VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: தாபா
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • சிறுகதைகள்
  • புத்தகப் பார்வை
  • கட்டுரைகள்
  • விண்மீன் மின்னிதழ்
  • கவிதைகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்
  • திரைப் பார்வை
  • நிகழ்ச்சிகள்
  • ஆசிரியர் பக்கம்
  • About
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > தாபா
சிறுகதைகள்

தாபா

“ஒதவிக்கெல்லாம் காசு வாங்கக்கூடாது அண்ணாச்சி”

வசந்தி முனீஸ்
Last updated: May 25, 2026 11:40 am
By
வசந்தி முனீஸ்
Published: May 25, 2026
5 Views
Share
14 Min Read
தாபா
SHARE

பெங்களூருக்கு வெல்டிங் வேலை சம்பந்தமாக மும்பையிலிருந்து வந்திருந்த செல்லப்பாவின் முகம், வேலை விரைவாக முடிந்ததாலும் வேலை முடிந்து வழிந்த வியர்வைத் துடைக்கும் முன்னே கம்பெனி முதலாளி கேட்ட தொகையைவிட கூடுதலாய் சில ஆயிரம் கொடுத்ததாலும் மகிழ்ச்சியில் வெல்டிங் பண்ணும்போது வரும் வெளிச்சம்போல் பளிச் பளிச்சென்று மின்னியது. 

           கத்தையாகக் கொடுத்த ஐநூறு ரூபாய் காந்தி நோட்டுகளை கட்டை விரலில் எச்சில் வைத்து எண்ணி, செலவுக்குத் தனியாகவும் சேமிப்பை தனியாகவும் எடுத்து வைத்துவிட்டு, “தம்பியோ! சீக்கிரம் சட்டுபுட்டுன்னு வேலைய முடி. இன்னைக்கி அண்ணன் பார்ட்டி” குனிந்து வேலை செய்துகொண்டிருந்த நாராயணன் நிமிர்ந்து பார்ப்பதற்குள் சொல்லிவிட்டு குடுகுடுவென குளியலறைக்குள் ஓடினார் செல்லப்பா.

           நாராயணன் தான் அந்த கம்பெனியின் சூப்பர்வைசர். நாராயணனுக்கும் செல்லப்பாவுக்கும் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொம்பன்குளம்; சொந்தக்காரர்கள். செல்லப்பா நாராயணனுக்கு அண்ணன் முறை. நாராயணன் சிபாரிசில் தான் செல்லப்பா பெங்களூரு வந்திருந்தார்.

           வேலை நேரம் முடிந்ததும் நாராயணன் விறுவிறுவென கை, கால், முகம் கழுவி அறையில் செல்லப்பா செய்த அடுக்குக் கட்டிலில் அமர்ந்தான். குளித்து முடித்து அறைக்குள் நுழைந்த செல்லப்பா, “ தம்பி.. அண்ணன் பண்ண கட்டுலு எப்படில இருக்கு?” என்றார். 

“நல்லாருக்குண்ணே” என்றான். 

“அங்கபாரு தலமாட்டுல போனு, தண்ணிப்பாட்டுலு வைக்க பாக்ஸ்லாம் பண்ணிருக்கேன் பாரு” என்று தான் செய்த வேலைப்பாடுகள் ஒவ்வொன்றையும் காட்டினார். 

“பாத்தேன் பாத்தேன் சூப்பர். நல்லா ஸ்ட்ராங்கா இருக்கு” என்று செல்லப்பாவின் கையைக் குலுக்கினான். 

“சரி தம்பி, பத்து நிமுசத்துல ரெடியாயிருதேன்” என கட்டிய துண்டோடு கட்டிலிலமர்ந்து தேங்கண்ணெய்யை உள்ளங்கையில் ஊற்றி, உச்சி முதல் பாதம்வரை ஒரு இடம் விடாமல் தேய்த்தார். அந்தரங்கப் பகுதியில்  தேய்க்கும்போதும் மட்டும் “தம்பி கொஞ்சம் அந்தப்பக்கமா திரும்பிக்கோ! கண்ணு நொள்ளையாயிறப் போவு”தென்று சிரித்தபடி தேய்த்து, நைலான் தோள்பட்டை பையிலிருந்து ‘பான்ஸ்’ பவுடரையெடுத்து ஒவ்வொரு கம்புக்கூட்டிலும் கால்கிலோ கொட்டினார். கழுத்திலும் மூஞ்சிலும் சாமியாடிக்குச் சந்தனம் பூசுவதுபோல் பூசிக்கொண்டு கண்ணாடி முன் நின்று கண்களை உருட்டி உருட்டிப் பார்த்தார். கண்ணாடிக்கு மேல் சுவற்றிலொட்டியிருந்த கரும்பல்லி பயந்து மூலையில் போய் ஒளிந்து கொண்டது. 

கண்ணாடி முன் நின்ற செல்லப்பாவைப் பார்த்து, “எண்ணோவ்.. பொங்கலுக்கு வீட்டுக்கு வெள்ளடிச்சமாரி இதென்ன அலங்கோலம்!! மொதல்ல பவுடரத் தொடப்பா! நாயி கியி வெரட்டப்போவுது…” என்றான் நாராயணன். 

“கொஞ்சம் பவுடரு கூடிட்டு என்ன தம்பி”  துண்டையெடுத்து முகத்தைத் துடைத்து பேண்ட் சர்ட் போட்டுக்கொண்டு “போலாமா”என்றார். 

          “எண்ணே! பாருக்குத்தானப் போறோம். என்னமோ ஊருக்குப் போறமாரி கெளம்பிட்ட”

          “பாருக்குப் போயிட்டு ஊருக்குப்போறேன். ” முழுக்கைச் சட்டையை மணிக்கட்டுக்கு மேல் சுருட்டி மடித்தபடி சொன்னார் செல்லப்பா. 

          “எப்பும் பம்பாயிக்கு டிக்கெட் போட்ட”     

          “பம்பாயிக்குப் போவலப்பா. நம்ம ஊருக்குப்போறேன். எங்க வேல இழுத்துரும் ஊருக்குப் போவ முடியாமப் போயிருமோன்னு நெனச்சேன். ஆண்டவன் புண்ணியத்துலயும் ஒங்களுடய ஒத்துழைப்பிலும் இருவது நாளுல முடியிற வேல மூணு நாளைக்கி முன்னக்கூட்டியே முடிஞ்சிருச்சி. அதான் ஊருக்குப் போயிட்டு வீட்டையும் தம்பி, தங்கச்சிப் புள்ளையளையும் ஒரெட்டுப் பாத்துட்டு அங்கிருந்து பம்பாயிக்குப் போலாமுன்னு முடிவு பண்ணிருக்கேன். “ 

      “கரைட்டு. இவ்வளவு தூரம் வந்துட்டு ஊருக்குப் போவலன்னா நல்லாவா இருக்கும். சரி சார்ஜரு, துணிமணி எல்லாத்தையும் மறக்காம பேக்குல எடுத்து வை” ஒவ்வொன்றாய் நாராயணன் எடுத்துக் கொடுத்ததை வாங்கி வைத்தபடி, “தம்பி இங்கருந்து நம்ம ஊருக்கு டைரக்ட் பஸூருக்கா?“ என்றவரிடம், “இங்கலாம் நிப்பாட்ட மாட்டான். இங்கருந்து அஞ்சி கிலோமீட்டர் கர்நாடகா பார்டர் அத்திப்பள்ளிப் போணும். இல்ல தமிழ்நாடு பார்டர் ஓசூர் போணும். நம்ம ஓசூரே போவோம். அங்க ஒரு ‘குடில்’ தாபா இருக்கு. எடமும் சுத்தமா இருக்கும்; சாப்பாடும் நல்ல ருசியா இருக்கும். பக்கத்துலயே பஸ்டாண்டு. சாபுட்டுட்டு பஸ்லேறி படுத்து ஓம்பாட்டுக்கு கொறட்டவுட்டுத் தூங்கு! விடியக்காலம் அஞ்சி மணிக்கெல்லாம் அலாரம் வச்சமாறி டான்னு தட்டியெழுப்பி திருனவேலில ஏறக்கிவுட்டுருவான்.“ என்று நாராயணன் பைக்கை ஸ்டார்ட் செய்து, தோள் பையை சீட்டில் வைத்து செல்லப்பா ஏறியதும், “ எண்ணே! எதும் மறக்கலளா“ என்றான்.

      “தம்பி வண்டிய ஒரு நுமுசம் நிப்பாட்டு! இந்தா வந்துருதேன்” குளித்துவிட்டு  அலசிப்போட்ட உள்ளாடையை ஓடிப்போய் எடுத்து வந்து தோள்பட்டை பைக்குள் திணித்தார். 

        “இந்த ஓட்ட ஜட்டிய எடுக்கத்தான் உசேன் போல்ட்டுமாரி ஓடுனயாக்கும். நல்லா…ருப்ப எலி செத்த வாடையடிக்கி. அத தூக்கித் தூரப்போடுப்பா! பஸு பூராம் நாறப்போவுது; ஒன்ன பாதி வழியிலயே ஏறக்கிவுடப் போறாணுவப் பாத்துக்கோ! “ 

         “வாசனைச் சோப்புபோட்டு நல்லாத் தொவச்சிருக்கேன். வாடையடிக்காம் வாட. செத்திய தான் பின்னால கிழிஞ்சிருக்கு. இன்னும் ஒரு மாசம் போடலாம். ” 

       “என்னது இன்னும் ஒரு மாசமா!! பையன் வெளிநாட்ல வேல பாக்குறான்; நீ பம்பாயில சொந்தமா வெல்டிங் கம்பெனி வச்சிக்கிட்டு சரியான கஞ்சப் பிசினாரியா இருக்கீயப்பா ச்சைய்…“ 

பைக்கை  தேசிய நெடுஞ்சாலையில் மிதவேகத்தில் ஓட்டத் தொடங்கினான் நாராயணன். கர்நாடக கடுங்குளிரில் கடாப்பல் தந்தியடிக்க, கைகளிரண்டையும் உரசி, கன்னத்தில் ஒத்தி சூடேற்றியபடி பனிப்பொழிவில் நடுங்கிக்கொண்டே போனார் செல்லப்பா. 

       ஓசூர் ‘குடில்’ தாபா முன் நாராயணன் பைக்கை நிறுத்தியதும் செல்லப்பா கீழிறங்கி தாபா முகப்பில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையை அண்ணாந்து எம்.வியி. தா..ப்பா என்று வாசித்ததும் சைடு ஸ்டாண்ட் போடாத பைக்கைப்போல் கீழே சரிந்து விழுந்து சிரி சிரியென்று சிரித்து, “ படுபாவி! ‘எம்.வி தாபா’ன்னு எத்தாப் பெரிய போர்டு வச்சிருக்கான். நீயென்னன்னா தாபாவ ‘தாப்பா’ன்னு வாசிக்கீயப்பா”  மீண்டும் சிரித்ததில் நாராயணனுக்கு வயிறு கொருத்துப் பிடித்துவிட்டது. சிரித்து சிரித்து கண்ணீர் வழிந்து கன்னமிரண்டும் மழையிலெடுக்க மறந்த துணியைப் போல் தொப்பென்று நனைந்துவிட்டது. செல்லப்பாவிற்கு ஒரே வெட்கமாய் போய்விட்டது. 

      “லைட்டு வெளிச்சத்துல கண்ணு கூசிடுச்சி. அதான் தாபா ‘தாப்பா’ ஆயிடுச்சு. இதுக்குப்போயி எவனாவது இப்படி இளிப்பானா? “ 

      “சும்மாருண்ணே. அன்னைக்கி அப்படி தான் முடிவெட்டுறக் கடையில ‘ரஜினி பாபாவை தரிசிக்க இமயமலைச் சென்றார்’ன்னு பேப்பர்ல போட்டுருக்கு. நீ ‘பாப்பா’வை தரிசிக்கச் சென்றாருன்னு வாசிச்ச. கேட்டதுக்கு பழைய பேப்பரு, குட்டி எழுத்து, அது இதுன்னு கண்ணுத் தெர்லன்ன. இன்னைக்கி என்னன்னா கொட்டயெழுத்துல போட்டுருக்கான் கண்ணு கூசிடுச்சின்னு புளுவுற. பள்ளிக்கொடத்துக்குப் போறேன்னு வீட்ல ஏமாத்திட்டு பாங்கெணத்துல புறாக்குஞ்சு எடுக்கவும் பெரிய கொளத்துல எலந்தப் பழமும் பண்ணையார் தோடத்துல மாங்காப் பறிக்கவும் திரிஞ்சா இப்படித்தான் ‘பாபா’ பாப்பாவாவும்; தாபா தாப்பாவாவும்” என்று நாராயணன் எப்போதும்போல் மதுபானக்கூடத்தின் கடைக்கோடியில் நிற்கும் கசகசா மரத்தின் அருகேயிருக்கும் குடிலின் கீழ் போடப்பட்டிருக்கும் நார் கட்டிலில் தலைக்கவசத்தை வைத்துவிட்டு அமர்ந்தான். செல்லப்பா தோள்பட்டை பையை கட்டிலுக்குக் கீழ் வைத்துவிட்டு சாப்பிட உட்காருவதுபோல் சம்மணங்கால் போட்டு கட்டிலில் அமர்ந்தார். 

           பருவப்பெண்ணின் உதட்டைப்போல் பழுத்துத் தொங்கிய கசகசா பழங்களை ஐந்தண்ணம் பறித்து  செல்லப்பாவுக்குக் கொடுத்தான் நாராயணன். செல்லப்பா கடித்துவிட்டு, “தம்பி சீனிப்பழம் தேனா இனிக்கப்பா!! சரக்குக்கு இதயே சைடீசா வச்சுக்கலாம் போலியே. சின்ன வயசுல நம்ம  கவுட்டக்காலன் கெணத்துல பறிச்சித் திண்ணது. அதுக்கப்பறம் இப்புந்தான் திங்கென்.” -சப்புக்கொட்டினார் செல்லப்பா. 

நாராயணன் சிரித்துவிட்டு பக்கத்துக் கட்டிலில்  போதையிலொருவன் கக்கியழித்த வாந்தியை வாளியில் அள்ளிக்கொண்டிருந்த தர்மேந்தர் குமாரை அழைத்து சந்தீப்பை வரச்சொன்னான். அவன் ‘டிகே பையா’ என்று நாற்றம் தாங்காமல் மூக்கைப்பிடித்தவனைப் பார்த்து, “லவடைக்கா பால் ஜல்தி கிளீன் கரோ!“ என்றான் மதுப்பானக்கடை மேலாளர். 

         சந்தீப் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞன். நல்ல அனுபவசாலி. சாந்தமானவன்; சுறுசுறுப்பானவன். கூட்டம் நிரம்பி வழிந்தாலும் யார் யார் என்ன ஆர்டர் செய்தார்கள். எவ்வளவு மீதி கொடுக்க வேண்டும். அவர்கள் நமக்கு எவ்வளவு தர வேண்டுமென்று தன் கணிணி மூளையில் கனகச்சிதமாக பதிவுசெய்து வைத்திருப்பான். வாடிக்கையாளர்கள் தாபாவுக்குள் நுழைந்ததும் முதலில் தேடுவது சந்தீப்பை தான். அந்தளவுக்கு ஆள் படு பேமஸ். நாராயணனுக்கும் சந்தீப் நல்ல பழக்கம். சில நாட்கள் மது குடிக்காமல் சந்தீப்பைச் சந்தித்து பேசிவிட்டுச் செல்லுமளவுக்கு இருவருக்குள்ளும் அடர்ந்த நட்பு. 

       நேரம் எட்டுக்கு மேலாகிவிட்டது. சந்தீப் வரவேவில்லை. நாராயணனுக்கு சந்தீப்பை எட்டி எட்டிப் பார்த்து கழுத்தில் வலி வந்துவிட்டது. செல்லப்பாவிற்கு காத்திருந்து காத்திருந்து கோபத்தில் உடல் உலையாய்க் கொதித்து, பூசிய பான்ஸ் பவுடரெல்லாம் பனியாய் உருகத் தொடங்கியது. பொறுத்தது போதுமென்று பொங்கியெழுந்தார் செல்லப்பா. மதுபானக்கடை நோக்கிச் சென்று விற்பனையாளரிடம், “ பிபி இருக்கா” என்றார். 

விற்பனையாளர்  வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்து, “ பாஸ் எனக்கு சுகர் தானிருக்கு” என்று குலுங்கிய பீர் பாட்டில் திறக்கும்போது நுரை பொங்குவதுபோல சிரிப்புப் பொங்கி இருக்கையில் குலுங்கினார். 

“தலைவர நா ‘பேக் பைப்பரு’ இருக்கான்னு கேட்டேன். நீங்கவேற நேரங்காலந் தெரியாம விட்டு(நக்கல்) அடிச்சிக்கிட்டு வெறுப்பேத்தாதீங்க!“ தலையைச் சொரிந்துகொண்டே அரைப்பாட்டில் பிபி வாங்கிக்கொண்டு நார்கட்டிலில், கிணற்றில் போட்ட கல்லைப்போல் கடுங்கோபத்தில் அமர்ந்ததில் நாராயணனின் ஒரு கால் கயிற்று ஓட்டையில் சிக்கிக்கொண்டது. கட்டிலின் ஒரு கால் உடைந்து கோணிவிட்டது.  

       “என்னாச்சிண்ணே! ஏன் இவ்வளவு கோவம்? “ 

          மது வாங்கப்போனயிடத்தில் பல்பு வாங்கியதை அவனிடம் மடமடவென ஒப்புவித்து, பிபியை ஆறிப்போன காப்பியைப்போல கடகடவென குடித்து, “காலையில எந்திச்சதும் கரண்டு கம்பியிலருந்த ஒத்த மைனாவப் பாக்கும்போதே நெனச்சேன். இன்னைக்கிப் பூராம் இம்சதான்னு. நா நெனச்சமாரி அப்படியே கரைட்டா நடக்குது!“ செல்லப்பா சின்னபாப்பா மாதிரி பேசியதை நினைத்து, தம்ளரில் வாய் வைக்க முடியாதளவிற்கு வந்த சிரிப்பினை அடக்கிக்கொண்டு கசகசா மரத்தின் மறைவில் போய் நின்று கக்கபுக்கவென சிரித்துவிட்டு வந்து நாராயணன் பார்க்கையில் தொட்டிலில் உருளும் குழந்தையைப்போல கட்டிலில் காலியான பிபி அரைப்பாட்டில் உருண்டுகொண்டிருந்தது.  செல்லப்பா மதுவை முடித்து, புகையைப் பிடித்துக்கொண்டிருந்தார்.

       “எண்ணோ! அதுக்குள்ள பாட்ல காலியா? “ 

      “தம்பி இருல! இன்னொரு பிபி வாங்கிட்டு வாரேன். ஆளுக்கு பப்பாதி போடலா”மென்று கட்டிலிலிருந்து எழுந்தவருக்குக் கால்கள் தரையில் தள்ளாடின. கீழே விழப்போனவரை ஓடி வந்து தாங்கிப்பிடித்தான் சந்தீப். “அண்ணாச்சி பாத்து… நீங்க உக்காருங்க நான் வாங்கிட்டு வருகிறேன்” என்று செல்லப்பாவை கட்டிலில் அமர வைத்துவிட்டுத் திரும்பியபோது, “நாராயணா அண்ணாச்சி ரொம்ப நேரம் காக்க வச்சதுக்கு மன்னிச்சிக்கோங்க. நேத்து ஹோலிங்கிறதால பயலுவ பாதிபேரு இன்னைக்கி டூட்டிக்கி வரல. அதான் கொஞ்சம் பிஸியாயிட்டேன். சொல்லுங்க அண்ணாச்சி என்ன வேணும்?“ என்றான் சந்தீப். 

       “ஒண்ணும் வேண்டாம் டா. அடிச்சி முடிச்சாச்சி. “ 

      “அண்ணாச்சி யாரு? சொந்தக்காரரா?“ 

      “ஆமா, அண்ணந்தான். பம்பாயில இருக்காரு. எங்க கம்பெனிக்கி ஒரு வேலையா வந்தாரு. வேல முடிஞ்சி இப்பும் ஊருக்குப் போறாரு. பஸ் ஏத்திவுடனும். “ 

    “கொஞ்சம் இருங்க “ என்று உள்ளே ஓடிப்போய் இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து செல்லப்பாவிடம் கொடுத்து, “அண்ணாச்சி மூஞ்சக் கழுவிட்டு, நல்ல வாய் கொப்பளிச்சிட்டு வாங்க. தெளிஞ்சப் பொறவுப் போலாம்“ என்று சொல்லிவிட்டு , “ நாராயணா அண்ணாச்சி இத வாயிலப் போட்டுக்கோங்க.“ சந்தீப் கொடுத்த இரண்டு கொய்யா இலை இனுக்குகளை மென்று தின்றான் நாராயணன். 

      சந்தீப் பேசியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன செல்லப்பாவை உலுக்கி, “எண்ணோவ் என்ன இப்படி வேத்து விறு விறுத்துப்போயி உக்காந்துருக்க. வாந்தியதும் வருதா? “      

    “எல தம்பி, நீ சொன்ன சந்தீப் இவந்தானா! “ என்றார் செல்லப்பா. 

    “ஆமாப்பா! என்ன இப்பும்?“ 

           “போடுறதத் தின்னுட்டு; கொடுக்குறத வாங்கிட்டு வேலச் செய்யுற இந்த இந்திக்கார பயலுவளாலத்தான் தமிழ் நாட்டுல தமிழனுக்கு வேலச்சோலி இல்லாமப் போச்சி. செரிக்கியுள்ள இவன் என்னன்னா பிசுறுத் தட்டாம அப்படியே நம்ம திருநெல்வேலி பாசைய பேசுறான். என்னாலயே இவன ‘இந்திக்காரன்’னு நம்ப முடியலயே. நம்ம பொட்டப்புள்ளைய இவன் பேச்சக் கேட்டுச்சின்னு வை. பேச்சுல மயங்கி தமிழ்க்காரன்னு ஏமாந்துப்போயிரும். மொதல்ல இந்த இந்திக்காரத் தாயொலிகள தமிழ்நாட்டவுட்டே அடிச்சித் தொரத்தனும். அப்படி செய்யலன்னு வச்சிக்கோ! நாளைக்கு நம்மப் புள்ளயள கல்யாணம் முடிச்சிக்கிட்டு, இங்கயே செட்டிலாகி சிங்கம் எது? நாயி எது?ன்னு தெரியாம எல்லாம் ஒண்ணாக் கலந்துபோவும். நமக்கு வேல பறிபோனமாரி நம்ம மானமும் பறிபோயிரும். மானம் போனப்பொறவு ஒன்னு நாண்டுக்கிட்டுச் சாவணும். இல்ல இவனுவள மாரி நாட்டவிட்டு பஞ்சப் பரதேசியா எங்கய்யாவது போவணும். எங்கப் பாத்தாலும் இந்த வெங்கத் தேவடியாப் பயலுவத்தான இருக்காணுவ.“ சந்தீப் கொடுத்த தண்ணீர் பாட்டிலைத் தூக்கி கசகசா மரத்து மூட்டில் எறிந்துவிட்டு முழுக்கைச் சட்டையை ‘தவக்கா’த் (புஜம்)தெரிய மேலே சுருட்டி மீசையை முறுக்கிக்கொண்டு நின்றார். அப்போது செல்லப்பாவின் கண்கள் போதையில் சிவந்ததைவிட கோபத்தில் அதிகம் சிவந்திருந்தது.

      “எண்ணே! சொல்றேன்னு தப்பா நெனச்சிக்காத. பதினைஞ்சி வயசுல வேலைத்தேடி பம்பாயிக்கு நீ போகும்போது ஒன்ன ‘தமிழ்க்காரன்’னு மஹாராஷ்ட்ராகாரனுவ அடிச்சித் தூரத்திருந்தா! இன்னைக்கி தாராவியில மூணு வீடு, பகத் சிங் நகர்ல ஒரு பெரிய பிளாட்டுன்னு வசதியான இந்த வாழ்க்கை கெடச்சிருக்குமா? டென்மார்க்குல  லெச்சம் லெச்சமா சம்பளம் வாங்குற ஓன் பையன அந்த நாட்டுக்காரன்  ‘இந்தியாக்காரன்’ வேண்டாமுன்னு சொல்லியிருந்தா! ஓங் குடும்பம் வருசம் வருசம் ஆடிமாசக் கொடக்கி ஆடி காருல வர முடியுமா?? சிங்கத்தோடு நாயிச் சேந்தா மானம் போயிருமுன்னு மீசைய முறுக்குற நீ, ஓன் பையனுக்கு ஒரு தமிழச்சிய கட்டி வைக்க வேண்டியதுதான. என்ன ஈரவெங்காயத்துக்கு மராட்டிக்காரிய கட்டி வச்ச? எல்லாம் பணந்தான. இப்பும் சொல்லு! ஒன் பையன் சிங்கம்ன்னா…. ஓன் மருமவ யாரு?“ ஐப்பசி மாத அடைமழையைப்போல நாராயணன் விடாது கேட்ட கேள்வியில் நடுநிசியைப்போல் அமைதியானார் செல்லப்பா. 

            “இவனுவ தமிழ்நாட்டுக்கு வந்தப்போறவு வேல மட்டுமில்ல. வாடகைக்கு வீடு கெடைக்க மாட்டேங்குது; கொல கொள்ள கூடிப்போச்சி; போன மாசம் சென்னையில ஒரு குடும்பத்தையே கைக்காலக் கட்டிப்போட்டு பீரோவுல இருந்த நகையைப் பூராம் எடுத்துட்டுப் போயிட்டானுவ. அதுவும் பட்டப்பகல்ல! திருப்பூர்ல அப்படித்தான் பனியன் கம்பெனியில வேலப்பாக்குற ஒரு பொட்டப்புள்ளைய ஒருத்தன் காதலிக்கிறேன்னு ஏமாத்தி ரூமுக்குக் கூட்டிட்டுப்போயி, நாலுபேரு சேந்து கற்பழிச்சி, நாயிமாரி கடிச்சிக் கொதறி குப்பக் கெடங்குலத் துள்ளத் துடிக்க போட்டுட்டு ஊரப்பாத்து ஓடிட்டானுவ. போலீசுக்கிட்ட இன்னும் ஆப்படல. நீயென்னன்னா இந்த வெளங்காதப் பயலுவளுக்கு ஏண்டு (ஆதரவாக) பேசுற. பேப்பரடுத்துப் பாரு! தெனக்கியும் இவனுவளப் பத்தி சேதி வராத நாளே கெடையாது.“ செல்லப்பா நரைத்த மீசையின் முடியொன்றை வாய்க்குள் நாவினால் சுழட்டியிழுத்து கடித்துத் துப்பி நாராயணனை முறைத்தார். 

        “எண்ணோ! காடுன்னு இருந்தா முள்ளுச்செடியுமிருக்கும் பூச்செடியுமிருக்கும். மனுசன்னா நல்லவன் கெட்டவன் இருக்கத்தான் செய்வான். அதுக்காக குத்திக் கிழிச்ச முள்ள வெட்டுறன்னு கோவத்துல கொப்புலருக்குற பூவ வெட்டிடக்கூடாது! ஏன்னா பூவுக்குத்தான் காய்க்கணும்; கனியணும்; நம்மளும் ஒரு காடாவணுமிங்கிற கனவுருக்கும். அந்தக் கனவ அழிச்சிறக்கூடாது. அது பெரும் பாவம்! செல்லப்பாண்ணே, நீ சொல்றதெல்லாம் வாஸ்தவந்தான். நா இல்லன்னு சொல்லல.  ஆனா,  இவனுவள இப்படி பொழப்பில்லாம, படிப்பில்லாம, பகுத்தறிவில்லாம, கஞ்சிக்கி வழியில்லாம, காட்டு மிராண்டியா, குடும்பம் குட்டியளோடு ஊர் ஊரா நாடோடியா அலையவிட்ட  அயோக்கியப் பயலுவளுக்கிட்ட ஓன் வீரத்தக்காட்டு. அதவுட்டுட்டு பொழைக்க வந்தவங்கிட்ட ஓன் வீரத்தக் காட்டாத சரியா! ஒன்னமாரி ‘தமிழ், தமிழன்’ன்னு பேசுற பூராப் பயலும் பானிப்பூரி, பெட்சீட் விக்குற இந்திக்காரங்கிட்டத்தான் வீராப்பு மயிர காட்டுறீய. பெரிய பெரிய  பண முதலைகள் வடக்கயிருந்துக்கிட்டே தெக்க நம்மூர்வரைக்கும்  நமக்குத் தெரிஞ்சியும் தெரியாமலயும் நம்மக்கிட்டத் தொழில் பண்ணி கோடி கோடியா சம்பாதிக்கிறான். அவனுவக்கிட்ட இப்படி திமுராப் பேசி, தில்லா நெஞ்ச நிமுத்தி, ஓன் ஊருக்குப் போயி யாவாரம் பாருன்னு  சொல்லு பாப்பும். ஒங்க சொட்டைய மொறிச்சிருவான் மொறிச்சி! அதிகாரத்துல இருக்குறவன் காலேஜு, கம்பெனி கட்டுன்னா படிச்சி முடிச்சி அவன் ஊர்லயே ஒரு வேலச்சொலியப் பாத்துட்டு அங்கயே கெடப்பான்.  கோடிக்கணக்குல செலவழிச்சி கோயிலும், செலையும் கட்டுன்னா வாசல் ஒக்காந்து பிச்சத்தான் எடுக்கணும்! வயிறு நெறஞ்சாதான மூளை சிந்திக்கும். காஞ்ச வயித்த வச்சுக்கிட்டு எப்படி அவனால அதிகாரத்துக்கு முன்னால நிமுந்து நிக்க முடியும்? அதான் பொட்டிசட்டியக் கட்டிக்கிட்டு புள்ளக்குட்டியோடு பள்ளத்த கண்ட தண்ணியப்போல வேலத்தேடி தெனமும் லெச்சம் பேரு வந்து ஏறங்கிக்கிட்டே இருக்காணுவ. இதுல நம்ம தமிழ்நாட்டு லெச்சணம் எப்படிருக்குன்னா! ஸ்கூலுக்குப் போறவன் ‘கூல் லிப்’ போடுறான். காலேஜிக்குப் போறவன் ‘கஞ்சா’ அடிக்கிறான். அப்பும் எளவட்டப் பயலுவலாம் நல்ல வேலச்செஞ்சி ஒவ்வொருத்தனும் சும்மா ‘மிளா’மாரி இருப்பான். இப்புமுள்ள எளவட்டப் பயலுவளப் பாரு. காஞ்சிப்போன சோளத் தட்டமாரி காத்தா… இருக்கான். காரணமென்ன ஒரே குடி குடி குடிதான்!! காலையிலயே குடிக்க வேண்டியது; சீக்கு வந்த கோழியப்போல கொதங்கிப்போயி கெடக்க வேண்டியது.  இப்படி தமிழ்நாடு இருந்தா… பின்ன தொழில் பண்றவன், கம்பெனி வச்சிருக்கிறவன் இந்திக்காரனத்தான் வேலக்கிச் சேப்பான். நம்மளயா வெத்தலப் பாக்கு வச்சி அழைப்பான்.“ நாராயணன் செல்லப்பாவின் பையைத்  தூக்கிக்கொண்டு பைக் முன்னாடி வைத்து, “நாட்டு நடப்பு ஒரு எழவும் தெரியாம சிங்கம் நாயின்னுக்கிட்டு… வந்து வண்டியில ஏறுண்ணே” என்றான். 

        பைக்கில் வலது காலைத் தூக்கிபோட செல்லப்பா எத்தனிக்கும் போது, தாபாவுக்கு முன் செல்லும் சர்வீஸ் ரோட்டின் வேகத்தடையை கவனிக்காமல் வேகமாய் வந்த சிறுவனொருவன் சறுக்கி விழுந்து சரீரம் முழுவதும் பயங்கர காயம். தலைக்கவசமணியாததால் தலையில் பலத்த அடி! தாபா மேலாளர் 108க்கு போன் அடித்தார். பத்து நிமிடத்தில் பறந்து வந்த ஆம்புலன்ஸில் குடித்துக் கொண்டிருந்தவர்கள், கூடி நின்று சாலையோரக் கடைகளில் பேசிக் கொண்டிருந்தவர்கள், நடந்து சென்றவர்கள் எல்லாம் ஓடி வந்து சிறுவனைத் தூக்கி, மருத்துவமனைக்கு  ஏற்றியனுப்பினார்கள்.  செல்லப்பாவும் நாராயணனும் கூட உதவி செய்தார்கள். 

        “சின்னப் பயலுவளுக்கெல்லாம் வண்டி வாங்கிக் கொடுக்கலாமா? எருமமாரி இருக்குற வண்டிய எறும்புமாரி இருக்குற பையன் கன்ரோல் பண்ண முடியுமா! பொடதியில பலமா அடிச்சிருக்கும்போல காதுலயிருந்து ரெத்தம் வந்தமாரி இருந்துச்சி. பொழைக்கிறது கொஞ்சம் கஷ்டந்தான். ஹெல்மட் போட்டுருந்தா தப்பிச்சிருப்பான். எல்லாம் தாய் தகப்பங் கொடுக்குற செல்லம்; பணத்திமிரு.”- செல்லப்பா கோபத்தில் பைக்கிலேறி அமர்ந்தார். 

          “எண்ணே! ஹெல்மட்டுன்னு நீ சொன்னபொறவு தான் எனக்கு ஞாவமே வருது. எங் ஹெல்மட்ட தாபா கட்டுலுலயே வச்சிட்டு வந்துட்டேன். கொஞ்ச ஏறங்கு, எடுத்துட்டு வாரேன்” என்ற நாராயணனை “ நீ இரு. நா போயிட்டு எடுத்துட்டு வாரேன்” – செல்லப்பா இறங்கித் திரும்பவும் தலைக்கவசத்தோடு எதிரில் நின்றான் சந்தீப். 

         “சுக்ரியா“ என்று சந்தீப் முதுகில் தட்டிக்கொடுத்து அவன் கைகளில் நூறு ரூபாய் நோட்டைத் திணித்தார் செல்லப்பா.   “ஒதவிக்கெல்லாம் காசு வாங்கக்கூடாது அண்ணாச்சி” என்று திருநெல்வேலித் தமிழில் கூறி அவர் கொடுத்த ரூபாயை அவரிடமே கொடுத்துவிட்டு, நாராயணனையும் செல்லப்பாவையும் புன்னகையோடு கையசைத்து வழியனுப்பி வைத்தான் சந்தீப். 

           சாலை முழுவதும் புகை மண்டலமாய் படிந்திருந்த பனி மூட்டத்திற்குள் மறையும் வரை சந்தீப்பைப் பார்த்து கையசைத்துக் கொண்டேயிருந்தார் செல்லப்பா.

PrevPreviousஅகத்தின் வண்ணம்
Next‘கற்றதை விட இழந்தவைகள் அதிகம்’ – முல்லை அமுதன்Next

You Might Also Like

கறி விருந்து
ஓ.கே. கண்மணி
வாடியது கொக்கு – ஸ்ரீராம் பாலசுப்ரமணியன்
இரவின் குரல்
எதிர்பாராதது…
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் ஜனவரி 2026
Previous Article அகத்தின் வண்ணம்
Next Article ‘கற்றதை விட இழந்தவைகள் அதிகம்’ – முல்லை அமுதன்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

கட்டுரைகள் (15) கவிதைகள் (15) சிறுகதைகள் (53) திரைப் பார்வை (7) தொடர்கள் (11) நிகழ்ச்சிகள் (4) நேர்காணல் (8) புத்தகப் பார்வை (28) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • May 20262
  • April 20262
  • March 20262
  • February 202611
  • January 202621
  • December 202512
  • November 202516
  • October 202519
  • September 202513
  • August 202515
  • July 202517
  • June 202522
  • August 20211

பிரிவுகள்

articles (15) essays (15) Interview (8) Poems (15) Series (11) Short Stories (53) இளையராஜா (1) கட்டுரை (8) கட்டுரைகள் (14) கவிதைகள் (15) குறுங்கதை (14) கேலக்ஸி (2) சினிமா (7) சிறுகதைகள் (59) திரை விமர்சனம் (7) துபை (1) தொடர்கள் (11) நாவல் (7) நிகழ்ச்சி (4) நிஸ்வா (7) நூல் அறிமுகம் (28) நூல் வெளியீடு (3) நேர்காணல் (8) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (28) புத்தகம் (28) பேட்டி (8) மதுரை (2) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (11) விண்மீன் அக்டோபர் 2025 (18) விண்மீன் ஆகஸ்ட் 2025 (15) விண்மீன் ஏப்ரல் 2026 (1) விண்மீன் செப்டம்பர் 2025 (13) விண்மீன் ஜனவரி 2026 (19) விண்மீன் ஜுலை 2025 (17) விண்மீன் ஜூன் 2025 (17) விண்மீன் டிசம்பர் 2025 (11) விண்மீன் நவம்பர் 2025 (15) விண்மீன் மார்ச் 2026 (1) விண்மீன் மே 2026 (1) விமர்சனம் (35) வெண்பா (2)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?