சமீபத்தில் நான் படித்தது கலைமகள் கதம்பம் என்று ஒரு தொகுப்பு. இது தொகுப்பு என்று சொல்ல முடியாது. ஒரு பொக்கிஷம் சிறுகதைகள் இலக்கியம் விஞ்ஞானம், சமயம் ,நுண்கலை, கவிதை என்று பல்வேறு தலைப்புகளில் பலவகை எழுத்தாளர்கள் எழுதிய கதைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள்.
வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு வெளியாகிய இந்தத் தொகுப்பில்தான் எத்தனை விதவிதமான கதைகள். ராஜாஜி, புதுமைப்பித்தன், கு.பா.ரா, அகிலன், தி. ஜானகிராமன் ராஜம் கிருஷ்ணன் போன்றவர்களின் கதையோடு, இலக்கிய கட்டுரைகளும் நிறைந்திருக்கிறது. படிக்கப் படிக்கச் சுவையான தமிழ் நடை. அந்த தமிழ் எழுத்துக்களும், சாதாரண விஷயத்தில் கூட கற்பனையைச் சேர்த்து அதை ஒரு சிறுகதையாக்கிய திறமை, ஒரு எழுத்து என்பது எப்படி சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்,நல்ல எழுத்து நடையுடன் சம்பவக் கோர்வைகளுடன் செல்ல வேண்டும் என்பதை நமக்கு புகட்டிய கதைகள். ஒரு அழகான பட்டு. நூலில் கோர்க்கப்பட்ட நவரத்தினமணிகளைப் போல இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஜொலித்தது.
கதைகள் ஒவ்வொன்றும் புதிதாக எழுதவரும் எழுத்தாளர்களுக்கான பாடம் என்றால் அது மிகை இல்லை. கற்பனை இல்லாமல், புனைவில்லாமல், உள்ளதை உள்ளபடிச் சொல்லிச் சென்ற அந்த கதைகள் ஒவ்வொன்றும் படிக்கப் படிக்க நமக்கு ஆனந்தத்தைத் தந்தது. நான் இப்போது அதில் உள்ள நுண் கலைகள், கவிதை பகுதிகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது இது விற்பனைக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் இது என்னுடைய பொக்கிஷம்.


