தீர்ப்புகள்
இன்றைய
சூழலில் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதற்கான முடிவுகள் எல்லாமே உடனடியாக எடுக்கப்படுகின்றன.
எதையும் தீர ஆராய்ந்து எடுப்பதில்லை, எடுக்க விடுவதில்லை. இது குடும்பங்களில் மட்டுமல்ல,
அரசியல், சமூகம், இனம், மதம் என எல்லா இடத்திலும் இப்போது இப்படித்தான் இருக்கிறது.
எந்தப்
பிரச்சினை என்றாலும் யாரால் பிரச்சினை, எதனால் பிரச்சினை, இதற்கான விதை யாரால் போடப்பட்டது,
இந்தப் பிரச்சினையைத் தூண்டியவர் யார் என்பதை எல்லாம் நாம் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை.
நமக்கு வேண்டியது அந்தப் பிரச்சினைக்கான முற்றுப்புள்ளி, நம்மைச் சார்ந்தோர் மனம் மகிழும்
விதமாய் ஒரு தீர்ப்பு. பாதிக்கப்பட்டவன் எப்படியோ போகட்டும், அவனால் நமக்கு நயாப்பைசா
பிரயோசனமில்லை. வென்றவன் மகிழட்டும் அவனே பின்னாட்களில் நமக்கானவன் என்பதுதான் இப்போதைய
மனிதர்களின் மனநிலை.
எந்த
ஒரு பிரச்சினைக்குமே அவசரத் தீர்ப்பை விரும்புவதைவிட, இந்தப் பிரச்சினையை ஆரம்பத்திலிருந்து
பொறுமையாய், நிதானமாய் அலசி ஆராய்ந்தோம் என்றால் உண்மையில் யார் இதற்குக் காரணம், யார்
பக்கம் தவறு என்பதைச் சரியாக நம்மால் கணிக்க முடியும். நமது தீர்ப்பும் மனநிறவைக் கொடுக்கும்.
பாதிக்கப்பட்டவனும் வாழ்த்துவான். இப்பல்லாம் வாழ்த்துபவனை விட நம் தலைமுறை வாழ வழிவகை
செய்பவனே தெய்வமாகிறான் இல்லையா..?
’12
Angry Man’ ன்னு ஒரு படம். அதுல இளைஞன் ஒருத்தன் கொலை செய்ததாய் கைது செய்யப்பட்டிருப்பான்.
பார்த்த, சப்தம் கேட்ட, கத்தி விற்ற சாட்சிகள் எல்லாம் அவனுக்கு எதிராய் இருக்க, தீர்ப்பெழுதுவது
மட்டுமே பாக்கி. அந்த வழக்கில் இறுதி அத்தியாயத்தை எழுத முன்பின் அறிமுகமில்லாத 12
ஜூரி உறுப்பினர்கள் ஒரு புழுக்கமான அறையில் அமர்ந்து, விவாதித்து ஒரு மணி நேரத்தில்
அவன் குற்றவாளியா இல்லையான்னு முடிவெடுக்கணும். ஒருவனைத் தவிர மற்ற 11 பேரும் அவன்
குற்றவாளின்னு எழுதி முடித்துவிட்டுப் போக நினைக்க, ஒருத்தன் மட்டும் இன்னும் ஒரு மணி
நேரம் இருக்கு. பொறுமையா விவாதிக்கலாம், அதன் பின் முடிவெடுக்கலாம் என்று சொல்லுவான்.
அந்த அறைக்குள் காரசாரமான விவாதம், கோபப் பேச்சுக்கள், கண்ணீர் என ஒரு மணி நேரம் கரையும்
போது 12 பேரும் அவன் குற்றவாளி இல்லை என்பதாய் தீர்ப்பு எழுதுவார்கள்.
அவ்வளவுதான்…
பொறுமையாய் அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள் என்பதுதான் நமது விருப்பமாய் இருக்கிறது.
காலம் அப்படிச் செய்ய விடுமா…? இல்லை நாம்தான் சார்பற்ற தீர்ப்பெழுத முன் வருவோமா..?


