VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: துண்டுபீடி
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > துண்டுபீடி
சிறுகதைகள்

துண்டுபீடி

இப்படி மிதிச்சா துட்டு மண்ணுக்குள்ளப் பூந்துரப்போவுது. அப்புறம் தேங்காமுட்டாயி கெடைக்காது பாத்துக்கோ!

வசந்தி முனீஸ்
Last updated: June 29, 2026 8:47 pm
61 Views
Share
14 Min Read
துண்டுபீடி
SHARE

துண்டுபீடி

-வசந்தி முனீஸ்

          ‘கிணிங்… கிணிங்… கிணிங்…’ என்று மூன்று முறை பெல்லையடித்துவிட்டு, தெருமுனையில் போய் சைக்கிளை நிறுத்தி, திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே இருந்தான் முண்டக்கண்ணன். பெல் சிக்னல் கிடைத்ததும் பைய  வீட்டைவிட்டு வெளியே வந்த தூக்குவாளி. தெருமுனை நோக்கி வேகமாக நடந்து, சைக்கிள் பின்னால் அமர்ந்ததும் சைக்கிளை அழுத்தி மிதித்தான் முண்டக்கண்ணன்.

            ஊருக்கு வடக்கே பனைவிடலிகள் நிறைந்த காட்டின் ஒத்தையடிப் பாதையில் கொஞ்சம் தூரம் சென்றதும் முயல் தன் குட்டிகளை வளைக்குள் மறைத்து வைப்பதுபோல் கும்மமாகயிருக்கும் பனைவிடலிகளின் மறைவில் சைக்கிளை நிறுத்திவிட்டு, அதன் பக்கமிருக்கும் பண்டுவர் பாங்கிணற்றின் சிமெண்ட் தொட்டிக்குள் இறங்கி உக்காந்து கொள்வான் முண்டக்கண்ணன்.

தூக்குவாளி இடிந்துபோய்க் கிடக்கும் மோட்டார் ரூமின் மீட்டர் பெட்டியிலிருந்து துண்டுபீடிகளையும் தீப்பெட்டியையும் எடுத்து வந்ததும்… இருவரும் பீடியைப் பற்றவைத்து பக்கு பக்கென்று இழுத்து, வட்டம் வட்டமாய் புகை விடுவார்கள். சில நேரம் இருவரும் அவசரத்தில் புகையை விழுங்கி, கிடையில் கிடக்கும் கிழவனைப்போல் லொக்கு லொக்குவென இருமுவார்கள். இவர்களின் இருமல் சத்தத்தில் கிணற்றுப் புறாக்கள் பயந்தடித்து பறந்தோடும். புறாக்களின் பறக்கும் சத்தம்கேட்டு, பயத்தில் இவர்களுக்கு இருமலும் நின்றுவிடும்; சிலநொடி இதயத் துடிப்பும் நின்றுவிடும். பீடிவாசம் வீட்டுக்குத் தெரியாமலிருக்க காட்டுத்துளசியைப் பறித்து நல்லா சவைத்துக்கொண்டும் கைகளில் தேய்த்துக்கொண்டும் வீடுவந்து சேர்வார்கள்.

            தூக்குவாளியும் முண்டக்கண்ணனும் ராத்திரி எட்டு மணியானதும் ‘கோனாரு எப்பும்டா மளிகைக்கடையை சாத்துவாரு’யென்று தெருவில் விளையாடியபடியே பார்த்துக்கொண்டே இருப்பார்கள். ஒரு எட்டு எட்டேகாலானதும்  கோனார் வெளியேயிருக்கும் சோடாப்பாட்டில், கலர்பாட்டில், தேங்காய் மூட்டை எல்லாவற்றையும் உள்ளே எடுத்துவைத்து, கடையின் உள்ளேயுள்ள குண்டுபல்பினை அணைத்துவிட்டு நீளவாக்கிலுள்ள ஒவ்வொரு பலகைக் கதவையும் ஒன்று, இரண்டென எண்கள் வரிசைப்படி அடுக்கி பெரிய பூட்டைப்போட்டு பூட்டிவிட்டு, பீடியைப் பற்றவைத்து பாதியையிழுத்து, மீதி பீடியை காலில் போட்டு மிதித்தணைத்து, கடையின் வாசலில் சூடம் கொளுத்துவார்.

         “லேய்… மக்கா கோனாரு சூடம் கொளுத்திட்டாரு. வா போலா”மென்று இருவரும் எலியைப் பிடிக்க பூனை பதிவைத்து மெல்ல பதுங்கி நடப்பதுபோல் கடையை நோக்கி  நடப்பார்கள். கோனார் சூடம் அணைந்ததும் தண்ணீர்த் தெளித்துவிட்டு, கருங்குருவி பறந்து கிடாயின் கொம்பில் அமர்வதுபோல் சைக்கிளை வேகமாய்த் தள்ளிக்கொண்டு ஓடி ஒரு துள்ளுத் துள்ளி சைக்கிள் சீட்டிலமர்ந்து அழுத்திச் செல்வார்.

            கோனார் போனதும் முண்டக்கண்ணன் ஆட்கள் யாரும் வருகிறார்களென்று  பார்த்துக்கொண்டிருப்பான். தூக்குவாளி, அவித்த நெல்லை காற்றில் ஒணத்தும் கிழவியைப்போல் இருட்டில் குனிந்து கடையின் முன்பு கிடக்கும் துண்டுபீடிகளைப் பொறுக்கி பாலித்தீன் பையில் போட்டு எருக்குழி, முடுக்கு, வீட்டுக்குப் பின்புறமுள்ள மரத்து மூட்டில் ஒளித்துவைப்பார்கள். நேரம் கிடைக்கும்போது பண்டுவர் கிணற்றில் கொண்டு வைத்துவிடுவர். கருக்கலானதும் ஏதாவது சாக்குப்போக்கு வீட்டில் சொல்லிவிட்டு இருவரும் துண்டுபீடியை உதடு சுடச்சுட பிடித்துவிட்டு வருவார்கள்.

            முண்டக்கண்ணன் அப்பா பழ வியாபாரி. காலையில் வியாபாரத்துக்குச் செல்லும்போது ஒரு கட்டு பீடி. சாய்ந்தரம் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு வந்து குளிச்சி முடிச்சி, சோற்றைத் தின்றுவிட்டு, “ எல தம்பியோ.. அப்பாக்கு ஒரு கட்டு செய்யது பீடி வாங்கிட்டு வால” என்பார். தூக்குவாளியோட அப்பா வெள்ளாடு நாற்பதுகிட்ட வைத்திருக்கிறார். காலையில் மேய்ச்சலுக்குப் போகும்போது ஒரு கட்டு. சாய்ந்தரம் மேய்ச்சல் முடிந்து வீட்டுக்கு வந்ததும் ஒரு கட்டு. ஆனால், பிராண்டு வேற, சொக்கலால் பீடி. 

            தன் அப்பாக்களிடம் தான் கைவரிசை காட்ட முடியவில்லை. தன்னுடையத் தெருவிலுள்ள பெருசுகளுக்குப் பீடி வாங்கிக்கொடுக்கும்போது தங்களுக்கும் சேர்த்து வாங்கலாமென்றால், கடைக்காரக் கோனார் யாருக்கு என்று விசாரித்துக் கொடுப்பது மட்டுமில்லாமல், யார் பேரைச்சொல்லி வாங்குகிறார்களோ அவர்கள் என்றாவது கடைக்கு வரும்போது மறக்காமல்  போட்டுக்கொடுத்து வீட்டில் பூசை வாங்க வைத்துவிடுவார் என்பது இருவருக்கும் நல்லாவேத் தெரியும்.

            துண்டுபிடியே கதியெனக் கிடந்தவர்களுக்கு முழுபீடி பிடிக்க ஒரு நாள் வாய்ப்புக் கிடைத்தது. 

            மதிய நேரம்  கிணற்றில் குளித்துவிட்டு, துவைத்த ஜட்டியை தலையில் மாட்டியபடி கோனார் கடையைத் தாண்டும்போது கடையில் கோனாரின் மகன் இருந்ததைப் பார்த்ததும் முண்டக்கண்ணனுக்கு அதிர்ச்சியாகவும் ஆனந்தமாகவுமிருந்து. கடைக்கு முன்பு கலர் குடித்துக் கொண்டிருந்தவரிடம், “அண்ணாச்சி! கடையிலக் கோனார் பையன் உக்காந்துருக்கான். கோனாரு எங்கப்போனாரு?“ என்றான்.

            “மெட்ராசுல இருக்குற அவரு சவலப்பாடி மவன் கலியாணத்துக்குப் போயிருக்காரு. வர்றதுக்கு ரெண்டு மூணு நாளு ஆவுமாம். அதான் பையன் கடையப் பாத்துட்டுருக்கான்” – அவர் சொல்லி முடித்ததும், மகிழ்ச்சியில் வீட்டைப் பார்த்து காட்டுமுயலாய் துள்ளிக் குதித்தோடினான். ஓடிய ஓட்டத்தில் தலையில் மாட்டியிருந்த ஜட்டி தரையில் விழுந்தது; கையில் வைத்திருந்த சோப்பு டப்பா நழுவி விழுந்ததில், லைபாய் சோப்பு செம்மண் சோப்பானது; இடுப்பில் கட்டியத் துண்டு அவிழ்ந்து  முட்டிக்குக் கீழே போகும்போது பல்லி பூச்சியைப் பிடிப்பதுபோல் படக்கென்று பிடித்து மேலேத்திக் கட்டிவிட்டு, “நல்லவேள யாரும் பாக்கலப்பா”யென்று தெருவை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் ஓட்டத்தைத் தொடங்கும்போது, “ ஓ..கொழுந்தனாரே! கோவணம் பாய்ச்சிக்கிட்டு ஓடுங்க. இப்படி அம்மணக்குண்டியா  ஓடுனா.. புளியங்கா  எங்காயாவது அத்து   வுழுந்துரப்போவுது!“ என்றாள் மச்சியில் துணி காயப்போட்டுக்கொண்டிருந்த முண்டக்கண்ணனின் மைனி.

            “மைனியோ! நல்லாருப்பீய யார்ட்டயும் சொல்லிராதீய”- வெட்கப்பட்டுக்கொண்டே வீட்டுக்குப் போன முண்டக்கண்ணன். டவுசரை மட்டும் மாட்டிக்கொண்டு தூக்குவாளியைப் பார்க்க ஓடினான். தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அவனின் கையைப் பிடித்திழுத்து, காதில் கிசுகிசுத்தான்.

             “என்னல சொல்ற மக்கா..! கோனாரு மூணு நாளைக்குக் கடைக்கு வரமாட்டாரா?! துண்டுபீடி குடிச்ச நாம வாழ்க்கையில மொதமொதலா முழுபீடி குடிக்கப்போறோம். போட் போட்”டென்று தூக்குவாளி ஆட்டம் போட்டான்.

            “லேய், கோமுட்டி! ஆட்டத்த நிறுத்திட்டு, மொதல்ல வீட்டுக்குப் போயி துட்ட எடுத்துட்டு வா. நா எங்க வீட்டுத் திண்ணையில உக்காந்துருக்கேன்“ என்றான் முண்டக்கண்ணன்.

            முண்டக்கண்ணன் திண்ணயில் உட்காருவதற்குள்  தூக்குவாளி முன்னாடி வந்து நின்றான். “என்ன மக்கா, அதுக்குள்ள எடுத்துட்டு வந்தீட்டியா! எவ்வளவு கொண்டு வந்த? “

            “எங்கம்ம வீட்டப்பூட்டிட்டு தொறவாலக் கொண்டுபோயிட்டா மக்கா! வெளக்காங்குழியில கொஞ்சம் சில்லரக் கெடந்துச்சி. அத எங்கப்பா பொறக்கிட்டுப் போயிட்டாருல. ஒங்க வீட்டு அரிசி டப்பா, மொளவுப்பெட்டியில ஏதாவது தேறுதான்னு கொஞ்சம் தேடிப்பாரு”என்றான்.

            “வாய்ப்பேயில்ல மக்கா! எங்கம்ம துட்டு வைக்கிற எடம் யாருக்குமேத் தெரியாது. எங்கப்பா யாவாரத்துக்கு, கைச்செலவுக்குத் துட்டு வேணுமுன்னு எங்கம்மாக்கிட்டக் கேட்டா, இருந்த எடத்தவுட்டு நவுளாம அங்னயே இரும். நா எடுத்துட்டு வாரேன்னு வீட்டுக்குள்ளப் போயிட்டுத்தான் எங்கம்ம துட்ட எடுத்துக் குடுப்பா. அந்த எடத்த நைசா எங்கப்பா ஒளிஞ்சிருந்து பாத்துட்டு, மறுநா போயித் தேடுவாரு. சல்லிப்பைசா அவரு கையிலச் சிக்காது. பூன குட்டியள எடம் விட்டு எடம் மாத்துறதுபோல எங்கம்ம துட்டு வைக்கிற எடத்த மாத்திக்கிட்டேயிருப்பா!“

             “என்ன மக்கா கோனாரு ஊருக்குப்போயிட்டாரு… கொளுத்திரலாமுன்னுப் பாத்தா, இப்படி எல்லாம் குண்டக்க மண்டக்க நடக்கப்பா! “- இருவரும் திண்ணையிலமர்ந்து புலம்பிக்கொண்டிருந்தனர்.

            பொழுது இருட்டிவிட்டது. வேலை முடிந்து இருவரின் அம்மாக்களும், அப்பாக்களும் வீடு திரும்பினர். தூக்குவாளி தன் அம்மாவிடம், “எம்மோ! ஒரு ரெண்டு ரூவா தாயேன். பார்லேஜி பிஸ்கட்டு திங்கணும்போல இருக்கு” என்றான்.

            “சட்டி நெறைய பயித்தங்கா அவுச்சி வைச்சது அப்படியே ஈ மொச்சிக்கெடக்குது. சின்ன நொள்ளைக்கி பிஸூகோத்து கேக்குதோ பிஸூகோத்து. நாக்க… அறுத்துப்புடுவென், பாத்துக்கோ!“ என்று நாக்கைத் துருத்தியதும் மீண்டும்   திண்ணைக்கே வந்துவிட்டான் தூக்குவாளி.

            “எம்மோ… கொழம்பு வைக்க புளிகிளி வேணுமுன்னா சொல்லு. கடைக்கிப் போயிட்டு வாங்கிட்டு வாரேன்.” – என முண்டக்கண்ணன் சொன்னதும், “இதுக்குத்தான் ஆம்புளப்புள்ள வேணுமுங்கிறது. வாயா, நா பெத்த ராசா!” என்று முந்தியில் முடிந்துவைத்த சில்லரைகளை அவிழ்த்து முண்டக்கண்ணனிடம் நீட்டினாள். ஆசையோடு வாங்கப்போன அவனை கோழி அமுக்குவதுபோல் ஒரே அமுக்கு அமுக்கி, உச்சிமுடியைப் பிடித்து, ”முந்தா நேத்து தலைவலிக்கிது தைலம் வாங்கிட்டு வாருமுன்னு ஒங்கப்பங்கிட்ட சொன்னா, அவன் மேலுவழின்னு மல்லாந்து தூங்கிட்டான். ஒன்னக்கூப்பிட்டா எனக்குக் காலுவழின்னு எங்கிட்டச் சொல்லிட்டு தெருவுலப்போயி கபடி வெளையாண்டுருக்க. இப்பும் ஒனக்கு வாங்கித்திங்க காசு தேவப்பட்டதும் கடைக்கிப்போறேன்னு நல்லப்புள்ளயா நடிக்கிறீயோ! ஓன் நடிப்பு மயிரெல்லாம் ஒன் அப்பங்கிட்ட வச்சிக்கோ” நடுமண்டையிலயே நங்கு நங்கென்று குட்டு வைத்தாள்.

            மண்டையைத் தடவியபடி வீட்டைவிட்டு வெளியே வந்தான் முண்டக்கண்ணன். கண்களில் கண்ணீர்ப் பொங்கி நின்றது. தூக்குவாளி ஓடோடி வந்து, “என்ன மக்கா ஆச்சு! எதிலயும் முட்டிக்கிட்டயா?” என்றான் தூக்குவாளி. துட்டு கேட்டு குட்டு கிடைத்ததைச் சொன்னான் முண்டக்கண்ணன்.

            “மக்கா, இன்னக்கி நமக்கு நேரமே சரியில்ல. அடிமேல அடி; இடி மேல இடியா வுழுந்துட்டுருக்கு. வா! கடைக்கிப்போலா”மென்றான் தூக்குவாளி.

             “மணி ஏழுதானல ஆவுது. இப்பும் போனா மாட்டிக்கிவோம்.”

            “நம்ம கடைக்கி முன்னாடிப் போயி பொறுக்குனாதான மாட்டுவோம். சைடுல தேடுவோம். ஆளுக்கொரு துண்டுபீடி கெடைக்காமலாப் போவப்போது! இருக்குற டென்சனுக்கு ஒரு பொகையப் போட்டாத்தான் எல்லாம் சரியாவும்.”- இருவரும் கடையைப் பார்த்து நடையைக் கட்டினர்.

            அந்த நேரம் துவையல் அரைக்க கடைக்குத் தேங்காய்த்துண்டு வாங்க வந்த, தூக்குவாளியின் பக்கத்துவீட்டு கிளிக்குஞ்சுவும், எதிர்த்தவீட்டு பொட்டுவெடியும் குனிந்து இருட்டில் துண்டுபீடியைத் தேடிக்கொண்டு இருந்தவர்களைப்பார்த்து, ‘ப’யென்று பின்னால் வந்து பயங்காட்டியதும், தூக்குவாளியும் முண்டக்கண்ணனும் கரண்டு கம்பியில் அடிப்பட்ட காக்காவைப்போல் பயந்து அலறினர்.

            அலறியவர்களைப் பார்த்து கிளிக்குஞ்சுவும் பொட்டுவெடியும் கிரீஸ் வண்டிய ஸ்டார்ட் செய்த மாதிரி ‘ட்ரி ட்ரி’யென்று சிரித்து முடித்துவிட்டு. “ஆமா, என்னத்தல இப்படி குனிஞ்சிக்கிட்டுத் தேடுதீய?“ என்றான் கிளிக்குஞ்சு.

            திரு திருவென திருட்டு முழி முழித்தான் முண்டக்கண்ணன்.  தூக்குவாளி     சுதாரித்துக்கொண்டு, “அல்லியக்கா காப்பித்தூள் வாங்க ரெண்டு ரூவா குடுத்தா. இங்கன வரும்போது காலுல எதோ குத்துனமாறி இருந்துச்சி. என்னன்னு பாக்குறதுக்காக குனிஞ்சன். மேல் பையிலிருந்து துட்டு கீழ வுழுந்துட்டு மக்கா!”

            “நாங்கலாம் கெணத்துல வுழுந்தத் துட்டையே அசால்ட்டா எடுப்போம். தரையில வுழுந்தத் துட்டயா இவ்வளவு நேரம் தேடுறீய!  ஆனா, ஒரு கண்டிசன்! துட்ட எடுத்துக் குடுத்ததும் எங்களுக்கு ஆளுக்கொரு தேங்கா முட்டாயி வங்கிக்குடுத்துரனும், சரியா!”

“சரி” என்றான் தூக்குவாளி.

            ஆந்தையைப்போல் கூர்ந்து நால்வரும் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். சப்பு சப்பென்று மிதித்துத் தேடிய பொட்டுவெடியை, “ கிறுக்கா! இப்படி மிதிச்சா துட்டு மண்ணுக்குள்ளப் பூந்துரப்போவுது. அப்புறம் தேங்காமுட்டாயி கெடைக்காது பாத்துக்கோ! “- திட்டிவிட்டு மீண்டும் தேடத் தொடங்கிய  கிளிக்குஞ்சுவின் ஓட்டை கால்டவுசரிலிருந்து இரண்டு ஒரு ரூபாய் நாணயங்கள் ‘கிளுக்’கென சத்தத்தோடு கீழே விழுந்தது. அவன் பக்கத்தில் தேடிக்கொண்டிருந்த முண்டக்கண்ணன் ‘படக்’கென எடுத்து மேல்சட்டப்பையில் போட்டுக்கொண்டு, “எந்திரில மக்கா!” என்று தூக்குவாளியைப் பார்த்து  கண்ணைக் காட்டினான். இருவரும் மெல்ல எழுந்து, “மக்கா.. நாங்க வந்து ரொம்ப நேரமாயிட்டு. அல்லியக்கா தேடுவா! துட்டு தொலைஞ்ச விசியத்த அவட்டச் சொல்லிட்டு அஞ்சே நிமுசத்துல வந்துருதோம். வந்ததும் தேங்காமுட்டாயி திங்குறோம். சரியா!”

            “சரி சீக்கிரமா வாங்க.”என்று கிளிக்குஞ்சுவும் பொட்டுவெடியும் வெறித்தனமாய் தேடுதலைத் தொடர்ந்தனர். போன இருவரும் வரவேயில்லை. கோனார் மகன் கடையைச் சாத்துவதற்கு பலகையை எடுக்கும் சத்தம் கேட்டதும், “ அய்யய்யோ! எங்கம்ம தொவய அரைக்கத் தேங்காத்துண்டு வாங்கிட்டு வரச்சொன்னது மறந்தேபோச்சே”- பதறியடித்து கடைக்கு ஓடி, “அண்ணாச்சி ஒரு துண்டு தேங்காத் தாங்க”வென சொல்லி  கிளிக்குஞ்சு கால்சட்டைப் பையில் கையை நுழைத்தான். பையிலுள்ள ஓட்டை வழியாய் பனைமரத்துப் பொந்திலிருந்து கிளிக்குஞ்சுகள் எட்டிப் பார்ப்பதுபோல் கிளிக்குஞ்சுவின் விரல்கள் வெளியே வந்ததைக் கண்டு, “ எல பொட்டு, போச்சி எல்லாம் போச்சி! அவனுவத் துட்ட தேடப்போயி, எந்துட்டு எங்கயோ விழுந்துடுச்சி”யென்று அழுதுகொண்டே தெருப்பூராவும் தேடியலைந்தான். கால் வலியும் களைப்பும் கிடைத்ததேத் தவிர துட்டு கிடைக்கவேயில்லை.

            வாடிய பயிர்போல் வீட்டு வாசலில் நின்றவனை, “எல தேங்காத்துண்டு வாங்க  இவ்வளவு நேரமா? சீக்கிரம் கொண்டா! பசி வயித்தக்கிள்ளுது” அடுப்படியிலிருந்து கத்தினாள் கிளிக்குஞ்சுவின் அம்மா.  

            “எம்மோ… டவுசர் பையி ஓட்ட வழியா துட்டு எங்கயோ வுழுந்துடுச்சிம்ம. உண்மையா, ஒம்மேல சத்தியமா! நா எதும் வாங்கித் திங்கல. நீ வேணா பொட்டுக்கிட்டக் கேட்டுப்பாரு.”- தேங்காய் மிட்டாய்க்கு ஆசைப்பட்ட கிளிக்குஞ்சுவுக்கு தேங்காய் மட்டையாலே அடி விழுந்தது. அவனுக்கு விழுந்த அடியைப்பார்த்து, பொட்டுவெடி வீட்டுக்கு ராக்கெட்வெடி வேகத்தில் ஓடினான்.

            மறுநாள் மாலை கோனார்க்கடையில் கிளிக்குஞ்சுவிடம் எடுத்த இரண்டு ரூபாய்க்கு பீடிகள் வாங்கிக்கொண்டு பண்டுவர் கிணற்றுக்கு முண்டக்கண்ணனும் தூக்குவாளியும் மகிழ்ச்சியில் மான்போல் துள்ளிக்கொண்டு போயினர்.  இருவரும் சிமெண்ட் தொட்டியிலிறங்கி, வாழ்க்கையில் முதன்முதலாய் பிடிக்கப்போகும் முழுபீடிக்கு முத்தம் கொடுத்து, ஒருவருக்கொருவர் மாறி மாறி பற்றவைத்து, வாய் வழியாய் புகையையிழுத்து மூக்கு வழியாய் வெளியேற்றி ஆனந்தமாய் இருக்கையில்..

            “எங்களுக்கு முழுபீடி அடிக்க வாய்ப்பளித்த அன்பான கிளிக்குஞ்சே…! ஒனக்கு கோடானகோடி நன்றி!!” என இருவரும் ஒருசேர உரக்கக்கத்தினர். அவர்கள் குரல் சூறாவளியாய் சுழன்று காட்டுவெளியில் அடங்கி நிற்கவும். “கிளிக்குஞ்சே! நன்றி.. நன்றி”யென சிமெண்ட் தொட்டியின் வெளியேயிருந்து கரகரத்தக் குரலொன்று கேட்டது. பதறியடித்து இருவரும் தொட்டியிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தார்கள்.

            சாலை வளைவில் வாகனத்தை மறைத்து நிற்கும் ஒற்றை காட்டு யானையைப்போல் தொட்டிக்கு வெளியே சட்டைப்போடாமல் கருத்த மேனியுடனும் கையில் சாட்டைக் கம்புடனும் நின்றுகொண்டிருந்தார் முண்டக்கண்ணனின் அப்பா.  அவரைப்பார்த்ததும் வியர்த்து விறுவிறுத்து, பீடியை அணைத்து, புகையை விழுங்கி இருமினார்கள். மேலப்பாளையம் சந்தைக்கு மாடுகளைக் கொண்டுசெல்வதுபோல் இருவரின் கைகளையும் ஒன்றாகக்கட்டி, பின்னால் சைக்கிளை உருட்டிக்கொண்டும் அவர்களை சாட்டையால் அடித்துக்கொண்டும் சென்றார் முண்டக்கண்ணனின் அப்பா.

            தூக்குவாளியின் வீடு வந்ததும் அவனது தாய்த் தகப்பனை அழைத்து விபரத்தைச் சொல்லி ஒப்படைத்துவிட்டு, தன் மகனை வீட்டுக்குக் கூட்டிச்சென்றார். அடுப்பில் உலை வைத்துக்கொண்டிருந்த முண்டக்கண்ணனின் அம்மா, அழுதுகொண்டே வந்த மகனைப் பார்த்து ஓடோடி வந்து, “யோவ் எதுக்குய்யா புள்ளய கையக்கட்டிக் கூட்டி வார! என்னய்யா பண்ணுனான், ஏன் அழுவுறான்?“ என்றாள்.

            “ஒம்புள்ள கூட்டுச்சேந்து பீடி குடிக்கிறான், பீடி…”- சொல்லிவிட்டு கோபத்தில் பீடியைப் பற்றவைத்தார்.

             “ஏல நாய… அப்பா சொல்றது நெசமால? வாயத் தொறந்துச் சொல்லு! பீடி குடிச்சீயால!”- முண்டக்கண்ணனின் அம்மா பெரிய முண்டக்கண்ணி கண்களை உருட்டி மிரட்டியதும், “எம்மோ! தெரியாம பண்ணிட்டேன். என்ன மன்னிச்சிரும்ம”- காலில் விழுந்து உண்மையை ஒப்புக்கொண்டான்.

            “மொளச்சி மூணு எல விடல. அதுக்குள்ள வேண்டாத வேலையெல்லாம் பண்ணுத நீ!”- கோபமடைந்தவள் கருக்கு மட்டையையெடுத்து காலுக்குக்கீழே விளாசியெடுத்தாள். வலித்தாங்காமல் அங்குமிங்கும் ஓடினான் முண்டக்கண்ணன்.

            “படிக்கிறப் புள்ள முன்னால பீடி குடிக்காத, கடைக்கிப் போயி பீடி வாங்கச் சொல்லாத, புள்ள கெட்டுப்போயிருமுன்னு ஓங்கிட்ட எத்தன நாளு சொல்லிருக்கேன்!” என்று முண்டக்கண்ணன் அப்பனுக்கும் கருக்கு மட்டையால் நான்கு அடி விழுந்தது.

      “ஏட்டி.. ஒனக்குக் கோட்டிகீட்டி புடுச்சிடுச்சா? தப்பு பண்ணுன அவன உட்டுட்டு என்னப்போட்டு அடிக்க! “

            “பீடிக்குடிக்கிற ரெண்டுபேரு வாயையும்  இன்னைக்கி சுட்டுப்பொசுக்குறேன், பாருங்க”- சூடான ஊதாங்குழலையெடுத்தும் தகப்பனும் மகனும் வீட்டைவிட்டு வெளியே ஓட்டம்பிடித்தனர். அவர்களுக்கு முன்னால் தெருவில் தூக்குவாளியை கையில் வாரியலோடு விரட்டிக்கொண்டு போய்க்கொண்டியிருந்தாள் அவனின் அம்மா.

            அலறல் சத்தம் கேட்டு தெருவிற்கு வந்த பொட்டுவெடி. திண்ணையிலிருந்த கிளிக்குஞ்சுவிடம், “முண்டக்கண்ணனும் தூக்குவாளியும் நம்மளமாறி  துட்டத் தொலைச்சிட்டோமுன்னு சோகத்துல இருக்காணுவ. ரெண்டுபேரு அம்மாவும் அவனுவளப் போயி இப்படி வெரட்டி வெரட்டி அடிக்கிறாங்களே. அய்யோ! பாவம்.” என்றான்.

            “லூசுப்பயல! அவனுவ பாவமல்ல, நம்மதான் பாவம். அவனுவ.. கடைக்கித் துண்டுபீடி பொறுக்க வந்துருக்காணுவ. நம்மளப் பாத்ததும் துட்டு தொலைஞ்சிப் போச்சின்னு நம்மகிட்ட பொய்ச் சொல்லிட்டு, கடைசியில எந்துட்டயே ஆட்டயப் போட்டுட்டுப் போயிட்டானுவ.”

            “என்ன கிளி சொல்ற?!”

            “ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி பாளைய நாடார் கெணத்துல மாட்டுக்கு வாழக்கண்ணு அறுத்துக்கெட்டி, சைக்கிள்ள வச்சி வடக்க பனைவெடலியைத்தாண்டி கொண்டுவந்துட்டுருக்கும்போது, எனக்கு ஒண்ணுக்கு முடுக்கிட்டு. சைக்கிள ஒத்தையடிப்பாதையில  நிப்பாட்டிட்டு, ஒண்ணுக்கு அடிக்கலாமுன்னுப் பாத்தா! பக்கத்துல பொம்பளயாளுவ மாடு மேய்ச்சிக்கிட்டு இருந்தாங்க. என்னடா சோதனையின்னு ஒண்ணுக்க அடைக்கிக்கிட்டு, கொஞ்சந்தள்ளி  கும்மமாயிருக்குற பனைவெடலிக்குள்ளப் போயி அடிக்கலாமுன்னு உள்ள போனேன். அங்க ஒரு சைக்கிளு நின்னுச்சி. ஒண்ணுக்கிருந்துட்டு யாரு சைக்கிளு? என்னன்னு பக்கத்துலப் போயிப் பாத்தா, அது நம்ம முண்டக்கண்ணன் சைக்கிளு. நல்ல சுத்தியடிச்சிப் பாக்குறேன்; கொஞ்சம் நேரம் நின்னுப் பாக்குறேன். அவன் ஆளையேக் காணும்.”

            “பக்கத்துல இருக்குற பண்டுவர் கெணத்துல புறாகிறாப் புடிக்கிறாணுங்களான்னு பாக்க வேண்டியதுதான நீ.” என்றான் தூக்குவாளி.

            “கரைட்டாச் சொன்ன. நானும் நீ சொன்னமாறி போயிப் பாக்கலாமுன்னு கெணத்துக்கிட்டப் போனதும், ஒரே பீடி நாத்தம் சும்மா காத்துல குப்புகுப்புன்னு அடிக்கி. அரவங்காட்டாம இடிஞ்சிப்போன மோட்டார் ரூம்பப் பாத்தேன். உள்ள ஒருத்தனுமில்ல. சரி, சிமெண்ட் தொட்டிய பாக்கலாமுன்னு பக்கத்துலப்போனா..! முண்டக்கண்ணன் என் பையிலிருந்து வுழுந்தத் துட்ட எடுத்தத தூக்குவாளிக்கிட்டச் சொல்ல, அதுக்கு அவன் எக்காளமா சிரியோ சிரின்னு சிரிக்க. ரெண்டுபேத்துக்கும் ஓரே  சந்தோசம். சிரிக்கிறத் திருட்டுப் பயலுவள இன்னைக்கி அழ வைக்கணுமுன்னு, அங்கருந்து நேரா முண்டக்கண்ணன் வீட்டுக்கு சைக்கிள விட்டேன். அவன் அப்பா அப்புந்தான் யாவாரத்த முடிச்சிட்டு, வீட்டு வெளித்திண்ணையில உக்காந்து பீடி பத்தவச்சிட்டு இருந்தாரு. நா இவனுவ பீடி குடிக்கிற விசியத்த அவருக்கிட்ட பத்தவச்சேன். அந்தச் சூடு தாங்காமத்தான் தெருவுல இப்படி ஓடிக்கிட்டு இருக்காணுவ.”என்றான் கிளிக்குஞ்சு.

             “சூப்பர்ல, இனுமேலு வாழ்க்கையில அடுத்தவன் துட்டையும் பீடியையும் தொடவே மாட்டானுவ. அப்படியொரு பெரிய ஆப்பா.. வச்சிட்ட மக்கா! நல்ல அடிவாங்கி சாவட்டும்” – திண்ணையில் ஓங்கியடித்துச் சொன்னான் பொட்டுவெடி.

            “லேய் மக்கா, முண்டக்கண்ணன்  தப்புப் பண்ணுனான், அடிவாங்கிட்டு ஒடுறான். அவன் அய்யா எதுக்குல இப்படி ஒடுறாரு…?” – கிளிக்குஞ்சு கேட்க,

            “அதான் மக்கா எனக்கும் புரியல.” என்று திண்ணையில் சாய்ந்து இருவரும் யோசனையில் மூழ்கினர். 

*****

You Might Also Like

கறுப்பி
மூன்றாம் பாலினம்
தன்னைச் செதுக்கும் சிற்பி
ராட்சசி
ஸெரிப்ரம்
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் ஜூன் 2026
Previous Article ஆறறிவு..?!
Next Article மலைக் கிராமங்கள்!!!  நிஸ்வா – பகுதி 11
2 Comments
  • Ramesh V says:
    June 30, 2026 at 9:54 am

    Great writing…enjoyed thoroughly

    Reply
    • Vasanthi Muneesh says:
      June 30, 2026 at 5:23 pm

      Thank u so much thozhar🙏🏻🙏🏻🙏🏻💙💙💙

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?