சுந்தர பவனம் என்ற நாவலை எழுதியிருப்பவர் திருமதி வள்ளி..
திருமதி வள்ளி திருநெல்வேலியில் வசிக்கிறார். இவர் மருத்துவத்துறையில் பணியாற்றி விட்டு ஓய்வில் இருப்பவர். இவருடைய பொழுது போக்கு சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதுவது. பல நாவல்கள் எழுதி பதிப்பித்திருக்கிறார். இவருடைய பல சிறுகதைகள் பரிசுகளை பெற்று இருக்கின்றன. இந்தப் புத்தகம் ஒரு நோஷன் பிரஸ் வெளியீடு.. அமேசான் கிண்டில் தளத்திலும் படிக்க கிடைக்கிறது.
சுந்தர பவனம் சற்று பெரிய நாவல். கிட்டத்தட்ட 488 பக்கங்கள் மற்றும் 100 அத்தியாயங்கள்.
நாவல் ஒரு நூற்றாண்டில் நடைபெற்ற சம்பவங்களை பற்றி பேசுகிறது. இந்த நாவலில் நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உள்ளன. அந்தந்த காலகட்டத்தில், தேவையான கதாபாத்திரங்களை கதைக்குள் கொண்டு வந்து அறிமுகம் செய்கிறார் ஆசிரியர்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சுந்தர பவனம் என்ற அந்த பெரிய பங்களாவில் கதை ஆரம்பிக்கிறது.
1920 ல் கதை தொடங்குகிறது;
2020 இல் முடிகிறது.
1920 கால கட்டம் அனேகமாக அதிகமாக அனைவராலும் அறியப்படாதது. திருநெல்வேலி சைவ வேளாள குடும்பத்தின் ஒவ்வொரு சடங்கும் ஒரு சரித்திர பதிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சடங்கு, திருமணம் என அனைத்து குடும்ப விழாக்களும் பண்டிகைகளும் விவரமாக கதையோடு இணைந்து வருகின்றன. அந்தக் காலத்தில் நடைமுறைகள் எப்படி இருந்தன; உறவு முறைகளுக்கு இடையே இருந்த பாசம், பிணைப்பு கூட்டுக்குடும்பமாக ஒரே தலைமையின் கீழ் இயங்கியது .. இவையனைத்தையும் மிக அழகாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
பண்ணையார் சோமசுந்தரம் – ரத்னாவள்ளி தம்பதி இரண்டாம் தலைமுறை; அவர் தாயார் பெரிய பண்ணையாரின் மனைவி திலகவதி முதல் தலைமுறை – இவர்களின் அறிமுகத்தோடு கதை ஆரம்பிக்கிறது. ஆனாலும் கதையின் நாயகி மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த பண்ணையாரின் மகள் குட்டி திலகவதி தான். கதை அவருடைய பன்னிரண்டாம் வயதில் ஆரம்பித்து 85 ஆம் வயதில் முடிகிறது..
சிறுமி திலகவதியின் வாழ்க்கையில், ஒவ்வொரு கட்டத்திலும் நடக்கும் குடும்பம் மற்றும் சமூக மாற்றம் தான் கதையின் கரு என்று சொல்லலாம். அது போல அந்த கால கட்டத்தில் புழங்கிய சில வார்த்தைகளை ஆசிரியர் பயன்படுத்தி இருப்பது அருமை; தொறவுகோல், பட்டாளை, லாந்தர் விளக்குகள், டாங்கர் குழம்பு, உருத்து, ஏண்டு – இதுபோல புழக்கத்தில் வழக்கொழிந்து போன வார்த்தைகளை படிக்க முடிகிறது நமக்கு சிரமம் தராமல் அந்த புதிய வார்த்தைகளுக்கான அர்த்தங்களை அந்த அந்த அத்தியாயத்தின் கீழே கொடுத்திருப்பது சிறப்பு.
வீட்டின் அறைகளுக்கும் பாத்திரங்களுக்கும் பெயர் உண்டு என்பது நாம் அந்த கேள்விப்பட்ட ஒன்று தான். அறவீடு, புண்ணாக்கறை, மேட்டறை, வைக்கப்பறை, வெந்நீர் பறை, கொட்டகை – என்று வீட்டின் அறைகளுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் வீட்டின் பேரில் அவர்கள் கொண்ட பற்றுக்கு ஒரு சான்றாக இருக்கிறது.
சிறுமி திலகவதியில் ஆரம்பிக்கும் கதை வயதான திலகவதியில் முடியும் போது 85 வருடங்கள் ஓடுவதே தெரியவில்லை. படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை வாசிப்பவர்களிடம் உருவாக்கி இருப்பது நாவலின் சிறப்பு. அதே போல இந்த புத்தகத்தில் என்னை கவர்ந்த ஒரு விஷயம் கால மாற்றத்தை திணிக்காமல் கதையின் ஓட்டத்தில் இயல்பாக கொண்டு சென்றிருப்பது அருமை. உதாரணத்திற்கு திலகவதியின் மகன் ஐந்து வயதில் நட்டு வைத்த மரக்கன்று
– வளர்ந்து காய்த்திருப்பதாக இயல்பாக கூறுவது,
சிறுவன் வளர்ந்து விட்டதை குறிப்பால் உணர்த்துகிறது. கதை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மாறுவதை அழகாக எடுத்துச் சென்றிருக்கிறார்.
அந்தக் கால மனிதர்களின் உழைப்புகள், அவர்களிடத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்த மின்சாதனங்கள் மற்றும் அவை உட்புகுந்த கால கட்டத்தை கதையின் ஓட்டத்தில் இயல்பாக கொண்டு வந்திருப்பது சிறப்பு.
குடும்ப கதை என்றாலும் குடும்ப உறவுகளுக்கிடையே உள்ள பிணைப்புகளை கூறும் போது அந்த கால கட்டத்தில் விவசாயத்தை நம்பி இருந்த பண்ணையார் ஜமீன் குடும்பங்கள் மெல்ல மெல்ல காலப்போக்கில் அதிலிருந்து வெளியே வந்து அடுத்த தலைமுறை படித்து வேலை பார்க்க என வெளியிடங்களுக்கு இடம் பெயர, பேரை மட்டும் அந்தஸ்தாக தாங்கி இருக்கும். அது போன்ற மாளிகையை இன்றும் பார்க்கிறோம். இந்தப் புத்தகத்தை படிக்கும்போது அந்த மாளிகைகளிலும் இப்படிப்பட்ட ஒரு கதை இருக்கும் என்றே தோன்றுகிறது..
வசனங்களும் சில இடத்தில் நச்சென்று இருக்கிறது.
## வயதானவர்களுக்கு எதிர்காலமும் பெரிய எதிர்பார்ப்பை தராது. நிகழ் காலமும் நிம்மதியாக கழிந்தால் போதும் என்ற அளவில் ஓடும். இறந்த காலத்தின் இனிய நினைவுகள் மட்டுமே அவர்கள் மனதில் பொக்கிஷமாய் வந்து கொண்டே இருக்கும்.
அது போல இன்னொரு இடத்தில் தந்தையும், மகனும் பேசும் சந்தர்ப்பத்தில் வெளிநாட்டில் வாழும்
மகன் அப்பாவை சுந்தர பவனத்தை விட்டு வெளியே வரச் சொல்லும்போது அவர் மகனுக்கு கூறும் பதில் மனதைக் கவர்ந்தது.
## அகிலன் வீடு என்பது வெறும் செங்கலும் சிமெண்டும்னு நீ சொல்ற. நீ வாழ்ற நாட்டுல உள்ளவங்களுக்கு அது பொருந்தும். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லப்பா. வீடு என்பது உயிரிலும் உணர்விலும் கலந்தது.
## நம்ம நாட்டுல பிள்ளைகளுக்காக பெத்தவங்க வாழ்றத சுமையா நினைக்கல சுகமா தான் நினைக்கிறாங்க; பெரியவங்க கடைசி காலம் வரைக்கும் பிள்ளைகளுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்யத்தான் செய்கிறார்கள்; இதுபோல உணர்வுபூர்வமான வசனங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன.
தன் கணவன் தடம் மாறி போவதை உணர்ந்த திலகவதி தன் ஓர்ப்படியிடம் அதைப்பற்றி சொல்லி வருத்தப்படும் போது, இருவரது உரையாடலும் யதார்த்தம். அதேபோல ஒரே வீட்டிற்கு வாழ வந்த அந்த இரண்டு மருமகள்கள் – திலகா, பூரணி இருவருக்கும் உள்ள பாசப்பிணைப்பு கதை நெடுக மனதிற்கு இதமாய் பரிமளிக்கிறது. இறுதி வரை அவர்களிடையே உள்ள ஆத்மார்த்தமான பிணைப்பு கதைக்கு வலு சேர்க்கிறது. அவர்களிடையே நிகழும் உரையாடல்கள் ரசிக்க வைக்கிறன.
## ஒரு பெண்ணுக்கு ஆண் எதிரியாக வேண்டாம் திலகா பெண்ணுக்கு பெண்ணே தான் எதிரி. ஒருத்தன் கல்யாணம் ஆனவன் குழந்தை குட்டி இருக்கிறவன் என்று தெரிந்தும் இன்னொருத்தி வாழ்க்கையை கெடுக்கிறாளே அவளும் பெண் தான் – இதுபோன்ற எதார்த்தமான உரையாடல்கள் கதையுடன் ஒன்ற வைக்கிறது.
வெறும் குடும்ப கதையாக மட்டும் செல்லாமல் விவசாயம், அதைச் சார்ந்த பிரச்சனைகள், நிலங்களை வாங்குவதிலும் விற்பதிலும் ஏற்படும் சிக்கல்கள் அதற்காக வாங்கும் கடன்கள், அதனால் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் – என அந்தக் காலத்து பண்ணையார் குடும்பங்களில் நிகழ்ந்த விஷயங்களை இயல்பாக விளக்குகிறது.
மூக்கையா தேவர் பாத்திரப்படைப்பு அருமை. அவருடைய மரணம், அது தொடர்பான மர்மங்கள் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத இடங்கள் நிறைய உண்டு.
அதுபோல அந்தஸ்துக்காக செய்யப்படும் அதிகப்படியான சீர் வரிசைகள் மற்றும் ஆடம்பர கல்யாணங்கள் மற்றும் ஆடம்பரமான குடும்ப விழாக்கள் எல்லாமே ஒரு காலகட்டத்தில் இத்தகைய பெரிய குடும்பங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விடும் என்பதை இக்கதை மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
திலகவதி திருமணமாகி சென்னை சென்ற பிறகு கதை இரண்டு இடங்களில் பயணிக்கிறது; சுந்தர பவனம், வசந்த மஹால். அத்தியாயங்கள் இரண்டிலும் மாறி மாறி நிகழ்ந்தவற்றை சுவாரசியமாக கூறுகிறது. வசந்த மஹால் கதாபாத்திரங்களும் சற்று நிறைய இருப்பதாக தோன்றினாலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு குணாதிசயம் என்பதால் சுவாரசியமாக செல்கிறது. அது கதை நீட்சிக்கு உதவவும் செய்கிறது. வசந்த மஹால் சென்னையில் இருப்பதால் சென்னையின் வளர்ச்சியையும் பற்றி கால மாற்றத்தோடு சுவாரசியமாக கதாசிரியர் சொல்லியிருக்கிறார்.
அந்த காலகட்டத்தில் இருந்த உண்மையான இடங்களையும் நிகழ்வுகளையும் கதையில் கொண்டு வந்திருப்பதால் கதையோடு ஒன்ற முடிகிறது; ஆசிரியரே தன்னுடைய முன்னுரையில் இதில் உண்மை நிகழ்வு அதிகம், புனைவு குறைவு என்கிறார்.
நான்காம் மற்றும் ஐந்தாம் தலைமுறையும் கதாபாத்திரங்களோடு கால மாற்றத்தையும் உணர்த்துகின்றன. முக்கியமாக முதல் முதலாக டெலிபோன் வீட்டிற்கு வரும்போது ஏற்படும் மகிழ்வு; கடைசி தலைமுறையை 10 அத்தியாயங்களுடன் முடித்து விடுகிறார். ஏனென்றால் அது இப்போது நடக்க கூடிய காலகட்டம். எல்லோரும் அறிந்தது என்பதால்..
இது ஒரு அருமையான சரித்திர பதிவு மற்றும் ஒரு குடும்ப நாவல்; அதுவும் விறுவிறுப்பான திருப்பங்களுடன. புத்தகத்தை எடுத்தால் கண்டிப்பாக கீழே வைக்க முடியாது.. எளிய நடை கதைக்கு கூடுதல் சிறப்பை தருவதாக தோன்றியது. சற்றே பெரிய நாவல் என்றாலும் விறுவிறுப்பு குறையாமல் கதை செல்வதால் அலுப்பு தட்டாமல் படிக்க முடிகிறது. இப்புத்தகம் நோஷன் டிரஸ் தளத்திலும், கிண்டல் தளத்திலும் படிக்க கிடைக்கிறது. அச்சு புத்தகமாகவும் மின் புத்தகமாகவும்.


