VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: அழகிய ஜிப்ரீன்!!! நிஸ்வா – நிறைவு பகுதி 15
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > தொடர்கள் > அழகிய ஜிப்ரீன்!!! நிஸ்வா – நிறைவு பகுதி 15
தொடர்கள்

அழகிய ஜிப்ரீன்!!! நிஸ்வா – நிறைவு பகுதி 15

இளங்கோ ராமசாமி
Last updated: November 14, 2026 2:27 pm
5 Views
Share
17 Min Read
SHARE

நிஸ்வாவின் நிழலில்

பகுதி – 15. அழகிய ஜிப்ரீன்!!!

  • இளங்கோ ராமசாமி

மஸ்கட்டில் அமைந்துள்ள ‘ராயல் ஓபரா ஹவுஸ்’ (Royal Opera House) ஓமானின் மணி மகுடத்தில் பதித்த மிகப் பெரிய வைரங்களில் ஒன்று. ஐந்து ரியால்கள் நுழைவுக் கட்டணம் செலுத்தி, ஒரு வழிகாட்டியின் துணையோடு அந்தப் பேரெழில் கொஞ்சும் கலையரங்கத்தினுள் நுழையும் எவருக்குமே அதன் பிரமிப்பில் இருந்து விடுபட சில நிமிடங்கள் பிடிக்கும்.

வழிகாட்டியின் பின்னாலேயே வியப்பு மாறாமல் நடந்து கொண்டிருந்தபோது, அவர் எங்களை அந்தப் பிரம்மாண்ட முன்னறையின் (Foyer) மிக உயரமான விதானத்தைப் பார்க்கச் சொன்னார். அங்கு அற்புதமாகச் செதுக்கப்பட்டிருந்த மர வேலைப்பாடுகளைக் காட்டி, “இந்த நுணுக்கமான கலைப்படைப்பின் பின்னணியில் ஒரு வரலாற்று ரகசியம் இருக்கிறது… இது, ஓமானின் பழம்பெரும் ‘ஜிப்ரீன் கோட்டை’ தந்த கலைத் தாக்கம்!” என்று அவர் விவரித்தபோதுதான், ‘ஜிப்ரீன்’ என்ற அந்த மாயாஜாலப் பெயர் என் செவிகளில் முதன்முதலாக விழுந்தது.

வெகு காலம் நிஸ்வாவில் வாழ்ந்திருந்தும் பல முறை ‘நிஸ்வா’ மற்றும் ‘பஹ்லா’ கோட்டைகளைச் சுற்றிப் பார்த்திருந்தும் எனக்கு ஏனோ ‘ஜிப்ரீன்’ கோட்டைக்குப் போக வேண்டும் எனத் தோன்றியதே இல்லை.

அது அளவில் சிறியதென்பது மட்டுமின்றி இங்கு பெரிதாகச் சிலாகிக்கப்படும் புராதானச் சின்னங்கள் இந்தியக் கோட்டைகளின் பிரம்மாண்டங்களுக்கு முன்பு ஒன்றுமேயில்லை என்ற எனது மனதில் உருவாகியிருந்த தவறான எண்ணமே அதற்கான காரணங்கள்.

ஆனால் நான் அதிசயித்து அண்ணாந்து பார்த்து ரசித்த அந்த அழகிய விதானத்தின் பின்புலம் ‘ஜிப்ரீன்’ என்றறிந்த நாள் முதல் அக்கோட்டையை தரிசிக்கப் போகும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தேன்.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு வீட்டில் அடைந்து கிடக்க மொக்கையாக இருக்கிறது என நண்பர்கள் அனத்த, அனைவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு ஜிப்ரீனுக்குக் கிளம்பினேன். நுழைவுச் சீட்டு வாங்கும் இடத்தில் இருந்த இளம் பெண் “வழிகாட்டி சேவை வேண்டுமா?” எனக் கேட்டார். பத்து ரியால்கள் என்ற கட்டணத்தைக் கேட்டதும் “ஆத்தாடி அவ்ளோவா?” என வாயைப் பிளந்தவன், “ஏம்மா பத்து ரியாலுக்குப் பத்துக் கதையாவது கெடைக்குமா?” என்றேன்.

“அதுக்கும் மேலயே சொல்றேன் வாங்க” என அழைத்துச் சென்றார். அவர் எங்களை அழைத்துச் சென்ற அந்த அழகிய சதுரமான கோட்டைக்குள் தான் நமது இன்றைய உலா.

பஹலாவில் இருந்து நிஸ்வா செல்லும் வழியில் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இச்சிறு கோட்டை “மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது” என்ற பழமொழிக்குச் சாலப் பொருந்தும் ஒரு பாரம்பரியச் சின்னம்.

நம்மில் பெரும்பாலானோருக்கு ஆடல் பாடலாக மிகப் பிரம்மாண்டமான வீடு கட்டிப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்ற கனவிருக்கும். ஆனால் ஒரு சிலர் அதற்கு நேர்மாறாகச் சிறுகக் கட்டிப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என விரும்புவர். நிஸ்வா மற்றும் பஹலா என்ற பிரம்மாண்டமான முரட்டுக் கோட்டைகளோடு ஒப்பிட்டால் ஜிப்ரீன் கோட்டை மிகச் சிறியது.

ஆனால் இதன் கட்டிட வடிவமைப்பும், நுணுக்கங்களும், அலங்கார வேலைப்பாடுகளும் அட போட வைக்கும் தனித்துவம் மிக்கவை. எந்தத் திட்டமிடலும் இன்றி ‘நிஸ்வாவின் நிழலில்’ என்ற இக்கட்டுரைத் தொடரின் நிறைவுப் பகுதியாக அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வு. இக்கோட்டையைச் சுற்றி வந்து அதன் வரலாற்றையும் அதன் அருமை பெருமைகளையும் அறிந்து கொண்ட பின்பே நாம் நில்லாவிற்குத் திரும்பப் போகிறோம். அதனால் ஒரு நெடிய வரலாற்றுப் பயணத்திற்குத் தயாராகிடுங்கள்.

ஜிப்ரீன் கோட்டை மூன்றடுக்குகளைக் கொண்டது. உள்ளே நுழைந்தவுடன் சதுரமான ஒரு முற்றம் நம்மை வரவேற்கும். அதற்குக் கூரை கிடையாது. நான்கு புறமும் நெடிந்துயர்ந்த பழுப்பு நிற மண் சுவர்களும், அவற்றில் இருந்து ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் அடர் பழுப்பு நிற மரத்தால் ஆன பலகணிகளும், நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட சாளரங்களும் முன்னணியில் அடுக்கடுக்காக அணிவகுத்து நிற்க, மேகங்களற்ற நீல வானம் பின்னணியில் கண்களைக் கவர நாம் காணும் காட்சி ஒரு வண்ணமயமான வாழ்த்தட்டையைப் போல மனதில் பச்சக்கென ஒட்டிக் கொள்ளும்.

 

இந்த வரவேற்பு முற்றத்தின் மையத்தில் நின்று அண்ணாந்து பார்க்கும்போது மனம் பின்னோக்கிப் பறந்து 17-ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தை அடைகிறது. அதுதான் இக்கோட்டையை நிர்மாணித்த யரூபா வம்சத்தின் துவக்கம். ‘நாசிர் பின் சுல்தான் பின் சுல்தான் அல் யரூபா’ என்பவர் தான் உட்புற ஓமானில் ‘யரூபா’ வம்சத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இமாம் (கி.பி. 1624 முதல் 1649 வரை). அச்சமயத்தில் மஸ்கட்டும், ஓமானின் கடற்கரையோர நகரங்களும் சில உள்நாட்டுப் பகுதிகளும் போர்த்துக்கீசியர் வசம் இருந்தன.

இவரது தலைமையிலான படைகள் போர்த்துக்கீசியர்களுடன் தீரத்துடன் போரிட்டு முதலில் ருஷ்டாக் மற்றும் நக்கல் பகுதிகளை மீட்டன. 1633-ஆம் ஆண்டு அவர் ஜுல்ஃபார் நகரைக் கைப்பற்றினார். அதுதான் இன்று அமீரகத்தில் உள்ள ‘ராஸ் அல் கைமா’ பகுதி. அடுத்த முக்கியத் துறைமுக நகரமான சொஹாரை மீட்டெடுக்க அவருக்கு முழுமையாகப் பத்தாண்டுகள் பிடித்தன.

அப்பெரிய வெற்றிக்குப் பின் அவர் மறைந்துவிட, அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் ‘சுல்தான் பின் சைஃப்’ இமாமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1649ஆம் ஆண்டு பதவியேற்ற கையோடு புதிய இமாம் சூட்டோடு சூடாக மஸ்கட்டை விட்டுப் போர்த்துக்கீசியர்களை வெற்றிகரமாக விரட்டினார். அதனைத் தொடர்ந்து ‘குரியத்’ நகரில் இருந்தும் விரட்டப்பட்ட போர்த்துக்கீசியர்களை மேற்கே ‘குஜராத்’ மற்றும் கிழக்கே ஆப்பிரிக்காவின் ‘மொம்பாசா’ நகரம் என கடல் கடந்து கண்டம் விட்டு கண்டம் போய் விரட்டி விரட்டி வெளுத்தார்.

இப்படியாக யரூபா வம்சத்தின் இரண்டாவது ஆட்சியாளருடைய காலத்தில் ஓமானில் இருந்த போர்த்துக்கீசியர்களின் ஆதிக்கம் முழுமையாக ஒடுக்கப்பட்டது. ஆனால் கி.பி. 6 மற்றும் 7ஆம் நூற்றாண்டு முதலே இபாதிகளின் கலாச்சாரத் தலைநகராகவும் பொருளாதார மையமாகவும் கோலோச்சிய நிஸ்வாவைக் கைப்பற்றி அங்கிருந்து ஆட்சி புரிவதே ஒருங்கிணைந்த ஓமானின் வலிமைக்கு நல்லது என ‘இமாம் சுல்தான் பின் சைஃப்’ மிக முக்கியமானதும் சரியானதுமான முடிவை எடுத்தார்.

அவர் அதன் முதற்கட்டமாக ‘இஸ்கி’ யையும் பின்னர் ‘நிஸ்வா’ வையும் கைப்பற்றினார். ஒரு வலிமையான தலைவனாக உருவெடுத்து, உள்நாட்டில் சண்டையிட்டுக் கொண்டிருந்த பல்வேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்துப் போர்த்துக்கீசியர்களுக்கு எதிராக ஒரு வலுவான ஒமானிய ராணுவத்தைக் கட்டமைத்தார்.

அவர்தான் நாம் முன்பே கண்டு சிலாகித்த நிஸ்வாவின் வலிமை வாய்ந்த 30 மீட்டர் உயரம் கொண்ட புகழ்பெற்ற பிரம்மாண்டமான வட்ட வடிவ கோட்டையைக் கட்டியவர். போர்த்துக்கீசியர்களின் வலிமையான பீரங்கிக் குண்டுகளைத் தாங்கி நிற்கும் உறுதியுடனும், அதையும் மீறி உள்ளே நுழைந்தால் அவர்களைப் பரலோகத்திற்கு அனுப்பும் பல மரணக் கண்ணிகளுடனும் வடிவமைக்கப்பட்ட அக்கோட்டை ஒரு மிகச்சிறந்த அரண்.

அதனை ஒரு அரசனின் மாளிகை என்பதை விட, எதிரிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதைத் தலையாய நோக்கமாகக் கொண்டு ராணுவ மையம் என்று விளிப்பதே பொருத்தம்.

30 ஆண்டு கால நீண்ட மற்றும் மிக வெற்றிகரமான ஆட்சிக்குப் பிறகு ‘சுல்தான் பின் சைஃப் அல் யாரூபா’ 1679-ல் இயற்கை எய்தினார். அதுகாறும் ஒரு இமாம் மறைந்துவிட்டால் நாட்டின் அனைத்து மாகாணங்களில் இருக்கும் மதப் பெரியோர்கள், கற்றறிந்த சான்றோர்கள், வலிமையான ஷேக்குகள் பெருந்தலைகள் அனைவரும் ஒன்று கூடி அடுத்த தகுதிவாய்ந்த இமாதைத் தேர்ந்தெடுப்பதே தனித்துவமான இபாதிசத்தைப் பின்பற்றும் ஓமானிகளின் வழக்கம்.

ஆனால் இரண்டு தலைமுறைகளாகப் போர்த்துக்கீசியர்களை ஒடுக்கி அரபிக்கடல் பகுதியில் வலிமைமிக்க சக்தியாக உருவெடுத்து கடல் வணிகத்தில் கோலோச்சிய ‘யரூபா’ வம்சம் பெரும் செல்வத்தை ஈட்டியிருந்தது. அதனால் இபாதிகளின் வழமையான நடைமுறைக்கு மாறாக இமாமின் மகன் ‘பில்அராப் பின் சுல்தான்’ தன்னை அடுத்த இமாமாக முடிசூட்டிக் கொண்டார்.

இது இபாதிகளிடையே கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. இருந்தும் அவர்களது குடும்பத்தின் பெரும் செல்வத்தையும் வலிமையையும் எதிர்த்து எவராலும் ஒன்றும் செய்ய இயலாத நிலை. போர்கள் எதுவும் இல்லாமல் அத்தனை வலுவான சூழலில் பதவியேற்ற ‘இமாம் பில்அராப் பின் சுல்தான்’-ன் ஆட்சிக்காலம் ஓமானின் பொற்காலம் என அறியப்படுகிறது.

அவர் ஒரு சிறந்த கவிஞர், கற்றறிந்த அறிஞர். கல்விக்கும் கலைகளுக்கும் முக்கியத்துவம் அளித்த புரவலர். நீண்ட நெடிய போர்களுக்குப் பிறகு அமைதி நிலவிய காலத்தில், நிஸ்வா கோட்டை என்ற ராணுவக் கொத்தளத்தில் இருந்து வசதியான, ஆடம்பரமான, மிக அழகானதொரு அரச மாளிகைக்குக் குடிபெயர்ந்து கல்வி மற்றும் கலைகளை வளர்த்தெடுக்கும் ஒரு அர்த்தமுள்ள அமைதியான வாழ்வை விரும்பிய இமாம், நிஸ்வாவில் இருந்து பஹ்லா செல்லும் வழியில் பதினெட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிப்ரீன் கோட்டையைக் கட்டினார்.

அக்கோட்டைக்குள் உள்ள பல்வேறு வசதிகளையும் கலையம்சங்களையும் நேரில் கண்டு ரசிக்கும் முன்பு, நான் அறிந்த கதைகளைக் கேட்டு மனதில் இருத்திக்கொள்வது உங்கள் அனுபவத்தை மேலும் இனிமையாக்கும். எனவே உங்கள் காதுகளைக் கூர்தீட்டிக்கொண்டு மேலதிகக் கவனத்துடன் பின்வரும் கதைகளைக் கேளுங்கள்.

மூன்று தளங்களைக் கொண்ட இக்கோட்டைக்கு இரண்டு கோபுரங்களும் இரண்டு வாயில்களும் உள்ளன. இந்த அரச மாளிகையில் மொத்தம் 55 அறைகள் உள்ளன. கீழ்த்தளத்தில் நாம் உள்ளே நுழைந்தவுடன் நம்மை வியப்படைய வைக்கும் ஒரு இருண்ட, பேரீச்சம்பழ மூட்டைகளை அடுக்கி வைக்கும் பண்டகக் காப்பறை உள்ளது.

அதன் தரைப்பகுதி சமதளமாக இல்லாமல் உருண்டை வடிவ மரக்கட்டைகளைப் குறிப்பிட்ட இடைவெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்படும் பேரீச்சம்பழ மூட்டைகளின் அழுத்தத்தால் அப்படுத்தப்பட்ட பழங்கள் நசுங்கி, அவற்றிலிருந்து வழியும் பழரசம் அந்தச் சிறு இடைவெளிகள் வழி வெளியேறி, ஆங்காங்கே உள்ள ஒரு ஆழமான குழியில் பானைகளை வைத்துச் சேகரித்துக்கொள்ளும் வண்ணம் அந்தப் பண்டகசாலை வடிவமைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியந்தேன். பேரீச்சம்பழ ரசம் உணவுப்பொருளாக மட்டும் இன்றி, கோட்டைக் கதவுகளைத் தகர்த்து எதிரிகள் உள்ளே நுழைந்துவிட்டால் அவர்கள் மீது அதைக் கொதிக்கவைத்து மொட்டை மாடியில் இருந்து உள்ளே நுழைபவர்களின் தலையில் கொட்டி அவர்களைத் தீர்த்துக்கட்டும் பயன்பாட்டுக்காகவும் சேகரித்துவைக்கப்பட்டன.

 

அந்த அறையை அடுத்து வலதுபுறத்தில் இருப்பது சமையலறை. வற்றாது ஓடும் ஃபலஜ் என்ற ஓமானிகளின் புகழ்பெற்ற பாரம்பரிய நீராதாரமான வாய்க்கால் கோட்டைக்கு வெளியில் இருந்து உள்ளே நுழைந்து சமையலறையை ஊடறுத்துப் பாய்ந்து மறுபுறம் கோட்டையை விட்டு வெளியேறுகிறது. அந்த நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பற்றதென்பதால் சமையலறையின் உள்ளேயே குடிப்பதற்கும், சமையலுக்கும் தேவையான நீரைச் சேந்திக்கொள்ள ஒரு கிணறும் உண்டு.

பேரீச்சம்பழப் பண்டக சாலைக்கும் சமையலறைக்கும் இடையே மேல்தளத்திற்குச் செல்லும் வகையில் ஒரு படிக்கட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மிகவும் குறுகிய இப்படிக்கட்டுகள் சேவைப் பணியாளர்களுக்கானவை. மேல்தளங்களில் தங்கியிருப்போருக்கான நீர், உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் இப்படிக்கட்டுகள் வழியாகவே எடுத்துச் செல்லப்படும்.

சமையலறைக்கு எதிர்ப்புறமாக முற்றத்தின் நுழைவாயிலை ஒட்டினாற்போல இடதுபுறத்தில் இமாமின் கல்லறை இருக்கிறது. அதனை அடுத்து இருக்கும் ஒரு அகன்ற நுழைவாயில் தான் முற்றத்தில் இருந்து மேல்தளத்திற்குச் செல்லும் வழி. அங்கு விசாலமான படிக்கட்டுகள் மிகவும் உயரம் குறைந்த வசதியான படிக்கட்டுகள் உண்டு.

சொல்லப்போனால் அப்படிக்கட்டுகளில் அரச குடும்பத்தினரும், முக்கியஸ்தர்களும், மரியாதைக்குரிய விருந்தினர்களும் தங்கள் குதிரைகளையும் கழுதைகளையும் விட்டிறங்காது முதல் தளத்தில் உள்ள அரசவைக் கூடம் வரை செல்ல முடியும். அப்படிக்கட்டுகளின் வளைந்த விதானங்களில் அழகிய வேலைப்பாடுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. உத்திரங்களில் புடைப்புச் சிற்பங்களைப் போல வனவெழுத்துகளாக வடிவமைக்கப்பட்டிருக்கும் திருக்குர்ஆனின் வசனங்கள் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் எந்தச் சேதமும் இன்றிப் பாதுகாப்பாக இருப்பதைக் காண விந்தையாக இருக்கிறது.

அதனை அடுத்து இருக்கும் பகுதிக்குள் நுழைந்தால் ராணுவத் தளவாடங்களைப் பாதுகாக்கும் அறை, வீரர்களின் குடியிருப்பு, குதிரை லாடம் என பல முக்கியப் பகுதிகளைக் காணலாம். இப்பகுதியில் இருந்து ஏதாவது அபாயம் எனில் மேல்தளத்திற்கு வீரர்கள் விரைய மற்றொரு குறுகிய படிக்கட்டும் உண்டு.

எப்படி ஒரு பெரிய கப்பலின் அடித்தளத்தில் அதனை இயக்கும் இயந்திர அறை இருக்குமோ, அதுபோல இக்கோட்டையின் தரைத்தளத்தில் அதன் இதயப் பகுதியாகப் பண்டகசாலை, சமையலறை மற்றும் ராணுவக் கிடங்குகள் அடுத்தடுத்துக் கட்டமைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

கரடுமுரடான தரைத்தளத்தில் இருந்து முதல் தளத்தை அடைந்தவுடன் பணியாளர்கள் புழங்கும் இடத்திற்கும் விருந்தினர்கள், அறிஞர்கள் மற்றும் அரச குடும்பத்தினர் பயன்படுத்திய அறைகளுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசத்தைப் பளிச்சென உணர முடியும்.

தரைத்தளத்தில் இருக்கும் சாளரங்கள் இல்லாத இருண்ட உயரம் குறைவான சிறிய அறைகளுக்கு மாறாக முதல் தளத்தின் அறைகள் விசாலமானவையாகவும் உட்புற முற்றத்தை நோக்கித் திறக்கும் ஏராளமான சாளரங்களுடனும் இருப்பதைக் காணலாம். உயரமான விதானங்களும் அவைகளைத் தாங்கி நிற்கும் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்ட பெரும் மரச்சட்டங்களும் ‘யரூபா’ அரச குடும்பத்தின் செழுமைக்குச் சான்றாக இன்றும் நிற்கின்றன.

இந்த அறைகள் எவ்வளவு கோடைக்காலத்திலும் அரேபியப் பாலை நிலத்தின் வெம்மையிலிருந்து அங்கு குழுமியிருப்போரைப் பாதுகாக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருப்பதை நாம் அங்கு நுழைந்தவுடனே உணர முடியும். முதல் தளத்தில் ஏழு முக்கியப் பகுதிகள் உள்ளன.

முதலாவது மதரஸா. அது கல்வி கற்கும் அறைகள், தோலுறைகளால் பாதுகாக்கப்பட்ட நூல்களை அடுக்கிவைக்கத் தோதான அலமாரிகள், புத்தகங்களை வசதியாக வைத்துப் படிக்கத் தோதான புத்தகத் தாங்கிகள், அறிஞர்களும் மாணவர்களும் தங்குவதற்குத் தேவையான தனித்தனி அறைகள் என அக்காலத்தின் ஒரு உயர்கல்விக் கூடத்திற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடனும் திட்டமிட்டுக் கட்டப்பட்டிருக்கிறது.

அங்கு இஸ்லாமிய சட்டம், மதம், மருத்துவம், வானியல், கவிதை, அரபி இலக்கணம் மற்றும் வரலாறு போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன. கோடையின் கடுமை உச்சத்தில் இருக்கும்போது வகுப்புகள் இரவு நேரத்திற்கும் வகுப்பறைகள் மொட்டை மாடிக்கும் மாற்றப்பட்டதுண்டாம். இந்தப் பகுதிகள், ‘இமாம் பில்அராப் பின் சுல்தான்’ ஒரு திறமையான ராணுவத் தளபதியாக மட்டுமின்றி கல்வியில் ஆர்வம் கொண்டிருந்த ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என்பதையும் புரிந்து கொள்ள உதவும்.

அடுத்த முக்கியப் பகுதி அரச குடும்பத்தினரும் விருந்தினர்கள், அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் இன்ன பிற அரண்மனை வாசிகள் அனைவரும் ஒன்று கூடித் தொழுவதற்குத் தேவையான விசாலமான மசூதி. அதன் தடிமனான சுவர்களில் இஸ்லாமிய பூ வேலைப்பாடுகள் மற்றும் வடிவவியல் அமைப்புகள் புடைப்புச் சிற்பங்களாக வரையப்பட்டிருப்பதைக் காணலாம். இபாதிகளின் கலாச்சாரத்தில் கல்விக்கும், மதத்திற்கும், விருந்துபசாரத்திற்கும் இணையான முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகக் கூறும் போது எங்களது இளம் வழிகாட்டியின் முகத்தில் பெருமிதம் பொங்கியது.

 அப்போது நாங்கள் நின்று கொண்டிருந்தது விருந்துபசார அறை. அது இந்தியாவில் நாம் காணக்கூடிய அரண்மனைகளின் கொலு மண்டபங்களுக்கு ஒப்பானதாக இருக்கக்கூடும்.  அந்த அறையில் தான் இமாம் அரசின் முக்கிய அலுவலர்களைச் சந்தித்து விவாதிப்பது, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெறுவது, இரு தனிப்பட்ட மனிதர்கள், குடும்பங்கள் அல்லது ஊர்களுக்கு இடையேயான பஞ்சாயத்துகளை விசாரித்துத் தீர்த்துவைப்பது, நிர்வாகச் செலவு மற்றும் வரி வசூல் குறித்த கணக்குகளைச் சரிபார்ப்பது என அனைத்து அரச நிர்வாகக் காரியங்களும் நடைபெறும்.

அதனை அடுத்து இருப்பது அயலகத் தலைவர்கள், தூதுவர்கள், நாட்டின் சக்திவாய்ந்த ஷேக்குகள், மதகுருமார்கள் மற்றும் இன்ன பிற அதிமுக்கியமான இமாமைச் சந்திக்க வரும் விஐபிக்கள் தங்குவதற்கான சகல வசதிகளும் பொருந்திய விருந்தினர் மாளிகை.

 இமாமின் குடும்பத்தினர் வசிப்பதற்கான பகுதியும் இதே தளத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. அரச குடும்பப் பெண்களும் குழந்தைகளும் வசிக்கும் இப்பகுதி சற்றே உள்ளடங்கி இருக்கிறது. இப்பகுதி உயரமான தடித்த மரக்கதவுகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதன் சாளரங்கள் அக்காலத்தில் மென்மையான வேலைப்பாடுகளமைந்த திரைச்சீலைகள் கொண்டு மறைக்கப்பட்டிருந்தனவாம். அந்தப் பகுதியில் வாழ்ந்த பெண்களால் கீழே முற்றத்தில் நிகழ்வதைத் திரைச்சீலைகளின் பின்னிருந்து காண முடியும். ஆனால் கீழிருப்போரால் அவர்களின் பர்தா அணிந்த முகங்களைக் காண முடியாது. இவை பெண்களுக்கான தனிமையையும் சௌகரியத்தையும் முன்னிருத்திச் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள்.

இந்த முதல் தளத்திற்கான பாதுகாப்பு அரணாக எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்கும் வீரர்கள் மறைவாக இருந்து காவல் காப்பதற்குத் தேவையான ரகசிய மறைவிடங்களும் பலகணிகளும் உண்டு. கீழே இருக்கும் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புப் பகுதியில் இருந்து எவர் பார்வையிலும் படாமல் இம் மறைவிடங்களை அடைய குறுகிய இருண்ட படிக்கட்டுகளும் உண்டு. இப்பாதுகாப்பு அமைப்புகள் இருப்பதை வெளியார் எவரும் அறியார்.

இத்தளத்திலுள்ள மிக முக்கியமான கடைசிப் பகுதி வழக்காடு மன்றம். இந்த அறைக்குள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் வருவதற்காக ஒரு சிறு துளை மட்டுமே விடப்பட்டுள்ளது. அவர்கள் அத் துளையின் வழியே தவழ்ந்து கொண்டுதான் உள்ளே நுழைய முடியும். விசாரணையின் முடிவில் அவர்கள் நிரபராதி என அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டால், நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளே நுழையும் வழியே நிரபராதிகளும் தலைநிமிர்ந்தவாறே வெளியேறலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வந்த வழியே மீண்டும் தவழ்ந்த நிலையில் வெளியேற்றப்பட்டுத் தரைத்தளத்தில் சிறைச்சாலை என்ற பெயரில் இருக்கும் ஒரு சிறு பொந்துக்குள் அடைக்கப்படுவர். விசாரணைக் கைதிகளுக்கும் அதே பொந்துதான் சிறை. ஆனால் இக்கொடுமைகளெல்லாம் ஆண்களுக்கு மட்டுமே.

குற்றம் சுமத்தப்பட்டவர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவர் பெரிய கதவு வழியேதான் விசாரணைக்கு அழைத்து வரப்படுவார். பெண்களின் மாண்பிற்குக் குந்தகம் வந்துவிடக் கூடாதாம். அதேபோல ஆண்களின் சிறையுடன் ஒப்பிட்டால் பெண்களின் சிறை ஒரு வசதியான விருந்தினர் விடுதி. ஒரு கண்ணில் வெண்ணெயையும் மறு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்திருக்கின்றனர்.

நாம் செல்லப்போகும் இரண்டாம் மற்றும் கடைசித் தளம் தான் கோட்டையின் பென்ட்ஹவுஸ் (Penthouse). அது ‘இமாம் பில்அராப் பின் சுல்தான்’-ன் மாளிகை. அங்குதான் அவருடைய அழகிய படுக்கையறை இருக்கிறது. அவருக்கான பிரத்யேகமான வசதியான குளியலறையும் கழிப்பிடத்தையும் காண முடிகிறது. இமாமின் அறைக்குக் கீழேயே அவரது பட்டத்துக் குதிரையின் லாயம் இருக்கிறது. ஏதாவது ஆபத்து என்றாலோ, அவசரம் என்றாலோ கணநேரத்தில் இமாம் அவருடைய குதிரையில் ஏறிக் கோட்டையை விட்டு வெகு வேகமாக வெளியேறுவதற்காக இந்த ஏற்பாடு.

ஆனால் இவையனைத்தையும் விட ‘குர்ஃபத் அல் ஷம்ஸ் வா அல் கமர்’ (Gurfat Al Shams wa Al Qamar) என்றழைக்கப்படும் அறையே இக்கோட்டை எனும் மணிமுடியை அலங்கரிக்கும் கோஹினூர் வைரமாகும். Shams என்றால் சூரியன், Qamar என்றால் நிலவு. எனவே நாம் இதனைத் தமிழில் சூரிய சந்திர அறை என்றழைக்கலாம்.

இந்த அறையில் தான் இமாம் தனது மிக முக்கியமான விருந்தினர்களையும் அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்து ஆலோசனை நிகழ்த்துவார். இந்த அறையில் அவர்களுக்குப் பின்னாலும், அறைக்குக் கீழும் இமாமின் மெய்க்காப்பாளர் படை வீரர்கள் மறைந்திருந்து கண்காணிக்கும் வகையிலான ரகசிய மறைவிடங்கள் உள்ளன.

 

இமாமுடன் ஆலோசனையில் இருக்கும் எவராவது சதியெண்ணத்துடன் அவரைத் தாக்க முனைந்தால் அவரைக் சுட்டுக்கொல்லவும், கண நேரத்தில் புயல் போல் அவ்வறைக்குள் பாய்ந்து அவரைச் செயலிழக்கச் செய்யவும் தயாராக வீரர்கள் அந்த அறையில் நிகழும் ஒவ்வொரு அசைவையும் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்தவாறே அந்தப் பதுங்கிடங்களில் ஒளிந்திருப்பர்.

இந்த அறைதான் ஓமானி கட்டிடக் கலையின் உச்சம். ராயல் ஓபரா ஹவுஸின் வரவேற்பறை வடிவமைப்பிற்கான ஆதாரமே இவ்வறைதான். இந்தப் பெரிய அறையில் மொத்தம் 14 சாளரங்கள் உண்டு. சுடுகாற்று வெளியேறுவதற்காகவும் சூரிய ஒளி உள்ளே வருவதற்காகவும் மேல் வரிசையில் ஏழு சாளரங்கள். கீழ் வரிசையில் இருக்கும் ஏழும் வெளியே இருக்கும் குளிர்காற்றை உள்ளிழுக்க. அறையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் காற்று வெப்பத்தால் லேசாகி மேலே செல்லும் போது அந்த இடத்தை வெளியே இருந்து உள்ளே வரும் குளிர்காற்று நிரப்பும். இப்படித் தொடர்ச்சியான சுழல் காற்றோட்டம் உறுதிசெய்யப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இந்த அறை எவ்வளவு கோடையிலும் குளிர்ச்சியாகவே இருக்கும்.

இவ்வறையின் விதானத்தை மிகப்பெரிய மரத்தாலான உத்திரங்கள் தாங்கிப் பிடிக்கின்றன. அந்த உத்திரங்களில் மிகப்பெரிய கண் வடிவங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. கடவுளின் கண்கள் என்றழைக்கப்படும் இவற்றின் நோக்கம் நாம் எப்போதும் கடவுளின் கண்பார்வையிலேயே இருக்கிறோம் என்பதை நினைவுபடுத்துவதற்காகவும் நம்மைத் தீய எண்ணங்கள் மற்றும் செயல்களில் ஈடுபடுவதில் இருந்து காப்பாற்றுவதற்காகவாம்.

இவ்வளவு தூரம் வந்தவர்கள் மொட்டை மாடியையும் அங்கிருந்து கோட்டையைச் சுற்றிலும் நேர்த்தியாக நட்டு வளர்க்கப்பட்டுள்ள பசுமையான பேரீச்சை மரங்களின் அழகைத் தரிசிக்காமல் சென்றால் எப்படி? இன்றைக்கும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பொட்டல் வெளியாகக் கிடக்கும் அந்த இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கம்பீரமாக நின்ற அவ்வளவு பெரிய கோட்டையைக் கண்டவர்கள் எப்படிப் பிரமித்துப் போய்ப் பார்த்திருப்பார்கள்!

இவ்வளவு சிறப்பு மிக்க கோட்டையைக் கட்டி பேரும் புகழுமாக ஆட்சி புரிந்து வந்த இமாமை எதிர்த்து அவருடைய இளைய சகோதரரே இக்கோட்டையை முற்றுகை இட்டது தான் இக்கதையின் நகை முரண். 13 வருடங்கள் ஓமானை ஆண்ட இமாம் பில் அராப் பின் சுல்தான் இந்த முற்றுகையால் மன முடைந்து இறந்து போனார். அவரது உடல் தரைத்தளத்தில் இருந்த அவருக்குப் பிரியமான பிரார்த்தனை அறையிலேயே அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவிற்குப் பின் எந்த வித எதிர்ப்பும் இன்றி ‘ஜிப்ரீன்’, ‘சுல்தான் பின் சைஃப்’-ன் வசம் வீழ்ந்தது.

ஒருவேளை நீங்கள் இதுவரை ஓமானுக்கோ நிஸ்வாவிற்கோ வந்ததில்லை என்றால், இந்தக் கடைசி அத்தியாயத்தைப் படித்து முடிக்கும் போது, உங்கள் மனதில் “வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக வாழ்வில் ஒரு முறையேனும் இங்கு வந்து இக்கட்டுரைகளில் வாசித்து ரசித்த இம்மண்ணின் பெருமைகளை நேரில் காண வேண்டும்” என்ற ஆசை விதை முளைவிட்டிருக்கும் என நம்புகிறேன். அப்படி ஒருகால் நீங்கள் இங்கு நேரில் வந்தால் இத்தேசத்தின் இயற்கை அழகையும், இம்மக்களின் மாண்பையும், புராதனச் சின்னங்களையும் கண்டு நீங்கள் பிரமித்துப்போவது உறுதி.

ஜிப்ரீனில் இருந்து நிஸ்வாவிற்குத் திரும்பினால் இப்பயணத் தொடருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருக்கும் என்பதாலும்; இன்னும் நிஸ்வாவைச் சுற்றி நான் பார்க்காத ‘பிஸ்யா’ மற்றும் ‘சலூட்’ போன்ற கீழடிக்கு நிகரான இடங்களும், அவற்றைப் பற்றி நான் அறியாத கதைகளும் கொட்டிக் கிடப்பதாலும் அழகிய ஜிப்ரீனின் மேல்தளத்தில் இருந்து இத் தொடரை முடிக்காமலே உங்களிடம் பிரியாவிடை பெற்றுக் கொள்கிறேன். பயணங்களுக்கும், கதைகளுக்கும் முடிவெழுத முடியுமா? 

‘நிஸ்வாவின் நிழலில்’ என்ற இச் சிறு படைப்பிற்குக் ‘கேலக்ஸி. என்ற பெரும் விண்மீன் கூட்டத்தில் ஒரு துளியாக மின்ன இடமளித்த ஆசிரியர் குழுவிற்கும், கட்டுரைகளின் நீளத்தைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தொடரை வாசித்துப் பாராட்டி உற்சாகமளித்த வாசகப் பெருமக்களுக்கும், பதிப்பாளருக்கும், விண்மீன் இதழின் வடிவமைப்பாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நல்ல கதைகளை விதைகளாகத் தூவி பெரும் விருட்சங்களை வளர்த்தெடுப்போம்!!!

அயர்ச்சியுற்ற மனங்களுக்கு நிழல் தரும் சோலையாக நமது சமூகத்தைக் கட்டமைப்போம்!!!

வாழ்க தமிழ்!!!

வளர்க தமிழ் அறம்!!!

ஓங்குக தமிழர் வாழ்வு!!!

(நிறைவுற்றது)

*****

மிகச் சிறப்பானதொரு கட்டுரைத் தொடரை எழுதிய எழுத்தாளர் திரு. இளங்கோ ராமசாமி அவர்களுக்கு நன்றி. நிஸ்வா குறித்து மிகச் சிறப்பான பார்வையை, அழகான படங்களுடன் தொடர்ந்து பதினைந்து அத்தியாயமாய்த் தந்ததற்கு விண்மீன் சார்பாக வாழ்த்துகளும் நன்றியும்.

 

You Might Also Like

இந்தியர் வீதி – அத்தியாயம் 3
சிலேடையில் சிக்கிய சோழம் – பகுதி 2 ஏகவீரியின் இருள் புன்னகை
வசந்தி முனீஸ் – ஹைக்கூ
பச்சைமலை!!! நிஸ்வா – பகுதி 7
பேசக் கூடாது – பெஸ்கி ஹாஸ்டல்
TAGGED:Seriesகட்டுரைதொடர்கள்நிஸ்வாவிண்மீன் அக்டோபர் 2026
Previous Article பகுதி 4: நட்சத்திர சாட்சி – சிலேடையில் சிக்கிய சோழம்
Next Article நாம் ஏன் சினிமா பிரபலங்களைக் கொண்டாடுகிறோம்?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (17) கட்டுரைகள் (29) கவிதைகள் (36) குறுநாவல் (1) சிறுகதைகள் (92) திரைப் பார்வை (13) தொடர்கள் (26) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (16) புத்தகப் பார்வை (43) விண்மீன் மின்னிதழ் (17)

பதிவுகள்

  • November 20265
  • October 202619
  • September 202613
  • August 202612
  • July 202617
  • June 202620
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?