கோடாரியை கீழே போட்டு விட்டு நெற்றி வியர்வையை வழித்து விட்டான் வாசன். கீழே நாவல் , அயினி, வாதுமை, அரச மரங்கள் அலைந்து விழுந்து கிடந்தன..
ஏதோ ஒரு மரத்திலிருந்து விழுந்த அணில் கூடு கலைந்து கிடந்தது. உள்ளிருந்து
மெலிதான அணில் குஞ்சு ஒன்றின் சத்தம் கேட்டு கொண்டிருந்தது.
தாய் அணிலோ , சரிந்து நின்ற வேப்பமரத்திலிருந்து சத்தமிட்டது.
கலைந்து கிடந்த கூட்டை எடுத்து வேப்பமரத்தில் கொண்டு வைத்தான் வாசன்.
பின் தாய் அணில் வருகிறதா..? என நோட்டமிட்டபடி நடந்தான்.
வாதுமை மரம் விழுந்த இடம் நோக்கி நகர்ந்தான்.
மரத்தை குடைந்து உள்ளே தங்கியிருந்த மரங் கொத்தி குடும்பம் ஒன்று பக்கத்தில் நின்ற கொடுக்காப்புளி மரத்தில் இருந்து கலவரமாகி கத்திக் கொண்டிருந்தது.
ஒரு பக்கமாக வெட்டிப்போட்ட மரங்களை இரண்டாக வகுந்து கொண்டிருந்தார்கள் தொழிலாளர்கள். பக்கத்தில் நின்று மேற்பார்வை பார்த்து கொண்டிருந்த மாணிக்கத்தை பார்த்தான்.
“மாணிக்கம் சாயந்திரம் லாரியில எல்லாத்தையும் ஏற்றி அனுப்பிடணும்.
மரங்களை அடுக்கி தார்ப்பாய் போட்டு மூடிடுங்க.”
அதிகாலையிலிருந்து, மதியத்திற்குள் ஒன்பது மரங்களை சாய்த்திருந்தார்கள். மரங்கள் துண்டுகளாக்கப் பட்டு லாரிகளில் ஏற காத்திருந்தன.
முதலாளி கிட்டே அடுத்த மாச சம்பளத்தையும் சேர்த்து கேட்கணும்.
“வசுந்தராவுக்கு பிரசவ வலி எப்போ வரப்போகுதோ தெரியல..,மருத்துவ செலவுக்கு உதவும். ” மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
வசுந்தரா மேடான வயிற்றை தூக்கியபடி மெல்ல அடுக்களைக்குள் நுழைந்தாள்.
குழந்தை வந்தனாவின் டிபன்பாக்ஸில் உணவை அடைத்துக் கொண்டாள். லஞ்ச் பேகில் வைத்து, தனது தண்ணீர் பாட்டிலை எடுத்தபடி நடந்தாள்.
வெளியே வரும் போதே வெயில் வியர்வை ஊற்றை பெருக்கி விட்டது. வீங்கிய பாதம் வேறு வலித்தது. மெல்ல நடக்கலானாள்..
எப்படியோ குழந்தை வந்தனாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வரும்போது மனம் லேசாகி இருந்தது உண்மை.
நிறைமாத வயிறு மட்டும் கனத்துக் கிடந்தது.
“ச்சே என்ன வெயில். குடையாவது எடுத்து வந்திருக்கலாம்.”
நாக்கும் வறண்டு போய் விட்டது வெயிலுக்கு ஒதுங்க ஒரு இடமும் இல்லையா..,?
கண்களை மேய விட்டாள்.
அதோ.., அங்கே ஒரு சோலை …. கொஞ்சம். ஓய்வு எடுத்து கிளம்ப வேண்டியது தான். பூங்காவை பார்த்ததும் எட்டி நடை போட்டாள்.
வசுந்தரா பூங்காவுக்குள், நுழையும்போது கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.
நாக்கும் உலர்ந்து போயிற்று. அதோடு லேசான இடுப்பு வலியும் சேர்ந்தது . பக்கத்தில் எங்காவது உட்கார்ந்தால் தேவலாம் போல இருந்தது.
வேகமாக நடந்து பூங்காவின் உள் பகுதியில் போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சை நோக்கி நடந்தாள்.
வலி அதிகமாக குப்பென வியர்த்தது.
வயிற்றில் வலி வெட்டி இழுத்தது..
“ஆ.., அம்மா” அலறியபடி மயங்கி சரிய.., பூங்காவில் நின்றவர்கள் ஓடி வந்தனா். அவளை நோக்கி..,
கைப்பேசி அழைக்க.., எடுத்த வாசன் அதிர்ந்தான்.
“மாணிக்கம் நீ எல்லாத்தையும் கவனிச்சுக்கோ.. நான் வசுந்தராவை பார்க்க போறேன்.” வேறு ஏதும் பேசாமல் வண்டியை எடுத்தான்.
அவசரமாக மருத்துவமனைக்குள் நுழைந்தவனிடம்.. அங்கே நின்றிருந்த பெண் ஒருத்தி ஓடி வந்தாள்.
“அந்த பொண்ணு பூங்கா வாசலிலே மயக்கம் போட்டு விழுந்திடிச்சி. இங்கே மட்டும் வராம ஆள் அரவமில்லாத ரோட்டில விழுந்திருந்தா… அடிக்கிற வெயிலுக்கு என்னவோ ஆகியிருப்பா…
எந்த புண்ணியவான் நட்ட மரங்களோ.., அந்த வெயிலிலேயும்.., காற்றையும், குளிர்ச்சியையும் தந்திட்டு இருக்கு.
வெயிலோட அருமை நிழலிலே தான் தெரியும்பாங்க. அவங்களை.., ஆசுவாசப்படுத்தி உங்க நம்பரை கேட்டு தகவல் சொன்னோம்… உடனே.., ஆம்புலன்ஸை வர சொல்லி இங்கே சேர்த்தோம். இன்னும் பத்து நிமிசத்திலே
குழந்தை பிறந்திரும்ன்னு டாக்டர் சொன்னாங்க..,” என்ற பெண்ணை பார்த்து கையெடுத்து கும்பிட்டான் வாசன்.
“அந்த பொண்ணோட வந்தவங்க யாருங்க ..? ஆண் குழந்தை பிறந்திருக்கு.” உள்ளே இருந்து குரல் வர.., பாய்ந்து உள்ளே ஓடினான்.
நர்ஸ் வந்து கையில் தந்த குழந்தையை பார்க்கும் போது கைகள் நடுங்கியது வாசனுக்கு. மரங்கள் வெட்டி, வெட்டி.., காய்ப்பேறிய கைகளைப் பார்த்தான்..
“குழந்தைக்கு உறுத்தக்கூடாதே” தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து குழந்தையை வாங்கினான்.
சில நாட்கள் கழித்து.., வசுந்தராவோடும்,குழந்தையோடும் தன் வீடு நோக்கி
பயணிக்கையில் திரும்பி பூங்காவை பார்த்தான்.
பாலையிலும் ஒரு சோலை போல..பசுமையாய் அந்த பூஞ்சோலை சிரித்தது.
அந்த சாலையில், நடந்தவர்கள் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்கள். குழந்தைகள்
விளையாடி கொண்டிருந்தார்கள். சிறு குழந்தைகள் நடைபயில.., சில பேர் உற்சாகமாய் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார்கள். அங்கே ஒரு சின்ன உலகமே இயங்கி கொண்டிருந்தது.
“அட…,நான் தான் இதுவரை எத்தனை மரங்களை முறித்து முடமாக்கி இருப்பேன். இந்த மர நிழல் தான் நேற்று என் வசுந்தராவை காப்பாற்றி இருக்கு. எத்தனை பெரிய தப்பு பண்ணிருக்கேன். இனி என் வாழ்க்கை முழுக்க, நான் செய்த தவறுக்கு..,பரிகாரமாக புது மரங்களை நடவு செய்து..,
இந்த ஊரையே பூங்காவாக்க வேணும்.” தீர்மானமாய் முடிவெடுத்தவன்… தன் கையில் சிரித்த தன் தளிரைப் பார்த்து முறுவலித்தான்…


