ராமாயணம் – கற்பனையைத் திரையில் உயிர்ப்பித்த பிரம்மாண்டம்!
– புவி
ராமாயணம் என்றாலே சிறுவயதில் பாட்டி, தாத்தா சொல்லக் கேட்ட கதைகளும், புத்தகங்களில் படித்த சம்பவங்களும் நம் நினைவுக்கு வரும். அந்தக் கதைகளைக் கேட்கும்போதே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு உருவத்தைக் கற்பனையில் உருவாக்கி வைத்திருப்போம்.
அப்படிப்பட்ட ஒரு புராணக் கதையை, ஏற்கெனவே தெரிந்த கதைதானே என்று நினைத்து இந்தப் படத்தைக் கடந்து சென்றுவிட முடியாது. ஏனென்றால், நாம் சிறுவயதில் கற்பனையில் உருவாக்கி வைத்திருந்த ராமாயணத்தை, இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் துணையோடு நம் கண்முன்னே பிரம்மாண்டமாக உயிர்ப்பித்திருக்கிறார்கள்.
ராமராக நடித்த ரன்பீர் கபூர், வெறுமனே ராமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. தனது உடல்மொழி, முகபாவனைகள், நடிப்பு என அனைத்தின் மூலமும் ராமரையே நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார்.
சீதையாக வரும் சாய் பல்லவி, சிறுவயதிலிருந்தே அறிவுக்கூர்மையும் மனவலிமையும் கொண்ட பெண்ணாகத் திகழ்வதை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், திருமணத்திற்குப் பிறகு அவரது அமைதியான, பக்குவமான குணத்தையும் தனது இயல்பான நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
லட்சுமணனாக நடித்த ரவி துபே, தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாக ஏற்று நடித்திருக்கிறார்.
ராவணனாக வரும் யாஷ், தனது கம்பீரமான தோற்றத்தாலும் நடிப்பாலும் பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கிறார். சில காட்சிகளில் கதாநாயகனுக்கு இணையாக அல்ல, கதையின் மையப்புள்ளியாகவே நம் கவனத்தை ஈர்க்கிறார்.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் VFX தொழில்நுட்பம் என்பதில் சந்தேகமே இல்லை.
நாம் சிறுவயதில் கற்பனையில் உருவாக்கியிருந்த இந்திரனின் யானை, ஜடாயு, புஷ்பக விமானம் என ஒவ்வொன்றையும் திரையில் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ராவணன் – இந்திரன் மோதல் காட்சி, ராமர் அரக்கர்களுடனும் அரக்கியுடனும் மோதும் காட்சிகள் என ஒவ்வொன்றும் தொழில்நுட்பத்தின் வலிமையை உணர்த்துகின்றன.
ஆனால், இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் ஜடாயு – ராவணன் சண்டைக்காட்சி அமைந்திருக்கிறது. அந்தக் காட்சியின் பிரம்மாண்டமும், காட்சியமைப்பும் உண்மையிலேயே ஒரு திரை விருந்து!
குறிப்பாக, ஜடாயு மற்றும் புஷ்பக விமானத்தின் காட்சியமைப்புகள் நமது சிறுவயதுக் கற்பனைக்கு உருவம் கொடுப்பதுபோல் அமைந்திருக்கின்றன.
ராமாயணம் நமக்குப் புதிய கதை அல்ல. அதன் ஒவ்வொரு கதாபாத்திரமும், சம்பவங்களும் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவைதான். ஆனால், அந்தப் பழக்கப்பட்ட கதையைப் புதிய தலைமுறை தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் பிரம்மாண்டமாக அனுபவிக்க வைப்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் திரையரங்கில் கண்டு ரசிக்க வேண்டிய ஒரு பிரம்மாண்டமான திரைப்படம். குறிப்பாக, 3D திரையில் பார்ப்பது ஒரு தனி அனுபவமாக இருக்கும்.

