தாய்மொழி
‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ அப்படிங்கிற பழமொழி ஒண்ணு இருக்கு. இதைக் கிராமத்தில் பிறந்தவர்கள் அதிகம் கேட்டு வளர்ந்திருப்பார்கள். இந்தப் பழமொழியை இப்போது தமிழ் படும் பாட்டைப் பார்த்து ‘தாயைப் பழித்தாலும் தமிழைப் பழிக்காதே’ என்று மாற்றிக் கொள்ள வேண்டும் போல. ஆம் இன்று தமிழ் படும் பாட்டைப் பார்த்து மனசு வலிக்கிறது.
தமிழில் பேச வேண்டும், அதுவும் பெரியவர்களிடம் மரியாதையுடன் பேச வேண்டும் என்று வளர்க்கப்பட்ட தலைமுறை, அதற்கு அடுத்த தலைமுறையிடம் தமிழ் பாடுபடுவதைவிட, தமிழே தெரியாமல் ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து வருத்தப்படத்தான் முடிகிறது. இங்கே ஊழலையும் ஊழல் செய்தவர்களையும் கட்டிக் காக்க அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, அதில் இருக்கும் கடைநிலைத் தொண்டன் வரை பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது தமிழை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கும் வந்தேறிகளையும், வாழ்ந்து கொண்டிருப்போர்களையும் கேள்வி கேட்க ஆட்கள் இல்லாமல் இருப்பது கேவலத்தின் உச்சம். இன்று ஊழல், போதை, கொலை எல்லாம் மக்களால் குறிப்பாக தான் சார்ந்த கட்சிக்கு முட்டுக் கொடுக்கும் மக்களால் இயல்பாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது. அப்படித்தான் தமிழின் அழிவுக்கான விதைகூட இயல்பாகிக் கொண்டிருக்கிறது.
இன்றைய தலைமுறைக்கு தமிழ் தெரியாது என்று சொல்வதுதான் மரியாதையாகத் தெரிகிறது. அதுவும் அவர்களைப் பெற்றவர்கள் தனது பிள்ளைகளுக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லும் போது ரொம்பவே மகிழ்வடைகிறார்கள். இன்று நமது கல்வியில் தமிழே படிக்காமல் ஆரம்பப் பள்ளி முதல் கடைசி வரைக்கும் படித்து முடித்துவிட முடியும். எந்த மாநிலத்திலும் தங்களது மொழியை விருப்பப்பாடமாக வைத்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்; அவர்களுக்கு அது கட்டாயப்பாடம், நமக்கோ அது விருப்பப்பாடம் என்றாலும் அது விரும்பாத பாடம் ஆகிவிட்டது. கல் தோன்றா என நாம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான், மெல்ல மெல்ல தமிழைச் சாகடித்து கொண்டிருக்கிறார்கள், நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நமது வேடிக்கையால்தான் என் மதம் எனக்கு தமிழை விட அதிகம் கற்றுக் கொடுத்திருக்கிறது என ஒரு மக்கள் பிரதிநிதியால் பேச முடிகிறது.
இன்னைக்கு நாம் பேசும் தமிழுக்குள் ‘and’, ‘so’, ‘like’, ‘ya’, ‘well’ என்ற வார்த்தைகள் இல்லாமல் யாராலும் பேசமுடிவதில்லை என்பது வருத்தமான விசயம். அப்படிப் பேசுவதுதான் மரியாதை என்ற எண்ணமும் விழுந்துவிட்டது. சமீபத்தில் ஒரு சிறுகதையை தெரிந்த நண்பர் சிறப்பான சிறுகதை எனப் பகிர்ந்திருந்தார். இரண்டு பத்திக்கு மேல் வாசிக்க முடியவில்லை, பெரும்பாலான வார்த்தைகள் அப்படியே தமிழாக்கப்பட்ட ஆங்கில வார்த்தைகள், வாசிக்கும் போது வேப்பெண்ணையைக் குடித்தது போல் இருந்தது. பிலிப்பைனிகளின் மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை என்பார்கள், போகும் போக்கைப் பார்த்தால் நம் மொழிக்கு பேச்சு வடிவம் இல்லாமல் போய்விடும் போல.
தமிழைக் காப்போம்…


