சின்ன சின்ன ஆசை (மலையாளம்)
பரிவை சே. குமார்
தமிழகத்தில் லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குநர்கள் இளம் தலைமுறையினரைக் கெடுக்கும் வண்ணம் படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது மலையாளத்தில் இளம் தலைமுறை இயக்குநர்கள் ரத்தமும் போதையும் இல்லாமல் அழகிய சிறுகதையாய் படத்தை எடுத்து முடித்து விடுகிறார்கள். மலையாளத்தில் வந்த மார்க்கோ என்னும் வன்முறை ரத்தக் களறி படத்துக்கு வந்த எதிர்ப்பின் காரணமாக அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்படாமல் கைவிட்டப்பட்டு விட்டது என்று என்னுடன் வேலை செய்யும் மலையாளி சொன்னார். அது உண்மைதான், முதல் பாகத்திற்கு வந்த எதிர்ப்பைத் தொடர்ந்து நாயகன் உன்னி முகுந்தன் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகிவிட்டார். அரசும் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பும் சாட்டிலைட் உரிமமும் கொடுக்கப்படவில்லை. ஆனால் இங்கோ நிலமை வேறு, நாம் அப்படிப்பட்ட படங்களின் நாயகர்களைத்தான் கொண்டாடுகிறோம், அவர்களின் பிறந்தாளன்று பால்கனியில் இருந்து கைகாட்டுவதைக் காண நாயாய் தெருவில் நிற்கிறோம். அரசியல் காரணங்களுக்காக அப்படிப்பட்ட படங்களுக்கு விருதுகள் கொடுக்கப்படும் அவலமும் நடக்கிறது. நான் வன்முறைப் படத்தைத்தான் எடுப்பேன் என அவர்களை பேசவும் வைக்கிறது; போதையை இறக்கி வைத்துக் கொண்டு அரசுக்கு எதிராக பேசவும் வைக்கிறது; நாளைய முதல்வர் என்ற கனவைச் சுமந்து இளைஞர்கள் மத்தியில் நஞ்சையும் விதைக்க வைக்கிறது.
இந்த ‘சின்ன சின்ன ஆசை’ படத்தை பாராட்டியோரை விட இதெல்லாம் ஒரு படமா என்று சொல்வோர் இங்கே அதிகம். முன்னத்தி ஏர் செல்லும் பாதையில் செல்லாமல் கோணச் சாலடிக்கும் மாட்டைப் பற்றிப் பேசுவோரே இங்கே அதிகம் என்பதால் அப்படியான விமர்சனம் வைத்தால் தன்னைப் பற்றி சிலராவது பேசுவார்கள் என்று நினைத்து எழுதியோர் மத்தியில் ஒரு சிலர் சொன்ன போதாமைகள் இதில் இருக்கத்தான் செய்கின்றது இல்லை என்று சொல்லவில்லை, அப்படியே இருந்தாலும் எந்த ஒரு வன்முறையும் இல்லாமல் நாவலைப் போல் விரியும் இந்தப் படம் என்னைப் போன்றோருக்கு மிகவும் பிடித்த படமாய் ஆனதில் வியப்பேதும் இல்லை. சுற்றுலா போன இடத்தில் கூட்டிச் சென்றவர் மத்தியில் யாரோ ஒரு முன்பின் தெரியாத மனிதன் கைபிடித்து அழைத்துப் போவதெல்லாம் அபத்தம் என்று சொன்னவர்கள் உண்டு, ஆம் அபத்தம்தான். அந்த சுற்றுலாக் குழுவில் அவளைப் பிடித்தவ்ர்கள் எத்தனை பேர்..? தான் பழகிய அந்த சில மணி நேரங்களில் அந்த மனிதரின் அன்பு ஆத்மார்த்தமானதாய் இருக்கும் போது அவள் அவனுடன் போவதில் என்ன தவறு..? சுற்றுலா கூட்டிவந்தவர்கள் ஏன் காவல்துறையிடம் போகவில்லை..?
மதுபாலாவின் குரல் படத்தைக் கெடுத்துவிட்டது என்றும் சொல்லியிருந்தார்கள். எனக்கு அந்தக் குரல் பிடித்திருந்தது. தன் ஆசைகள் எதுவும் நிறைவேறாத ஒரு பெண் தன் ஆசைகளைப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த நட்புடன் பேசுவதற்கு அந்தக் குரல் எந்த விதத்திலும் தடையாக இல்லை, இங்கே குரல் பிரச்சினை இல்லை மதுபாலாவுக்குப் பதிலாக வேறு யாரையாவது போட்டிருக்கலாமே என்ற எண்ணம்தான் காரணம். நான் கூட இவர்கள் எல்லாம் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது யாரோ ஒரு மலையாளி பேசியிருக்கலாம் அதனால் கூட அந்தக் குரல் ஒட்டாமல் போயிருக்கலாம் என நினைத்தேன்; பேசியதே மதுபாலாதான். நமக்கு குரல் எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை; கதை ஒட்டுகிறதா அது போதும் மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கு.
மதுபாலாவுக்கு நடிக்க வரவில்லை; பேச்சு சரியில்லை என்றெல்லாம் சொல்லியவர்களைவிட இந்திரன்ஸ்க்கு சுத்தமா நடிக்கத் தெரியலை என்று சொன்னவர்களைப் பார்த்துத்தான் சிரித்துக் கொண்டேன். மலையாளிகளிடம் கேட்டுப்பாருங்கள் இந்திரன்ஸ் எப்படிப்பட்ட நடிகர் என… இங்கே கத்தியை எடுத்து கொத்துக்கறி போடுபவனைத் தூக்கிக் கொண்டாடும் நாம் இந்திரன்ஸ்க்கு நடிக்கத் தெரியவில்லை என்பது எல்லாம் எப்படியான நகை முரண். அந்த மனிதர் நடித்த பழைய படங்களை ஒருமுறை பாருங்கள். தனது வித்தியாசமான உடம்பை வைத்துக் கொண்டு அவர் எப்படி நடித்திருக்கிறார் என்பது தெரியும்.
இன்னொன்னு அவர் மகளுக்கு எடுத்த சேலையை இந்தம்மா கட்டிக்குது என்ற பஞ்சாயத்து வேறு. அவர்கள் சேலைக் கடையில் சேலை எடுக்கும் காட்சியில் ஒண்ணு எடுத்தால் ஒண்ணு இலவசம் என்று எழுதியிருப்பதை பார்க்கத் தவறிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அவளுக்கு அந்தச் சேலையின் மீது விருப்பம் என்றதும் அதை எடுத்துக் கொள் என்று சொல்வார். ஒரு சேலை வாங்கும் செலவில் இரண்டு சேலைகள் எடுத்து வருவார்கள். அதைத்தான் அவள் கட்டியிருப்பார்கள். நாங்கள் எப்போதும் குறை மட்டுமே கண்டு கொண்டிருப்போம் என்போரை ஒன்றும் சொல்ல முடியாதுதான். எல்லாருக்கும் எல்லாம் பிடிக்கும் என்றும் சொல்ல முடியாதுதான்; எனக்குப் பிடிக்கும் என்பதால் உனக்கும் பிடிக்க வேண்டும் என்று கூட சொல்ல முடியாதுதான்; நான் ஆதரிக்கிறேன் என்பதால் நீயும் கண்ணை மூடி ஆதரிக்க வேண்டும், இல்லை என்றால் நீ செத்துப்போ என வீணாப்போன அரசியல்வாதிகள் பேசுவதைப் போல் பேசவும் முடியாதுதான். ஆனால் இங்கே எனக்குப் பிடித்ததை உனக்குப் பிடிக்கணும்; எனக்குப் பிடிக்காததை உனக்கும் பிடிக்கக் கூடாது என்பதுதான் பலரின் மனநிலை. சரி விடுங்க.
அந்த ஒருநாள் வாரணாசியை அத்தனை அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதுவும் இரவுக் காட்சிகளில் வாரணாசி அத்தனை அழகு. இந்திரன்ஸ் மற்றும் மதுபாலாவுக்கான காட்சிகள் அத்தனையும் அழகு, அற்புதம். அதுவும் அந்த இரவில் கங்கையில் படகில் படுத்துக் கொண்டு பேசும் காட்சி; ஆஹா எத்தனை அழகு, அற்புதம். வசனங்கள் அத்தனை சிறப்பு.
மனைவியின் அஸ்தியைக் கரைக்கும் வரும் விஷ்ணு அகஸ்த்யா, அது தட்டிவிடப்பட்ட உடைந்த பின் கோபம் கொள்வதும் மதுபாலா ஆறுதல் சொல்லும் போது அவரின் கையைப் பிடித்துக் கொண்டு தன் கதையைச் சொல்லும் இடம் வலி. அதேபோல் மதுபாலாவுக்கு நடனத்தில் ஆர்வம் இருந்தும் அதை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் கங்கைக் கரையில் நள்ளிரவில் இந்திரன்ஸ் மூலமாக நடனமாடக் கிடைக்கும் வாய்ப்பும் அவரின் நடனமும் கவிதை.
படத்தின் முடிவு வருத்தமே என்றாலும் இப்படித்தான் இருக்க வேண்டும் எனச் சொல்ல வைத்தது.
இந்திரன்ஸ், மதுபாலா தவிர, இந்திரன்ஸ் மகளாக நடித்த அபர்ணா, மதுபாலாவுக்கு சிறிது நேரம் உதவுபவராக வரும் ஜாபர், தம்பி ராமையா, காளிவெங்கட் உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.
படத்தின் இசை கோவிந்த் வசந்தா, அற்புதம் என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொள்ளலாம். அதேபோல் ஒளிப்பதிவு ஃபைஸ் சித்திக், வாரணாசியை இத்தனை அழகாய் காட்டியிருப்பதில் நம் மனதை வென்றிருக்கிறார்.
இந்தப் படத்தை இயக்கிய இருப்பவர் வர்ஷா வாசுதேவ், இது இவருக்கு முதல் படம். ஒரு அழகான கதையையும் அற்புதமான காட்சியமைப்புக்களையும் கொடுத்ததற்காக அவருக்கு வாழ்த்துகள். இந்த இளம் இயக்குநர் இன்னும் சாதிக்கட்டும்; ஒரு பெண் எடுத்த படத்தை நல்ல படமெனச் சொல்வதா என ஆண் ஆதிக்க எண்ணம் கொண்ட பலரின் பதிவுகளைப் பார்க்க நேர்ந்தது வருத்தமே. இவரைப் போன்ற இன்னும் பல பெண்கள் படங்களை இயக்க வேண்டும். அதுவும் சிறப்பான படங்களை இயக்க வேண்டும்.
படத்தின் கதை இதுதான் என்று சொல்வதைவிட, கதையைத் தெரிந்து கொள்ளாமல், படத்துக்கு வந்த நேர், எதிர் விமர்சனங்களை வாசிக்காமல் படத்தைப் பாருங்கள். அதுவும் எந்தவித இடையூறும் இல்லாமல் தனிமையில் பாருங்கள் ஒரு அழகிய நாவலை வாசித்த அனுபவத்தைப் பெறுவீர்கள்.
வாரணாசியும், மாதவன் மாஸூம் லீலாவும் அத்தனை அழகு.
சின்ன சின்ன ஆசை – அற்புதம்.


