VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: சிலேடையில் சிக்கிய சோழம் – பகுதி 2 ஏகவீரியின் இருள் புன்னகை
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > தொடர்கள் > சிலேடையில் சிக்கிய சோழம் – பகுதி 2 ஏகவீரியின் இருள் புன்னகை
தொடர்கள்

சிலேடையில் சிக்கிய சோழம் – பகுதி 2 ஏகவீரியின் இருள் புன்னகை

தப்பிக்க வழியின்றி, அந்த உருவம் இருளில் அவர்கள் மீது பாய்வதற்குத் தயாராக நின்றது!

கங்கா
Last updated: September 3, 2026 5:24 pm
12 Views
Share
13 Min Read
ஏகவீரியின் இருள் புன்னகை
SHARE

பகுதி 2: ஏகவீரியின் இருள் புன்னகை

கங்கா (காங்கேயன் பசுபதி)

முன்கதை சுருக்கம்: நாகைப் பெருந்துறையில் சோழ ஒற்றன் சாத்தன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறான். அவனது கைவசமிருந்த ஓலை, காதல் கவிதை போலத் தெரிந்தாலும், உண்மையில் சோழரின் கடாரப் படையெடுப்புத் திட்டத்தை மறைத்துக் கூறும் சங்கேதக் குறியீடு என்பதை வீரசோழி கண்டறிகிறாள். ‘கங்கா’ எனும் புனைபெயரில் இயங்கும் துரோகி ஒருவன் சோழப்படையின் போர்த் திட்டத்தை எதிரிகளுக்கு விற்று வருவதை அந்தக் கவிதை உறுதிப் படுத்துவது போல் இருக்கிறது.

இனி….

சாத்தனின் உறைந்த உதிரமும், அந்தச் சிலேடைச் சுவடியும் நாகப்பட்டினத்தின் காரிருளை இன்னும் அடர்த்தியாக்கின. ஒற்றர்களின் வலை பின்னப்படும் அந்த இருளில், மறைபொருள் ஆய்வாளர் வீரசோழியின் பார்வை காரிருளையும் பிளந்து, வீரமாறனின் முகத்தில் மறைந்திருக்கும் உண்மையைத் தேடியது. அவள் விழிகள், தீப்பந்த ஒளியிலும் சலனமற்று நின்ற வீரமாறனின் முகத்தில் எழும் நுட்பமான உணர்வு மாற்றங்களையும் கூர்ந்து நோக்கின. வீரமாறன், போர்க்களத்தின் ஆயிரம் வாள்வீச்சுகளைக் கண்டவன். உள்ளத்தின் தத்தளிப்பை முகத்தில் சற்றும் வெளிக்காட்டாமல், பெரும் பாறையைப் போலக் கலக்கமின்றி நின்றான்.

 “உண்மைதான் தேவி,” வீரமாறனின் குரல், காற்றைக் கிழிக்கும் கூர்வாள் எனத் துல்லியமாக ஒலித்தது. “இக்கவிதையைப் படைத்தவன் ஏதோ வெறுமொரு கவிஞனல்ல. பேரறிஞன், அதே சமயம் பெரும் பித்தன். சாத்தனின் கையில் இந்தச் சுவடி எப்படிச் சேர்ந்தது, இதைத் தந்தது யார் என்பதைக் கண்டறிந்தால், அந்த நிழல் மனிதன் கங்காவை நாம் நெருங்கிவிடலாம்.”

“அப்படியானால் நம் படையிலேயே வஞ்சகன் புகுந்துவிட்டானா?” பழையனின் குரலில் நஞ்சு கலந்திருந்தது. அவனது விரல்கள் வாளுறையை இறுகப் பற்றின. அவனது கன்னத்துத் தழும்பு சினத்தில் துடித்தது. “போர் முரசறைந்து வேளைக்காரப் படையினரை அணிதிரட்டுங்கள். அந்த ‘கங்கா’ எவன் என்று கண்டறிந்து, அவன் தலை நாகப்பட்டினத்து வீதியில் உருளட்டும்!”

வீரசோழி ஓலையை மார்போடு அணைத்துக்கொண்டாள். “வேண்டாம் பழையா! முரசறைந்தால், எலி வளையில் ஒளிந்து கொள்ளும். அல்லது, வலையறுத்துத் தப்பிச் செல்லும். இதனைப் பொறுமையுடனும் நிதானத்துடனும் தான் சீர்தூக்க வேண்டும்.”

அவர்கள் பூவணத்தின் விடுதியை நோக்கி நடந்தனர். தூரத்தில், கடாரப் படையெடுப்பிற்காக உயர்ந்து நிற்கும் நாற்பது துடுப்பாட்கள் இழுத்த நாவாய்களின் மீது, தச்சர்களின் உளி ஓசை அந்திச் செவ்வானத்தின் காற்றில் கலந்தது. அந்த ஓசையினூடே போருக்கு முந்தைய நிசப்தமும் கனத்து நின்றது.

பழையன் அந்த மரக்கலன்களையே வெறித்தான். “எல்லோருக்கும் இந்தக் கப்பல்கள் நாளைய வெற்றியின் அடையாளமாகத் தெரியலாம். எனக்கோ… இவை அறத்தின் பெயரால் நாம் கொடுக்கவிருக்கும் மாபெரும் பலியாகத் தோன்றுகின்றன. ஒவ்வொரு முறையும் நாவாய்கள் கடலில் இறங்கும்போதும், நம் சோழத்து இளைஞர்களின் குருதியைக் குடிக்கக் கடல் காத்திருக்கிறதே என என் நெஞ்சம் பதறுகிறது.”

“இவற்றால்தான் நம் கடல்வழி மீளும்,” வீரமாறன் அமைதியாகப் பதிலளித்தான்.

“மீண்டும் மீட்கப்பட வேண்டிய வழி என்றால்… அது நிஜமாகவே நமதா?” பழையனின் குரலில் மெய்ம்மையை விடக் கசப்பே மேலோங்கியிருந்தது.

அவனது இந்தக் கசப்பான வினாவைக் கேட்டு வீரசோழியின் புருவங்கள் சுருங்கின. அவள் வீரமாறனை ஏறிட்டு, “சாத்தன் கடைசியாக எங்கு சென்றான் என்பதை நாம் அறிய வேண்டும் தண்டநாயக்கரே,” என்றாள்.

பக்கத்திலிருந்த மூத்த வீரன் கோதண்டன் சற்றே முன்வந்து, “நேற்றிரவு சாத்தன், ஏகவீரி பூவணத்தின் விடுதிக்குச் சென்றதை நான் கண்டேன்,” என்று உரைத்தான்.

விசாரணை தீவிரமடைந்த அந்த வேளையில், வேளைக்காரப் படை வீரர்களின் கூட்டத்திலிருந்து நிழல் ஒன்று, எவருக்கும் தெரியாமல் இருளுக்குள் நழுவியது.

துறைமுகத்தின் இருண்ட முனையில், நங்கூரமிட்டிருந்த அயல்நாட்டுப் பெருங்கலத்தின் நிழலில் அநங்க தேவன் காத்திருந்தான். நிலவின் ஒளியில் அவனது கைக் கங்கணம் மின்ன, நெடிய நிழலொன்று நெருங்கியது. அது பழையன் அல்ல, பழையனால் அனுப்பப்பட்ட மூத்த தானைத்தலைவன். கடாரத்து வேந்தன் சங்கிராம விஜயதுங்கவர்மன் விடுத்திருந்த திருமுகத்தை அநங்க தேவன் காட்டினான். அவனது வலது கைக் கங்கணத்தில் பொறிக்கப்பட்டிருந்த கடாரத்தின் ‘யாழி’ அடையாளம் நிலவொளியில் மின்னியது.

அதைப் பெற்றுக்கொண்ட அந்தச் சோழத் தானைத்தலைவனின் குரல் இருளில் தாழ்ந்தது: “உங்கள் வேந்தர் என்னை நம்புகிறார். ஆனால் நான் நம்புவது வேறு. இந்தப் பேரரசு கடாரத்தை வீழ்த்தினால், அடுத்தது ஸ்ரீவிஜயமும், பல்லவமும், ஈழமும், ஒவ்வொரு நாடாக விழும். அது வீரமாறனின் கவிதை அல்ல. ராஜேந்திரரின் கடலாதிக்கப் பெருவேட்கை. நான் சோழ நாட்டை விற்கவில்லை. சோழப் பேரரசின் அடங்காப் பசியை அடக்கவே கடாரத்துடன் கைகோர்த்தேன்.” அவன் சாத்தனிடமிருந்து கைப்பற்றிய திருமுகத்தை நீட்டினான். “இதன் குறிக்கோள் மாநக்கரம் (சோழர் வரலாற்றில் “மாநக்கரம்” அல்லது கல்வெட்டுகளில் மாநக்கவாரம் எனக் குறிப்பிடப்படுவது இன்றைய நிக்கோபார் தீவுகளைக் குறிப்பதாகும்). இதை உங்கள் வேந்தருக்குத் தெரிவியுங்கள். ஆனால் சோழர்களை அவர்கள் வலையிலேயே வீழ்த்த எனக்கு இன்னும் சில பகடைக்காய்கள் தேவை. அதனால், இந்தச் சுவடி இன்னும் சில காலம் என் வசமே இருக்கட்டும்.”

சோழர்களின் முந்தைய படையெடுப்பில் தன் குடும்பத்தை இழந்தவன் அநங்க தேவன். “சோழக் கூர்ப்புகள் என் ஊரின் துறைமுகத்தைக் கிழித்தபோது, என் தந்தையின் மரக்கலமும், அதனுள் அவரும் கடலுக்கடியில் புதைந்தார்கள். அந்தக் கடன், இந்தச் சோழத்தின்மேல் எனக்கு உரியது,” என்று தனக்குள் முணுமுணுத்தான். வெறும் வஞ்ச நெருப்பல்ல, ஆறாத ஒரு பழைய காயமும் சேர்ந்தே அவனை இருளில் இழுத்துச் சென்றது.

துறைமுகத்திலிருந்து பூவணத்தின் விடுதிக்குத் திரும்பிய அநங்க தேவன், தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு புறப்பட முனைந்தான். அப்போது பூவணம் அவனது வழியை மறித்தாள். அவளது பார்வையில், அநங்க தேவனை ஊடுருவும் அந்தச் சிலந்தி வலைத் தந்திரம் தெரிந்தது.

“கடலோடி ஐயா, இவ்வேளையில் வடக்குத் துறைமுக வாயில் மூடப்பட்டிருக்கும். மாமன்னரின் சுங்கக் காவலர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.”

அது அப்பட்டமான பொய். ஆனால் அந்தப் பொய்தான் அவளுக்குத் தேவையான கால அவகாசத்தைப் பெற்றுத் தந்தது. வீரமாறனும் வீரசோழியும் விடுதியை அடைந்து அவனது மாடி அறையைச் சோதனையிடப் போகிறார்கள் என்பதை அந்த நேரத்தில் அந்த மாயக்காரி மட்டுமே அறிந்திருந்தாள்.

 

அநங்க தேவனும் அந்தத் தளபதியும் இருளில் சந்திப்பதை, விடுதியின் மேல்மாடி பலகணியிலிருந்து பூவணம் கவனித்திருந்தாள். அவள் வெறும் விடுதிக்காரி அல்ல. அந்த விடுதியின் வலைகளில் பதுங்கியிருக்கும் சிலந்தி. கொற்கையின் முத்துக்குளிப்பவர்கள், துறைமுகத்தில் மீன் விற்கும் வலையர் குலத்துப் பெண்கள், வீதி வீதியாகப் பாடித் திரியும் பாணர்கள் என நாகப்பட்டினத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் அவளது கண்கள் விழித்திருந்தன. அரண்மனை அதிகாரிகளின் ஒற்றர்களை விட, எளியவர்களின் இந்த மறைவுப் பிணைப்பே ஏகவீரி பூவணத்தின் ஒற்றர் வலைப்பின்னலுக்கு ஆணிவேராக அமைந்திருந்தது. “சிலந்தி தன் வலையைத் தொட்டவுடன் பாய்ந்துவிடாது… எப்போது இரையை வீழ்த்த வேண்டும் என்று காத்திருக்கும். நாகப்பட்டினத்தின் ஒவ்வொரு நாடியும் எனக்குத் தெரியும். ஏனென்றால், இந்த நகரமே நான் பின்னிய வலை.” என்று அவள் அடிக்கடி கூறுவதுண்டு. கீழே அந்தச் சோழத் தளபதி ஓலைச்சுவடியைக் காட்டிய அந்த நொடியில், தன் கையிலிருந்த பூமாலையின் இரண்டு மல்லிகைகளை மெல்ல முறித்தாள். அருகிலிருந்த பணிப்பெண் அதனை அமைதியாக எடுத்துச் சென்றாள்.

நாகப்பட்டினத்து ஒற்றர்களுக்கிடையே அந்த மல்லிகை முறிப்பிற்குப் பொருளுண்டு: ‘சோழர் உடை அணிந்தவன் கடாரருடன் பேசினான்.

இருளில் மின்னிய யாழி அடையாளத்தையும் அவள் கணப்பொழுதில் உணர்ந்துகொண்டாள். ஆனால் அவசரத்தில் இருந்த யாருக்கும் அவளது பார்வையோ, அதன் பின்னாலிருந்த நுட்பமான அமைதியோ உறைக்கவில்லை.

விசாரணைக்காக வீரமாறனும் வீரசோழியும் விடுதியை நோக்கி நடந்தனர். அந்திச் சூரியன் செக்கச்செவேலெனத் தொடுவானத்தில் பவழக் கடலெனப் புதைந்தான்.

துறைமுகத்தை ஒட்டிய வணிக வீதி அப்போதும் களைகட்டியிருந்தது. கடாரத்திலிருந்தும் ஈழத்திலிருந்தும் வந்த வணிகர்கள் கற்பூரமும் கிராம்பும் நிறைந்த மூட்டைகளைப் பண்டகசாலைகளில் இறக்கினர். வணிகச் சாவடியின் முன்னால் சீனப் பட்டுகளுக்குச் சோழ நாட்டுப் பெண்கள் பேரம் பேசும் சத்தம், தச்சர்களின் சுத்தியல் ஓசையோடு, பரதவர்களின் ஏற்றிசையும் அந்திக் காற்றில் கலந்தது. வீதியோரப் பிள்ளையார் கோயிலின் மணியோசை ஒலிக்க, வணிகர்கள் கடற்பயணத்திற்கு முன் காசுகளைக் காணிக்கையிட்டு வழிபட்டுத் திரும்பினர். நாகப்பட்டினம் வெறுமனே துறைமுகம் அல்ல. திசையெட்டிலிருந்தும் மரக்கலங்கள் வந்து கூடும் பெருந்துறை.

அகில் மற்றும் புகையிலையின் வாசனையோடு, தீப்பந்தங்களின் செந்நிற ஒளியில் விடுதி ஒரு மாயலோகம் போலக் காட்சியளித்தது. மையத்தில் பட்டுப் பீடத்தில் அமர்ந்திருந்தாள் ஏகவீரி. இடது கன்னத்தில் சிறு வடு, உலகின் மர்மங்களை ஒளித்துவைத்த கண்கள் என அவளது மிடுக்கு அலாதியானது.

வீரமாறனும் வீரசோழியும் உள்ளே நுழைவதைக் கண்டவள், மெல்லிய புன்னகையோடு வரவேற்றாள். “சோழ நாட்டு மாவீரருக்கும், அறிவுக் களஞ்சியமான தேவிக்கும் இந்த ஏகவீரியின் குடிலில் என்ன வேலை?” அவளது குரலில் நயமும் நக்கலும் இழையோடியது.

 “சொல்லாடல் இப்போது வேண்டாம் பூவணம். நேற்றிரவு சாத்தன் இங்கு வந்தானா?” வீரமாறனின் குரலில் அதிகாரம் தெறித்தது.

பூவணம் மெல்லப் பெருமூச்சு விட்டாள். அவளது கண்கள் வாசலை நோட்டமிட்டன. “வந்தான் தண்டநாயக்கரே. ஆனால் தனியாக வரவில்லை. அவனோடு நிழல் அரவமொன்றும் வந்தது. முகம் எனக்குத் தெரியாது. ஆனால் சற்று முன் இருளில் அவன் வேறொருவனோடு நின்றபோது, அவன் கங்கணத்தில் முத்திரையொன்று மின்னியது. கடாரத்து ‘யாழி’ அடையாளம்.”

சாதாரண விடுதிக்காரிக்கு எதிரி நாட்டு ஒற்றர்களின் முத்திரைகள் எப்படித் தெரியும்? வீரசோழியின் உள்ளத்தில் கேள்வியெழுந்தாலும், அவசரத்தில் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

வீரமாறனின் நெற்றி சுருங்கியது. யாழி! கடாரத்து ஒற்றர்களின் அடையாளம். சாத்தனைக் கொன்றது கடாரத்து ஒற்றனாகத்தான் இருக்க வேண்டும். பேரரசின் இதயப் பகுதிக்குள் எதிரி நாட்டு நச்சுப்பாம்பு நுழைந்துவிட்ட பேராபத்து அவனுக்குப் புரிந்தது.

“அவன் எங்கு சென்றான்?” அவசரமாகக் கேட்டான் வீரமாறன். பூவணம் விடுதியின் மேல்மாடியிலிருந்த ஓர் இருண்ட அறையைச் சுட்டிக்காட்டினாள்.

வீரமாறனும் வீரசோழியும் மரப்படிகளில் வேகமாக ஏறினர். அந்தச் சிறிய அறையில் மரப்பேழை ஒன்று உடைந்து சிதறிக் கிடந்தது. சாத்தன் எதையோ தேடியிருக்கிறான், அல்லது எதிரியிடமிருந்து எதையோ காப்பாற்ற முயன்றிருக்கிறான் என்பதை அந்த அலங்கோலம் பறைசாற்றியது.

பலகணி வழியே விழுந்த நிலவொளியில் நின்று, தான் இன்னும் மார்போடு அணைத்திருந்த அந்த ஓலையை வீரசோழி மீண்டும் விரித்தாள். “செவ்வானம் கார்த்திகைமீன் சேர்ந்தவங்கம் திரும்ப…” மைதீட்டிய அவளது கண்கள் சுருங்கின. “கவிதை கங்காவினுடையதாக இருக்கலாம். ஆனால், இதில் இழையோடும் கடல் நீரோட்ட அறிவு சாதாரணப் புலவனுக்கு வாய்க்கக் கூடியதல்ல.”

வீரமாறனின் நெஞ்சு படபடத்தது. வீரசோழி தொடர்ந்தாள். “கார்த்திகை விண்மீன் மறையும் வேளையில், கடல் நீரோட்டம் மாறும் துல்லியமான கணத்தைக் கவிதையில் வடித்திருக்கிறான். இத்தகைய கடலறிவு வாய்ந்தவன் மாலுமியாக இருக்கலாம், அல்லது ஒட்டுமொத்த சோழக் கடற்படையின் நகர்வுகளையும் தன் விரல் நுனியில் வைத்திருக்கும் தளபதியாகத்தான் இருக்க வேண்டும்.” மெல்லத் தலை நிமிர்ந்து, தன் எதிரே நின்றிருந்த வீரமாறனை ஊடுருவிப் பார்த்தாள். அதுவரை அவள் சிந்தனையில் தனித்தனியாக நின்ற போர்வீரனும் கவிஞனும், இப்போது ஒன்றோடொன்று கலந்து புதியதோர் உருவம் பெறத் தொடங்கின.

“தேவி…” வீரமாறனின் குரல் தழுதழுத்தது.

வேறு எதுவும் சொல்வதற்குள், வாசலில் மெல்லிய காலடி அரவம் கேட்டது.

வீரமாறன் மின்னலெனத் திரும்பினான். அங்கே இருளில் கருஞ்சிறுத்தையைப் போல ஓர் உருவம் பதுங்கியிருந்தது. அதன் கையில் மின்னிய, கடாரத்து ஒற்றர்கள் மட்டுமே பயன்படுத்தும் அலைவடிவ நச்சுக்குறுவாளில், சாத்தனின் உதிரம் இன்னும் காய்ந்திருக்கவில்லை. தப்பிக்க வழியின்றி, அந்த உருவம் இருளில் அவர்கள் மீது பாய்வதற்குத் தயாராக நின்றது!

 (தொடரும்…)

செவ்வியல் தமிழ் அகராதி

கங்கா (காங்கேயன் பசுபதி) எழுதியுள்ள இக்கதையில் இடம்பெற்றுள்ள செவ்வியல் தமிழ் மற்றும் வரலாற்றுச் சொற்களுக்கான விளக்கங்கள்:

  1.       வணிகலன்கள் – வணிகம் + கலன்கள் = வணிகலன்கள்.

பொருள்: வியாபாரக் கப்பல்கள். “வணிகம்” என்றால் வியாபாரம். “கலன்” (கலன்கள்) என்பது இந்த இடத்தில் “கப்பல்” அல்லது “படகுகள்” என்ற பொருளைக் குறிக்கிறது. இலக்கியங்களில் கடல்வழி வணிகம் செய்த கப்பல்களைக் குறிக்க “கலம்”, “மரக்கலம்”, “வணிகலன்” போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

  1.       நாவாய்

பொருள்: பெரிய அளவிலான கப்பல். பழந்தமிழர்கள் தொலைதூரப் பயணங்களுக்கும் போர்களுக்கும் பயன்படுத்திய மிகப்பெரிய கடற்பயணச் சாதனம்.

  1.       சுவடி / ஓலைச்சுவடி

பொருள்: பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட பண்டைய ஆவணங்கள் அல்லது நூல்கள். காகிதம் புழக்கத்திற்கு வருவதற்கு முன் தமிழர்களின் முதன்மை எழுத்து ஊடகம்.

  1.       சிலேடை

பொருள்: ஒரு சொல் அல்லது தொடர் பல பொருள்படும்படி அமைவது. இரட்டுறமொழிதல் என்றும் அழைக்கப்படும்.

  1.       ஒற்றர் / ஒற்றன்

பொருள்: வேவுகாரர், உளவாளி. எதிரிகளின் ரகசியங்களை அறிந்து வந்து அரசனுக்கோ அல்லது தளபதிக்கோ தெரிவிக்கும் மறைமுகமான பணியாளர்.

  1.       நாழிகை

பொருள்: பண்டைய தமிழர்களின் கால அளவை. ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களைக் குறிக்கும். ஒரு நாளுக்கு 60 நாழிகைகள்.

  1.       பாயமரம்

பொருள்: காற்றின் விசையைப் பயன்படுத்தி கப்பலை இயக்குவதற்காகத் துணிகளால் கட்டப்பட்ட மரம்.

  1.       வேளைக்காரப் படை

பொருள்: சோழ அரசர்களின் மெய்க்காப்பாளர் படை. அரசனுக்காக எந்த நேரத்திலும் (வேளையிலும்) உயிரைக் கொடுக்க சித்தமாக இருக்கும் பிரத்யேகப் படையினர்.

  1.       வியூகம்

பொருள்: போர்த்தந்திர முறை. போர்க்களத்தில் படைகளை அணிவகுத்து நிறுத்தும் முறை.

  1. கடாரம்

பொருள்: தற்போதைய மலேசியாவின் கெடா (Kedah) மாநிலத்தைக் குறிக்கும் பண்டைய பெயர். ராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுத்து வென்றதால் ‘கடாரம் கொண்டான்’ எனப் பெயர் பெற்றார்.

  1. ஈழம்

பொருள்: இலங்கையின் பண்டைய தமிழ் பெயர்.

  1. அந்தப்புரம்

பொருள்: அரண்மனையில் அரச குடும்பத்துப் பெண்கள் மற்றும் மகாராணிகள் வசிக்கும் தனியான, பாதுகாப்பான உட்பகுதி.

  1. சேனாபதி / தளபதி

பொருள்: படைகளை வழிநடத்தும் முதன்மைத் தலைவர்.

  1. முரசு

பொருள்: போர்க் காலங்களிலும், அரச அறிவிப்புகளின் போதும் ஒலிக்கப்படும் பெரிய தோல் வாத்தியம்.

  1. நீரோட்டம்

பொருள்: கடலில் நீரின் ஓசை அல்லது நகர்வு. மாலுமிகள் நீரோட்டத்தை வைத்து திசையையும், கரையின் தூரத்தையும் கணிப்பார்கள்.

  1. சுக்கான்

பொருள்: கப்பலைத் திசைதிருப்பப் பயன்படும் கருவி.

  1. திருவாய்க்கேழ்வி

பொருள்: சோழர் கால அரச நிர்வாகத்தில் ஒரு முக்கியப் பதவி. அரசர் தன் திருவாயால் நேரடியாகக் கூறும் ஆணைகளைக் கேட்டு (கேள்வி), அவற்றை ஓலைகளில் எழுதுபவர் அல்லது நடைமுறைப்படுத்துபவர்.

  1. சாவகம்

பொருள்: பண்டைக்காலத்தில் ‘ஸ்ரீவிஜயப் பேரரசின்’ தலைநகராக விளங்கிய இன்றைய இந்தோனேசியாவின் சுமத்திரா தீவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பெயர். இது நறுமணப் பொருட்கள், வாசனை திரவியங்கள் ஏற்றுமதிக்காகச் சிறப்புற்றிருந்த புகழ்பெற்ற கடல்சார் வணிக மையம்.

  1. நாகை

பொருள்: நாகப்பட்டினம், பண்டைய சோழர் காலத்தில் கடல் வாணிகத்தில் முக்கியப் பங்கு வகித்த நகரம். முக்கியத் துறைமுகமாகவும், பல பௌத்த விகாரைகளைக் கொண்ட மையமாகவும் இருந்தது.

  1. புலிக்கொடி

பொருள்: சோழர்களின் அரச சின்னம் மற்றும் போர்க் காலங்களில் பயன்படுத்தப்பட்ட கொடி. சோழப் பேரரசின் பெருமையையும், வீரத்தையும், அதிகாரத்தையும் பறைசாற்றும் சின்னமாக இது விளங்கியது.

  1. ஸ்ரீவிஜயம்

பொருள்: தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக இன்றைய இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய, கடல் கடந்த பேரரசு. இது கடல்சார் வர்த்தகத்தின் மையமாகத் திகழ்ந்தது. சோழப் பேரரசின் முக்கிய எதிரியாகவும், போட்டி நாடாகவும் விளங்கியது.

  1. புரவி

பொருள்: குதிரை

  1. ஓலை

பொருள்: பண்டைய காலத்தில் எழுத உபயோகப் படுத்திய பனை ஓலை.

  1. கைச்சாத்து இட்டு

பொருள்: கையால் சின்னம் இட்டு

  1. கல்பண்டாரம்

பொருள்: கோயில்களில் பொன்னையும் மணியையும் பாதுகாக்கும் கருவூலங்களுக்குக் ‘கல்பண்டாரம்’ என்று பெயர்.

  1. மறையோலை

பொருள்: இரகசிய ஓலை

  1. கடாரம் கொண்டான்

பொருள்: கடாரத்தை வென்றவன். சோழ மன்னர் ராஜேந்திரரை மக்கள் அன்போடு அழைக்கும் ஒரு பட்டப்பெயர்.

  1. கங்கை கொண்டான்

பொருள்: சோழ மன்னர் ராஜேந்திரரை மக்கள் அன்போடு அழைக்கும் ஒரு பட்டப்பெயர். கங்கையாற்றின் நீரைத் தனது வெற்றிப் பயணத்தின் இறுதியில் தஞ்சைப் பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்ய எடுத்து வந்ததால் இப்பெயர் பெற்றார்.

  1. யாழி முத்திரை

பொருள்: பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மிகப்பழைமையான மிகச்சிறந்த நரம்பு இசைக்கருவி ஆகும். யாழ் வடிவத்தில் பொறிக்கப்பட்ட சின்னம். இது கடார தேசத்தின் ஒற்றனைக் குறிக்கும் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது.

  1. தளை

பொருள்: வெண்பாவில் தளை என்பது சீர்கள் ஒன்றோடொன்று கட்டுப்படும் இலக்கண விதியைக் குறிக்கும். வெண்பாக்களை இயற்றும்போது தளை தட்டினால் ஓசை சிதைந்துவிடும். “வெண்டளையால் மட்டுமே அமைய வேண்டும்” என்ற கடுமையான விதி வெண்பாவிற்கு உள்ளது.

  1. தளை தவறுதல்

பொருள்: வெண்பாவில் எதுகை தவறுதல், சீர் தவறுதல், யாப்பு இலக்கணப் பிழை. (கவிதைப் பிழை)

  1. நங்கூரமிடுதல்

பொருள்: கப்பலை ஒரு இடத்தில் நிறுத்துவதற்காகக் கடலின் அடியில் இரும்புக் கருவியை நிலைநிறுத்துதல்

  1. முத்திரை

பொருள்: அரச சின்னம். தூதுவர்கள் தங்கள் அதிகாரத்தைக் காட்டுவதற்காக அரச முத்திரையைப் பயன்படுத்துவார்கள்.

  1. சுரங்கப்பாதை

பொருள்: நிலத்திற்கு அடியில் மக்கள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட பாதை. சோழப் பேரரசு காலத்தில், அரண்மனை மற்றும் அரசு நிர்வாகத்தில் இரகசியத் தொடர்புகளுக்காகச் சுரங்கப்பாதைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

  1. வங்கம்

பொருள்: சோழப் பேரரசின் பகுதியாக இருந்த கடற்படைத் தளம். சோழர்கள் தங்களுடைய கடல் கடந்த படையெடுப்புகளுக்கு வங்கத்தை முக்கியத் தளமாகப் பயன்படுத்தினர்.

  1. நச்சுக்குறுவாள்:

பொருள்: நஞ்சு தடவப்பட்ட சிறிய வாள். தமிழ் இலக்கியங்கள் அல்லது வரலாற்றுப் பின்னணியில் பேசப்படும் போர்க் கருவி.

  1. காவலரண்:

பொருள்: காவல் + அரண் = பாதுகாப்பு + கோட்டை, மதில் அல்லது பாதுகாப்பு அரண்.

சொற்றொடரில்: “காவலரணில்” = “பாதுகாப்பு கோட்டையில்” அல்லது “காவல் சாவடியில்”.

You Might Also Like

மிஸ் பண்ணக் கூடாத மிஸ்ஃபாத்… நிஸ்வா – பகுதி 12
நான் என்பது…
பகையின் தழும்புகள்!!!  நிஸ்வா – பகுதி 9
நிஸ்வா என்றொரு பழமையான நகரம்… நிஸ்வா – பகுதி 1
மாதரசி
TAGGED:Seriesகட்டுரைதொடர்கள்நிஸ்வாவிண்மீன் ஆகஸ்ட் 2026
Byகங்கா
கங்கா (காங்கேயன் பசுபதி - Kangeyan Passoubady)
பாண்டிச்சேரியின் உப்புக் காற்றிலும் பிரெஞ்சுப் பண்பாட்டிலும் பிறந்து வளர்ந்த காங்கேயன் பசுபதி, இலக்கிய உலகில் ‘கங்கா’ என்ற புனைபெயரில் அறியப்படுகிறார். கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் தடம் பதித்து வரும் இவர், தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா வளைகுடாப் பகுதியில் (Bay Area) செய்யறிவு (AI) மற்றும் தன்னியக்கமாக்கல் (Automation) துறைகளில் வல்லுநராகப் பணியாற்றி வருகிறார்.
தொழில்நுட்ப உலகில் இருந்தாலும் இவரது உள்ளம் எப்போதும் அன்னைத் தமிழிலேயே ஒன்றிக் கலந்திருக்கிறது. வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (NATAWO) மற்றும் 'நடவு' காலாண்டு இதழின் ஆசிரியர் குழுவில் ஆக்கத்துடன் பங்காற்றி வருகிறார். தான் பெற்ற கணினி அறிவை அடுத்த தலைமுறைக்கும், குறிப்பாகத் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க 'கவின் பள்ளி' (Kavin School) என்ற அமைப்பை நிறுவிச் செயல்பட்டு வருகிறார்.
பழமையின் ஆழமும் புதுமையின் தேடலும் ஒருசேரக் கலந்த இவரது எழுத்துகள் நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் தனித்துவமானவை. கவிதை, சிறுகதைகள் எனத் தன் இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்து வரும் இவர், எளிய தமிழர்களுக்கும் அதிநவீனத் தொழில்நுட்பம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், 300-க்கும் மேற்பட்ட செய்யறிவு கலைச்சொற்களைப் பொருள்வாரியாகத் தொகுத்து "AI அலை: நீங்கள் தயாரா?" என்ற நூலையும் எழுதி வருகிறார்.
Previous Article கலை
Next Article விண்மீன் செப்டம்பர் 2026 மின்னிதழ்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (16) கட்டுரைகள் (25) கவிதைகள் (31) குறுநாவல் (1) சிறுகதைகள் (84) திரைப் பார்வை (9) தொடர்கள் (20) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (14) புத்தகப் பார்வை (41) விண்மீன் மின்னிதழ் (16)

பதிவுகள்

  • September 20264
  • August 202612
  • July 202617
  • June 202620
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?