VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: பச்சைமலைப் போர்!!!  நிஸ்வா – பகுதி 8
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > தொடர்கள் > பச்சைமலைப் போர்!!!  நிஸ்வா – பகுதி 8
தொடர்கள்

பச்சைமலைப் போர்!!!  நிஸ்வா – பகுதி 8

சுல்தானேட் ஆஃப் மஸ்கட் புற உலகுடன் கொண்ட தொடர்புகளால் சற்று பரந்துபட்ட பார்வையைக் கொண்டிருந்தது.

இளங்கோ ராமசாமி
Last updated: June 18, 2026 2:45 pm
16 Views
Share
12 Min Read
பச்சைமலைப் போர்
SHARE

“நிஸ்வாவின் நிழலில்” தொடரின் முதல் அத்தியாயத்தில் ஓமான் என்ற தேசம் 19ம் நூற்றாண்டில், இமாமேட் ஆஃப் ஓமான் மற்றும் சுல்தானேட் ஆஃப் மஸ்கட் என்ற இரு தனித் தனி நாடுகளாக இருந்ததைக் குறிப்பிட்டிருந்தேன். அத்தோடு 1955 – 1959 ல் ஜபல் அக்தர் போர் நிகழ்ந்து இன்டீரியர் ஓமானின் அதிகாரமும் சுல்தான் தைமூரின் வசம் வந்ததையும் அந்த அத்தியாயத்தில் சுருக்கமாக விவரித்திருந்தேன். 

 

ஜபல் அக்தர் பிரதேசத்தின் எழிலையும், அதன் அடுக்கடுக்கான தோப்புகளையும், சுற்றுலாத் தளங்களையும் விவரித்து எழுதிவிட்டு இறுதியில் நவீன ஓமானின் வரலாற்றிற்குப் பிள்ளையார் சூழி போட்ட ஜபல் அக்தர் போர் குறித்து அடுத்த அத்தியாயத்தில் எழுதுவதாக 

 

ஜபல் அக்தர் போர் முடிவுக்கு வந்தது 1959 ஆம் ஆண்டெனினும் இரு தரப்புக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில். 1950களின் துவக்கத்தில் ஃபஹூட் என்ற இமாமின் ஆளுகைக்குட்பட்ட இடத்தில் எண்ணை வளம் இருப்பது கண்டறியப் பட்டது. அங்கு எண்ணைக் கிணறுகளைத் தோண்டும் ஒப்பந்தத்தை மஸ்கட்டின் சுல்தான் பிரிட்டிஷ் அரசுக்குக் கொடுத்து விட்டார். 

 

இதனால் இண்டீரியர் ஓமானின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த புதிய இமாம் ஃகாலிஃப் அலி ஹினாய், ‘“யாரு அப்பன் வீட்டு நெலத்துல எண்ணைக் கெணறு தோண்ட எவன் ஒப்பந்தம் போடறது?” எனக் காண்டாகிப் போக இரு தரப்பிற்கும் பல காலமாகப் புகைந்து கொண்டிருந்த பங்காளிப் பஞ்சாயத்துகள் போராக வெடித்தது. 

 

எண்ணை வளத்திற்கான உரிமை தான் போரின் முக்கியக் காரணம் என்றாலும் இரு நாடுகளுக்கும் இடையே அடிப்படையாகவே பல வேறுபாடுகளும் முரண்களும் இருந்தன. 

 

1950 களுக்கு முன் ஒமான் என்பது இரண்டு பகுதிகளாக இரு வேறு ஆட்சிமுறைகளைக் கொண்டதாக இருந்தது. மஸ்கட், சலாலா, சோஹார், சூர் போன்ற முக்கிய கடலோர துறைமுக நகரங்களனைத்தும் “அல் சையது“ குடும்பத்தினரது சுல்தானேட் ஆஃப் மஸ்கட்டின் ஆளுகைக்குக் கீழ் இருந்தன. கிழக்கு மற்றும் மேற்கு ஹஜர் மலைத்தொடர்களால் சூழப் பட்ட இப்ரா, பிதியா, சமைல், இஸ்கி, நிஸ்வா, ஹம்ரா, பஹலா, இப்ரி போன்ற நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளனைத்தும் இமாம்களின் ஆளுகைக்குட்பட்ட “இமாமேட் ஆஃப் ஓமான்” என்றழைக்கப்பட்டது. 

 

இரண்டு தேசங்களும் இஸ்லாத்தின் இபாதிஸம் என்ற பிரிவைச் சேர்ந்தவையானாலும் புவியியல் காரணங்களால் இன்டீரியர் ஒமானான இமாமேட்டில் தூய்மை வாதம் தூக்கலாக இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் தங்கள் தலைவர்களை தேர்தல் முறையில் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால் மஸ்கட் அரச வம்சத்தில் அரசாட்சி வாரிசுரிமையின் கீழ் வழி வழியாகக் கை மாற்றப் படுவது. இது தான் இரு தேசங்களுக்கும் இடையே இருந்த முக்கிய வேறுபாடு. 

 

மூவாயிரம் ஆண்டுகளாகவே ஓமானிகள் கடல் வழி வர்த்தகத்தில் கோலோச்சியவர்கள். ரோமப் பேரரசிற்கும், எகிப்திய ஃபாரோக்களுக்கும் கப்பல் கப்பலாக சலாலாவின் சாம்பிராணி மூட்டைகளை ஏற்றியனுப்பி பெரும் செல்வம் ஈட்டியிருந்திருக்கின்றனர். அதற்கு முன்பே ஓமான்தான் உலகின் மிகப் பெரிய தாமிர ஏற்றுமதியாளர்களாகக் கோலோச்சியிருந்திருக்கின்றனர்.   

 

பல நூற்றாண்டுகளாக இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையே பயணப்பட்ட அத்தனை கப்பல்களும் மஸ்கட் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி குடிநீர் நிரப்பிக் கொண்டே பயணத்தைத் தொடர்வது வழக்கமாக இருந்திருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை உலகின் கடற்போக்குவரத்தில் ஓமானின் கொடி ஒங்கிப் பறந்திருக்கிறது. சாம்பிராணிக்கு மவுசு குறைந்த பிறகும் பட்டு வர்த்தக வழியில் ஒரு முக்கிய சந்தையாக ஓமான் இருந்திருக்கிறது. 

 

ஓமானில் இருந்து பேரிட்சையும், காய்ந்த எலுமிச்சைகளும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப் பட்டிருக்கின்றன. இந்தியாவில் இருந்து மேற்குலகிற்கு மஞ்சள், மிளகு, பட்டை, கிராம்பு போன்ற மசாலா பொருட்கள் ஓமானின் வழியே ஏற்றுமதி செய்யப் பட்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் உலகின் 80% கிராம்பு வணிகம் ஓமானிகளின் வசம் எனில் அவர்களது “அல் சையது” அரச வம்சத்தினரின் செல்வாக்கு எத்தகைய தாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் 17 ஆம் நூற்றாண்டின் கடைசியில் 1698 ஆம் ஆண்டு போர்த்துக்கீசியர்களின் ஆதிக்கத்தை முறியடித்து ஓமானிகள் கிழக்காப்பிரிக்காவின் மொம்பாசா மற்றும் ஸான்ஸிபார் துறை முகங்களைக் கைப்பற்றி தங்களது ஆட்சியை நிறுவனர். 

 

அடுத்த 170 ஆண்டுகளுக்கு ஸான்ஸிபார் அல் சையது வம்சத்தினரது ஆட்சியில் தான் இருந்தது. அதுவும் 1832 ஆம் ஆண்டு சுல்தான் சையது பின் சுல்தான் அல் சையது மஸ்கட்டில் இருந்து தனது தலைநகரை ஸான்ஸிபாருக்கு மாற்றிக் கொண்டார். 1861 ஆம் ஆண்டு அவர் மறைந்த பிறகு அவரது மகன்கள் மஸ்கட்டையும், ஸான்ஸிபாரையும் பாகம் பிரித்துக் கொண்டனர். 

 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் நீராவிக் கப்பல்கள் தலையெடுத்த பிறகு கடல்வழி வர்த்தகத்தில் ஒமானிகள் தங்கள் ஆதிக்கத்தை இழந்தனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுக்குக் கை கொடுத்த வானியல் மற்றும் பருவக்காற்று குறித்த பட்டறிவு தொழில் நுட்ப வளர்ச்சிக்கு முன் மண்டியிட வேண்டியதாயிற்று.  

 

இதனால் 1890 ஆம் ஆண்டு ஸான்ஸிபார் பிரிட்டனின் பாதுகாப்பிற்குட்பட்ட பகுதியானது. 1964 ஆம் ஆண்டு ஸான்ஸிபாரில் ஏற்பட்ட சுல்தானுக் கெதிரான புரட்சிக்குப் பிறகு ஸான்ஸிபார் தங்கனிகாவுடன் இணைந்து தான்ஸானியாவாகியது. 

 

அந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்த சுல்தான் இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்தார். கிராம்புத் தோப்புகளும், மாட மாளிகைகளும் கொண்டு வசதியாக வாழ்ந்த ஆயிரக் கணக்கான ஓமானிகள் சிறைவாசத்திற்குத் தப்பி ஓமானுக்கு வந்தனர். 

 

இப்படி சுல்தானேட் ஆஃப் மஸ்கட் புற உலகுடன் கொண்ட தொடர்புகளால் சற்று பரந்துபட்ட பார்வையைக் கொண்டிருந்தது. ஆங்கிலேயர்களது நட்பு அல் சையது குடும்பத்தினருக்கு இருந்தது. சுன்னி, ஷியா, பாகிஸ்தானின் பலுச்சிகள், இந்தியாவின் பனியாக்கள், பிரிட்டனின் கிறித்தவர்ள் என பல தேசத்தவர்களும், மதத்தவர்களும் புழங்கும் இடமாக மஸ்கட் இருந்தது. 

 

உள்நாட்டு ஒமானிகளின் மிகக் கட்டுப்பாடான இஸ்லாமிய வாழ்வியல் முறைகளுக்கு மாறாக மஸ்கட் வாழ் ஓமானிகள் சற்று இளக்கமாகவும் பிற மதத்தினரோடு அணுக்கமாகவும் வாழ்ந்தனர். மஸ்கட் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததும் உள்நாட்டு ஓமானிகளுக்கு சற்று ஒவ்வாமையை ஏற்படுத்தியது. 

 

இந்தச் சூழலில் பிரிட்டிஷ் அரசு பொது மக்கள் துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் வாங்கி விற்பதை தடை செய்யுமாறு சுல்தானை நிர்பந்தித்தது. உள்நாட்டு ஓமானிகளுக்கு துப்பாக்கியென்பது கலாச்சாரப் பெருமை. அது தங்களுடைய இனக் குழுக்களிடையே ஏற்படும் மோதல்களில் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையன அடிப்படைப் பாதுகாப்பும் கூட. அதனால் தங்கள் உரிமையில் தலையிட முனைந்த சுல்தானின் அதிகாரம் அவர்களுக்கு எரிச்சலூட்டியது. 

அதுமட்டுமின்றி பிரிட்டிஷ் அரசின் அடிமை வர்த்தகத்தின் மீதான தடையும் அடிமைகளை நம்பியிருந்த உள்நாட்டு விவசாயிகளது கோபத்தைக் கிளறியது. 

 

இதற்கிடையே 1800 களின் துவக்கத்தில் இருந்து நூறு ஆண்டுகளுக்கு எந்த இமாமும் பதவியில் இல்லை. காரணம் இனக்குழுக்களுக்கு இடையே இருந்த பகையும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வலுவான இமாமும் இல்லாததால் இமாமிற்கான பதவி காலியாக இருந்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு மஸ்கட்டின் அல் சையது குடும்பம் உள்நாட்டையும் தனது அதிகாரத்திற்குக் கீழ் கொண்டு வந்து ஆட்சி செய்து கொண்டிருந்தது.  

 

 இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒமானை மறைந்த முன்னாள் மன்னர் சுல்தான் காபூஸின் பாட்டனாரான சுல்தான் ஃபைசல் பின் துர்கி ஆண்டு வந்தார். மஸ்கட் துறைமுகத்தின் வழியே ஆஃப்கானிஸ்தானிற்கும், இந்தியாவிற்கும் துப்பாக்கிகள் ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. இதனைத் தடுக்கச் சொல்லி பிரிட்டிஷ் அரசு சுல்தான் துர்கியை நிர்பந்தித்தது. அதற்கு அடிபணிந்ததால், சுல்தான் தனது துறைமுகத்தின் வரி வருமானத்தை இழந்ததோடு ஒரே இரவில் இண்டீரியர் ஓமானின் மீதான தனது ஆதிக்கத்தையும் இழந்தார். 

 

1913ம் ஆண்டு மே மாதம் ஓமானின் உள்நாட்டில் இருந்த சக்தி வாய்ந்த ஷேக்குகள் இனியும் ஆங்கில ஏகாதிபத்தியத்தையும், சுல்தானது அதிகாரத்தையும் பொறுக்க முடியாதென முடிவு செய்தனர். அவர்கள் அனைவரும் நிஸ்வாவிற்கு அருகில் உள்ள “தனுஃப்” என்ற ஊரில் ஒன்று கூடி தங்களது பாரம்பரிய முறைப்படித் தேர்தல் நடத்தி இமாம் சாலிம் அல் கரூஸி என்பவரை இமாமேட் ஆஃப் ஓமானின் தலைவராக முடிசூட்டினர். தனது ஆட்சியின் பெரும் அதிகாரத்தை ஒரிரவில் இழந்த பெரியவர் ஃபைசல் பின் துர்கி அதே ஆண்டு அக்டோபர் மாதம் இயற்கை எய்தினார். 

 

 

இப்படிப் பட்ட இக்கட்டான சூழலில் அவரது மகன் சுல்தான் தைமூர் பின் ஃபைசல் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. அவர் ஆட்சிக்கு வந்த போது சுல்தானேட் ஆஃப் மஸ்கட்டிற்குப் போதாத காலம். போதாத காலமெனில் தங்களது பழம் பெருமைகளை இழந்து நாடு கிட்டத் தட்டத் திவாலாகி பிரிட்டிஷ் அரசிடம் கடன் வாங்கி தனது ராணுவத்தினருக்கு சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கும் அளவிற்குப் போதாத காலம். 

மஸ்கட் துறைமுத்தில் நடைபெற்று வந்த வர்த்தகம் மற்றும் அதன் மூலம் கிடைத்து வந்த வரிகளே சுல்தானேட்டுக்கான முக்கிய வருவாயாக இருந்தது. ஸான்சிபார் தனியாகப் பிரிந்து போனது மஸ்கட்டிற்கு முதல் பேரிழப்பு. 1861 ஆம் ஆண்டு சுல்தான் சையது பின் சுல்தான் இறந்த பிறகு அவரது வாரிசுகள் இருவரும் ஒட்டு மொத்த ஆட்சியதிகாரத்திற்காக முட்டிக் கொண்டனர். அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் கேனிங் இரு தரப்பிற்கும் இடையே சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். 

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸான்ஸிபாரின் சுல்தான் ஒவ்வொரு ஆண்டும் மஸ்கட் சுல்தானுக்கு 40,000 வெள்ளிகளை இழப்பீடாகக் கொடுக்க வேண்டும்.  

ஆனால் காலம் செல்லச் செல்ல நாம் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்க்கும் செல்வத்தை எதற்காக மஸ்கட்டிற்குத் தாரை வார்க்க வேண்டுமென ஸான்ஸிபாரின் சுல்தான்கள் பணத்தை அனுப்பாமல் இழுத்தடிக்கத் துவங்கினர். ஏற்கனவே அடிமை வர்த்தகத்தின் மீதான பிரிட்டிஷ் அரசின் தடையால் மஸ்கட்டிற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தது. அத்தடையால் பாதிக்கப்ட்ட உள்நாட்டு விவசாயிகள் பேரிட்சை மற்றும் எலுமிச்சை ஏற்றுமதிக்கான வரியைத் தர மறுத்தனர். இப்படி அனைத்து வகையிலான நிதி வருவாய்களையும் இழந்து தடுமாறிக் கொண்டிருந்த மஸ்கட்டின் சுல்தான் பிரிட்டிஷ் அரசிடம் முறையிட பிரிட்டிஷ் அரசு ஸான்ஸிபார் தர வேண்டிய வெள்ளிகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது.  

இந்த செய்தியை அறிந்த உள்நாட்டு ஓமானிகள், சுல்தான் பலகீனமாகிவிட்டார் என நினைக்கத் துவங்கினர். அது மட்டுமின்றி பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுல்தான் பணம் பெறுவதை உள்நாட்டு ஓமானிகள் அவமானமாகக் கருதியிருக்கின்றனர். 

இவையெல்லாம் சேர்ந்து தான் 1913 ஆம் ஆண்டு புரட்சிக்கு வழிகோலியிருக்கின்றன.  

அதிகாரத்திற்கு வந்த புதிய இமாமான காலிப் அல் ஹினாயின் புகழ் பெற்ற தளபதி இஸ்ஸா பின் சாலே அல் ஹார்த்தியின் தலைமயிலான இமாமேட்டின் படைகள் வெகு விரைவிலேயே நிஸ்வா, இஸ்கி மற்றும் சமைல் போன்ற முக்கிய நகரங்களைக் கைப்பற்றி மஸ்கட்டை நோக்கி முன்னேறின. உச்ச கட்டமாக 1915 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான இமாமினுடைய வீரர்களால் மஸ்கட் முற்றுகையிடப் பட்டது.  

ஆனால் பிரிட்டிஷ் படையினரது ஆதரவில் இருந்த மஸ்கட்டிற்குள் அவர்களால் நுழைய முடியவில்லை. 1920 வரை நீண்ட இந்தப் போரால் இரு தரப்பிற்கும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இமாமேட்டில் இருந்து எந்தப் பொருளும் ஏற்றுமதியாவதற்கு வழியின்றிப் போனது.  

அதனால் இரு தரப்பிற்கும் இடையே பிரிட்டிஷ் அரசு 1920 ஆம் ஆண்டு ஒரு மத்தியஸ்தம் செய்து வைத்தது. சிப் உடன் படிக்கை என்றழைக்கப் படும் அந்த ஒப்பத்தத்தின் படி எல்லைகள் வரையறுக்கப் பட்டன. இரு நாட்டு மக்களும் வர்த்தகத்திற்காக சுதந்திரமாக இரு புறமும் சென்று வரலாம் என ஒப்புக் கொள்ளப்பட்டது. 

இமாமின் ஆட்சியதிகாரத்தில் சுல்தான் தலையிடுவதில்லையென்றும் இமாமின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் சுல்தானது ராணுவ வீரர்கள் நுழைவதில்லை என்பதும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்.   

அடுத்த முப்பது வருடங்களுக்கு இந்த அமைதி ஒப்பந்தம் நீடித்தது. ஆனால் உள்நாட்டில் எண்ணை வளம் இருப்பது கண்டறியப் பட்டவுடன் பிரிட்டிஷ் அரசின் துணையுடன் 1954 ஆம் ஆண்டு சுல்தான் சையது பின் தைமூர் தனது ராணுவத்தை உள்ளிறக்கினார்.  

அவரது நவீன ராணுவத்திற்கு ஈடு கொடுக்க முடியாது இமாமின் படைகள் பின் வாங்க 1955 ஆம் ஆண்டு நிஸ்வா சுல்தானின் வசம் வீழ்ந்தது. இமாம் காலிப் அல் ஹினாயும் அவரது சகோதரர் ஷேக் தாலிப் அல் ஹினாயும் ஜபல் அக்தருக்கு இடம் பெயர்ந்தனர். தனுஃப் நகரின் கோட்டை விமானத் தாக்குதலுக்கு ஆளாகி முற்றிலும் சிதைந்து போனது. இன்றும் சிதிலமடைந்த அக்கோட்டையைக் காண முடியும்.  

ஒன்பதாயிரம் அடி உயரத்தில் கரடுமுரடான மலைகளின் குக் கிராமங்களுக்குள் பதுங்கிப் போர் புரிந்த இமாமின் படைகளைக் கட்டுப்படுத்த வழியின்றி சுல்தானின் ராணுவம் பல வருடங்கள் தடுமாற வேண்டியிருந்தது.  

பிரிட்டிஷ் அரசின் ராயல் ஏர் ஃபார்ஸ் வீசிய குண்டுகள் எதுவும் மலையில் பதுங்கியிருந்த இமாமின் படையினரை அசைக்க முடியவில்லை. வேறு வழியின்றி Special Air Service (SAS) என்ற சிறப்பு வான்படை பிரிவு வரவழைக்கப் பட்டது.  

அவர்களுக்கு வழிகாட்ட சினாவ் மற்றும் முதைபி பகுதிகளில் இருந்த ஓமானிகள் வழிகாட்டிகளாகப் பணியமர்த்தப் பட்டனர். 1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்டுப் பாதை என்றழைக்கப் படும் தனுஃப் நகரில் இருந்து நெட்டுக்குத்தாக ஜபல் அக்தருக்கு ஏறும் மலைப் பாதையில் அந்த ஓமானிகள் வழிகாட்ட SAS படைப்பிரிவினர் சப்தம் காட்டாது நள்ளிரவில் மலையேறி இமாமின் படைகளைச் சூழ்ந்து தாக்கி போரை ஒரு முடிவிற்குக் கொண்டு வந்தனர். 

அந்தப் பாதையில் நான் ஒரு முறை தனுஃபில் இருந்து ஜபல் அக்தருக்கு ஏறியிருக்கிறேன். சமயம் வாய்த்தால் அந்த அனுபவத்தை பிரிதொரு சமயம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   

இமாமும் அவரது சகோதரரும் சவுதி அரேபியவில் அடைக்கலம் புகுந்தனர். இந்த ஜபல் அக்தர் போர் முடிவிற்கு வந்த பிறகே இன்றைய நவீன ஒருங்கிணைந்த சுல்தானேட் ஆஃப் ஓமான் பிறந்தது.  

பல தசாப்த்தங்களாக “ஜபல் அக்தர்” ராணுவ கேந்திரமாகவும் பொதுமக்களுக்குத் தடை செய்யப்பட்ட பகுதியாகவும் இருந்தது. ஜபல் அக்தர் செல்ல வேண்டுமெனில் சிறப்பு அனுமதி பெற்றே எவரும் செல்லக் கூடிய நிலை இருந்திருக்கிறது.  

ஆனால் மறைந்த மன்னர் சுல்தான் காபூஸின் ஆட்சிக் காலத்தில் 1980 ல் முதன் முதலாக ஜபல் அக்தருக்கு சாலை வசதி செய்யப்பட்டது. ஆனால் அந்த அபாயகரமான செங்குத்தான சாலைகளில் பயணிக்க 4 x 4 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இன்று வரை அதுதான் நிலமை.   

2000 ஆம் ஆண்டு பிறந்த பிறகு புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கியது. 37 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பிர்கித் அல் மௌஸ் – ஜபல் அக்தர் சாலை ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் துவக்கத்தில் வரக்கூடிய ஹை ஸ்பீட் சேசிங் காட்சிகளைப் படமாக்குவதற்கான அத்தனை தகுதிகளையும் பெற்றது. 2005- 2006 ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்த அந்த சாலையின் பயனே இன்று நாம் காணும் ஜபல் அக்தர். இந்த இருபது ஆண்டுகளில் அந்த நகரம் அடைந்த மாற்றத்தை விட அடுத்த பதினைந்து ஆண்டுகளில் அது அடையப் போகும் வளர்ச்சி அளவிட முடியாததாக இருக்கும்.  

2014 ஆம் ஆண்டு நான் முதன் முறை சென்ற போது அங்கு ‘அனந்தாரா’ என்ற பெரும் நட்சத்திர விடுதி தயாராகிக் கொண்டிருந்தது. இப்போது பத்துக்கும் மேற்பட்ட பெரிய புதிய விடுதிகள் கட்டப்பட்டுத் திறக்கப் பட்டுவிட்டன.  

‘“அல் ஜபல் அல் ஆலி“ என்ற 2500 வீடுகள் கொண்ட ஒரு மிகப் பெரிய குடியிருப்பு வளாகம் இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. இதன் திட்ட மதிப்பீடு 1200 கோடி அமெரிக்க டாலர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மத்தியக் கிழக்கின் மிக உயர்ந்த கால்ஃப் கோர்ஸை இந்த வளாகத்தில் ஏற்படுத்தப் போவதாக வாசித்தேன். கண் முன் இந்தப் பச்சை மலை மெல்ல மெல்ல ஒரு மாய லோகமாக உரு மாறுவதைக் கண்டு கொண்டிருக்கிறேன்.   

ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்தித் தனது தந்தைக்கெதிராகப் போரிட்ட மக்களை மாற்றாந் தாய் மனப்பான்மையோடு அணுகாது நாமனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற நம்பிக்கையை விதைத்த பெரியவர் சுல்தான் காபூஸின் நல்லெண்ணமே இன்றைய ஓமானின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படைக் கரணம். பாரபட்சமோ, தன் தந்தைக்குப் பெரும் தலைவலியாக இருந்தவர்கள் என்றோ வெறுப்பை உமிழாமல் அவர் ஏற்படுத்திய உட்கட்டமைப்புகள் இன்று ஜபல் அக்தரை ஒட்டு மொத்த வளைகுடா நாடுகளின் தலைசிறந்த மலைவாசஸ்தலமாக மாற்றியிருக்கிறது. ஜபல் அக்தர் மக்களின் சொத்து மதிப்பும், வாழ்வாதாரமும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது கண்கூடு. நல்லெண்ணமும், நட்புணர்வும், கனிவும், அன்பும் எவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்ய முடியும் என்பதற்குத் தற்கால உதாரணமாக ஜபல் அக்தர் விண்ணை முட்டி நிற்கிறது.  

தொடர்ந்து இணைப்பில் காத்திருங்கள் நண்பர்களே. நான் விண்மீனின் அடுத்த இதழில் உங்களை ஒரு அழகிய மலையடிவாரக் கிராமத்திற்கும் அதன் பசுமையான தோப்புகளுக்குள்ளும் அழைத்துச் செல்கிறேன்.

PrevPreviousதளிர்
Nextவிருதுகள்Next

You Might Also Like

அந்த மாலை – வினோத் – வினோதினி
மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்)
உன் நிழல் படமும் நினைவுகளும்
மாணிக்கம் உணவகம்
அந்த மாலை – நான் உங்க கிட்ட அப்படியா பழகினேன்?
TAGGED:Seriesகட்டுரைதொடர்கள்நிஸ்வாவிண்மீன் மார்ச் 2026
Previous Article தளிர்
Next Article Vinmeen March 2026 விருதுகள்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?