரம்பித்தாள் செல்வி.            

             அவளின் குரலை கேட்டு நிமிர்ந்த பாபு, தன் செல்லை பாக்கட்டில் போட்டுக்கொண்டான். 

“நீ எதுவும் பேசாதே கவிதா, அதான் பெரியவங்க இருக்காங்க இல்ல” என்றார் பாபுவின் அம்மா. 

“சரி, பெரியவங்க பேசுங்க, அவரையே பேசவிட்டுட்டு இருந்தா எப்படி?” என்றாள் கவிதா.              

“சரி நான் பேசலை, எனக்கு நியாயம் சொல்லுங்க” என்றான் ராஜேந்திரன். 

“இதோ பாருப்பா, நடந்தது நடந்துபோச்சு, நீ உன் வேலை கஷ்டத்தை மறக்க குடிச்சிருக்க, அது ஒண்ணும் தப்பில்லை. ஆனா அதுக்காக பொண்டாட்டியை தனியா விடக்கூடாதில்ல, அதும் வேலைக்கு போற பொண்ணுண்ணா நாலு பேரு பழகுவாங்க, நீயும் கவனிக்காம இருக்கறதால மனசு கொஞ்சம் சபலப்படும்தான். நீதான் கவனமா இருக்கணும். இனியாவது கவனமா இருப்பியா…சொல்லு” என்றார் பாபுவின் மாமா. கொஞ்சம் வயதானவர்தான். ஆனால் உறுதியான குரலில் பேசினார். கவிதாவுக்கு கோபம் கோபமாக வந்தது. 

“முள்ளு மேல சேலை விழுந்தா சேதம் முள்ளுக்கில்ல, அது மனசில் இருக்கணும். ஊர்ல ஆம்பளைங்க செய்யாததா இவன் செஞ்சுட்டான்? அதுக்காக இப்படிப் பண்ணுவாங்களா?” என்றார் ராஜேந்திரனின் அம்மா. 

             இப்படியே அவர்கள் பேசிக்கொண்டே இருக்க, உள்ளே போகலாம் அறையின் வாசல் வரை போன கவிதாவின் காதில் உள் அறையில் இருந்து செல்வியின் விசும்பல் சத்தம்  கேட்க, உள்ளே போகாமல் அப்படியே திரும்பினாள். 

“இனிமே எங்க பொண்ணு நல்லவளா இருப்பா, நீயும் குடிக்காம நல்லவிதமா நடந்துக்கணும். சரின்னா அனுப்பி வைக்கிறோம்” என்றார் பாபுவின் அம்மா. 

             இடையே புகுந்தாள் கவிதா. 

“அப்போ தப்பு எல்லாம் செல்வி பேர்லதான், இல்லியா?” 

“என்ன சொல்ற நீ?” என்றார் பாபுவின் அம்மா. 

             கோபம் உச்சம் ஏற கத்த ஆரம்பித்தாள் கவிதா. 

“இந்த ஆள் ஊரெல்லாம் பொம்பளைங்க சகவாசம் வச்சுகிட்டு, அதை மறைக்க செல்வி பேர்ல பழி சொல்லுவான், அதையும் நம்பி அவங்களை நீங்க எல்லாம் சந்தேகப்படுவீங்களா?” 

“ஆம்பளைங்க அப்படி இப்படி இருப்பாங்க, செல்வி தப்பு பண்ணலைங்கிறயா, அப்புறம் ஏன் வேலைக்கு போகாதன்னு சொன்னா பிடிவாதமா போறா?” ராஜேந்திரனின் அம்மா. 

“அலோ…. நீங்களும் ஒரு பொண்ணுதானே, அரிசிக்கும் கஞ்சிக்கும் காலமெல்லாம் அம்மாவையோ யாரையோ எதிர்பார்க்கணுமா, அவங்க ஒரு வேலைக்கு போனா உடனே தப்பா பாப்பீங்களா… இந்த பேமானி செய்ற தப்பை எல்லாம் மறைக்க அந்த புண்ணியவதி மேல பழி போடுவீங்களா? என்று கத்த ஆரம்பித்தாள் கவிதா. 

“ஏய் யாரை பேமானிங்கற… பாத்து பேசு… ஒரு வேளை நீயும் அப்படித்தானோ” என்று ராஜேந்திரன் சொல்ல, எங்கிருந்துதான் ஆங்காரம் வந்ததோ….. 

“என்னடா சொன்ன…அயோக்கிய நாயே… ஒரு பொண்ணு தப்பு செய்யுதுன்னா அது உங்களாலதாண்டா… பரதேசி உன்னை என்ன செய்றேன் பாரு…” என்று கத்தியவாறு அவன் சட்டையை பிடித்து இழுத்து ஓங்கி ஒரு அறைவிட்டாள் கவிதா. 

             அங்கிருந்த எல்லோரும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்க, உள் அறையில் இருந்து வேகமாக வந்த செல்வி, கவிதாவைப்பார்த்து கேட்டாள்.

“என்ன தைரியம் இருந்தா ஒரு ஆம்பளைய கை நீட்டி அடிப்ப… என் புருஷனை அடிக்க நீ யாரு?” 

             பாபு ஃபேஸ்புக்கில் போஸ்ட் போடும் வேலையில் மும்முரமாக இருந்தான். 

PrevPreviousசர்வம் மாயா மற்றும் இத்திரி நேரம்
Nextஅதர்ப்பட யாத்தல் – முனைவர் சௌ. வீரலெக்ஷ்மிNext

You Might Also Like

நந்தனின் நாலு கட்டு வீடு
தர்மம்
ஓடுகாலன்
ஓ.கே. கண்மணி
பிக்கிள்பால் விளையாட்டும் ஆறாத விரிசலும்
TAGGED:Short Storiesசிறுகதைகள்
Previous Article சர்வம் மாயா மற்றும் இத்திரி நேரம்
Next Article அதர்ப்பட யாத்தல் – முனைவர் சௌ. வீரலெக்ஷ்மி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?