சித்திரை மாச வெயில் உச்சந்தலைக்கு ஏறுமுன்னே, மகள் மாடத்தியும் பேரன் பிரபுவும் தூரத்தில் வருவதைப் பார்த்து பழுப்பேறிய வேட்டியை தொடை தெரியா மடிச்சிக் கட்டிக்கிட்டே ஆறடி மொழுக்கன் ஓட்டமும், நடையுமாக வீட்டு முத்தத்து அகத்தி மார் கம்பு கதவ தூக்கித் தள்ளிய படி, “ஏவ தாய், வந்துட்டாவ” என்று, கத்தியவாறு கூனை’யில் அடச்சி வச்சிருந்த கோழி கொக்கரிக்க கழுத்தை திறுவினான் மாடத்தியின் அப்பன் கறுப்பசாமி.
வீட்டு தார்சா திண்ணையில சுண்ணாம்பு தடவிய வெற்றிலைகளை வெள்ளாடு அசை போடுவது போல மென்று கொண்டிருந்தாள் நரை ஏறிய கிழவி, கறுப்பன் பொண்டாட்டி சக்கரம்மாள்.
கறுப்பனோட கதறல் கேட்டு பதறிப்போய் எழுந்தாள் சக்கர. முந்திச் சேலையை உதறி இடுப்புல சொருகி திணித்தாள். சுண்ணாம்பு கரையேறிய விரலால், வெத்தல எச்சிய புளிச்சென்று துப்பி வாயை துடைத்து கொண்டே முத்ததை கடந்து தெருவில், “ஏ ஆத்தே, உச்சி வெயில்லலா புள்ளைக வருது” என்று அமயம் போட்ட படி முயலைக் கண்ட வேட்டை நாய் போல ஓடினாள்.
கறுப்பன் கையில் கழுத்து உடைந்த கோழி கண்கள் சொருக இறக்கைகள் பட படத்து அடங்கியது. முடிகளைப் பிடுங்கி போட்டு பனை ஓலை தீயில் வாட்டி எடுத்து, மஞ்சள் தடவி கருவ கட்டையில் வைத்து சின்ன சின்ன துண்டா தறிச்சான்.
வாயில எச்சில் ஒழுக கால நீட்டியபடி கோழி குடலுக்காக கெடையாக் கெடந்தது கறுப்பன் வீட்டு வேட்டை நாய் செவலை.
ஊர் எல்லை வெட்டயில், ஒத்த பனை தூரில் பேச்சியம்மன் பூடம் வடக்கே பார்த்தபடி காவல் தெய்வமாக இருக்க மூச்சிவாங்கிய படி வந்து, பேச்சியம்மனை கும்பிட்டு நின்றாள் சக்கர.
சித்திரை மாதம் பேக்கோயில் கொடை கொட்டு சத்தம் ஊர் மேற்கிலிருந்து கிழக்கே வரைக்கும் காற்று வாக்கில் வந்து வந்து உசிப்பிக் கொண்டிருந்தது சக்கரய.
பனை மரத்து காஞ்ச ஓலைகளின் உரசல் சத்தம் சர சர வென மெல்ல கேட்க, தூரத்தில் மாடத்தி, பிரபு இருவரும் கானல் நீரில் மிதந்து நகர்ந்து வர, ஒத்தையடி பாதையில மணல் தெறிக்க நாலுகால் பாய்ச்சலில் ஓடிய தெண்டலை துரத்தி பேன்டு, சட்டை, ஷூகள் அணிந்து, வெண்கல நிறத்து சந்தன கிண்ணம் போல சிறுவன் பிரபு நெஞ்சிக் குழி பெருக வேர்த்து ஓடினான்.
கொரண்டி செடிகள் வெள்ளை நிறத்து பூக்கள் மனம் மளுங்கி கூன் விழுந்து வாட தொடங்கியது. பொட்ட காடு முழுவதும் ஆங்காங்கே இலந்தை மூடுகள் காய்களும், கனிகளையும் உதிர்த்தியிருந்தது.
நீர்கருவை மரங்களும் அடர்ந்து பூத்திருந்தன. கள்ளி செடியில் பழுத்த பழங்களை பறிக்க ஆளின்றி காத்து நிற்க சின்னஞ் சிறிய கல் வெட்டாங் குழிகள் நீரின்றி வானம் பார்த்து ஏங்கிக் கிடந்தன.
அலங்கரித்த சங்கரங்கோயில் சப்பரம் வருவது போல மாடத்தி, முத்துக்கள் நிறைந்த கொலுசுகளின் ஒலியும் சேர்ந்து, கால் செருப்புகள் சர சரப்பு சத்ததுடன் மூச்சிறைக்க நடந்து வந்தாள்.
“வேகமா ஓடாத பிரபு, கீழ கிழ விழுந்தர போற. அந்த, ஓந்தாண எதுக்குடா? துரத்துர நில்லுடா ”என்றாள் மாடத்தி.
பிரபு ஓடி நிற்கிறான்.
அம்மாவை திரும்பி பார்த்து “பாட்டி வீடு எப்ப? மம்மி வரும் தண்ணி தாகமா இருக்கு மம்மி” என்றான், மூச்சு வாங்கிய படி.
“இன்னும், கொஞ்ச தூரம் தான்டா அந்தா ஒத்தப்பனை கிட்ட வீடுகளா தெரியிதா அது கிட்ட தான் சக்கர பாட்டி வீடு” என்று, கையை நீட்டிக் காட்டினாள் மாடத்தி முகம் மலர்ந்து.
பிடுங்கிய கோழி முடிகள் பறக்க, எருக்குழியில் வீசிவிட்டு பூவரச மர மூட்டுல கோழி குடலை செவலைக்கு திங்க வைச்சிட்டு, “செவல வா தின்னு ” என்றான் கறுப்பன்.
கோழி குடலை லாவகமாக் கவ்வி ஒதுங்கி, ருசிக்க தொடங்கியது செவல.
ஒத்தப்பனை பேச்சி கோயில் வெட்டைக்கு தலையில் தலப்பா கட்டிய படி நாலே எட்டுல வந்து நின்ற கறுப்பனை.
“ஏ… அய்யா சாமி, நல்லாருப்ப பிள்ளைக தவிச்சு வருதுக கொஞ்சம் கூட்டியாந்துருய்யா” என்று கறுப்பனை பார்த்து கெஞ்சி கேட்டாள் சக்கர.
“நீ எதுக்கு ? கன்னில பட்ட முசலு கனக்க கெடந்து துடிக்க ” என்று சக்கரயை அமட்டிய கறுப்பன்.
“தாயும் பேரனும் தான் வராக போல மருமகேன் லெக்குயில்யே ”நெற்றி மேல் கைமறைத்து கண்கள் சுருக்கி பார்த்து கொண்டே கறுப்பன்.
“சரி நா கூட்டியாரன் நீ போயி? மொதல்ல கோழிய கொழம்பு வைக்க பாரு புள்ளைக ஈசலா பசியோட வரும்” சக்கரையிடம் பதில் அளித்த படியே, ஒத்தையடி பாதையில் நொட்டாங்கையில பீடி பற்ற வைத்து புகைத்துக் கொண்டே வெக்கைக்கி இளகிய எள்ளு புண்ணாக்கு போல மினுமினுத்து நடந்தான் கறுப்பன்.
சக்கர பேச்சம்மா ஆடும் சாமி கொண்டாடி பேக் கோயில் கொட முடியிற வரைக்கும் ஊர் எல்லைய தாண்ட மாட்டா
மசாலா கூட்டி குழம்பு வைக்கத் தயாரானாள். கொட்டு சத்தம் கேட்டு குழம்பு சட்டியில கோழிக்கறி குதியாட்டம் போட்டது குழம்பு வாசனைக்கு வீட்டு முத்ததில் வாலாட்டி சிணுங்கிக் கொண்டிருந்தான் செவல.
“கறுப்பதாத்தா” என்று ஓடி வந்து, கறுப்பனின் கால்களை கட்டி அணைத்துக் கொண்டான் பிரபு.
மீசை, தாடி மயிர்கள் குத்த பேரன் சினுங்க“ ஏலே, பேரான்டி எப்டிலேயிருக்க?” கொஞ்சி தீர்த்தான் கறுப்பன்.
“சேய், ஒரே பீடி நாத்தம்?”என்று விலகிப் போனான் பிரபு.
“சொங்கிப் பயல, சோறு திங்கியாயில்லயா” பேரனின் குஞ்சானை கையால் தடவி முத்தமிட்டான் கறுப்பன்.
பிரபு வெட்கப்பட்டு சிரிக்க, மாடத்தியும் கண்கள் சுருங்கச் சிரித்தாள்.
“தாயோ நீ எப்டிலயிருக்க? ஏங் இப்படி, வத்தலா.. பேயிட்ட” மகள் மாடத்தியை பார்த்து, கண்கள் கலங்கி போனான் கறுப்பன்.
“ஓம் மருமவேன், ஒழுங்கா சோறு கீறு போட்டாதான?” சேலை முந்தி பொத்தி புன்னகைத்தாள் மாடத்தி கறுப்பனை பார்த்து.
“எட்டூர், தேட்னாலும் எம் மருமகேன் மாதிரி ஆளு கிடைக்குமா? தாயி” என்று மருமகன் பெருமை பேசிய படியே பேரன் பிரபு கைகள் இரண்டையும் பிடித்து சுற்ற, அந்தரத்தில் காற்றில் மிதந்த பிரபு’வை தூக்கி தோளில் அமர வைத்து சிரித்தான் கறுப்பன்.
“ஹா…ஹா” பொட்ட காடே அதிர்ந்தது.
“பயமாருக்கு தாத்தா, இறக்கி விடுங்க” பிரபு பயந்து அலறினான்.
“ஏப்போ, பாத்துப்போ ” என்று, பதறினாள் மாடத்தி.
“பயந்தோனி பயல… தாத்தாவ சிக்குன, புடிச்சுக்கால. தாயோ மருமகேன் நல்லயிருக்கரா? வருவாகளா… இல்ல லீவு கீவு கிடைக்கலையா என, சித்தாறு பெரிய மடை திறந்தது போல பேசி நடந்தான் கறுப்பன்.
“இல்லப்போ நாளைக்கி மத்தியான பஸ்க்கு வந்துருவாருன்னு நெனக்கேன்” என்று, யோசித்தப்படி மாடத்தி சொன்னாள்.
“சரி சரி வரட்டும் பைய வரட்டும். எலே? பிரபு கோழி கறி திம்பியா” கறுப்பன் கேள்விக்கு “ம்கும்… ” என்று தலையை அசைத்தான் பிரபு.
“நீ ஏம்போ ? இப்படி கட்டையா திரியிர, இன்னும் குடிய விடல என்ன?” கறுப்பன் முதுகில் பூ நார் அளவில் வடிந்த வேர்வையை துடைத்த படியே “சாராய வீச்சதான் செரசுல ஏறுதே” கோபம் ஏற கேட்ட மாடத்தியின் குரலுக்கு. பொந்துல பதிங்கிய வெள்ளெலி போல மூச்சேயில்லை கறுப்பனிடம்.
“அம்ம நல்லாயிருக்காளா?” என்ற, மாடத்தியின் குரலுக்கு தலை நிமிராமல் பதில் அளித்து நடந்த, கறுப்பனின் தோள் மீது பிரபு அம்பாரமாய் உட்கார்ந்து. ஒத்தப்பனை பேச்சி கோயிலை வந்தடைந்தார்கள்.
குறைத்துக் கொண்டே சீறி வந்தது செவல.
“ச்சேய்யி, என்ன?” சர்க்கர, அதட்டலுக்கு சினுங்கியது செவல. மாடத்தி, பிரபு இருவரையும் முகர்ந்து பார்த்து சுற்றி வந்து வாலாட்டினான்.
ஒத்த பனை மீது சர சர என ஏறி நின்ற ஓந்தாண் தலையை ஆட்டி பனையின் பின்புறம் ஒளிந்து கொண்டது.
யானை மீதிருந்து, பாகன் இறங்குவது போல கறுப்பன் தோள்மீதிருந்து, பிரபு இறங்கி நின்றான்.
பேச்சி கோயில் முன்பு விழுந்து கும்பிட்டார்கள், மாடத்தியை பார்த்த ஆனந்தத்தில் கை பிடித்து கண்கள் கலங்கி, “வா தாயி, நல்லயிருக்கியாம மருமகென், நல்லாயிருக்காரா?” என்று மாடத்தியின் கன்னம் தடவி முத்தமிட்டாள் சக்கர.
“எம்ம ” என்று மாடத்தியும் குரல் தழு தழுக்க, “எனக்கென்னம… நீ எப்டியிமேருக்க?” என்றாள்.
பேரன் பிரபுவை வாரியணைத்த சக்கர, “ஏய்யா சாமி, ஏந் தங்கம் ” வெத்தளையில் சிவந்த எச்சி பதிய முத்தமிட்டு கொஞ்சிபடியே நால்வரும் வீடு சென்றார்கள், வால் ஆட்டிக் கொண்டே பின் தொடர்ந்தது செவல.
மாராப்பு சேல நனைய, மடக் மடக்னு தண்ணி குடிச்சி சேலை முந்தியில வாய் துடைத்துக் கொண்டே, “இன்னும் குடிக்கதுக்கு, ஊர் கிணத்து சப்ப தண்ணி தானா ” என்றாள் சலிப்புடன் மாடத்தி.
“தண்ணி நல்லவே இல்ல பாட்டி” என்று குடித்த தண்ணிரை ஓங்கரித்து துப்பினான் பிரபு.
“இன்னிக்கி ஒரு பொழது மட்டும் குடிய்யா தொண்ட வரன்றபோது… தாத்தாவ கண்ணாடிகுளம் ஊர்லயிருந்து ஆத்து தண்ணிய புடிச்சிசார சொல்லுதேன் சரியா?” என்று கெஞ்சி, பேரன் பிரபுவை தண்ணி குடிக்க வைச்சா சக்கர.
“தாயி, சாப்டும காலேயில ஊர் சோறுக்கு போனே இட்லி, தோச போட்டாக. அஞ்சாறு கொண்டு வாரேன், ரெண்டு பேரும் சாப்டுங்க, பிரபு ஒரு வா சாப்டுப்போ ” என்று அடுப்படி நுழைந்தாள் சர்க்கர.
கோழி குழம்பு மணம் பத்து வீட்டுக்கு வீசியது.
சொளவு முழுவதும் இட்லிகளும், தோசைகளும் குவிந்து கிடந்தன. பிரபுவுக்கு குழம்பில்லாமல் ஊர் இட்லியில் ஒரு வாய் ஊட்டி, மாடத்தியும் நாலு வாய் அள்ளித் தின்றாள்.
நாட்டுக் கோழி கொழம்பை ருசித்த படி, “கொழம்பு, நீ வச்சியோம”
“ஆமா தாயோ” என்று கறுப்பன் முத்தத்து அகத்தி கம்பு வேலிக்கு அந்தப்புரமிருந்து. மாடத்திக்கு பதிலளித்தான்.
“எப்போ எப்போய் ஈரல எடுத்தாப்போ எம்புட்டு நேரம்?” கருவமர நிழல்ல, செத்த மாட்ட உரிச்சிட்டிருந்த மூக்காண்டி’யிடம் ஈரல் கேட்டு நச்சரித்தான் மகன் முனியசாமி, மாடு தூக்கும் கம்புகள் மீதமர்ந்து கால் ஆட்டியபடி.
“தாயோலி, உனக்கு குண்டி கொழுப்பு கூடிப்போச்சி? உன்னையெல்லாம் கொட்டுவாரு பிய்ய பிய்ய உரிக்கனுல எந்திரிச்சி போயிரு; முட்டெலும்ப தூக்கிட்டு எரிஞ்சிருவேன்”என பாய்ந்தான் கருமர கவட்டைக் கிளையில் காய்ந்து தொங்கிய முட்டெலும்புகளை நோக்கி கோபத்திலிருந்த மூக்காண்டி.
சவ்வுக்காக தவம் கிடந்த தெரு நாய்களும், முனியப்பனும் தெறித்து ஓடினார்கள்.
“எதுக்கு? புடுக்கு அறுத்த பன்னிகணக்க கத்துர ”எக்காளமாய் சிரித்துக் கொண்டிருந்தாள் மனைவி மயிலம்மா.
“பல்லு, மயித்த காட்டாம கால வெரப்பா இழுத்துப் புடி, முண்ட” மாடு உரிக்க ஒத்தாசைக்கு இருந்த மனைவி மயிலம்மாவிடம் எரிந்து விழுந்தான், கடவாயில் பீடியைக்கடித்துப் புகைத்துக் கொண்டே மாட்டுத் தோலில் கொம்பு பிடி போட்ட சூரி கத்தியை நுழைத்து உரித்தான் மூக்காண்டி.
பாட்டி வீட்டு, முத்ததில் பிரபு கூனையில ஏறி சறுக்கி விளையாடிக் கொண்டிருக்க.
“ஆரம்பிச்சிட்டியா உஞ் சேட்டைய கீழ விழுந்திராதல” மாடத்தி திண்ணையில் அமர்ந்தவாறு சத்தமிட்டாள்.
“பெரியம்மா ”என்று சக்கரய கூப்பிட்டுக் கொண்டே, வேகமா வந்தான் முனியசாமி. சுருண்டு உறங்கிக் கொண்டிருந்த செவல ஏறிட்டுப் பார்த்து, ஒரு முறை குறைத்து உறங்கியது.
“எக்கோ நீ எப்ப வந்த?” காக்கி டவுசர் கிழிசல் வழியே குண்டி தெரிய, மாடத்தி அருகில் வந்து நின்று கேட்டான் முனி.
ரெம்ப நாளக்கி அப்றம் சித்தப்பா மகனை பார்த்த சந்தோசத்தில், “ஏலே முனி நல்லரிக்கியால? அப்பா, அம்ம எப்டியிருக்காக சட்ட எங்கல?”
முதுகை தடவி நலம் விசாரித்தபடியே திண்ணையில் வைத்திருந்த பேக்கிலிருந்து, பிஸ்கட் பாக்கட் ஒன்றை எடுத்துக் நீட்டினாள் மாடத்தி.
“என்னல? முனி காலயிலே, ஓங்கப்பன் கெழக்க போயிட்டு வந்துட்டாம்போல கோட்டி கனக்க கத்திட்டே கெடக்கான்” சக்கர அடுப்படியில் சோறு வடித்துக் கொண்டே கேட்டாள்.
“அது சும்மா, அப்பா எதாது கத்தும் பெரியம்மா ” பிஸ்கட் பாக்கட்டை திருப்பி பார்த்த படி பதில் கூறி நின்றான் முனி.
கருவ மரத்தடியில் தலப்பா கட்டி மாடு உரித்துக் கொண்டிருந்த தம்பி மூக்காண்டியிடம் “யாரு மாடுல?” என்று கேட்டான் கறுப்பன், தன் வீட்டு வேலிகுள்ளயிருந்த படி.
அண்ணனின் குரல் வந்த திசையை ஏறிட்டுப் பார்த்த மூக்காண்டி, “அண்ணே நம்ம நடு தெருவு இல்லத்து பாய் மாடுண்ணே; ஈன முடியால ராத்திரி பூராம் மல்லுக்கட்டி செத்துப் போச்சி காலைல தான் சேதி தெரிஞ்சி தூக்கிட்டு வந்தோம்ண்ணே” என்றான்.
“செனமாடால ”என்று கேட்டான் கறுப்பன்.
“செனதாணே, வைத்துலேயே குட்டி செத்துட்டு, தாய் வந்திருக்காகளோ சத்தம் கேட்டிச்சி இந்த வாரேன் அந்தா வாரேனுட்டே ரெண்டு வருசமா வராம தாக்காட்டிட்டா,இப்ப தான் நம்ம ஊருக்கு பாத தெரிஞ்சதாமா?”
பீடி கறை ஏறிய பற்கள் தெரிய, இளித்தான் மூக்காண்டி.
“புளுக்கு, புளுக்குன்னு வந்து போக. சுப்பியாரத்லயா இருக்கா என்ன? நீங்க ரெண்டு பேரும் மட்டும் கெடந்து உறிச்சிட்டுயிருக்கியா தூங்கனும், ஜெமினியும் எங்கல?” கறுப்பன் முகம் சுருங்கி கேட்க.
“காலையிலிருந்து, சீவம் போக கத்திட்டேன் ஒரு சுன்னியாண்டியும் வரமாட்டிக்காண்ணே? மட்ட மல்லாக்க வீட்ல கெடப்பானுவ. நானும் இவளும் தான் பொழுது விடிஞ்சதிலிருந்து செத்துட்டுயிருக்கோம் ”என ஆவலாதி,கூறிக் கொண்டே கால் தொடை செப்ப அறுத்து தூக்கி நீட்டினான் மூக்காண்டி.
பரப்பி இருந்த பச்சை பனை ஓலையில் சந்து சந்தா கிடந்த கறி கூவியல் மீது தொப்பென்று போட்டாள் மயிலம்மாள். சத்தம் கேட்டு கருவ மர கிளையில் அமர்ந்திருந்த காக்கைகள், திடுக்கிட்டு பறந்து வேறு கிளை மாறி அமர்ந்து கரைந்தன.
சக்கர வீட்ல முனி “எக்கா? பிரபு தான இம்புட்டு போலயிருந்தான், நல்ல வளந்துட்டாம்லா”
பிரபு அருகில் சென்று, “ஏல, என்ன ? ஆள் தெர்லையோ” என்று, விலா எலும்புகள் துறுத்தி தெரியும் படி நின்றான் முனி. முனியை அடையாளம் தெரியாமல் முளித்தான் பிரபு.
“புள்ளயா, அதட்டாதல பயந்துர போறான்” என்று, சுருக்கு பையிலிருந்த சில்லறைகளை எடுத்து, முனி கையில் தினித்த சக்கர பிரபுவை பார்த்து, “முனி, மாமேன்ல போன தடவை வந்திருக்கும் போது, கழுத்த கட்டிக்கிட்டு கெடந்து உருண்ட” என்று, பிரபுக்கு முனியை நியாபகபடுத்தி சிரிச்சா சக்கரயைப் பாத்து ஓட்டைப்பல் தெரிய இளித்தான் பிரபு.
முனி, மாடத்தியை பார்த்து, “ரெண்டு வருச கொடக்கி வரலலாக்கா? நிய்யி?” என்று ஏக்கத்தோடு முனி கேட்டான்.
“மாமாக்கு வேலை மாத்தலாயிட்டு, அதனால வர முடியல. ஆமா பள்ளியூடம் போரியா, இல்லயா?” என, மாடத்தி முனியிடம் கேட்க, “ஆறப்புக்கு, உப்பரங்கோட்டக்கி போனேன்; எம்புட்டு துரம் போனும்க்கா ஆளுயில்லனா? என்னயா, என்னயா ஊர்வேலக்கி கூட்டு போயிர்து அப்ப” என்று, எரியும் சூந்து குச்சி போல சட சடத்தான் முனி.
முனியை அனணத்த படி, “சித்தப்பா யாம்ம? இப்டியிருக்கு; பள்ளிவூடம் போர பயல போட்டு கெடுக்கு” என்று வெசனப்பட்டாள் மாடத்தி.
அடுப்படியிலிருந்து வேகமாக வந்த சக்கர, “அத கேட்ட உங்கப்பன பாத்து ஒஞ் சோலிய பாருன்டான் ஓன் சித்தப்பன், மூஞ்சில அடிச்ச மாரி” மூக்கு சிந்தி, சேலைல துடைத்த படியே, “சரி போங்க போயி மிட்டாய், கிட்டாய் வாங்கி தின்னுட்டு கோயில்ல ராட்னம் போட்டிருக்காக சுத்துங்க ”
இரத்தக்கரை படிந்த கைகளுடன், மற்றொரு பீடியை பற்ற வைத்து புகைத்துக் கொண்டே, “கொஞ்ச நேரத்துல ஏனத்த தூக்கிட்டு பங்கு கறிக்கு வந்து நிப்பானுவ” என்று கறுப்பனிடம் மூக்காண்டி முனங்க, “பெரக்கி தின்ன பயலுவ, கட்டுக்கு சேர மாட்டான்வ? இருக்கதே நம்ம நாலு வீடு?” என்று பெரு மூச்சு விட்டான் கறுப்பன்.
“இந்த ஈன பொழப்ப விட்டுட்டு குடும்பத்தோட எங்கனயாச்சும், போயிரலான்னு பொச மூட்டிட்டு வருது” கோபம் தனியாமல் மூக்காண்டி மாடு உறிக்க, “வேற எங்க போயி கூட்டி குமிக்க போர? சரின்னு விட்டுட்டு சோலி மயித்த பாப்பியா” தம்பியை அதட்டினான் கறுப்பன்.
சக்கர வீட்டு முத்தத்தில் நின்ற படி பிரபு, அம்மா மாடத்திக்கு கை அசைத்து டாட்டா காட்டினான், “பாய்” முனி சிரித்தான்.
முனியுடன் பிரபு, கைகள் கோர்த்து பேசிய படி, வீட்டிலிருந்து கிளம்பி சென்றார்கள்.
“முனி, பிரபுவ கவனமா பாத்துகய்யா? முள்ளு எதும் குத்திராம” என்று, சஞ்சலம்பட்டு நின்ற மாடத்தியை பார்த்து முனி, “நா பாத்துக்கிடுதேன், நீ போக்கா?”என்று மாடத்திக்கு பதில் அளித்த படி முனி, பிரபுவும் முச்சந்தி திரும்பி மறைந்தார்கள்.
மூக்காண்டி மாட்டை முழுவதும் உரித்து முடிக்கும் நிலையில், “தொலிய ஒடனே உப்ப தடவி வச்சிரு; அழுக விட்ராதல. ரெட்டியாபட்டிச் சந்தையில, பாய் முதலாளி கிட்ட போட்டா செலவுக்கு ஆவும்.. பாத்துக்கோ” என்றான் கறுப்பன்.
“ஆமா உப்பு வாங்ன ரூவாய்க்கி கூட காணாது ” என்று கொக்கர உட்கார்ந்த படி, கறி சந்துகளை கூறு பிரித்த மயிலம்மாள், “மச்சான் மாடத்திக்கி கறி காய போட்டு முறுகல் தந்தா ஊருக்கு போவும் போது கொண்டு போவாளா? இல்ல பேங்கு மாப்ள பொண்டாட்டின்னு கௌரவம் பாப்பாளா? அக்காவுக்கு இந்த தடவ சேல கட்டுவாளோ? உங்க மவ” எனக் கேட்டு வெனையமாக சிரிச்சா.
கறுப்பன் வாய் மூடி நின்றான்.
சக்கரைக்கி வாங்கிட்டு வந்த சேலையை காட்டிட்டிருந்தா மாடத்தி, “நல்லாயிருக்காம? பிரபு அப்பா தான் எடுத்தாரு” என்றாள் பெருமையாக மாடத்தி.
சக்கர சேலய கைகளால் தடவி பார்த்து, வெத்தல சாயமேறியப் பற்கள் தெரிய, “நல்லாருக்கு தாயி” என, சிரித்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் “ஏய்? ம்ம்.. ” சக்கரயின் அலறல் சத்தம் கேட்டு, அவயத்திலிருந்த கோழி கொக்கரித்து ஓடி பறந்தது. வீறிட்டு எழுந்து, இரு காதுகள் உடுக்கை போல், பட படத்து தலை அசைத்து, உடல் உதறி நின்றது செவலை. பேக் கோயில் கொட்டு சத்தம் ஊரே அதிரும் படி கேட்க, சக்கர மேல பேச்சி இறங்கி ஆடினாள். மாடத்தி பதறி தடுமாறி, எழுந்து கும்பிட்டு நின்றாள்.
கறுப்பன் வீட்டு முத்தத்திற்க்கு ஓடி வந்து “என்ன? பேச்சி வந்துட்டாளா..?” என்றான்.
மூக்காண்டியும், மயிலம்மாளும் வேலிக்கு அந்தபுறமிருந்து, எட்டிப் பார்த்து “தாயே… பேச்சி ” என்று, “இந்தா சொணங்காம வேகமா உரிச்சி முடி, கோயிலுக்கு போவோம்” மூக்காண்டியை முடுக்கினால் மயிலம்மா.
கைகளை மேல் நோக்கி தூக்கி விரல்கள் கோர்த்து உயர்த்தி, வீட்டு முத்தத்தில் அங்கும் இங்கும் வட்டமடித்து உடலை முறுக்கியபடி, குலவை சத்தம் எழுப்பி கொட்டு சத்தத்தின் ஆராவாரத்துடன், ஊர் பேக் கேயில் நோக்கி வெடிப்பேறிய புத்து கால்கள் குதித்து ஆடியபடி ஓடினாள் பேச்சி.
“ஏப்போ? நான் முன்னால போரேன், நீ சீக்கிரம் வாப்போ ” சேலையை எடுத்துக் கொண்டு, சக்கர பின்னால் ஓடினாள் மாடத்தி.
“பாத்து போனும் தாயோ , நா, பொரத்தால வந்துருவேன்” என்று முத்தத்து அகத்தி மார்க் கம்பு கதவ சாத்திவிட்டு விறு விறு என்று நடந்தான் கறுப்பன். செவல பின் தொடர்ந்தான்.
“செருப்பு போட மாட்டிங்களா அண்ணா கால்ல முள்ளு குத்தாதா?” என்று பிரபு முனியிடம் கேட்க, “எனக்லாம் முள்ளே குத்தாதுல நா உனக்கு அண்ணே கிடயாது மாமா ”என்று மாடத்தி கொடுத்த பிஸ்கட் பாக்கட்டிலிருந்து பிஸ்கட்டுகளை, பிரவுக்கு கொடுத்து, தானும் தின்று கொண்டே பேசிய படி நடந்தார்கள்.
“நீ எத்னாப்புல, படிக்க? பிரபு”
“போர்த்துஸ் ஸ்டாண்டர்ட் போகபோரேன் ம்ம்.. மாமா” என்று, சிரித்தான் பிரபு.
“மாமா உங்களுக்கு ப்ரெண்ட்சே.. இல்லைய?” முனியிடம் ஷீ லேசை கட்டிக்கொண்டே.. கேட்டான்? பிரபு.
“ரெண்டு, மூனுபேரு இருக்கானுவல , ஊர்மாடு மேய்க பேயிருக்கானுவ”பேசிக்கொண்டே, நீரின்றி வறண்டு கொண்டைகள் முறிந்த தென்னந் தோப்பைக் கடந்து, ஊர் சுடு காட்டு மண் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்கள். ஆள் அரவம் கண்டு ஆள்காட்டி குருவி கூச்சலிட்டு ஓடியது. இலந்தைச் செடிகள் நிறைந்த வறண்டு கிடந்த ஊர் குளத்திற்கு வந்து சேர்ந்தார்கள் பிரபுவும், முனியும்.
ஊருக்கு வெளியே, வடக்க பாத்து குலவை சத்தமிட்டபடி ஆடிக்கொண்டே வந்த பேச்சியின் குறுக்கே வந்த புல்லட் சற்றேன்று பிரேக் போட்டு தட்டு தடு மாறி சீறி இரைந்து நின்ற, வண்டியின் சக்கரத்தை உரசியபடி சுடுகாட்டு மண் ரோடு நாலு முக்கு கடந்து கருவ மரங்கள் அடர்ந்த பீக்காட்டு பாதையில ஓடினாள்.
“குறுட்டு, தேவிடியா ” என்று வையித குரல். சிவப்பு நிற புல்லட்டை சைடு ஸ்டாண்டிட்டு இறங்கியது. சரடு குத்த அகப்படாத கள்ளப் பட்ட மாடு போல, சட்டை கை மடிப்பை புஜம் தெரிய நகர்த்தி நின்றிருந்தான் மடத்தான்
தன் தாயை, வைய்த சத்தம் காதில் வாங்கி தூரத்தில் கையில் சேலையுடன் வேர்த்து இறுகிய முகத்துடன், மடத்தான் அருகில் வந்து முந்தானையை சரி செய்தவாறு, “கும்புடுரேன், பாண்டியன்” என்று, கைகூப்பி கும்பிட்டு நின்றாள் மாடத்தி.
ஊர் குளத்தில், இலந்தை செடியில் கொக்கி போன்ற முள், பிரபுவின் புறங்கையை கொறுத்து பிடித்துக் கொள்ள, “ஆ..அம்மா ”என, கதறி அழுதான் பிரபு, பதறி வந்த முனி, “கூறு இருக்கால?, உன்னைய எவன் பறிக்க சொன்னான் எலந்த பழத்த இப்டியால பறிப்பா? முள்ளு பூறாம் கைய கிழிச்சிரும்”
பிரபு கையை முள்ளிலிருந்து வலிக்காமல் விடுவித்தான் முனி. குன்னி முத்து அளவில் பொறங் கையில் பெறுகிய இரத்தம் பார்த்து, பிரபு கண்ணீர் வடித்தான், எச்சில் தொட்டு தடவினான் முனி.
“வலிக்குதோ அழாத” என்று பிரபுவின் கண்ணீரை துடைத்து விட்டு, கவட்டை கம்பால் இலந்தை செடிகளை உலுப்பினான் முனி. ஒதக் காய்களும், பழங்களும் உதிர்ந்து சிதறி ஓடியதை பிறக்கி, ருசித்துக் கொண்டே இருவரும் பேக் கோயில் நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள், பிரபுவின் முன் குறுக்கே விறுட்டென்று பாதையில் நெளிந்து கடந்து போன நல்ல பாம்பை கண்டு, மொட்டப்பனை மேலிருந்த நீல நிறக் காடை இறக்கை அசைத்து அலறியது.
பிரபு கையை பிடித்து வேகமாக இழுத்து நிறுத்தி, “ஏல… பாம்பு” என்றான் முனி. பிரபு கையிலிருந்து இலந்தை பழங்கள் சிதறி ஓடியது.
சுடு காட்டு நாலு முக்கு சந்திப்பில் “என்ன? மெட்ராசுக் காரி உங்கத்தாளுக்கு கோட்டி கீட்டி பிடிச்சிட்டா எவன பாக்க இப்டி ஓடுதா” என்று சக்கரையை வையித படியே,மாடத்தியை மேலும், கீழுமாக கடு கடுன்னு பார்த்து கேட்டான் மடத்தான்.
“அம்மா, அருள் வந்து ஓடுதா பாண்டியன்” என்று கூறி, பீ யை மித்தது போல நின்றிருந்தாள் மாடத்தி.
“அதுக்கு? எதுக்க, வர்ற ஆளுக தெரியாதோ” இறுமாப்புடன், சிகரட் பற்ற வைத்து புகைத்து கொண்டே… நீயும் எங்க கோயில் கொடைக்கி வருசம் தவறாம வந்துருத ம்ம்.. ஆமா ஒம் புருசென் வந்திருக்கானோ?” என்று எக்காளமாக சிரித்தான் மடத்தான்.
“நாளைக்கு வந்துருவாரு, நா கெளம்பதேன் பாண்டியன், அம்மா கோயிலுக்கு போயிருப்பா” என்று, பதில் அளித்தவாறு மாடத்தி , கையிலிருந்த சேலையுடன் வேகமாக நடந்தாள் செருப்பு கால்களுடன்.
“எந்த ஊர்ல வாக்கப்பட்ருந்தாலும் இந்த ஊரு கட்டுப்பாடு அப்பிடியே தான் இருக்கும் பாத்துக்கா” என்று, எட்டி சென்ற மாடத்தி காதில் விழும் படி கத்திக் கொண்டே புல்லட்டை உதைத்தான், தட தட சத்ததுடன் சுடுகாட்டு மண் ரோட்டில் புழுதி கிளப்பி கிழக்க பாத்து ஓட்டி சென்றான், சிகரெட் புகை ஊதிய படி மடத்தான்.
மயிலம்மாளும், மூக்காண்டியும் மூச்சு வாங்க,சுடுகாட்டு மண் ரோடு நாலு முக்கு சந்திப்பை நெருங்கி வர, “வேகமா வாரும், பூச முடிஞ்சிர போதுய்யா பீடிய பீடியா குடிச்சா இப்பிடி தான் எளைக்கும்” என்று மயிலம்மாள் மூக்காண்டியை வையித படி சீனி சரலை கற்கள் நிறைந்த பாதையில் வெறும் கால்களுடன் ஓட்டமும், நடையுமாக கோயிலை நோக்கி ஓட, மடத்தான் புல்லட் சத்தம் அடங்கியது.
கோயில் எல்லை, மத்தியான பூச கொட்டு சத்ததுடன் மணிகள் சேர்ந்து அதிர்ந்தன. வழி நெடுக, பெரிய பெரிய பந்தல் ஆர்சுகளும் வண்ண, வண்ண சீரியல் செட் தோரணங்களும் தொங்க, வீதி இரு புறங்களும் வரிசையாக கம்புகளில் ட்யூப் லைட்களை கட்டி சோதனை செய்து கொண்டிருந்தார்கள், மைக் செட்டுக்காரர்கள்.
இராட்டினகாரர்கள் குழந்தைகளை வைத்து, மூச்சு வாங்க சுற்றிக் கொண்டிருந்தனர் மகிழ்ச்சியாக அடுத்து சுற்றுக்கு சிறுவர், சிறுமியர் முண்டியடித்துக் காத்திருந்தனர். கிணத்தடியில் ஏற்றம் இறைத்து குடங்களில் நீர் நிரப்பி கொண்டிருந்தார்கள் பெண்கள் கூட்டம் கூட்டமாக.
காற்று ஒலிப்பான்களை அளுத்தி, ஐஸ் பெட்டி மூடியை திறந்து அடைத்து சத்தமெழுப்பியபடி, “வா வா ஓடியா… ஐஸ் ஐஸ் கப்பைஸ் பாலைஸ், கோநைஸ் சேமியா , ஐசே… ” சிறுவர் சிறுமியர் கூட்டங்களை வசியம் செய்து கொண்டிருந்தார்கள். கார்கள், வாங்க வந்தவர்களிடம் கார்களை பற்றிய விவரம் செல்லிக் கொண்டிருந்தான் பொம்ம சாமான் விற்கும் வியாபாரி.
மயில் கழுத்துகளுடன் மயில் எண்ணெய் தைலம் விற்பனை செய்யும் மிராட்டியன் கூட்டம் “கை , காலு சுளுக்கு , நரம்பு பிடிக்கே நல்லது சாமி ” என்று கூவ, வேடிக்கை பார்த்து சென்றது ஊர் பெருசுகள்.
கலர் கலர் பலூன்கள் காற்றில் மெல்ல அசைந்தாடியது. சில குழந்தைகள் பலூன் வாங்கி மகிழ்ந்து சென்றதை , காசுயில்லாத சிறுவர்,சிறுமியர் ஏங்கி வேடிக்கை பார்த்தார்கள், வெயிலின் சூடு பொறுக்காமல் பலூன் வெடித்த சத்தம் கண்டு மிரண்டு வாய்மூடி சிரித்தார்கள். முடி காணிக்கை நேர்த்தி கடன் நிறைவேற்றினார்கள்.
தலையை அறுத்து வீசிய சேவல் உடல் அங்குமிங்கும் துள்ள, துடிக்க இறக்கைகள் உதறி அடங்கியது.
வேட்டை நாய்கள் சில கழுத்தில் பாச்ச கயிறுடன், இரத்த வாடைக்கி மோப்பம் பிடித்து திரிந்தன, எல்லை அதிகாரம் செய்த நாயிகளிடம் வால் மடக்கி கோரைப் பல் காட்டி பயந்து உறுமியது பசியோடு திரியும் நாய் கண்கள் எரிய, ஆங்காங்கே புகை மண்ட, பொங்க பானையில் பொங்கலிட்டு கொண்டிருந்தார்கள், பெண்கள். இடம் பிடித்த கொட்டகை, கூடாரங்களில் தொட்டில் குழந்தைகளை உறக்காட்டிக் கொண்டிருந்தார்கள் தாய்மார்கள். மர நிழலில் நிறுத்தம் செய்த மாட்டு வண்டிகளில் நோக்காலில் கட்டப்பட்டருந்தன மாடுகள், கண்கள் மூடி அசை போட்டுக் கொண்டிருந்த மாடு, திமில் சிலிர்த்தும் பறக்க மறுத்தது, திமில் மேலமர்ந்திருந்து காக்கை. தாவணி கன்னிகள் பின்னால் ஊர் இளவட்ட மைனர்கள் , உயர பறக்கும் கள்ளப் பருந்தைப் போல் வட்டம் போட்டனர். ஐஸ் சர்பத் இங்கு கிடைக்கும் விளம்பர அட்டை தொங்க, சிலர் வண்ண வண்ண சர்பத்துக்களை ரசித்து குடித்தனர். கொட விருந்தாளிகள் வடிப்பு சாராயம் தேடி, கருவ காட்டுக்குள்ள கதவாளி போல் பம்மி, நுழைந்தார்கள். திடீர் பூக்கடைகள் ஒன்றில் பூ மாலைகள் பின்னிக் கொண்டிருந்தவனிடம், பழக்கம் விட்டுக் கொண்டிருந்தார் ஏட்டய்யா.
அதிகாலையில் பலியிட்ட செம்மறி கிடாக்களின் தலை வேறு, உடல் வேறாக இரத்த சகதியிலிருந்து துக்கி வீசி எறிய மொத்தமாக ஓரிடத்தில் ஒன்று சேரக் குவிந்தன. கிடாயின், உரிமைதாரர் தேடி அடையாளம் கண்டு எடுத்துச் சென்றார்கள். சாம கொடைக்கி கிடா பலியிட, பரன்கள் தயார் செய்து கொண்டிருந்தனர் கோயில் முக்கியஸ்தர்கள். பாத்தியப்பட்ட குடும்ப ஆட்கள் விரதமிருந்து, கிடாக்களை வெட்டியவர்கள், அரிவாளைத் தீட்டி கூர் சரி செய்தனர் சாம கொடைக்காக.
“தொங்கு கிடா மட்டும் விழுந்திராமல?சாமிய நெனச்சிட்டு வெட்டு” என்றார் வயதான ஒருவர்.
கொட்டுகள் அதிர சுடலைமாடன் செம்மண் பூடத்தில் வெள்ளி கண் இலைகள் பொருத்தி கிழக்கே பார்த்து சிரிக்க, ஆள் உயர வீச்சருவா ஊன்றி சந்தனப்பால் தேய்த்து செவ்வரளி, ரோசா மாலைகள் மணம் மணக்கும் இராச அலங்காரத்துடன், சூடம் ஏத்தி ஆராதனை செய்து ஊர் பக்தர்கள் சூல மத்தியான பூசை நடந்து கொண்டிருக்க, பச்ச வாழை மட்டையில் மண்ணும், சந்தனமும் மணக்க அலங்கரிச்சி வடக்க பாத்து சாந்தமா, ஜொலிச்சா பேச்சியம்மா.
கையில் பிள்ளச் சேலையை மாரோடு அனைத்து குறுக்கும் நெடுக்குமாக நடைபோட்டு, மூக்கு விடைக்க முனு முனுத்த படி குழந்தையை தாலாட்டுவது போல அசைந்தாடினாள் பேச்சி. பெரியாச்சி, உக்கிர தேவதைகளிடம், அருள் வாக்கு கேட்டு நின்றிருந்தனர் ஊர்க்காரர்கள்.
கோயில் பந்தலுக்குள் கொண்டு வந்த சேலையை, ஆடிக்கொண்டிருந்த பேச்சிக்கி கட்டி விட்டு காலில் விழுந்து கும்பிட்டாள் மாடத்தி. கண்களில் கண்ணீர் பெருக தலையில் கை வைத்து ஆட்டி நிறுத்தி, கட்டை விரலால் விபூதி இட்டு பின்நோக்கி தள்ளினாள் பேச்சி, பிள்ளச்சேல ஏந்திய படி மாடத்தியின் முகம் பார்த்து.
அங்கே மேக்க பாத்து சுடு காட்டு மண் ரோட்டில் நடந்த படி“ சும்மா, அத பிதிக்கிட்டே கெடக்காதல?” புறங்கை காயத்தை தடவி பார்த்துக் கொண்டே வந்த பிரபுவை வையிதான் முனி. ”இரத்தம் வருது மாமா” பாவம்போல் கையை நீட்டி காமித்தான் பிரபு.
“எச்சி தொட்டு வையி ஆறிரும்” என்று, முனி பிரபுவை அமைதிப்படுத்தினான். எதிரே புல்லட்டில் வந்த மடத்தான் தீடீர் என டயர் தேய்த்து நிறுத்தினான். சட்டுனு விலகி நின்றார்கள் முனியும்,பிரபுவும்.
“ஏலு எந்தூர்ல? இங்ன என்னல, பன்னுதிய” தட தடத்த புல்லட்டில் அமர்ந்தவாறே கேட்டவன், “தேங்கா, களவாங்க வந்தியலோல?” என பிரபு, முனி இருவரையும் நாக்கை துருத்தி, மிரட்டினான் மடத்தான்.
“இல்ல நாங்க எலந்த பழம் பறிக்க தான் வந்தோம் பாண்டியன்” என கூறி , வேட்டை நாயை கண்ட வெறுவை போல பயந்து, நடுங்கி நின்றான், முனி.
“நீ மூக்காண்டி மவந்தான்ல? இவேன் எவம்ல? சட்ட பேன்டு பூடுசுலாம் போட்டு புதுசா இருக்கான்” என்றான் மடத்தான் பிரபு மிரண்டு முளித்தான்.
“எங்க, அக்காமவன் ” என்று முனி செல்லி முடிக்கும் முன்னே, “ஏலு உனக்கேதுல அக்கா? ஒப்பன ஓளி ” மடத்தான் கையை ஓங்க, நாலு எட்டு பின்னால் நகர்ந்தார்கள் பிரபுவும் முனியும்..
“மெட்ராசுலயிருந்து வந்திருக்கான் பாண்டியன்” புல்லட் தடதட சத்தத்திற்கு இடையே சத்தமாக கூறினான் முனி.
“ஓ கறுப்பேன் பேரனால நீ பேரு ஏன்னல?” பிரபுவை மிரட்டினான் மடத்தான்.
“பிரபு” என கூறி மெல்ல புன்னகைத்தான் பிரபு.
“ஒடுங்கள, திரும்பி வரும் போது இங்கன நின்னிய தென்னமரத்துல கட்டிவச்சி உரிச்சிருவேன்” என்று தட தட சத்ததுடன் சரலை கற்கள் சரசரக்க புல்லட்டில் சென்ற மடத்தானை, முனியும் பிரபுவும் முகம் வேர்த்தபடி வெறித்து பார்த்து பெருமூச்சு விட்டார்கள்.
புல்லட்டில் பறந்து கொண்டிருந்தான் மடத்தான்.
“சரி வால? இங்கன நிக்க கூடாது ஒடியாந்துரு” என்று முனி பிரபுவை அழைத்து கொண்டு வேகமாக ஓடினான்.
“எதுக்கு மாமா,அந்த அங்கிள் நம்மள திட்டினாங்க?”என்று மூச்சி வாங்க ஒடியபடியே பிரபு கேட்க, “அது அவுங்களாம் அப்டிதான்”.
இருவரும் ஓட்டம் குறைந்து நடந்தனர்.
“ஏய் போய்யா வந்துட்டான்” என்ற மடத்தானிடம் ஒரு கிளாசு சாராயத்திற்கு பேரம் பேசி தள்ளு முள்ளு நடந்தினார்கள், கொடக்கி வந்த விருந்தாளிகள்.
“கொட நேரத்துல வந்துந்திருந்துகிட்டு, ஒர்ரூபாய்க்கி குடு , ரெண்டு ரூவாய்க்கி குடுன்னு எச்சிக்கல தனமா , கேக்காத மாமா? ஒறவு முறலாம் இங்க செல்லாது கிளாசு அஞ்சு ரூவா, வேணுன்னா குடி இல்லாட்டி கெளம்பு.”
“ஏல், இசக்கி?” என்று அழைத்த படி கோபமாக வந்த மடத்தான்.
சாராயம் வாடிக்கும் இடத்தில், அண்ணே பதம் பாக்கியாண்ணே?”
சாராயம் நிரம்பியிருந்த கேன்களை கைநீட்டி காட்டினான் இசக்கி.
“அதெல்லாம் ஒரு மயிரும் வேண்டாம் நீ பதம் பாத்தா காணாதா நா சொல்லுதத நல்லா கேட்டுக்க?”
மடத்தானும், இசக்கியும் குசு, குசுத்த படி, “இன்னேலிருந்து ஒரு வாரத்துக்கு, நம்ம ஊரே… கறி குழம்பு வாசத்துல மிதக்கும். பேட்டரிய சுள்ளுனு போடு. அப்பதான், போத ஏற ஏற இங்கனயே குடிச்சி கெடப்பானுவ, நானும் நாலு காச பாக்க முடியும், புரியுதா?”
தெற்கோரம் பனவடலி தூர் ஓரத்துல குத்தவைச்சி சாராயம் குடிச்சிட்ருந்தான் கறுப்பன். எதயோ மோப்பம் பிடித்த படி தேடி திரிந்தான் செவல.
“நீ குடிச்சிட்டு மலர்ந்துராத உனக்கு ஒத்தாசைக்கு கறுப்பன வச்சிக்கா ” பனவடலிக்கு தெக்கோரம் நின்றிருந்த கறுப்பன் மடத்தான் கை அசைவிற்க்கு ஓடிவந்து “பாண்டியன்” என்றான் “கறுப்பா? இசக்கி கூட நில்லு ” என்றான் மடத்தான். தலையாட்டி “சரி பாண்டியன்” என்று தோளிலிருந்த துண்டை எடுத்த படி நின்றான் கறுப்பன்.
“ரூவா பத்ரம்ல மேக்க போயிட்டு வருவேன்” என்று புல்லட்டை ஸ்டார்ட் செய்து இரை தேடி அலையும் பாம்பு போல விரைந்தான் மடத்தான்.
அங்கே சுடுகாட்டு மண் ரோட்டில் “ஏல , பிரபே மெட்ராசுல ரயிலு இருக்க” இருவரின் நிழல்கள் பின்னால் விழ நடந்து கொண்டே, “ரயிலா” என பிரபு முளித்தான்.
“தண்டவாளத்ல நீளமா ஓடும்லா” முனி செய்கை காட்டி விளக்கினான்.
பிரபு, “ஓ.. ட்ரெயினா மாமா? எங்க கோட்ரஸ் பின்னால தான் போகும் பாத்திருக்கனே. டேடி கூட சன்டே சன்டே பீச்சுக்கு ட்ரெயின்லதான போவேன் ஜாலியா இருக்கும்” என்று சந்தோசமாக கூறிய பிரபுவை வாய் பிளந்து பார்த்தான் முனி, இருவரும் பேசிய படி நடந்தார்கள்.
“நா, ரயில பாத்ததே இல்ல, அது என்னல? பீச்சி” என்று கேட்டான் முனி.
“பீச்ன்னா பீச் தான்” தலை ஆட்டி கூறினான் பிரபு.
“அதான் அது, என்னதுல? ஓந்தாங் கணக்க மண்டைய மண்டைய ஆட்டாத” கோவமாக கேட்டான் முனி.
“ம்ம்… அது பெருசா ப்ளூ கலர்ல பெரிய பெரிய அலைலாம் வரும், ஐஸ்கிரீம் ,சுண்டல் வாங்களாம் , குதிரையொல்லாம் இருக்கும்.”
“கடல் தான் பீச்சா” என்று சிரித்தபடி, “இந்தூர்ல பீச்சி, கீச்சிலாம் கிடையாதுல கொளம், கெணறு தான் இருக்க” என முனி சலித்துக் கொண்டான்.
“கொளம், கெணறா அது எப்டியிருக்கும்?” என்று பிரபு அதிசயமாக கேட்டான், முனி செவிடன் போல் நடந்தான்.
“மாமா குளமும் எப்படி இருக்கும், காட்டுங்க. பீச் மாதிரி பெருசாயிருக்குமோ அலை வருமா?” என முனியை பாடாய்ப் படுத்தினான் பிரபு.
“நாம எலந்த பழம் பறிச்சம்லா அந்தயிடந்தான் கொளம்” என்றான் முனி.
“தண்ணியேயில்ல கொளம்ன்னு சொல்றீங்க” என முனியை விடவேயில்லை பிரபு.
“மழ வந்தா தான் தண்ணியவே பாக்க முடியும், இல்லனா குண்டி கழுவ கூட தண்ணி கெடக்காதுல”
“ச்சீ.. ” என பிரபு சிரித்து விட்டு, “அப்டினா கிணத்துலயும் தண்ணி இருக்காதா..?” முனியை புண்ணாக்கினான் பிரபு.
“எல்லா கெணறும், அப்படியிருக்காதுல முட்டாபயல” என்றான் முனி.
“மொதல்ல தண்ணியிருக்கும் கிணற காட்டுங்க மாமா? எனக்கு தாகமாயிருக்கு” என்றான் பிரபு.
“அதுக்கு ஊருக்கு மேக்கலா பேகனும், இந்த தோப்புல தண்ணியில்லாத கெணறுதானயிருக்கு. இந்த கெணத்த பாத்துட்டு, மேக்க உள்ள கெணத்துக்கு போயி தண்ணி குடிப்போம்” என்று முனி, பிரபு இருவரும் முகமெல்லாம் வேர்த்து, நடந்தபடி ரோட்டுக்கு தெற்கே சதுர வடிவ மொட்டை கிணற்றில் கமலை இறைத்து பாசனம் செய்த அடையாளத்தின் எச்சம்மாக இருந்த கல் மேல் வந்து நின்றார்கள். காட்டு தீயிற்கு இரையானது போல காய்ந்து கருகி கிடந்தது தென்னந்தோப்பு.
“இதாம்ல கெணறு, வா? பாத்துக்கா என்று தண்ணியில்லாத கிணற்றை பிரபுவுக்கு காட்டினான் முனி.
அங்கே கோயில் சன்னிதானத்தில், மடியேந்தி குழப்பத்திலிருந்த மாடத்தி முன் பேச்சி ஒரு நொடி வந்து மாடத்தின் பிடதி பற்றி அணைத்து நெற்றி மீது நெற்றி பதித்து, “ஓம் புதயல தொலச்சிட்டியே ” என, சூறாவளி கடந்து போன இடம் போல புழுதி பறக்க ஆடி அமைதியானாள் பேச்சி.
“யம்மாடி?”
எவ்வளவு ஆழம் ” என்ற பிரபுவின் குரல் கிணற்று கருங்கல் பாறைகளில் மோதிய எதிரொலித்தில் பட பட சத்ததுடன் இறக்கைகள் அடித்து மாடப்புறாக்கள் சில கலைந்து பறந்ததை கண்டு திடுக்கிட்டு பயந்து தடுமாறிய பிரபு கை பிடித்து நிறுத்திய மாமன் முனி, “ஏல? பாத்து ” என உரக்க கத்தினான், சமாளித்து சிரித்தான் பிரபு.
மத்தியான வெளிச்சத்தில் கிணற்று தூரில், இறந்த விலங்குகளின் அழுகிய பிணத்தின் எலும்புகள் சிதறி கிடந்தன, குப்பை கூளங்கள் , சுருங்கிய தேங்காய் நெத்துகள், கந்தல் துணிகள், மண்சரிவில் விழுந்த பெறிய, பெறிய கற்களும் , நீர் கருவை மரங்கள் வளர்ந்து புதர்கள் மண்டி வீச்சமெடுத்து போன பாழுங்கிணற்றை எட்டி பார்த்த பிரபு, “பயங்கர நாத்தம் ” என்று மூக்கை பொத்தியபடி, “தண்ணியே இல்ல மாமா ”என, முனு முனுத்தான்.
“நம்ம மோண்டா தாம்லஇந்த கெணத்துக்கு தண்ணியே ”என முனி டவுசர் பட்டனை வேக வேகமாக அவிழ்க்க, பிரபு இடப்புறமிருந்து குனிந்து முனியை பார்த்து சிரித்தான் . குஞ்சான் தெரிய வில்லு போன்று வளைந்து நின்று தலை அசைத்து சிரித்துக்கொண்டே “நீயும் மோண்டு விடுல பிரபு ” என்றான் மாமன் முனி. பிரபுவும் அவசர அவசரமாக ஜிப்பை திறந்து மாமனை போலவே நின்று சிரித்தான்.
“சக்கிலிய தேவிடியாமவனே” என வடக்கே இருந்து வந்த கரகரப்பான குரல் தடித்த தோல் செருப்பு அணிந்த கால் ஒன்று பிரபுவின் முதுகில் ஓங்கி மிதித்து தள்ளியது.
மொடுக் என்ற சத்தத்துடன் மூச்சு அடைத்து, முதுகு முறிந்து, கிணற்றினுள் சரிந்தான் பிரபு.
தடுமாறி கிணற்றின் வெளியே தாவி விழுந்தான் முனி, டவுசர் கிழிந்து, கெண்டை கால்கள் வரை அவிழ்ந்தது. தட்டு தடு மாறி அம்மணமாக ஓடினான்.
“யம்மா… பிரபு…?” என்று கதறி அழுதவனாய்.
“எங்க வந்து யாரு கெணத்துல யாரு மோளுதியல?” என்று இரை விழுங்கிய பாம்பு போல மெல்ல நகர்ந்தான் மடத்தான்.
கொட்டு சத்தம் அடங்கி, ஊர் அமைதி காத்தது.
நீர்கருவை முட்கள் அடர்ந்த கிளைகளிள் உரசி , உடல் கிழிந்து. கிணற்று அடிவாரத்துக் கருங்கல் பாறையில் தலை மோதிய படி அசைவற்று கிடந்தது பிரபு உடல்.
கிணறதிர்ந்து மேலிருந்து சரளை மண்கள் பூக்களை போல உதிர்ந்தன.
நெடுங்காலமாய் நீரின்றி வறண்ட பாழும் கிணற்றில் கருங்கல் பாறை இடுக்கிலிருந்து, செந்நீர் சுரந்து பெருகியது.


