அமெரிக்க சுதந்திர தினம்
– கே.என்.சுவாமிநாதன்
ஜூலை 4, 2026, அமெரிக்கா 250-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
1776-ஆம் வருடம் ஜூலை 4, அமெரிக்கா சுதந்திர பிரகடனம் அறிவித்தது. அமெரிக்காவை புலம் பெயர்ந்தோர் நாடு என்பார்கள். பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து புது உலகம், சொந்த நாட்டில் மத துன்புறுத்தல், வளமான வாழ்வு என்று பல காரணங்களால் மக்கள் இங்கு குடியேறி 13 காலனிகளில் வசித்து வந்தனர். பிரிட்டனின் அதிகாரத்தின் கீழ் இருந்த இந்த காலனிகளை கண்காணிக்க கவர்னர் ஜெனரல் பிரிட்டனால் நியமிக்கப்பட்டார்.
பிரிட்டிஷ் அரசரை ஏற்றுக் கொண்ட காலனிவாசிகள், பிரிட்டனின் பாராளுமன்றம், தங்கள் காலனிக்கு சட்டம் இயற்றுவதையும், வரி விதிப்பதையும் ஒத்துக் கொள்ளவில்லை. பிரிட்டன் பாராளுமன்றத்தில் காலனியின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
டிசம்பர் 1774-ஆம் வருடம் பிரிட்டனின் மூன்று கிழக்கிந்திய கம்பெனி கப்பல்களில், டீ பாஸ்டன் துறைமுகத்திற்கு வந்தது. கவர்னர் ஜெனரல், டீக்குண்டான வரியைச் செலுத்த வேண்டும் என்றார். வரி செலுத்த மறுத்த நகரவாசிகள், டீயுடன் கப்பலை திருப்பி அனுப்பச் சொன்னார்கள்.
டிசம்பர் 16-ஆம் தேதி, சிவப்பிந்திய வேடமணிந்த காலனி வாசிகள் மூன்று கப்பல்களிலும் ஏறி டீ நிரப்பபட்டிருந்த 342 பெட்டிகளையும் கடலில் வீசினர். இந்த நிகழ்வுக்கு “பாஸ்டன் டீ பார்ட்டி” என்று பெயர். இதை இராஜத் துரோகம் என்று கண்டித்த பிரிட்டன், காலனிவாசிகள் மீது கட்டுக்கு அடங்காத அடக்கு முறையைக் கொண்டு வந்தது.
பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெறுவது தான் நல்லது என்று 13 காலனிகளும் முடிவு செய்தனர். காலனிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய “கான்டிநென்டல் காங்கிரஸ்”, ஜூலை 2, 1776-இல் பிரிட்டனிலிருந்து விடுதலை பெறுவது என்ற அறிக்கைக்கு, ஆதரவாக வாக்களித்தது. இதை மக்களுக்கு எடுத்துரைக்கும் “சுதந்திர தின பிரகடனம்” அறிக்கை ஒத்துக் கொள்ளப்பட்டு பிலடெல்பியாவில் சுதந்திர ஹாலில் உள்ள சுதந்திர மணி ஒலிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில், தலைவர்கள் கையெழுத்திட்ட தேதி ஆகஸ்ட் 2. இந்த அறிவிப்பின் மூலம் 13 அமெரிக்க காலனிகள், பிரிட்டனுடனிருந்த தொடர்பை முறித்துக் கொண்டு “மாநிலங்கள் ஒன்றிணைந்த அமெரிக்கா” உருவாகியது. (United States of America). 13 காலனிகள் தவிர மற்ற காலனிகளும், கனடா உட்பட, அமெரிக்காவில் இணையலாம் என்று அழைக்கப்பட்டனர்.
சுதந்திர பிரகடனத்தை ஏற்க மறுத்த பிரிட்டன், அமெரிக்காவின் மேல் போர் தொடுத்தது. இதை எதிர் நோக்கியிருந்த அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டுடன் இராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. அமெரிக்கப் படையின் தலைவராக ஜார்ஜ் வாஷிங்க்டன் பொறுபேற்றார். இந்தப் போரில் பிரிட்டன் தோல்வியை சந்தித்தது. இதற்குப் பின்னால், 1783-ஆம் ஆண்டு அமெரிக்கா பிரிட்டனிடையே, பாரிஸில் உடன்படிக்கை ஏற்பட, அமெரிக்காவை தனி நாடாக பிரிட்டன் அங்கீகரித்தது.
அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவரான ஜான் ஆடம்ஸ், ஜூலை 4, சுதந்திர தினம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. சுதந்திரம் வேண்டும் என்று வாக்களித்த ஜூலை 2, உண்மையான சுதந்திர நாள் என்பது அவருடைய கருத்து. சுதந்திர தின அறிக்கையை வடிவமைத்த ஐந்து நபர்களில் ஜான் ஆடம்ஸ் அவர்களும் ஒருவர்.
ஜான் ஆடம்ஸ் அவருடைய மனைவிக்கு ஜூலை 3, 1776-இல் எழுதிய கடிதத்தில், “அமெரிக்க சுதந்திர தினம் ஆடம்பரமான அணிவகுப்பு, கண்டத்தின் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை வாண வேடிக்கைகள் என்று இந்தக் காலம் மட்டுமல்ல என்றென்றும் கொண்டாடப்பட வேண்டும்” என்றார்.
சுதந்திரம் அடைந்தவுடன் உருவாக்கப்பட்ட அமெரிக்க கொடியில், அமெரிக்க நாட்டில் முதலில் சேர்ந்த 13 காலனிகளைக் கௌரவிக்கும் விதமாக 13 பட்டைகளும், 13 நட்சத்திரங்களும் இருந்தன. பின்னர், அமெரிக்க கண்டத்திலிருந்த மற்ற நாடுகளை விலை கொடுத்து வாங்கியும், சில நாடுகளுடன் சண்டையிட்டும், அமெரிக்க அரசு தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போதுள்ள அமெரிக்கன் கொடியில் 50 மாநிலங்கள் இருப்பதை உணர்த்துவதற்கு 50 நட்சத்திரங்களும், முதலில் அமெரிக்காவுடன் இணைந்த 13 காலனிகளை கௌரவிக்கும் விதமாக 13 பட்டைகளும் இடம் பெற்றுள்ளன.
பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடையில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடி நிரந்தர இடம் பிடித்தது. இருபதாவது நூற்றாண்டின் இடையில் கொடியைக் கையாள்வது, பறக்க விடுவது ஆகியவற்றிற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. 1960-ஆம் வருடம் கொடியை அவமதிப்பது குற்றம் என்ற சட்டம் இயற்றப்பட்டது.
அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் விரும்பிய படி, சுதந்திர தினம், நாடு தழுவிய விழாவாக, அணிவகுப்பு, கேளிக்கை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கையுடன் கொண்டாடப்படுகிறது.
சுமார் 16000 இடங்களில் வாண வேடிக்கைகள் நடத்தப்படுகின்றன. இந்த வாண வேடிக்கைக்கு 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் 22,594 கோடி செலவு செய்கிறார்கள். 90 சதவிகிதம் பட்டாசுகள் சைனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 44 சதவிகித அமெரிக்க மக்கள் வாண வேடிக்கைகளை கண்டு களிக்க குடும்பத்துடன் செல்கிறார்கள்.
ஜூலை 4 அன்று, பிலடெல்பியாவில் சுதந்திர ஹாலிலுள்ள, சுதந்திர மணியை, சுதந்திர அறிக்கையில் கையெழுத்திட்டவர்களின் சந்ததிகள், 13 முறை ஒலிக்கச் செய்வர். இது சுதந்திரத்திற்கு வழி வகுத்த 13 மாநிலங்களை கௌரவிக்கும் விதமாக ஒலிக்கப்படுகிறது.
சுதந்திர தினம் அறிவித்த தினத்திலிருந்து, 95 வருடங்கள் அமெரிக்க சுதந்திர தினம் விடுமுறை இல்லாத நாளாக கொண்டாடப்பட்டது. ஜூலை 4, பொது விடுமுறை நாள் என்ற அரசு அறிவிப்பு, 28 ஜூலை 1870 வெளியிடப்பட்டது. வெள்ளை மாளிகையில், முதல் சுதந்திர தினக் கொண்டாட்டம் 1801ஆம் வருடம் இசை, உணவு, குதிரைப் பந்தயத்துடன் நடந்தேறியது.
தீவிரவாதிகள் தாக்குதலால் அழிக்கப்பட்ட உலக வர்த்தக மையம் இடத்தில் கட்டப்பட்டுள்ள “ஃப்ரீடம் டவர்” 1776 அடிகள் உயரம். அமெரிக்கா சுதந்திரம் அடைந்த 1776-ஆம் வருடத்தை நினைவு கூறும் விதமாக இவ்வாறு வடிவமைத்துள்ளார்கள்.
சுதந்திர தினத்தன்று அமெரிக்க மக்கள் உணவிற்காக செலவிடுவது 9.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 79,315 கோடி. HOT DOG என்ற அமெரிக்க உணவு குடியரசு தினத்தன்று அதிகமாக உண்ணப்படுகிறது. 150 மில்லியன் (15 கோடி) உண்ணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று பெரும்பாலான வீடுகளில் அமெரிக்க கொடி பறப்பதைக் காணலாம். சுதந்திர தினம் அரசு விழாவாக இல்லாமல், நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்கும் விழாவாக அனுசரிக்கப்படுகிறது.
*****


