வந்தனா வாசலை சுத்தமாகப்
பெருக்கி கோலமிட்டாள்.
கைகள் வளைந்து நெளிந்து கம்பி கோலத்தை போட்டது . கோலம் சிக்கலாகிப் போக சிக்கலை சீர்படுத்தி ஒரு வழியாக கோலத்தை முடித்து வைத்தாள்.
கோலத்தின் நடுவே சாணத்தை
வைத்து பூசணிப் பூவைச் சிரிக்க விட்டாள்.
நெற்றிக்கு பொட்டிட்டு இரண்டரை வயது குழந்தை அனுவை தூக்கிக்கொண்டு பக்கத்து வீட்டு சுந்தரியிடம் வந்தாள்.
“அக்கா….நான் வார வரைக்கும் புள்ளைய பார்த்துக்கக்கா… ஆயா கடையில வாங்குன இட்லியும் இடியாப்பமும் இருக்கு….புள்ள அழுதா கொடுத்திருக்கா…”
பால் பாட்டிலை குழந்தை கையில் கொடுத்து பாயில் படுக்க வைத்து விட்டுவண்டியை தள்ளிக் கொண்டு நடந்தாள்.
“வந்தனா வந்துட்டியா…? ரெண்டு நாளா குப்பை எல்லாம் சேர்ந்து கிடக்கு. நீ எப்போ வருவேன்னு பாத்துட்டு இருந்தேன்” சொன்னபடியே பார்வதி கொண்டு தந்த குப்பையை தன் வண்டியில் கொட்டி கொண்டாள்.
ஒவ்வொரு வீட்டு குப்பைக் கூடைகளும் சுத்தமாக..சுத்தமாக இவளும் இவள் வண்டியும் அழுக்காகிக் கொண்டிருந்தார்கள் .
மதியத்துக்கு மேல் ஒரு வழியாக குப்பை வண்டியை ஒதுக்கி நிறுத்தி விட்டு வீட்டை நோக்கி நடந்த போது மனம் மரத்துப் போனது .
சுந்தரம் இன்று எந்த நிலையில் வருவானோ..? அவள் மனது அடித்துக் கொண்டது.
சுந்தரம் மலிவான மதுவை உள்ளுக்குள் இறக்கி மகிழ்வாக வந்தான்.
வீட்டில் உள்ள பொருட்களை வாரி இறைத்தான். மது ஆர்ப்பாட்டமாக தன் வேலையை காட்டிக் கொண்டிருந்தது.
அடுப்பைப் பற்ற வைத்து
அரிசியை களைந்து போட்டாள்.
ரேசன் அரிசி…”இப்போ வேகுவேனா…பாரு” என அடம் பிடித்து கொண்டிருந்தது.
வயிறு ஏகமாய் பசித்தது..
பக்கத்து தோப்பில் போய் கீரைகளை ஆய்ந்து வந்து நறுக்கி கொண்டிருந்தாள்.
“வந்தனா குழந்தை தூங்கிட்டா…தூளியில போட்டுருக்கேன்” சொல்லிவிட்டு சுந்தரி வந்து உட்கார்ந்தாள்.
ஏதோ சொல்ல வந்தவள் “வந்தனா…” என்று இழுத்தாள்..
“என்னக்கா…?
“வந்தனா…முந்தா நாளு நம்ம தெருவுக்கு ஓட்டு கேட்டு வந்தாவல்லா…அவிய கட்சியில இருந்து ஏதோ ஒரு தலைவரு நாளைக்கு சாயங்காலம் இங்க வரப் போறாராம். அதான் கொடி பிடிச்சி நிக்கிற கூட்டத்துக்கு நிறைய ஆளு வேணுமாம். ஒரு தலைக்கி இருநூறு ரூபாயும், ஒரு பிரியாணியும் தருவாவளாம். நானும் எம் மவளும்… போலான்னு நினைக்கோம்… நீயும் வாரியா…?”
“நான் வாரேங்கா. எந்த கட்சியா இருந்தா என்ன..? ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் இதே குப்பை வண்டி தான்
நமக்கு.., நம்ம குறைய தீக்க எந்த நாதி இருக்கு…”
“நிறைய நாளு குப்பை வண்டியை தள்ளிட்டு போறப்ப.. சங்சன்ல இருக்க சலீம் ஓட்டல்ல பிரியாணி மணம் வீசும்… ஆசைப்பட்டு ஒரு நாளு விலை கேட்டேன். நூத்தம்பது ரூவா சொன்னாரு… அந்த நூத்தம்பது ரூவா இருந்தா நானு நாலு நாளு சமாளிச்சிருவேன்னு நினைச்சிகிட்டு நடந்தேன். வண்டி கொண்டு போறச்ச பிரியாணி வாசத்த மோப்பம் பிடிச்சிக்கிட்டே போவேங்கா…”
சுந்தரி
பதில் சொல்லாமல் இருக்க, “பிரியாணி சாப்பிட கொஞ்ச நாளாவே கொதி தாங்க்கா.. கண்டிப்பா போணும்க்கா…”
அடுத்த நாள் காலையிலேயே கிளம்பி வேலைகளை முடித்துவிட்டு.. சுந்தரியோடு நடந்தாள். இவள் போவதற்கு முன்னே நிறைய பேர் காத்திருந்தார்கள். வெயிலில் காய வைத்த பொருட்கள் போல அந்த வெயிலில் நின்றுகொண்டிருந்தனர்.
பதினொரு மணியிலிருந்து சாயங்காலம் வரை காத்திருந்தார்கள்.
எப்படியோ தலைவர் வந்து
சத்தம் போட்டு பேசி, நிறைய வாக்குறுதிகளை தந்து…. நிறைய சத்தியங்கள்… சபதங்களை சொல்லி சென்றார்.
பசி மயக்கத்தில் இருந்த அனைவருக்கும் வாக்குறுதியோ.., செய்த சபதமோ பொருட்டாயில்லை. அந்த இருநூறு ரூபாய்க்கும் , பிரியாணி பொட்டலத்துக்கும் உயிரைப் பிடித்து நுனி நாக்கு ஈரம் உலர்ந்து கால் கடுக்க நின்றார்கள்.
“நாம வீடுகள சுத்தம் செய்றோம்…அவங்க நாட்டை சுத்தப்படுத்த மைக்கில முழங்கிட்டு போறாவ…”
“நாடு இவங்களால தான் சுத்தமில்லாம
தண்ணிப் பாம்பாட்டம் சத்தமில்லாம… கிடக்குன்னு தெரியறதில்லை…”
“ஆட்சி மாறினா குப்ப வண்டி சாயம் மாறும் நம்ம காட்சி மாறுமா…?””
“வா அக்கா போலாம்… பிரியாணி பொட்டலம் மணமணக்குது…வயிறு பசி பசிங்குது…” முன்னே நடந்த வந்தனாவை பின் தொடர்ந்தாள் சுந்தரி.
பிரியாணி பொட்டலத்தை வீட்டில் வைத்து விட்டு குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு கை கழுவ சென்றாள் வந்தனா…
மழைத்துளி பெருகி பெரும் மழையாக பெய்ய ஆரம்பித்தது.
நாலு கை விறகு எடுத்து போட்டுட்டு வருவோம்..விறகு எடுத்து சின்ன குசினிக்குள் அடுக்க ஆரம்பித்தாள்.
திரும்பி வந்து, வைத்த இடத்தில் பிரியாணி பொட்டலத்தை காணாமல் வெளியே வந்து பார்த்தாள்.
திண்ணையில் சுந்தரம் குப்புற படுத்திருந்தான். கீழே காலியான பாட்டிலும் பிரியாணி பொதியும் கிடந்தது.
மெல்ல வந்து அடுப்பைப் பற்ற வைத்தாள் அடுப்பை போல அவள் மனதும் எரிந்து கொண்டிருந்தது.
வாசலிலே பூசணிப்பூ வாடி வதங்கி கொண்டிருந்தது அவள் வாழ்க்கையை போல..


