செல்லச் சிணுங்கி…
- இரா. தங்கப்பாண்டியன்
அலை பாயும் கண்கள் உனது.
அது பாச வலை வீசும்…
நேச இழை பேணும்…
குறும்புகளின் ராணி நீ…
தெனாவெட்டு திமிருக்காரியும் நீ…
அது எப்படி
பாட்டிகளோடும் பசித்தவரோடும்
சிநேகிதம் காட்டும் உன்னால்
தோழிகளோடும்
லூட்டியடிக்க முடிகிறது…?
துருதுருவென திரிந்தாலும்
சோம்பல் போர்த்திக் கொண்ட
மங்குனியும் நீதான்….
ஆனாலும்
ஆங்கார ரூபிணியாய்
கோபங்காட்டும் மாகாளி.
அடிக்கடி நீ சிணுங்கும்
செல்லச் சிணுங்கியும் நீதான்.
இப்படி எல்லாமும்
கொண்டவளாயிருந்தாலும்
மனதுக்குள் ஏதுமில்லா
வெகுளி நீ…
உப்பின் எளிமையும்
வைரத்தின் உறுதியும்
உன் அடையாளம்.
நடந்து போகும் பாதையெல்லாம்
நட்பை விதைத்து வை.
அதிலிருந்து ஆயிரமாயிரமாய்
அன்பு மலர்கள் பூக்கட்டும்.
***

