மாதரசி
இராஜாராம், முகவை
மாதரசி சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனம் என்பதைவிட திறனாய்வு என்று சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் மொத்தம் 12 சிறுகதைகள் உள்ளன. அண்ணன் பரிவை சே குமார் அவர்களின் எழுத்தை முதலில் ருசி பார்க்கும் சபரி நான் என்பதில் எப்பொழுதும் மகிழ்வுதான்.
‘ஆதிரை’ – இதைச் சுருங்கச் சொல்வதென்றால், காலச் சூழல்களால் பிரிந்த இருவர், காலக்கொடுமையால் சந்திக்கும் தருணத்தில் இறுக்கம் தளர்ந்து வெடித்து அழும் ஆதிரைதான் இக்கதையின் ஆணிவேர். எல்லா நேரங்களிலும், எல்லோரும் எடுக்கும் முடிவு சரியாக அமையும் என்பது சந்தேகம்தான். ஆனால், அந்த முடிவுகளால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையெனில் அதற்கான தியாகத்தை செய்த நாம் மட்டும் உணர்ந்து கொண்டால் போதும், என்பதற்கு ‘உங்க கண் முன்னால சந்தோசமா வாழ்றேன்’னு சொல்லி வந்த ஆதிரையின் வார்த்தை, அவள் பெருங்குரலெடுத்து அழுதபோது மனதை ஏதோ செய்தது.
‘பொண்ணச்சி’ – வீட்டில் வளர்க்கும் மாட்டின் பெயர்தான் ‘பொண்ணச்சி’, இது ஒரு வித்தியாசமான கதை. கிராமங்களில் ஆடு, மாடு வளர்ப்பவர்கள் வீடுகளில் நடக்கும் நிகழ்வுதான் என்றாலும், இதை வாசிக்கும்போது எனக்கு நினைவுக்கு வந்த விடயம் பெருநகரங்களில் மட்டுமே நாம் கண்ட கருத்தரிப்பு மையம், இப்போது சிறு நகரங்களிலும் வந்து விட்டது. இந்தக் கொடுமையை முதலில் அனுபவித்தது கால்நடைகள்தான். மாடுகள் சினை பிடிப்பதற்காக சினை ஊசிகள் போடத்துவங்கிய நிலை, இது மனிதர்களையும் பீடிக்கும் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டோம். குழந்தை இல்லாதவர்களை (குறிப்பாக பெண்களை) என்னென்ன பேசுமோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் பொண்ணச்சியை வைத்து ஒரு சமூகப் பார்வையாகத்தான் எனக்குப் பட்டது.
‘தர்ஷினி’ – இது இரண்டு பெண்களின் கதை என்று சொல்லலாம். கண்ணன் அவ்வளவு உடைந்து அழுகக் காரணம் அவனுக்குச் சத்யாவும் அண்ணி மாதிரிதான். அண்ணனின் மனைவி இன்னொரு தாய்தான். என்ன… அவர்கள் வயதில் மூத்தவர்களும் இருக்கலாம், சிறியவர்களாக இருக்கலாம். இங்கே நாயகனின் அண்ணன் மனைவிதான் தர்ஷினி. அதைவிட அவள் அவனின் சொந்த அத்தை மகளும் கூட. அதனால் சிறு வயது முதலே நன்கறிந்த சுபாவம். இதில் தர்ஷினி, கண்ணனின் பிரச்சைனையை அணுகும் விதத்தையும், அதைச் சரிசெய்ய கையாளும் விதத்தையும் மிக அழகாக எழுத்தாண்டிருக்கிறார் ஆசிரியர்.
‘தாரணி’ – குடும்ப உறவுகளைப் பற்றிய கதைதான், இன்று நாம் பார்த்து வியக்கும், புள்காங்கிதம் அடையும் விடயங்கள் மனிதனின் இயல்பு குணங்களே, அதை மிக சொற்பமான மனிதர்களிடம் காணும்போது இப்படியெல்லாம் இருந்திருப்பார்களா என்று நாமே அதிசயமான விவாதிக்கிறோம். தன்னை வெறுக்கும் மாமனார், மாமியாரை எப்படி உள்ளன்போடு பார்த்துக் கொள்கிறாள் தாரணி என்பதுதான் கதையின் சாரம். என்னதான் மனதிற்குள் இருந்தாலும் தன் மரணத்திற்கு முதல்நாள்தான் சதாசிவம் தன் தவறை உணர்ந்து மருமகளிடம் கண்கலங்கி பேசும்போது நமக்கே கண்ணீரை வரவைத்து விடுகிறது.
‘வேணி’ – இந்தக்கதை நிகழும் நிலப்பரப்பையும், அதன் அழகியலையும், தற்போது அதைக் கபளீகரம் செய்துள்ள கருவேல மரங்களையும் பற்றி எழுத்தாளர் சொல்லும் விதம் அருமை. கதையின் ஆரம்பத்தில் நம்மை ஒரு கிராமச் சூழலுக்குள் கூட்டிச் செல்கிறார். இந்தக் கதைக்கு கண்மணி என்று வைத்திருந்தாலும் பொருத்தமாக இருந்திருக்கும். தகப்பன், மகங்களுக்கு நடுவில் தவிக்கும் தாய் கமலாவின் பெயருமே பொருந்தித்தான் போயிருக்கும். இந்த மூன்று கதாபாத்திரங்களுமே ஒவ்வொருவரின் வாழ்வியலைப் பிரதிபலிக்கிறது. அத்தனை சிறப்பு.
‘மாதரசி’ – மனதிற்கு மிக நெருக்கமான கதை, மாதரசியை ஒருபடி மேலே உயர்த்தி பிடித்தது ரெங்கையாதான், தன் அத்தாச்சியை பெத்த தாயாக நினைத்து ஊரார்முன் சொல்லும் விடயம் நம்மையும் கலங்க வைத்து விடும். தொடக்கத்தில் கேலியும், நகைச்சுவையாகவும் நகர்ந்தாலும் வாசித்து முடிக்கும்போது மனம் கனத்துதான் போகிறது.
‘கனி’ – சில கதைகள் நம்முடைய பால்ய கால நினைவுகளை கொண்டு வரும். அதுபோன்ற ஒரு கதைதான் கனி. காலச்சூழலில் நடக்கும் துக்கமான சம்பவங்களால் நம்மையே நாம் வெறுக்கும் அளவுக்கு இந்தச் சமூகம் நம்மீது குறிப்பாக பெண்கள் மீது வைக்கும் அவநம்பிக்கைகளை மிக அருமையாக சொல்லியிருக்கிறார். நம்மோடு நன்றாக பேசிப் பழகியவர்கள், ஒரு கட்டத்தில் நம்மை மறந்து போவதும், நம்மை வேறொரு ஆளாக பார்ப்பதும், எங்கோ சாரல் போன்ற நினைவுகளால் நம்மை நாமே மீட்டெடுப்பதெல்லாம் கொடுப்பினைதான்.
‘உமையாள்’ – உறவுகளையும், கூட்டுக்குடும்ப வாழ்வையும் அருமையாகச் சொல்லி, அதனூடே மெலிதாக காதலையும் காட்டி, ஒற்றை வரியில் குறட்டை இல்லாத உறக்கதோடு காளிமுத்துவின் முடிவைச் சொல்லி பெருஞ்சுமையாக முடித்திருப்பார்.
‘ஜெனி’ – காதல், பிரிவு, மரணம் என்று கலந்து முடியும்போது ஒரு உலுக்கு உலுக்கி விடுகிறது. தனியாக வாசிக்கும்போது இது ஒரு ஆண் எழுத்தாளரின் கதையா என நமக்கே ஒரு சந்தேகம் வரும். அவ்வளவு உணர்வுகளை அள்ளி இறைத்து இருக்கும் அருமையான கதை! எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று.
‘புனிதா’ – கரகாட்டம் ஆடுபவர்களின் நிலையையும், அதோடு மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதையும் அப்பட்டமாக பதிவு செய்துள்ள கதை! தற்போதைய கரகாட்டம் எவ்வளவு மோசமாக மாறியுள்ளது என்பதையும் கொஞ்சம் விரசமாகவே நிதர்சனத்தை சொல்லியுள்ளார். குறவன், குறத்தி உரையாடல், பார்வையாளர்களின் மனநிலை என அனைத்தையும் பேசுகிறது.
‘புவனா’ – இந்தக் கதையை எழுத்தாளரே சொல்ல ஆரம்பிப்பது போலத்தான் எனக்கு முதலில் தோன்றியது, வாசிக்க… வாசிக்க நம்மை அந்த இரயிலில் பயணிக்க வைக்கிறது. வாழ்க்கையை அதன் போக்கில் நாம் பயணிக்கும்போது, பல பாடங்களை கற்றுத் தருகிறது. பயணங்களினூடே நினைவுகளை கிளறிப் பார்க்கும் சிறுகதை அருமை!
‘தஸ்ரீன்’ – எனக்கு மிகவும் பிடித்த கதை இது. இந்த உலகில் பெண் என்பவள் பேரியற்கை, உலகிலேயே மிகப்பெரிய தலித் இனமும் பெண்தான், அதைவிட மிகப்பெரிய நாத்திகவாதிகளும் பெண்கள்தான், ஏதோ சம்பிரதாயங்களுக்காக கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை என்று இந்த சூழல் அவர்களை அடக்கி வைத்திருக்கிறது. தஸ்ரீன் மாதிரியும், அவரது தாயார் மாதிரியுமான ஆட்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவர்களின் வேகமும், துணிச்சலும் எந்த ஆண்களுக்கும் வராது.
இந்த பனிரெண்டு கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு ஜூலை மாதம் கேலக்ஸி ப்திப்பகம் மூலமாக துபாயில் வெளியிடப்பட்டது. அருமையான தொகுப்பு அனைவரும் வாசிக்க வேண்டும். எப்பொழுதும் அண்ணன் எழுத்தாளர் குமார் அவர்களின் எழுத்தில் நிலமும், நில மாந்தர்களும் நம் கண்முன்னே உலாவுவார்கள் அப்படி நம்மைக் கூட்டிச் செல்லும் அவரது எழுத்தில் பதிமூன்றாவது புத்தகமாய் ‘மாதரசி’.


