01.
சீறும் போர் விமானங்கள்
கற்றுக்கொண்டன பறவைகள்
திசைத்தப்பிப் பறக்க
02
படைத்தளபதி பெருமைப் பேச்சு
வீரம் விளைந்த மண்
மருத்துவமனை நிறைந்தது
03
அமைதி நாள்
ஆயுத தொழிற்சாலை ஊழியர்களுக்கோ
முழு நாள் வேலை
04.
மலர் தோட்டம்
ஓடி ஒளியும் குழந்தைகள்
தொலைவில் சைரன்
05
போர் வெற்றி விழா
பதக்கம் பெற யாருமில்லை
முன் வரிசையில் கைம்பெண்கள்
06
போரரசரின் அமைதி உரை
பின்னால் பதாகையில் தொங்குகிறது
எந்திரத் துப்பாக்கி ஏந்தியக்கரம்
07
பதக்கம் பெருமிதம் தான்!
படைவீரன் வீடு திரும்பினான்
புகைப்படச் சட்டகமாக
08
அமைதி விருதே இலட்சியம்
யுத்தம் தொடங்கும் படைகள்
சமாதானத் தலைவன் கிரீடம்
09
மலர் ஏந்திய கரத்தோடு
குழந்தை பணிந்து நின்றது—
துப்பாக்கி முன்
அன்பாதவன்


