உண்மையான வளர்ச்சி எது?
– புவி
காலை எழுந்ததும் ராமசாமி செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தார். அருகில் அவரது மனைவி காபி தயாரித்துக் கொண்டிருந்தார். பள்ளிக்குச் செல்லும் பேரக்குழந்தைகள் உணவு மேசையில் அமர்ந்திருந்தனர்.
அன்றைய செய்தித்தாளில் சில செய்திகள் அவரது கவனத்தை ஈர்த்தன,பிரபலமான குடிநீர் நிறுவனத்தின் தண்ணீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான வேதிப்பொருள் கண்டறியப்பட்டுள்ளதாக ஒரு செய்தி.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்களின் தரத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் ஜப்பான் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளதாக மற்றொரு செய்தி. அடுத்த பக்கத்தில் இந்திய மசாலாப் பொடிகளில் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடைய எத்திலீன் ஆக்சைடு ஈயம் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கண்டறியப்பட்டதாக ஒரு செய்தி.
செய்தித்தாளை மடித்து வைத்த ராமசாமி சமையலறையை நோக்கிப் பார்த்தார்.
“நாம் குடிக்கிற தண்ணீர் பாதுகாப்பானதா? சமைக்கிற உணவில் கலப்படம் இல்லையா? குழந்தைகளுக்குக் கொடுக்கிற உணவு ஆரோக்கியமானதா?” என்று மனைவியிடம் கேட்டார்.
அதற்கு மனைவி, “இப்போதெல்லாம் எதை வாங்குவது? எதைச் சாப்பிடுவது என்றே தெரியவில்லை!!! கடையில் விற்கிற பொருட்களின் தரத்தைக்கூட நம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.
அந்த வார்த்தைகள் ராமசாமியின் மனதில் ஒரு பெரிய கேள்வியை எழுப்பின,அன்று மாலை அவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது இதே பிரச்சினையைப் பற்றிய விவாதம் எழுந்தது.
ஒருவர், அரசு ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்குகிறது, பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்துகிறது. அதுதானே மக்கள் நல ஆட்சி? என்றார்.
அதைக் கேட்ட ராமசாமி அமைதியாகப் பேசத் தொடங்கினார்.
“நிச்சயமாக ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்குவது அவசியமானது. ஆனால் அந்த உணவு தரமானதாக இருக்க வேண்டாமா? நியாயவிலைக் கடையில் அரிசி வழங்குவது மட்டும் அரசின் கடமை அல்ல. சந்தையில் விற்கப்படும் உணவுப் பொருட்களிலும் கலப்படம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
நாம் பணம் கொடுத்து வாங்கும் குடிநீர்கூட பாதுகாப்பாக இல்லையென்றால், சாதாரண மனிதன் யாரை நம்புவது?
ஏழை மக்களுக்கு இலவசமாக அரிசி கொடுப்பது ஒரு நலத்திட்டம். ஆனால் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்வது ஓர் அடிப்படைக் கடமை.”
அவரது நண்பர்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
ராமசாமி தொடர்ந்து பேசினார்.
“உணவு மட்டுமா? ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும். வீடற்றவர்களுக்கு வீடு கிடைக்க வேண்டும். நோய்வாய்ப்பட்டால் அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும்.
நம்முடைய தெருக்களில் கழிவுநீர் தேங்கக்கூடாது. மழைநீர் வடிகால் முறையாக இருக்க வேண்டும். குப்பைகள் தேங்காமல் அகற்றப்பட வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகாமல் சுற்றுப்புறம் சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
இவை எல்லாம் மக்களுக்குச் செய்யும் உதவிகள் அல்ல. மக்கள் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள்.
சிறிது நேரம் நிறுத்திவிட்டு அவர் மீண்டும் பேசினார்.
வெளிநாடுகளில் நமது உணவுப் பொருட்களின் தரம் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
அங்கே சோதனைகள் நடத்தப்பட்டு குறைபாடுகள் கண்டறியப்படுகின்றன, ஆனால் அதே பொருட்களை நமது நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது யாருடைய பொறுப்பு?
ஒரு பொருளின் தரம் குறித்து வெளிநாடு கேள்வி எழுப்பிய பிறகுதான் நாம் விழித்துக்கொள்ள வேண்டுமா?
நமது நாட்டின் மக்களுக்கு விற்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்கு வலுவான கண்காணிப்பு அமைப்புகள் ஏன் முன்கூட்டியே செயல்படக்கூடாது?
அவரது நண்பர் ஒருவர், அப்படியென்றால் உண்மையான வளர்ச்சி என்பது என்ன?” என்று கேட்டார்.
அதற்கு ராமசாமி சொன்ன பதில் மிகவும் எளிமையானது.
“ஒரு நாட்டில் எத்தனை பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன, எத்தனை புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன, எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்பதெல்லாம் வளர்ச்சியின் ஒரு பகுதிதான்.
ஆனால் அந்த நாட்டில் வாழும் கடைநிலை மனிதனுக்குத் தரமான உணவு கிடைக்கிறதா? பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறதா? நோய்வாய்ப்பட்டால் மருத்துவச் சிகிச்சை கிடைக்கிறதா? குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்கிறார்களா? மக்கள் வாழும் சுற்றுப்புறம் சுகாதாரமாக இருக்கிறதா? என்பதுதான் உண்மையான வளர்ச்சியின் அளவுகோல்.
அன்றைய உரையாடல் முடிந்தது.
ஆனால் ராமசாமி எழுப்பிய கேள்விகள் மட்டும் அங்கிருந்தவர்களின் மனதில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தன.
ஏனென்றால், ஒரு மனிதனுக்கு உயிர் வாழ உணவு தேவை. அந்த உணவு அவனது உயிரைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, அவனது ஆரோக்கியத்திற்கே அச்சுறுத்தலாக மாறிவிடக்கூடாது.
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது அரசின் சாதனை என்றால், மக்களின் உயிரையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது அரசின் அடிப்படைக் கடமை!

