‘பாண்டியன் பொற்கிழி‘
கேலக்ஸி ஆரம்பித்து மூன்றாண்டுகள் நிறைவுற்றிருக்கும் இவ்வேளையில் அறுபது புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டு, பதிப்புத் துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளது.
புத்தகங்கள் வெளியிடுவதுடன் நின்று விடாமல் எழுத்தாளர்களுக்கு என்னால் ஆன ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என அதன் நிறுவனர் திரு. பாலாஜி பாலாஜி பாஸ்கரன் அவர்கள், கேலக்ஸியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் ‘பாண்டியன் பொற்கிழி‘ என்னும் விருதினை அறிமுகம் செய்தார்.
‘எப்போதுமே மண் சார்ந்த, வட்டார வழக்கு எழுத்துக்கு மனிதர்களின் உணர்வுகளைக் கடத்தும் தன்மை உண்டு என்றும், அவ்வகை எழுத்து உயிர்ப்புடனும் மண்ணின் மணத்துடனும் இருக்கும் என்றும், அதன் காரணமாகவே அந்த எழுத்தாளர்களைக் கொண்டாடுவேன்‘ என்றும் அடிக்கடி சொல்லும் பதிப்பாளர் அவர்கள், அந்த எழுத்தையும் எழுத்தாளனையும் அவரால் முடிந்தளவுக்கு வெளி வட்டாரத்தில் அறிமுகம் செய்வதை மகிழ்வுடன் செய்து வருகிறார்.
மண் சார்ந்த எழுத்து எப்போதுமே அந்த மனிதர்களின் உணர்வுகளை வாழ்வியலோடு நம் கண் முன்னே காட்சிப்படுத்தும், அந்த எழுத்தாளர்களை நாம் கொண்டாடுவோம் என்றுதான் இவ்விருதை அறிமுகம் செய்து , ஜூன் மாதம் நடக்கும் கேலக்ஸியின் ஆண்டு விழாவில் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அவர் மதுரை மண்ணின் மைந்தர் என்பதால் கேலக்ஸியின் எழுத்தாளரைப் போற்றும் விருதுக்கு ‘பாண்டியன்‘ என வைத்து, மன்னர் கொடுக்கும் பரிசுகளில் ‘பொற்கிழி‘ எப்போதும் கலைஞர்களுக்கு முக்கியமானதாக இருக்கும் என்பதால் அதையும் சேர்த்து ‘பாண்டியன் பொற்கிழி‘ விருது என ஆக்கிவிட்டார்.
இந்த விருது பெறும் எழுத்தாளருக்கு கேடயமும் 10000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படுகிறது.
இந்த விருதை 2023-ல் எழுத்தாளர் பரிவை சே.குமார் அவர்களும், 2024-ல் எழுத்தாளர் ஆமினா முஹம்மத் அவர்களும் பெற்றிருக்கிறார்கள். இந்த வருடத்துக்கான (2025) விருது எழுத்தாளர் தெரிசை சிவா அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
–கேலக்ஸி குழுமம்


