சபாபதிப் பிள்ளையால் தன்னை விட்டுப் பிரிந்து இன்னொருவருடன் சென்ற மனைவியை அவமானப் படுத்த முடியவில்லை. தானும் அவமானப்பட விரும்பவில்லை. அப்படியே வீட்டைப் பூட்டி விட்டு ஊரை விட்டு கிளம்புகிறார்.
நெருங்கிப் பழகிய நண்பன் இறந்து விடுகிறார். அவருடைய மனைவியுடனும் புதிதாகக் கண்டெடுத்த குழந்தையுடனும் வாழ்கிறார். அந்தக் குழந்தை ஹென்றியாக வளர்கிறான். தன்னுடைய எல்லா சொத்துக்களுக்கும் ஹென்றியை சட்டப்படி வாரிசாக்குகிறார். ஹென்றி அவரை பப்பா என்று அழைக்கிறான். பப்பா இறந்த பிறகு பப்பாவின் சொந்த ஊருக்கு வருகிறான் . எந்தவித சச்சரவுகளும் இன்றி பப்பாவின் தம்பி ஹென்றியை ஏற்றுக் கொள்கிறார். எல்லோரும் சேர்ந்து பாழடைந்த பப்பாவின் வீட்டைப் புதுப்பிக்கிறார்கள். மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
இதன் ஊடாக வரும் கிளியாம்பாள், அக்கம்மாள், மனநலம் குன்றிய பேபி, மணியக்காரர், மண்ணாங்கட்டி, பாண்டு எல்லோரும் வாழ்கிறார்கள். ஊரிலிருந்து தன்னை அந்நியமாகக் காட்டிக் கொள்ள விரும்பும் தேவராஜனும் ஹென்றியுடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊருடன் கலந்து விடுகிறான்.
கதை முடிந்த பிறகும் சோப்பெங்கப்பா… சோப்பெங்கப்பா பாடலை மறக்க முடியவில்லை. மணியக்காரர் மரணம், அது சார்ந்த பிரச்சினைகள் தவிர திடீர் திருப்பங்களோ, வன்மங்களோ, எதுவுமில்லாத அற்புதமான நாவல். கதை முழுவதும் அன்பும் நேர்மறை சிந்தனைகளும் நிரம்பி வழிகிறது.
படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட புத்தகங்களில் ஒன்று ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். இப்போதுதான் வாங்கிப் படித்தேன்.
கோட்பாடுகள் எதுவுமின்றி மகிழ்ச்சியாக வாழும் மனிதர்களை மிகவும் அழகாகப் படைத்திருக்கிறார் எழுத்தாளுமை மதிப்புக்குரிய ஜெயகாந்தன். அவருடைய ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன படித்து விட்டு நானும் ஆடிப் போய்விட்டேன். ஆனால் இந்த நாவலை முடிக்கும் போது எல்லோரும் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசையும் மகிழ்ச்சியும் தோன்றியது. சுற்றிலும் நிறைய நல்ல மனிதர்களுடன் வாழ்ந்த திருப்தி ஏற்பட்டது.


