ஹைக்கூ கவிதைகள்
- வசந்தி முனீஸ்
நிற்கும் மாடு
அசைகிறது
வயிற்றில் கன்றுக்குட்டி
–
ஈன்ற நாய்
வாயில்
சினை முயல்.
–
கடுங்குளிர்
நடுங்காத நடை
கம்பளிப்பூச்சி.
–
அதட்டுகிறாள் அம்மா
குழந்தை தைரியம் சொல்கிறது
பொம்மைக்கு…!
–
சிறுவனின் முதுகிலேறி—
புளியங்காய் பறிக்கிறது
வெள்ளாடு.
–
கூனிக்கிழவி
கையில்
நேரான கைத்தடி.
–
வயலில் கிழவியுடன்
தப்புக்கடலைப் பொறுக்கின்றன
காகங்கள்.
–
பச்சரிசிச் சிரிப்புக்காரி
புழுத்த அரிசி வாங்குகிறாள்
ரேஷன் கடையில் பால்யக்காதலி
***

