பாசத்திற்குரிய பாரதிராஜா..!
– பாலாஜி பாஸ்கரன்
‘என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்’ என்ற குரல் நம் மண்ணோடும் மனதோடும் என்றென்றும் கலந்திருக்கும்.
எங்கள் மண்ணை, எங்கள் வாழ்வை, எங்கள் கதையை, எங்கள் கிராமத்தின் இயல்பை மண் வாசம் மாறாமல் உலகுக்கு காட்டியவர். தமிழ் சினிமா உலகில் எளிய மக்களின் வாழ்வைப் பேசிய மகத்தான கலைஞன். இன்றைய தமிழ்ச் சினிமாவின் பெரும்பான்மையான இயக்குநர்கள் கலைஞர்கள் பலருக்கும் இவர் பள்ளிக்கூடமாக இருந்திருக்கிறார். இன்றைய பல இயக்குநர்களின் குருநாதர்களின் குருநாதர் பாரதிராஜா என்பதை தமிழ்ச் சினிமா ரசிகர்கள் நன்கறிவார்கள்.
ஒரு அரங்கில் செட் அமைத்து நாடகங்களை அப்படியே ஒளிச்சுருளில் பதிவு செய்து, இசை கோர்த்து அதுதான் சினிமா என்று காட்டப்பட்ட சினிமாவை, பாரதிராஜாவுக்கு முன், பாரதிராஜாவுக்குப் பின் என்று சொல்லும் அளவுக்கு வெளிப்புறப் படப்பிடிப்பிற்கு மாற்றி, அதுவரை கண்டுவந்த நாடகத்தனமான சினிமாவை விடுத்து, இயல்பான சினிமாவை நமக்கு அளித்தார். இயல்பு என்ற சொல்லுக்கு சினிமா மொழியில் நியாயம் செய்தவர்.
அவர் அறிமுகப்படுத்திய நாயகர்கள், நாயகிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தமிழ்ச்சினிமாவின் புதிய முகங்களாக தங்களை நிறுவிக் கொண்டார்கள். அவருடைய திரைப்பட உரையாடல்களின் மொழி மாறியது, அது எளிய, இயல்பான மக்களின்… குறிப்பாக, எங்கள் பகுதி மக்களின் பேச்சை, இயல்பை, வாழ்வியலைப் பதிவு செய்தது.
மதுரைப் பகுதியின் படங்களாக தற்போது பலரும் நமக்குக் காட்டியிருக்கும் கதைக்களங்கள் பெரும்பாலும் ‘நானும் மதுரைக்காரன்டா’ என்று கதாநாயகன் கத்திக் கொண்டிருப்பதும், அரிவாள் கொண்டு வெட்டுவதும், என்னமோ காலையில் எழுந்ததும் யாரையாவது வெட்டிவிட்டு வந்துதான் டீக் குடிப்பது போலவும், மதுரை என்றாலே இப்படித்தான் என பொதுமைப் படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாரதிராஜாவின் படங்களைப் பார்த்தால் அது எங்கள் மதுரை மண்ணின் இயல்பைப் பேசும். மக்களின் வாழ்வியலைப் பேசும்.
எல்லா இனக் குழுவிலும் பணம் வசதி படைத்தவர்களின் வாழ்வியல் வேறு. ஆனால் எந்த இனக் குழுவானாலும் எளிய மக்களின் வாழ்வு என்பது பல போராட்டங்களைச் சந்தித்தே நடைபெறுகிறது. அப்படியாக தான் சார்ந்த இனக்குழுவின் எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையை, அன்றாட போராட்டங்களை, மூட நம்பிக்கைகளை, சாதிய ஏற்றத் தாழ்வுகளை எல்லாம் தன் படங்களின் வழியே வலுவாகப் பதிவு செய்திருக்கிறார் பாரதிராஜா.
பாரதிராஜா என்றாலே கிராமத்துப் படம் இயக்குநர் என்றில்லாமல் எல்லா வகைமையிலும் தன்னால் சிறந்த படங்களை இயக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘டிக் டிக் டிக்’ என பல படங்களைச் சொல்ல முடியும் அதில் குறிப்பிடத்தகுந்தது ‘பொம்மலாட்டம்’. அந்தப் படத்தைப் பார்க்காவதர்கள் அவசியம் பாருங்கள். அவருடைய மிகச்சிறந்த படைப்புகளில் அதுவும் ஒன்று.
அவர் இயக்கத்தில் இமய உயரம் என்பது போல, நடிப்பிலும் ராஜாதான். நிறைய படங்களில் சிறு சிறு காட்சிகளில் பாரதிராஜா நடித்திருந்தாலும், ‘குரங்கு பொம்மை’ படத்தில் அவருடைய நடிப்பு இன்னமும் என் மனதில் நிற்கிறது. ஏன் முதலாளிக்கு விசுவாசமாக இருக்கிறார் என்று கேட்கும் போது பாரதிராஜா அதற்கான காரணத்தைச் சொல்லும் காட்சியிலும், கடைசியில் அவரைக் கொல்வதற்கு முன்னால் அவர் வில்லனிடம் கெஞ்சும் காட்சியிலும் நடிப்பிலும் தான் ஒரு ராஜா என்பதை நிலைநாட்டியிருப்பார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.
இயக்கம் நடிப்பு என்று தன்னுடைய கலையில் உச்சம் தொட்டிருந்தாலும், கலைஞன் என்பவன் சமூகத்தின் மீது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் என்பதற்குச் சான்றாக அவர் தமிழர்களுக்கான பொதுவான பிரச்சனைகள் எது வந்தாலும் தன்னுடைய குரலை வலுவாகப் பதிவு செய்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசு ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பெயரில் ஒரு விருது அறிவிக்க வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் கனவு, அந்த ரசிகனில் ஒருவனாய் எனது ஆசையும் அதுவே. அரசு செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இமயத்துக்கு இதய அஞ்சலி…! உங்களது படங்களும், அறிமுகங்களும் காலத்துக்கும் உயர்ந்து நிற்கும். தங்களது ஆன்மா சாந்தியடையட்டும்.
*****


