VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: ‘விமர்சனங்களே எழுத்துக்கு உரம்’ – எழுத்தாளர் கண்ணன் விஸ்வகாந்தி
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > நேர்காணல் > ‘விமர்சனங்களே எழுத்துக்கு உரம்’ – எழுத்தாளர் கண்ணன் விஸ்வகாந்தி
நேர்காணல்

‘விமர்சனங்களே எழுத்துக்கு உரம்’ – எழுத்தாளர் கண்ணன் விஸ்வகாந்தி

விமர்சனங்களை நேர்மறையாகவே எடுத்துக் கொள்கிறேன்.

பரிவை சே. குமார்
Last updated: September 3, 2026 12:24 pm
8 Views
Share
11 Min Read
எழுத்தாளர் கண்ணன் விஸ்வகாந்தி
SHARE

‘விமர்சனங்களே எழுத்துக்கு உரம்’ – எழுத்தாளர் கண்ணன் விஸ்வகாந்தி

பரிவை சே. குமார்

எழுத்தாளர் கண்ணன்-

தனது படைப்புகளின் மூலம் கவனம் பெற்று எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முயலும் பலரில் ஒருவராகச் சாதித்திருக்கிறார். இவரின் ‘அதீதத்தின் பசி’ என்ற கவிதைத் தொகுப்புக்கு இந்த ஆண்டுக்கான சௌமா இலக்கிய விருது கிடைத்துள்ளது.

கண்ணனின் படைப்புகள் எனக்கு நடுகல் இணைய இதழ் மூலமாகவே முதலில் அறிமுகமானது. அவரின் எழுத்தை தொடர்ந்து வாசிக்கவும் நடுகல் உதவியாக இருந்தது. கவிஞராக தனது இலக்கியப் பயணத்தை ஆரம்பித்தவர், அந்த இடத்திலேயே நிற்காமல் சிறுகதை, நாவல் என தனது எழுத்தின் பக்கங்களை விரித்து, தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார்.

இவர் இதுவரை கோதமலைக் குறிப்புகள், நதி தொலைந்த கதை, அதீதத்தின் பசி என்ற கவிதைத் தொகுப்புகளும், கறுப்பு வண்ணமடித்த இரும்புக் கதவுகள், நீல நிறச் சீருடை அணிந்தவர் என்ற சிறுகதைத் தொகுப்புகளும், தாழ்வரை என்ற நாவலும் எழுதியிருக்கிறார். இவரின் எழுத்துப் பயணம் இன்னும் சிறப்பாகத் தொடர விண்மீன் வாழ்த்துகிறது.

இனி,

எழுத்தாளர் கண்ணன் விஸ்வகாந்தி பற்றிச் சொல்லுங்கள்?

மிகவும் சோம்பேறியான ஒருவன். கிடைக்கும் நேரத்தைச் சரியாக உபயோகித்தால், இன்னும் நிறைய எழுத முடியும். எழுத ஆரம்பிப்பதுதான் கடினம். இன்னும் கொஞ்சம் டிசிப்லினாக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது நூறு வரிகளாவது எழுத வேண்டும்.

சிறுகதை வடிவத்தில் இன்னும் முன்னேற வேண்டும்.

பார்க்கலாம்.

கவிஞர் எப்போது… எப்படிக் கதையாசிரியராய் மாறினார்?

எனது முதல் கவிதைத் தொகுப்பான ‘கோதமலைக்குறிப்புகள்’ வெளியான போது, எனது நண்பர் கவிஞர் அ. கார்த்திகேயனின் ‘வேட்கை’ அமைப்பு வழியாக விமர்சனக் கூட்டம் நடந்தது. பலரின் மதிப்புரைகளும், கவிதைகளில் சிறுகதை அம்சம் உள்ளதாக இருந்தது. எழுதித் தான் பார்ப்போமே என்று, அமெரிக்க நிகழ்வு ஒன்றை ‘கம்பிகளுக்குப் பின்னால்’ என்று ஒரு சிறுகதையாக எழுதினேன். அக்கதையை எழுத்தாளர் உஷா தீபன் அவர்களிடம் முகநூலின் உள்பெட்டியில் பகிர்ந்து கொண்டேன். “சுருக்கமான கதை. சில வார்த்தைகளில் கதை சொல்லல்” எனப் பாராட்டினார். அது எனக்கு மிகப்பெரிய ஊக்கமளித்தது. லண்டனில் இருந்து வரும் ‘காற்றுவெளி’ இணைய இதழுக்கு அனுப்பி விட்டு, மறந்து விட்டேன். இரண்டு மாதங்கள் கழித்து, ஆசிரியர் முல்லை அமுதனிடமிருந்து பிடிஎப் இதழ் இமெயிலுக்கு வந்தது. எனது முதல் சிறுகதை பிரசுரமாகியிருந்தது. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

தங்களது பெரும்பாலான படைப்புகள் இறப்பைப் பற்றி பேசுவதாய் இருக்கின்றன, இறப்புக் குறித்து எழுதுவதில் தங்களுக்கு இயல்பாகவே விருப்பம் அதிகமா? அல்லது அதுவும் பேசப்பட வேண்டிய ஒன்றுதானே என்ற எண்ணமா?

இப்படி ஒரு கருத்தை இப்போது தான் கேட்கிறேன். நெருங்கிய சொந்தங்களின் இறப்பு என்னை மிகவும் பாதித்தது. இப்போதும் பாதிக்கிறது. எனது பாட்டி, தாத்தா பிறகு அப்பா, அம்மா, மாமனார், மாமியார், சின்ன அத்தை ஆகியோரின் இறப்பு என்னை மிகவும் பாதித்தது. அதுவும் எனது அப்பா, அம்மா மற்றும் எனது மனைவியின் அப்பா, அம்மா ஆகியோர் வரிசையாக இறந்த போது, “எனக்கு மட்டும் யாருமே இல்லையேப்பா. என்னைய மட்டும் தனியா உட்டுட்டு போயிட்டிங்களேப்பா?” என்று தான் அப்பாவைப் பார்த்து அழுதேன். சில வருடங்களுக்கு சொர்க்க ரதம் எங்கு போனாலும், முகத்தை திருப்பிக் கொள்வேன். அவ்வளவு ஒவ்வாமை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொண்டேன். இப்போது உறவினர்கள் இறப்புக்கு தைரியமாச் செல்கிறேன்.

மற்றும் ஒரு முக்கியமான காரணம், நான் பலமுறை உயிர் பிழைத்து வந்தவன். நோய் மற்றும் பல விபத்துகளில் இருந்து தப்பிப் பிழைத்தவன். இதுவும் ஒரு முக்கியமான காரணம்.

கவிஞர்கள் நாவல்கள் எழுதும் போது எழுத்தில் அதிகம் கவிதை நடை இருப்பதைப் பார்த்திருக்கிறோம். தங்களது கதைகளிலும் கவிநயம் வருமல்லவா? அது கதையோட்டத்துக்கு வலு சேர்க்கும் என நினைக்கிறீர்களா?

கவிஞர்கள் உரைநடை எழுதும் போது, தானாகவே எழுத்தில் கவித்துவம் மிளிரும். ஆனால் எனது நடையில் இன்னும் அதிகமாக வெளிப்படவில்லை. ஏனெனில் இப்படித்தான் நடை இருக்க வேண்டும் என்று வலிய நான் எழுதுவதில்லை.

வலு சேர்க்காமலும் போகலாம். ஆனால் வாசிப்பு அனுபவத்திற்கு நிச்சயமாக உதவும்.

கவிஞர் சுரதாவுடனான தொடர்பால் கவிஞரானதாய் சொல்லியிருக்கிறீர்கள், அவருடனான தொடர்பு பற்றி விரிவாகச் சொல்லுங்களேன்?

கவிஞர் சுரதாவின் தொடர்பு கடவுளின் ஆசி. இது நடந்து முப்பது வருடங்களுக்கு மேலிருக்கும். சுரதா சேலத்திற்கு வந்திருந்த போது, பழைய பேலஸ் தியேட்டருக்கு எதிரில், இப்போதைய லட்சுமி காபி பார் இருக்கும் சுப்பராயன் சாலையில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார். நான் அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு, கல்லூரி முதல் வருடம் என்று நினைக்கிறேன். “வாப்பா, போயி பக்கத்து ஓட்டல்ல ஒரு வெண்பொங்கல் வாங்கிட்டு வா” என்றார். எனக்கு சற்றே அதிர்ச்சி. என்னடா இது, முதல் முறையாக பார்க்க வந்தவனை, பொங்கல் வாங்கி வரச் சொல்கிறாரே என்று. ஆனால் மிகவும் அன்பாகப் பழகினார்.

தருமபுரியில் நடந்த கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்துச் சென்றார். அப்போது காவல்துறை ஆய்வாளராக இருந்த ”குப்பைக் கவிஞர் குளச்சல் குமரேசன்” அவர்களது நூலைப் பற்றிப் பேச வேண்டும். ஏற்கனவே வெள்ளைத் தாளில் எழுதி எடுத்துச் சென்று இருந்தேன். கவிஞர் பழ. புகழேந்தி அவர்கள் வெகு இலகுவாக, அருமையான கவிதை ஒன்றை வாசித்து, கவிஞர் அய்யாவிடம் பாராட்டு பெற்றார். அடுத்ததாக எனது முறை. மைக்கைப் பிடித்துப் பேச முடியவில்லை. கைகால்கள் நடுங்குகின்றன. கால்கள் எங்கோ அதாள பாதாளத்தில் இருந்தன. வெள்ளைத் தாள்கள் கையிலிருந்து எப்போது நழுவுமோ என்று இருந்தது. எப்படியோ சமாளித்து, மைக்கையும், தாள்களையும் கெட்டியாக பிடித்துக் கொண்டு, எழுதிச் சென்ற கவிதையை வாசித்து முடித்தேன். கவிஞர் சுரதா அய்யா, என்னைப் பார்த்து, “கருத்த பையன். நல்லா கவிதை எழுதறான். பேர் என்ன சொன்ன?. கண்ணன். கவிதை கண்ணன். எதுகை மோனை நல்லா இருக்கு. அப்படியே வச்சுக்கோ” என்றார். இந்த வாழ்நாளில் பெற்ற பேறு. மோதிரக்கையால் வாங்கிய கொட்டு.

பரவலான கவனத்தைப் பெற்ற தங்களது முதல் நாவலான ‘தாழ்வரை‘ பேசும் களம் புனைவு கலந்த உங்களது கதை என்று சொல்லியிருக்கிறீர்கள். அதிலும் பால்ய கால வாழ்க்கைதான் அதிகம் நிரவிக் கிடக்கும். எதனால் அப்படி யோசித்தீர்கள்?

ஆம், தாழ்வரை நாவல் புனைவு கலந்த எனது வாழ்க்கையின் கதை. எனது பால்ய கால வாழ்வு இல்லாமல், எனது கதை எப்படி முழுமையாகும்?

‘தாழ்வரை‘ நாவல் உருவான விதத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்?

எழுத்தாளர் வா.மு.கோமு அவர்களுக்கு, அவரது கெடா வெட்டு நாவலுக்கு, ஈரோட்டில் பாராட்டு விழா நடந்த போது, எழுத்தாளர் மதனைச் சந்தித்தேன். தேநீர் இடைவெளியில் பேசிக் கொண்டு இருக்கும் போது, எனது அடுத்த படைப்பு பற்றிய பேச்சு வந்தது. நாலு நாவல்களுக்கான கரு மனதில் இருக்கிறது என்று சொன்னேன். நடுகல் இணைய இதழில் தொடராக எழுதிய பிறகு நூலாக வெளியிட முடிவு செய்து ஆரம்பித்தது தான் ‘தாழ்வரை’ நாவல். ஒவ்வொரு அத்தியாயமும் மதனின் வாசிப்பிற்குப் பிறகே வெளிவந்தது. அவருடைய உதவி அளப்பரிய ஒன்று. அவருக்கும், நாவலை தொடராக வெளியிட்ட எழுத்தாளர் வா.மு.கோமு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை இந்நேர்காணல் வழியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களது ‘கோதைமலைக் குறிப்புகள்‘ கவிதைத் தொகுப்பின் தொடர்ச்சிதான் ‘தாழ்வரை‘ நாவல் என்ற கருத்தை ஏற்கிறீர்களா? அப்படியெனில் இரண்டுக்குமான தொடர்பு என்ன என்பதைச் சொல்லுங்களேன்?

ஆம், ‘கோதமலைக் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பின் தொடர்ச்சி அல்லது விரிவுதான் ‘தாழ்வரை’ நாவல். கவிதைத் தொகுப்பில் பதினோரு கவிதைகளே, கோதமலை அடிவாரத்தில் நான் வாழ்ந்த வாழ்வு பற்றி இருந்தது. ஒவ்வொரு கவிதையிலும் ஒரு சிறுகதை இருந்தது. சிறுகதையையும் மீறி சொல்ல வேண்டிய ஒரு வாழ்க்கை இருந்தது. இதுதான் தொடர்பு.

மென்பொருள் மேலாளர் பணியில் இருந்து கொண்டு கவிதை, சிறுகதைகள், நாவல்கள் என எழுதுவதில் நேரச் சிக்கல் ஏதும் இருக்கிறதா? அப்படி இருக்கும் பட்சத்தில் அதை எப்படிக் கையாளுகிறீர்கள்?

நிச்சயமாக நேரம் போதவில்லை. ஆனாலும் கிடைக்கும் நேரத்தில் எழுத விடாமல் சோம்பேறித்தனமும் இருக்கிறது. பெங்களூரில் தனிமையில் இருக்கும் நாட்களில் எழுதுகிறேன். ஒரே மூச்சில் எழுதுவதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம், சிறிது சிறிதாக எழுதிய பிறகு, சரி பார்க்கிறேன். எவ்வளவு நேரம் கிடைத்தாலும், எழுதும் மனநிலை இல்லையெனில் எழுதுவது கடினம். தினமும் கொஞ்சம் எழுதுங்கள் என்பார் சுஜாதா. ஆனால் நடைமுறையில் கடினம்.

சௌமா இலக்கிய விருது பெற்ற போது தங்களின் மனநிலை எப்படி இருந்தது. சாதிச்சிட்டோம் என்று நினைத்தீர்களா அல்லது இனிமேல்தான் சாதிக்கணும் என நினைத்தீர்களா?

சௌமா விருது மனசுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த ஒரு விருது. அதுவும் கவிதைக்குக் கிடைத்ததில் கூடுதல் சந்தோஷம். ஒவ்வொரு வருடமும் அனுப்பி வைப்பது போலத்தான் இந்த வருடமும் அனுப்பி வைத்தேன். திடீரென ஒரு கைபேசி அழைப்பு வந்தது. தங்களின் கவிதைத் தொகுப்பான ‘அதீதத்தின் பசி’ சௌமா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார். சிறப்பான பரிசளிப்பு விழா. எனக்கு பிடித்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் கைகளால் விருது பெற்றது மறக்க முடியாத அனுபவம். படைப்பாளர்களை சந்திக்க ஒரு சிறப்பான வாய்ப்பாக அமைந்தது.

சௌமா விருது மேலும் சாதிக்க வேண்டும் என்ற தூண்டுதலைக் கொடுத்திருக்கிறது.

தங்களைப் பொறுத்தவரை கவிதை, சிறுகதை, நாவல் இதில் எது இலகுவாக எழுத முடியும் என நினைக்கிறீர்கள்?

கவிதையை இலகுவாக எழுத முடியும். கட்டமைக்கப்பட்ட கவிதைகளையோ, படிமங்களின் அடுக்குகளையோ நான் குறிப்பிடவில்லை. உள்ளொளியின் தெறிப்புகளைச் சொல்கிறேன்.

வேலைக்கு இடையே எழுதுவதே கடினம் என நினைப்போர் மத்தியில் எழுத்துடன் ‘வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்‘ போன்ற குழுக்களிலும் தீவிரச் செயல்பாடுகள் எப்படிச் சாத்தியம் ஆகிறது?

இப்போது நான் அக்குழுவின் நெறியாளராக இல்லை. புத்தகங்களை வாசிக்கும் போது, சிறு குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு, வாசிப்பு அனுபவமாக எழுதினேன். ஆயினும் குறைந்தது இரண்டு முறையாவது வாசித்தால்தான், வாசிப்பு அனுபவத்தை எழுத இயலும். பிடித்த வேலையைச் செய்கையில் நாமே அதற்கான நேரத்தை ஒதுக்கி விடுகிறோம். எனக்கு வாய்ப்பு கொடுத்த குழுவின் நிறுவனரான மந்திர மூர்த்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

‘தாழ்வரை‘ நடுகல்லில் தொடராக வெளிவந்து பின்னர் நாவலானது அல்லவா? நடுகல்லுக்கும் தங்களுக்குமான உறவு எப்படிப்பட்டது? தங்களின் எழுத்துக்கு எழுத்தாளர் வா.மு. கோமு அவர்கள் கொடுத்த ஊக்கம் பற்றிச் சொல்லுங்களேன்?

ஆம், ‘தாழ்வரை’ நாவல் ‘நடுகல்’ இணைய இதழில் தொடராக வந்து, பிறகு நாவலானது. நான் கவிதையிலிருந்து சிறுகதைக்கு வருகையில், எனக்கு வாய்ப்பு கொடுத்த பிளாட்பார்ம் நடுகல் இணைய இதழ். எழுத்தாளர் வா.மு.கோமு அவர்கள் முதலில் எனது வாசிப்பு அனுபவங்களை வாங்கி வெளியிட்டார். பிறகு சிறுகதை எழுத வாய்ப்பளித்தார். நடுகல் இன்று புதிதாக எழுத வருபவர்களுக்கு ஒரு ஆலமரம் போன்றது.

இதனால் நடுகல் இணைய இதழும், நடுகல் முகநூல் பக்கமும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. இன்றும் நடுகல் முகநூல் பக்கத்தில் நெறியாளராகத் தொடர்கிறேன்.

எனது இரண்டு சிறுகதைத் தொகுப்புகளின் பெரும்பாலான கதைகள் நடுகல் இணைய இதழில் வெளிவந்தவை. இதில் எனக்கு மிகவும் பெருமை.

எழுத்தாளர் வா.மு.கோமு அவர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தங்களது படைப்புக்களுக்கு வரும் விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

விமர்சனங்களை நேர்மறையாகவே எடுத்துக் கொள்கிறேன். நானும் எழுத்தாளர் இத்ரீஸ் யாக்கூப் அவர்களும் நல்ல நண்பர்கள். எனது படைப்புகளை கிழித்துத் தொங்க விடுவார். அப்போதும் அவரிடம் “தாராளமாக விமர்சனத்தை அப்படியே வெளியிடுங்கள்” என்று சொல்வேன். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

எனது முதல் கவிதைத் தொகுப்பான ‘கோதமலைக் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்புக்கு, நண்பர் கவிஞர் அ.கார்த்திகேயன் தனது ‘வேட்கை’ ‘அமைப்பு மூலமாக விமர்சனக் கூட்டம் நடத்தினார். அதில் பேசிய கவிஞர் அகச்சேரன் பல கவிதைகளை “வார்த்தைகளின் அணிவகுப்பு” என்று விமர்சித்தார். மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் இன்று என்னால் நீண்ட கவிதைகளை எழுத இயலவில்லை. எனது கவிதை மொழி மிகவும் சுருங்கி விட்டது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். கார்த்திகேயன் அவர்களுக்கு எனது நன்றி.

விமர்சனங்களே எழுத்துக்கு உரம்.

தங்களது ஆதர்ச எழுத்தாளர்கள் என யாரைச் சொல்வீர்கள்? அவர்களின் படைப்பில் தங்களைக் கவர்ந்தது எது?

ஆதர்ச எழுத்தாளர்கள் என்று எவருமில்லை. ஏனெனில் எல்லோருடைய எழுத்துக்களையும் படித்து வளர்ந்தவன். ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு எழுத்தாளர் நம்மை வசீகரிப்பார்.

அண்மையில் அசோகமித்திரனின் ஒற்றன் வாசித்தேன். அவருடைய கரைந்த நிழல்கள் மற்றும் 18வது அட்சக்கோடு நாவல்கள் மிகவும் பிடித்தவை. அவருடைய புலிக்கலைஞன் உலக அளவில் ஒப்பிடக் கூடிய மிகச் சிறந்த சிறுகதை.

விருதுகள்தான் ஒரு நல்ல எழுத்தாளனை அடையாளம் காட்டும் என ஒரு சிலர் சொல்வதோடு ஒத்துப் போகிறீர்களா… இல்லை எழுத்துதான் விருதை முடிவு செய்யும் என்பவர்களோடு நிற்கிறீர்களா?

எழுத்துதான் விருதை முடிவு செய்யும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். எத்தனை விருதுகள் பெற்றாலும் சரக்கு இல்லையெனில் எந்த ஒரு படைப்பும் காலத்தை மீறி நிற்காது.

தற்போதைய எழுத்தாளர்களின் படைப்புக்கள் குறித்து தங்களின் பார்வை என்ன?

தற்போதைய எழுத்தாளர்களின் படைப்புகள் சிறப்பாக இருக்கிறது. நம்பிக்கை அளிக்கிறது.

கவிதையில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. பட்டியல் இடுதல் கடினம். இணைய இதழ்களில் வரும் சிறுகதைகளை வாசிக்கிறேன். சிறப்பான சிறுகதைகள் வெளிவருகின்றன.

சமீபத்தில் எழுத்தாளர் சிவக்குமார் முத்தையா அவர்களின் ஒதம்பல் நாவல் வாசித்தேன். கீழ் வெண்மணி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட சிறப்பான நாவல்.

 

வாசிப்பே நல்ல எழுத்தைக் கொடுக்கும் என்பதைத் தாங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

நிச்சயமாக. தொடர் வாசிப்பு இல்லையெனில் தேங்கி விடுவோம். ஒன்று இன்றைய காலகட்டத்தில் வெளிவரும் படைப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம். மற்றொன்று எழுத்தாளர் அடைப்பில் (writer’s block) இருந்து வெளிவரலாம்.

தற்போது எழுதிக் கொண்டிருக்கும் படைப்பு குறித்துச் சொல்லுங்களேன்?

அடுத்த நாவலின் முதல் அத்தியாயம் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதுவும் ஒரு தொடராக வந்த பிறகு நாவல் வடிவம் பெறும்.

முழுக்க முழுக்க தங்களது வட்டார வழக்கில் நாவல் எழுதும் எண்ணம் இருக்கிறதா? அப்படியெனில் எப்போது எதிர்பார்க்கலாம்?

எனக்கு வட்டார வழக்கில் எழுதத் தெரியாது. அப்படி ஒரு நாவல் எழுதும் எண்ணமில்லை.

நான் வாழும் சேலத்திற்கென்று தனியாக வட்டார வழக்கு எனக்குத் தெரிந்த அளவில் இல்லை என்றே சொல்ல வேண்டும். சேலமும் கொங்கு மண்டலத்தில் வருவதால் அதையே சேலத்தின் வட்டார வழக்காக எடுத்துக் கொள்ளலாம். வருங்காலத்தில் முயற்சி செய்யலாம்.

You Might Also Like

“மாயத்தின் விளைவுதான் உணர்வுப்பூர்வமான படைப்பு” – கரன் கார்க்கி
‘கற்றதை விட இழந்தவைகள் அதிகம்’ – முல்லை அமுதன்
மாதரசி
‘இலக்கியம் வெறுமனே எழுத்து இல்ல… அது ஆன்மாவின் ஜீவன்’–  எழுத்தாளர் மலர்வதி
கதையின் போக்கில் பயணிக்கும் பயணி
TAGGED:Interviewநேர்காணல்பேட்டிவிண்மீன் ஆகஸ்ட் 2026
Previous Article பெரிதினும் பெரிது கேள்
Next Article மாதரசி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (16) கட்டுரைகள் (25) கவிதைகள் (31) குறுநாவல் (1) சிறுகதைகள் (84) திரைப் பார்வை (9) தொடர்கள் (20) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (14) புத்தகப் பார்வை (41) விண்மீன் மின்னிதழ் (16)

பதிவுகள்

  • September 20264
  • August 202612
  • July 202617
  • June 202620
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?