வினோத் – வினோதினி
“அவன் பேர் வினோத். என் பேர் வினோதினி. இந்த விஷயமே எங்களை ஒருவரை ஒருவர் பார்க்க வச்சுது அங்கிள்…”
“…………………..”
“என்ன அங்கிள்… நல்லா பேசுவீங்கன்னு வினோத் சொன்னான். சும்மாவே இருக்கீங்க… எங்களுக்குள்ள முதல்ல சண்டைதான் வந்து கொண்டிருந்தது. ஒரே மாதிரி பேர்ங்கறதால பிரெண்ட்ஸ் கிண்டல் அடிச்சாலும் இவன் ஒதுங்கி ஒதுங்கிப் போனான். போகப்போக அண்டர்ஸ்டேண்டிங் வந்துடுச்சு…”
அண்டர்ஸ்டேண்டிங்கா? அப்படீன்னா?
அவளையே பார்த்தார் மூர்த்தி. “வினோத் ஒண்ணும் சொன்னதே இல்லையே… கல்யாணமே வேண்டாம்னுதான் சொல்றான்…நீ யாரையாவது பார்த்திருந்தா சொல்லுன்னு கூட கேட்டுப் பார்த்தும் இல்லைன்னுதானே சொன்னான்?”
“பொய் அங்கிள்… நாங்க ஒரு வருஷமா பழகறோம்..”
“ஏன் பொய் சொல்லணும்? நாங்க அவனுக்கு கல்யாணம் பண்ணணும்னுதான துடிச்சுக்கிட்டிருக்கோம்… வேற ஏதாவது சொல்லக் கூடாத பிரச்னை இருக்கா?”
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை அங்கிள்… நீங்களும் லவ் மேரேஜ்னு வினோத் சொல்லி இருக்கான். நீங்க உங்க மேட்டரை உங்க அப்பாம்மா கிட்ட ரொம்ப வித்தியாசமா ப்ரசண்ட் பண்ணினீங்களாம்… இவனுக்கு நீங்க கேட்டும் கூட உங்களிடம் சொல்ல என்னவோ தயக்கம்… என்ன இருந்தாலும் இதற்கு எல்லாம் பேரன்ட்ஸ் கிட்ட சொல்ல ஒரு தயக்கம் நேச்சுரலாவே இருக்கும்தானே? அவனே பார்த்தா கூட உங்க ஜாதியிலேயே பாருன்னு சொன்னீங்களாமே… சொன்னான். என்ன அங்கிள் அப்படிப் பார்க்கறீங்க… நான் வேற ஜாதி இல்லை.. கவலைப்படாதீங்க.. ஓ.. அவன் இவன்னு சொல்றேனேன்னு பார்க்கறீங்களா… அவர் இவர்னுல்லாம் உங்களுக்காக சொல்லலாம், இம்ப்ரஸ் பண்ணலாம்.. ஆனா நாங்க அப்படி பேசிக்கறதில்ல அங்கிள்… எதுக்கு போலித்தனமா… எனக்கு அதெல்லாம் பிடிக்காது… இப்போ கூட படபடன்னு பேசிகிட்டீங்களாமே… கல்யாணமே வேண்டாம்னு சொன்னானாமே… ரொம்பக் கவலை ஆயிட்டீங்க போல…”
திடீரென வந்து எதிரே உட்கார்ந்து படபடவென பேசும் அந்தப் பெண்ணை நிதானமாகப் பார்த்தார் மூர்த்தி.
என்ன பெண் இவள்… நிஜம் பேசுகிறாளா? பொய்யா? இப்படிக் கூட வந்து பேசுவார்களா? சற்றுமுன் நடந்ததைக் கூடச் சொல்கிறாளே…
“என்ன அங்கிள்.. இப்படியெல்லாம் பேசறாளேன்னு பார்க்கறீங்களா… வினோத்திடம் விஷயத்தை விட்டா இழுத்தடிச்சுடுவான் அங்கிள்… அவன் எப்பவுமே அப்படிதான்… உங்களுக்குத் தெரியாதா? வயசாவுது இல்ல… சட்டுபுட்டுனு விஷயத்தை ஓபன் பண்ணுடான்னா கேட்க மாட்டேங்கறான்… ஸாரி அங்கிள்… நான் அவன் இவன்னு சொல்றது பழக உங்களுக்கு கொஞ்ச நாளாகும்…”
“உன்னைப்பற்றி சொல்லு“
“நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு… நோ சிஸ்டர்ஸ்… நோ பிரதர்ஸ்… எங்கப்பா போன மாசம்தான் ரிடையர் ஆனார். அவர் என்னிடம் ரொம்பப் பிரியமா இருப்பார். என்ன பார்க்கறீங்க… அவருக்குத் தெரியுமான்னு கேட்க நினைக்கறீங்க… கரெக்ட்டா? தெரியும் அங்கிள்… வினோத் மாதிரி இழுத்தடிக்க விரும்பலை நான். முன்னாடியே சொல்லிட்டேன். ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா அங்கிள்… எனக்கும் வினோத்துக்கு மூணு மாசம்தான் வயசு வித்தியாசம்… பயப்படாதீங்க… நான் மூணு மாசம் சின்னவள்!” சிரித்தாள் வினோதினி.
“உன் நட்சத்திரம்?”
“உத்திரம் அங்கிள்… உங்க பையன் புனர்பூசம் இல்லையா… பொருந்தும். கவலைப்படாதீங்க.. வேற கோத்ரம்தான். அதுவும் பிரச்னை இல்லை. ஜாதகத்துல பத்துக்கு ஏழு பொருத்தம் இருக்கு.. நானே பார்த்துட்டேன்.”
“உனக்கு ஜாதகம் பார்க்கத் தெரியுமா? “
“தெரியும் அங்கிள்… கத்துக்கிட்டேன்“
“உங்கப்பாவுக்கு இதில் முழு சம்மதமா? அவருக்கு ஒண்ணும் வருத்தமில்லையா?”
“வருத்தம் ஆரம்பத்துல இல்லாம இருக்குமா? இருந்தது. அப்புறம் சமாதானமாயிட்டார்… யு நோ அங்கிள்.. அம்மா இல்லைங்கறதால நான் அவருக்கு ரொம்ப செல்லம். இருந்தாலும், இருங்க… அவரையே கேட்டுடலாமே…” போனை எடுத்தவள் அப்பாவின் பெயரைத் தெரிவு செய்து கால் செய்தாள்.
“வேண்டாம்.. வேண்டாம்.. அவர் கூட நான் இப்போ பேச விரும்பலை“
போனைக் கீழே வைத்து விட்டாள் வினோதினி. மூர்த்தி விட்ட பெருமூச்சு முடியும் முன் அந்த அறைக்குள் நுழைந்தவரைப் புன்னகையுடன் வரவேற்றாள் வினோதினி.
“அப்பா…” என்று மூர்த்தியைப் பார்த்தவள், அப்பாவிடம் “அங்கிள்” என்றாள்.
“தெரியுமே… போட்டோ காமிச்சுருக்கியே..” என்று புன்னகைத்தார் அவர். “ஐயம் பாலாஜி” என்றார் இவருக்காய் கைநீட்டி.
அவர் விரல்களைத் தொட்டு கையை இழுத்துக் கொண்டவர் “ஃபோட்டோவா?” என்றார்.
“அப்பா… ” என்று அவரைப் பார்த்தவள், ‘ஓ… கமான் அங்கிள்… நாங்க ஒரு வருஷமா பழகறோம்… உங்க ஃபோட்டோ என்கிட்டே இருக்காதா?”
மூர்த்தி புன்னகைக்கவில்லை.
பாலாஜியைப் பார்த்தார். “உங்களுக்கு இதில் சம்மதமா? வருத்தம் ஒன்றும் இல்லையா? என் பையன் பற்றி உங்களுக்குத் தெரியுமா?”
“ஓ… நல்லாத் தெரியும்… சில ஜோசியர்கள் உங்க பையன் ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொல்வாங்கன்னு கூட தெரியும். ஆனால் அதெல்லாம் இல்லை. எங்களுக்கு பிரச்னையும் இல்லை. என்ன பிரச்னை இருந்தால்தான் இனிமேல் என்ன செய்ய முடியும்? ரெண்டு பேரும் முடிவு பண்ணிட்டாங்க…”
“செவ்வாய் தோஷமா? என் பையனுக்கா?”
“அப்பா.. கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா? கிரேஸி மோகன் டிராமால வர்ற கேரக்டர் மாதிரி வார்த்தைக்கு வார்த்தை ஏதாவது போட்டுக் கொடுத்துகிட்டே இருப்பீங்களா? அதெல்லாம் ஒண்ணும் இல்லை அங்கிள்…”
“அம்மா.. நீ ரொம்ப வேகமா இருக்கே… இது விளையாட்டில்லம்மா… என் பையன் கொஞ்சம் முன்கோபி..”
“ஐயோ… கொஞ்சமா…? வார்த்தைக்கு வார்த்தை எதிர்வாதம் பண்ணுவான்…எதையும் லேசுல ஒத்துக்க மாட்டான்…”
மூர்த்தி ஆச்சர்யமானாலும் அவள் குறிக்கிட்டதைத் தடை செய்து தொடர்ந்தார்.
“கொஞ்ச நாள் கழிச்சு எங்களுக்குள்ள ஒத்துவரல்ல… நாங்க பிரியறோம்னுல்லாம் சொல்லக் கூடாது.. நல்லா யோசிச்சு முடிவெடுக்கணும். என்னைப்பொறுத்தவரை இந்தக் காலத்துப் பொண்ணுங்க, பையனுங்க எல்லாம் கல்யாண விஷயத்துல பொறுப்பு இல்லைன்னுதான் தோணுது….”
“அங்கிள்… அந்தக் கவலை எல்லாம் உங்களுக்கு வேணாம்… இன்னிக்கு எல்லாம் முடிவு செய்துடலாம். நீங்க பேசறதைப் பார்க்கும்போது உங்களுக்கு சம்மதம்னு தெரியுது…கரெக்ட்டா?”
வினோத்தும் வார்த்தைக்கு வார்த்தை “கரெக்ட்டா?” என்று கேட்பது நினைவுக்கு வந்தது.
இவளாகவே முடிவு செய்து கொள்கிறாளே… அவர் மௌனம் தொடர,
வினோதினி ஃபோனை எடுத்து விட்டு வைத்தாள்.
வினோத் உள்ளே நுழைந்தான். “அதுக்குள்ற என்னைக் கூப்பிட்டுட்டே..” என்றான் விநோதினியைப் பார்த்து. “அப்பா” என்று புன்னகைத்தான்.
மூர்த்தி செயலற்று அமர்ந்திருந்தார். ‘சற்றுமுன்தான் என்னுடன் வார்த்தையாடினான்….’
சர்வர் இந்தப் பக்கமே நீண்ட நேரமாய் வரவில்லை. தூரமாய் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார். மூர்த்திக்கு சந்தேகமாய் இருந்தது.
(தொடரும்)


