நல்லதை விதைப்போம்
விண்மீன் இதழுக்கு மாதாமாதம் கிடைக்கும் ஆதரவு கூடிக் கொண்டே இருப்பதில் மகிழ்ச்சி. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படைப்புகள் அனுப்பி, எங்கள் இதழின் வளர்ச்சிக்கு உதவும் உங்கள் அனைவருக்கும் நன்றி.
சமீபத்தில் நாம் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், ஒளிப்பதிவாளர் செழியன், பாடகி எஸ். ஜானகி அம்மாள் ஆகிய திரை ஆளுமைகளை இழந்திருக்கிறோம். பிரபலங்களின் இறப்பை நாம் அனைவரும் சோகத்தோடு கடக்கிறோம். பிரபலங்களின் இறப்பின் போது தொலைக்காட்சி, யுடியூப் அன்பர்கள் நடந்து கொள்ளும் விதம் மிகவும் அருவெறுப்பானது என்பது அனைவரும் அறிந்ததே.
கடந்த சில வருடங்களாக பிரபலங்கள் என்றில்லை நமது உறவுகள், நெருங்கிய நட்புக்கள், சமூக வலைத்தளங்களில் வழி பழகிய முகம் தெரியாத நட்புகள் என எல்லா இடத்திலும் ஏகப்பட்ட மரணங்கள். பிரபலங்களின் இறப்பை உலகுக்கே எடுத்துச் செல்லும் எந்த சமூக வலைத்தளமும் இந்த இறப்புகள் குறித்து எதுவும் சொல்வப் போவதில்லை. வயதானவர்கள் முதல் சிறுவர்கள் வரை பலரை நாம் இழந்திருக்கிறோம் என்பதே உண்மை.
வண்டிகளில் போய் சாவை வாங்கிக் கொள்வோர்களைத் தவிர்த்துப் பார்த்தால் இளவயது மரணங்கள் சமீபமாய் அதிகமாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக மாரடைப்பால் ஏற்படும் மரணங்களே அதிகம். பெண்களைப் பொறுத்தவரை இன்று மார்பகப் புற்றுநோயால் அதிகம் இறக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் கொரோனாவுக்கென போட்ட ஊசிதான் காரணம் என்ற பேச்சும் இருக்கத்தான் செய்கிறது. அது உண்மையா பொய்யா என்று ஆராய்வதைவிட யோசித்துப் பார்த்தால் கொரோனாவுக்குப் பின்னரே நிறைய மாரடைப்பு, புற்றுநோய் மரணங்கள்.
பிறந்த அனைவரும் எதிர்கொள்ள வேண்டியது மரணம் என்றாலும் தொடரும் இது போன்ற அகால மரணங்கள் பயமுறுத்தவே செய்கின்றன. இப்படியான வாழ்க்கையில்தான் ஆசை, பேராசை, ஏமாற்று, கொள்ளை என எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம். வாழ்வு என்பது ஒருமுறைதான் என்பதால் நல்லதை விதைத்துச் செல்வோம்.
நன்றி.


