VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: கடல் பிரசவித்த குகையும், மலையும்!!!  நிஸ்வா – பகுதி 10
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > தொடர்கள் > கடல் பிரசவித்த குகையும், மலையும்!!!  நிஸ்வா – பகுதி 10
தொடர்கள்

கடல் பிரசவித்த குகையும், மலையும்!!!  நிஸ்வா – பகுதி 10

நிலப்பரப்பாக ‘ஓமான்’ உருவான புவியியல் வரலாறு ஒரு பேரதிசயம்.

இளங்கோ ராமசாமி
Last updated: June 8, 2026 12:40 pm
Share
11 Min Read
கடல் பிரசவித்த குகையும், மலையும்!!!
SHARE

கடந்த அத்தியாயத்தில் ‘தனுஃப்’ நகரின் சிதிலங்களுக்கிடையே நின்று பகையின் தழும்புகளைத் தடவிப் பார்த்தோமல்லவா? அந்த வரலாற்று நினைவுகளில் மூழ்கியதால் நிகழ்காலக் குறிப்பொன்றைச் சொல்ல மறந்து விட்டேன்.

 

நல்ல மழை பொழிந்து ஒய்ந்தால் போதும் நிஸ்வாவைச் சுற்றியிருக்கும் மக்கள் வாதி தனுஃபை நோக்கிப் படையெடுக்கத் துவங்கி விடுவர். சிறிது சிறிதாகக் கொட்டும் செயற்கை அருவிகளில் தலையைக் கொடுத்துக் கும்மாளமிடுவதற்காகக் குஞ்சு குளுவான்களை அள்ளிப் போட்டுக் கொண்டு பெரிய பெரிய 4 x 4 கார்கள் வாதி தனுஃபின் நீரோடையைக் கடந்து மறுபுறம் செல்லுவதைப் பார்க்கக் கண் கொள்ளாக் கட்சியாக இருக்கும்.

 

நீரோடையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் ஒரு தடுப்பணை இருக்கிறது. அந்த அணை நிரம்பி உபரி நீர் பெருக்கெடுத்து ஃபலஜின் வழி ஓட ஃபலஜின் சுவர்களில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள திறப்புகள் வழியும், உபரி நீர் வெளியேறுவதற்காகப் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் வழியும் திடுதிடுவென குளிர்ந்த தூய நீர் கொட்டும். கோடை மழைக்குப் பிந்தைய சில நாட்கள் பாலை வெம்மையில் காய்ந்து கிடக்கும் மக்களுக்கு வருண பகவான் பெரிய மனது பண்ணி சொர்க்கத்தைக் காட்டும் அபூர்வ தினங்கள்.

 

அதனால் நீங்கள் நிஸ்வாவிற்குக் கிளம்புவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எதற்கும் மழைத் தேவனுக்குப் பொங்கல் வைத்து ஒரு படையலைப் போட்டு விடுங்கள். அவன் மனம் குளிர்த்தால் உங்கள் உடல் குளிரக் குளிரக் குளித்துக் களிக்கலாம்.

 

அப்படிக் கிளம்ப மனமின்றிக் குதியாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் உங்களைப் படாத பாடுபட்டுக் கிளப்பி அருகே இருக்கும் “அல் ஹுத்தா” என்ற குகைக்கு அழைத்துச் செல்வதே இன்றைய திட்டம். அங்கு போய்ச் சேர இருபது நிமிடங்களாவது பிடிக்கும். அந்தக் குகைக்குள் செல்ல அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும்.

 

இணையதளத்தில் முன்பதிவு செய்து விட்டுப் போவது உசிதம். இப்போது அந்தக் குகையை ஓம்ரான் (Omran) என்ற நிறுவனம் நிர்வகிக்கிறது.

 

“அல் ஹுத்தா” என்பதற்கு “வழிகாட்டி” என்றர்த்தம். 1960-களில் “ஹம்ரா”வில் இருந்து “ஷரஃப் அல் மேயன்” அல்லது “ஜபல் ஹாத்” என்றழைக்கப்படும் மலையுச்சியைத் தேடி வளைந்து நெளிந்து செல்லும் ஒரு அழகிய சாலையின் இடது புறத்தில் சமத்துப் பிள்ளையாக அமர்ந்திருக்கும் ஒரு குக்கிராமம் “அல் ஹுத்தா”. அந்தக் கிராமத்தை ஒட்டியுள்ள இரு மலைகளுக்கிடையே இறங்கினால் மிகப்பெரியதொரு கருந்துளையைக் காண முடியும்.

 

பழங்காலத்தில் வழி தவறிப் போன ஆட்டுக் குட்டியைத் தேடிப் போன மேய்ப்பனின் கண்ணில் அப்பெருந் திறப்பு தட்டுப்பட்டிருக்கிறது. அந்த ஆட்டுக் குட்டியின் நினைவாகவே அக் குகை “அல் ஹுத்தா” என்ற பெயரைப் பெற்றதாக ஒரு தொன்மம் உலவுகிறது.

 

அந்தக் கிராமத்தின் மலை முகடுகளிடையே துவங்கும் இந்தப் பெரும் குகை சுமார் ஐந்து கிலோ மீட்டர்கள் நீளமுடையது. உள்ளே மூன்று நீர்க் குளங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகப் பெரியது குகையின் மறுபுற வாயிலில் இருப்பதே. அது சுமார் 800 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் 15 முதல் இருபது மீட்டர் ஆழமுமுடையது. அந்தக் குளத்தின் கரைவரை மறுபுறத்தில் இருந்து வழிகாட்டிகளது துணையோடு சுற்றுலாப் பயணிகள் வந்து பார்வையிடத் தேவையான வசதிகளை ‘ஓம்ரான்’ என்ற நிறுவனம் செய்து கொடுத்திருக்கிறது.

 

அந்தக் குளத்தின் மறுபுறம் இருக்கும் 500 – 800 மீட்டர் குகையை ஓமானி அரசு 2006-ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விட்டது. அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொண்டு சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குகையின் வாயில் வரை பொம்மை ரயிலில் பயணிப்பது ஓமானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் குழந்தைகளாக்கும் ஒரு தனித்த அனுபவம். 

2012-ஆம் ஆண்டு பாராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்ட குகை ஒரு சிறு அருங்காட்சியகம், இணையதள அனுமதிச்சீட்டு முன்பதிவு எனப் புதிய வசதிகளுடன் 2016-ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது.

 

அப்பெரும் குகைக்குள், மஞ்சள் வண்ண ஒளியில் குளித்துக் கொண்டிருக்கும் படிகளும், கைப்பிடிகள் பொருத்தப்பட்ட பாதுகாப்பான பாதையும் உண்டு.

 

குகையின் கூரையில் இருந்து கூரான கத்திகளைப் போலத் தொங்கும் சுண்ணாம்புப் பாறைகளாலான (Limestone அல்லது Calcium carbonate) “ஸ்டாலக் டைட்டுகளையும்” (Stalactites) தரையில் இருந்து மேலெழுந்து நிற்கும் சற்றே தடிமனான “ஸ்டாலக்மைட்டுகளையும்” (Stalagmites) அச்சுவர்களில் மடிப்பு மடிப்பாகக் காணப்படும் திரைச்சீலை போன்ற பாறைகளையும் காண்போரது விழிகள் ஆச்சரியத்தில் விரிவது உறுதி. இக்குகைக்குள் நிழற்படம் எடுக்க அனுமதி கிடையாது. 

            மொத்த குகையும் கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர் நீளமுடையதெனினும் பார்வையாளர்கள் 850 மீட்டர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர். குகையின் மிகப்பெரிய மண்டபம் போன்ற பகுதி 150 மீட்டர் நீளமும் 65 மீட்டர் உயரமும் கொண்டது. 

இங்கு உலகில் வேறு எங்கும் காண முடியாத கண்களற்ற, இளஞ்சிவப்பு நிறமுமம், ஒளி ஊடுறுவக் கூடிய உடலும் கொண்ட அதிசய மீன் இனம் வாழ்கிறது. உள்ளே பல அரிய வகை சிலந்திகளும், நீண்ட வால் கொண்ட வெளவால் இனமும் வாழ்கின்றன.

 

இரு பெரும் திறப்புகள் இருப்பதால் காற்றோட்டமாக இருக்கும் இந்தக் குகை கடும் கோடையிலும் குளிர்ச்சியாகவே இருக்கும் என்பதால் இதனை வருடத்தின் எந்தப் பருவத்திலும் கண்டு ரசிக்கலாம்.

 

நான் இதுவரை ஐந்து முறை “அல் ஹூத்தா குகைக்குள் சென்று வந்திருக்கிறேன். மூன்று முறை முன்வாசல் வழியே வழமையான சுற்றுலாப் பயணிகளோடும் இரு முறை குகையின் துவக்கப் புள்ளியான “அல் ஹீத்தா” கிராமத்தில் இருக்கும் வாயிலினுள் கயிறு கட்டி இறங்கி நடந்தும், தவழ்ந்தும், ஏறியும், குதித்தும், நீந்தியும் குகையின் மறுபுறத் திறப்பை அடைய முயற்சித்திருக்கிறேன்.

 

இரண்டாவது முறை எங்கள் குழு கிட்டத்தட்ட குகையின் மறுபுறத்தை அடைந்து விட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களிடம் இருந்த விளக்குகளின் மின் கலன்கள் தங்கள் திறனை இழந்து விட்டதால் தோல்வியுடன் திரும்ப வேண்டியதாயிற்று. இப்போது முன்புற வாசல் வழி எவர் வேண்டுமானாலும் குகைக்குள் இறங்கலாம் என்ற நிலை மாறி “ஓம்ரான்” நிறுவன வழிகாட்டிகளது துணையுடன் மட்டுமே அக்குகையின் முழு நீளத்தைக் கடக்க முடியும் என்ற புதிய விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் குகையினுள் ஒரு புறம் இறங்கி மறுபுறம் வெளியேறும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

 

இந்த “அல் ஹுத்தா” குகையின் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட போது மிக முக்கியமானதொரு புவியியல் உண்மையை அறிந்து கொண்டேன். உண்மையில் அது தான் இந்த அத்தியாயத்தின் ஹைலைட்டே.

 

ஓமான் உலகின் அதிசய பூமி. குறிப்பாக ஓமானின் ‘ஹஜர்’ மலைத் தொடர் போன்ற புவியியல் அமைப்பு உலகில் வேறெங்கும் கிடையாது.   நிலப்பரப்பாக ‘ஓமான்’ உருவான புவியியல் வரலாறு ஒரு பேரதிசயம். 


உலகில் உள்ள மற்றனைத்து மலைத்தொடர்களும் புவித் தட்டுகள் அல்லது புவியோட்டுத் தட்டுகள் என்றழைக்கப்படும் இரு ‘டெக்டானிக் ப்ளேட்டுகள்’ (Tectonic Plates) மோதிக் கொண்ட போது மேல் நோக்கி உந்தித் தள்ளப்பட்ட பூமியின் மேண்டில் (Mantle) எனப்பட்ட பகுதியால் ஆனவை. அதாவது இரண்டு தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஒன்று மற்றதன் அடியில் செருகி கீழே செல்லும். மோதலால் ஏற்படும் அழுத்ததின் காரணமாக கீழே செல்லும் தட்டின் மேற்புறத்தில் உள்ள ‘கண்ட ஓடு” (Continental Crust) உந்தித் தள்ளப்படும் ஒரு தடிமனான தரைவிரிப்பு மடிப்புகளாக மேலெழுவதைப் போல மலைத்தொடர்களாக உருவெடுக்கின்றது. 

குறிப்பாக, இது ‘குவியும் தட்டு எல்லைகளில்’ (Convergent plate boundaries) நிகழ்கிறது. அங்கு ஏற்படும் மிதமிஞ்சிய அழுத்தமானது, தட்டுகளின் ஓரங்களை மடியவும், நெரியவும் மற்றும் தடிமனாகவும் செய்கிறது.

 

பூமியின் மேலடுக்கான புவி ஓடு (Crust/Lithosphere) மேல்நோக்கி மடிகிறது. இதனை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதுவதாகக் கற்பனை செய்து பாருங்கள்; மோதலின் போது கார்களின் உலோகம் எப்படி நசுங்கி மேல்நோக்கி எழும்புகிறதோ, அதேபோலவே கண்ட ஓடுகளும் ஒன்றின் மேல் ஒன்று அழுத்தி மடிந்து மலைத்தொடர்களை உருவாக்குகின்றன. உதாரணமாக, இந்தியத் தட்டும் (Indian Plate) யூரேசியத் தட்டும் (Eurasian Plate) மோதிக்கொண்டதால் உருவான இமய மலையைச் சுட்டலாம். 

கண்ட ஓடுகள் பூமியின் மற்ற அடுக்குகளை விட ஒப்பீட்டளவில் எடை குறைவானவை (Light/Buoyant). எனவே, அவை பூமியின் ஆழமான ‘மேன்டில்’ (Mantle) பகுதிக்குள் அமிழ்ந்து போவதை விட, மேல்நோக்கித் தள்ளப்பட்டு மலைகளாக உயர்கின்றன. இப்படிப் புவித்தட்டு கீழிறங்குவதால் மலைத்தொடர்கள் உருவாகும் முறைக்கு “சப்டக்க்ஷன்” (Subduction) என்று பெயர். ஓமானின் “ஹஜர்” மலைத் தொடரைத் தவிர மீதமுள்ள உலகின் அனைத்து மலைத்தொடர்களும் “சப்டக்க்ஷன்” என்ற முறையில் உருவானவையே. ஆனால் ஓமானின் ஹஜர் மலைத் தொடர் ஒரு புவியியல் பேரதிசயம். (Geological Wonder). ‘அப்டக்க்ஷன்’ (Obduction) என்ற ஒரு தனித்துவமான முறையில் இம்மலைத் தொடர் உருவான விதத்தை நான்கு படி நிலைகளாகப் பிரிக்கலாம். 

 

முதல் நிலை: அமைதியான கார்பனேட் தளம்.

 

25 முதல் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய ஓமானின் நிலப்பரப்பு கடலுக்கு அடியில் அரேபிய புவித்தட்டின் ஓரத்தில் இருந்தது. இந்த காலகட்டத்தில் ஒமான் ஒரு அமைதியான, ஆழமற்ற கடல் பகுதியாக இருந்தது. அப்போதுதான் சுண்ணாம்புப் பாறைகள் உருவாகத் தொடங்கின. பல கோடி ஆண்டுகளாகக் கடலின் ஆழத்தில் வாழ்ந்து மடிந்த உயிரினங்கள் பெரும் சுண்ணாம்ப்புப் (டime stone) படிமப் பாறைகளாக உருவாகின. இதனால் தான் இன்றும் ஓமானின் 3000 மீட்டர் உயரம் கொண்ட மலைச் சிகரங்களில் நடக்கும் போதும் ஏராளமான கடற்படிமங்களை எந்தப் பிரயத்தனமும் இன்றி மிக எளிதாகக் கண்ணுற முடிகிறது. 

 

இரண்டாம் நிலை: ஓபியோலைட் பிறப்பு

 

ஒன்பதரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு (9.5 million years) நியோ-டெதிஸ் (Neo-Tethys) கடலின் ஆழத்தில், ஒரு எரிமலைத் தொடர் புதிய கடலடித் தரையை உருவாக்கிக் கொண்டிருந்தது. புவித்தட்டு நகர்வுகளால் (Tectonic shifts), கடலடி ஓட்டில் ஒரு பிரம்மாண்டமான விரிசல் ஏற்பட்டது. ‘சமைல் ஓபியோலைட்’ (Samail Ophiolite) எனப்படும் அந்த கடலடி ஓட்டின் ஒரு பெரும் பகுதி மெதுவாகப் பிரியத் தொடங்கியது. இங்கு “சமைல்” எனக் குறிப்பிடப் படுவது மஸ்கட்டில் இருந்து நிஸ்வா செல்லும் வழியில் உள்ள “சமைல்” என்ற அந்த நிலப்பரப்பின் பெயரே. ஆனால் “சமைல் ஓபியோலைட்” என்பது இன்றிருக்கும் ஒரு சிற்றூர் அல்ல. அது ஒரு 10,000 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பரளவும் 15 முதல் 20 கிலோமீட்டர் தடிமனும் கொண்ட ஒரு பிரமாண்ட பாறை அடுக்கு.

 

மூன்றாம் நிலை: பிரம்மாண்டமான மேல்தள்ளல்

 

ஏழெட்டுக் கோடி (80 – 70 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு அரேபிய தட்டு யூரேசியாவை நோக்கி நகர்ந்தபோது, அது கடலடித் தரையில் “தடுமாறி விழுந்தது” போல ஆனது. வழக்கமாக கடலடித் தரை கீழே மூழ்குவதற்குப் (Subduction) பதிலாக, அதன் ஒரு பெரும் பகுதி அரேபியக் கண்டத்தின் மேல் பலவந்தமாகத் தள்ளப்பட்டது. கடலின் அடியாழத்தில் இருந்து அல்லேக்காக சிந்தாமல், சிதறாமல், நசுங்காமல், பிதுங்காமல் துண்டாக வெட்டியெடுத்துத் தட்டின் மேல் வைக்கப்பட்ட கசாட்டா ஐஸ்கிரீமைப் போல “சமைல் ஓபியலைட்” மேலெழுந்த இந்த இயற்கைப் பேரதிசயம் “அப்டக்க்ஷன்” என்றழைக்கப் படுகிறது.

கடல் பாறைகளின் மிதமிஞ்சிய எடையால் கண்ட ஓடு (Continental crust) கீழே அழுத்தப்பட்டது. இது ஒரு ஆழமான பள்ளத்தை (Foreland basin) உருவாக்கியது. இந்த பள்ளத்தில்தான் இன்று ஓமனில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு படிமங்கள் காலப்போக்கில் உருவாகின.

 

மஸ்கட்டைச் சுற்றியுள்ள அல்லது நிஸ்வா செல்லும் வழியில் நாம் காணக் கூடிய அந்த இருண்ட, கரடுமுரடான, “துரு” நிற மலைகள்தான் இவை. “ஓபியோலைட்” என்ற இவை உண்மையில் பூமியின் மேண்டில் (Mantle) மற்றும் ஆழ்கடல் தரைப்பகுதியாகத் தவம் புரிந்து கொண்டு கிடந்த துண்டுகள். ஆனால் இப்போது நிலத்தின் மேற்பரப்பில் கம்பீரமாக அமர்ந்திருக்கின்றன.

 

நான்காம் நிலை: இறுதிக்கட்ட எழுச்சி

 

இரண்டு அல்லது மூன்று கோடி (30 – 20 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைகள் தலை நிமிரத் துவங்கின. அரேபியத் தட்டு இறுதியாக யூரேசியாவுடன் மோதியபோது (இதுவே ஈரானில் சாக்ரோஸ் மலைகளை உருவாக்கியது), இரண்டாவது கட்ட புவித்தட்டு விசை உருவானது.

 

            மடிப்பு (The Folding): இந்த மோதலானது ஒரு பெரிய தரைவிரிப்பை (Rug) சுவரை நோக்கித் தள்ளுவது போல இருந்தது. சமதளமாக இருந்த சுண்ணாம்புப் பாறை (Limestone) அடுக்குகளும் ஓபியோலைட் பாறைகளும் நெரிந்து மேல்நோக்கிக் குவிந்தன.

 

குவிமாடங்கள் (The Domes): இது ஜபல் அக்தர் (Jabal Akhdar) மற்றும் ஜபல் ஷம்ஸ் (Jabal Shams) போன்ற பிரம்மாண்டமான “குவிமாடங்களை” உருவாக்கியது. ஒரு காலத்தில் கடலின் அடிவாரத்தில் இருந்த சுண்ணாம்புப் பாறைகள், இந்த அழுத்தத்தால் 3,000 மீட்டர் உயரத்திற்கு வானை நோக்கித் தள்ளப்பட்டன.

 

முதன் முதலில் ஓமானுக்கு வந்து இறங்கியபோது கண்ணில் கண்ட பக்கமெல்லாம் விதவிதமான வண்ணங்களில் பல்வேறு உயரங்களில் மொட்டைப் பாறைகளாக செதில் செதிலாக மடிந்து கிடந்த மலைத் தொடர்கள் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தன.

இமயம், ஆல்ப்ஸ் மற்றும் ஆண்டிஸ் போன்ற உலகின் பெரிய மலைத்தொடர்கள் காடுகளாலும், பனியாலும் நல்ல அடர்த்தியான மண்ணாலும் மூடப்பட்டிருக்கின்றன. இந்த மலைகளில் பாறை அடுக்குகளை அடைய வேண்டுமானால் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நிலத்தைத் தோண்டியாக வேண்டும். ஆனால் “அல் ஹஜர்” மலைத் தொடர் மேற்குறிப்பிட்டதைப் போன்ற எந்த ஆடைகளையும் உடுத்திக் கொள்ளாமல் பிறந்த மேனியாய் மல்லாந்து கிடப்பதைக் காண முடியும். பல மைல்களுக்கு அப்பால் இருந்து பார்த்தால் கூட இம்மலைகளின மடிப்புகளும், அடுக்குகளும் வெறும் கண்களுக்கே புலப்படுகின்றன. இக்காரணத்தால் தான் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஒமானை ஒரு திறந்த வெளிப் புவியியல் அருங்காட்சியகம் எனக் கொண்டாடுகின்றன.

 

இந்தத் தகவல்களையெல்லம் அறிந்து கொண்டு கொண்டு “அல் ஹுத்தா” குகைக்குள் இறங்கும் போது 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கடியில் கிடந்த ஒரு குகைக்குள் நடந்து கொண்டிருப்பதை நினைத்துப் பாருங்கள். அதே போல அங்கு நீங்கள் காணும் ‘ஸ்டாலக்டைட்’ மற்றும் ‘ஸ்டாலக்மைட்’டுகளின் நுனி முந்தாநாள் இரவு உருவானதாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்தச் சுண்ணாம்புப் படிமப் பாறைகள் இன்றும் வளர்ந்து கொண்டுள்ளன.

 

உலகில் வேறு எங்கும் இவ்வளவு அகலமான கால, தேச இடைவெளியில் கால் பதித்துத் தொட்டுத் தடவிப்பார்த்து அலையும் வாய்ப்புக் கிட்டாதென நினைக்கிறேன். அதனால் தான் இதனை வாசித்துக் கொண்டிருக்கும் அனைவரும் வாய்ப்புக் கிடைக்கும் போது ஒரு முறை தவறாது நிஸ்வாவிற்கு வந்து சென்று விட வலியுறுத்தி விடை பெறுகிறேன்.

 

அடுத்த அத்தியாயத்தில் உங்கள் குடலை வாய்க்குக் கொண்டு வரக் கூடிய ஒரு திகிலான பயண அனுபவத்திற்குத் தயாராக இருக்கவும். 

PrevPreviousமீசைக்காரர் பங்களா
Nextஉழைப்பு & துணைNext

You Might Also Like

நீரோடைகளின் கதை!!! நிஸ்வா – பகுதி 5
“நாவலே உகந்த வடிவம்” – எழுத்தாளர் சித்ரா சிவன்
பச்சைமலைப் போர்!!!  நிஸ்வா – பகுதி 8
அந்த மாலை – நான் உங்க கிட்ட அப்படியா பழகினேன்?
நீளிரா
TAGGED:Seriesகட்டுரைதொடர்கள்நிஸ்வாவிண்மீன் மே 2026
SOURCES:rubynews.comtimenews.com
VIA:ThemeRubyMarsNews
Previous Article மீசைக்காரர் பங்களா
Next Article உழைப்பு & துணை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (12) கட்டுரைகள் (18) கவிதைகள் (28) குறுநாவல் (1) சிறுகதைகள் (68) திரைப் பார்வை (8) தொடர்கள் (14) நிகழ்ச்சிகள் (4) நேர்காணல் (11) புத்தகப் பார்வை (34) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • June 20261
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (18) Interview (11) Poems (28) Series (14) Short Stories (69) ஆசிரியர் பக்கம் (12) இளையராஜா (2) கட்டுரை (11) கட்டுரைகள் (17) கவிதைகள் (28) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (2) சினிமா (8) சிறுகதைகள் (74) தலையங்கம் (12) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (14) நாவல் (7) நிகழ்ச்சி (4) நிஸ்வா (10) நூல் அறிமுகம் (34) நூல் வெளியீடு (3) நேர்காணல் (11) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (34) புத்தகம் (34) பெருங்கதை (1) பேட்டி (11) மதுரை (2) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (42) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?