VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: மண்ணும் ஜின்னும்!!! நிஸ்வா – பகுதி 14
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > தொடர்கள் > மண்ணும் ஜின்னும்!!! நிஸ்வா – பகுதி 14
தொடர்கள்

மண்ணும் ஜின்னும்!!! நிஸ்வா – பகுதி 14

அலங்காரப் பொம்மைகள், தட்டுகள், நினைவுப் பரிசுகள், சாம்பிராணித் தூபங்கள்

இளங்கோ ராமசாமி
Last updated: October 15, 2026 4:03 pm
26 Views
Share
8 Min Read
SHARE

பகுதி – 14. நிஸ்வாவின் நிழலில்

மண்ணும் ஜின்னும்!!!!

–           இளங்கோ ராமசாமி

ஆதி காலந் தொட்டே தங்களது வளங்களையும், உழைப்பையும், மனித வளத்தையும் எதிரிகளிடம் இருந்து காப்பதே மனித சமூகத்தின் தலையாய நோக்கமாக இருந்து வந்திருக்கிறது.

அதனால் தான் கடலையும், பெரும் நதிகளையும், விண்ணை முட்டும் மலைகளைகளையும் இயற்கை அரண்களாகப் பெற்ற சமூகங்கள் மிகப் பெரும் நாகரீகங்களாக உருவெடுத்தன.

அத்தகைய இயற்கை அரண்கள் இல்லாத சமூகங்கள் பெரும் கோட்டைகளையும், கொத்தளங்களையும் பலவிதமான நூதன ஆயுதங்களையும், புதுமையான போர்ப் பயிற்சிகளையும் பயன்படுத்திப் பேரரசுகளைக் கட்டியெழுப்பினர்.

கடந்த அத்தியாயத்தில் நாம் “சப் பானி ஃகாமிஸ்” என்ற எவரும் நெருங்க முடியாத ஒரு மலை மடிப்பிற்குள் உள்ளடங்கிப் பதுங்கியிருக்கும் புராதான கிராமத்தைப் பற்றிப் பேசிச் சிலாகித்தோம். அலைபேசிகள், விளக்குகள், காலணிகள், கடிகாரங்கள், திசை காட்டும் கருவிகள் என அதி நவீன வசதிகள் இருக்கும் இக்காலத்தில் கூட அக்கிராமத்திற்குக் கால் நடையாக மட்டுமே அதுவும் உடல் வலு உடையோர் மட்டுமே சென்று திரும்ப முடியுமெனில் இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முன் அங்கு வீடு கட்டி, விவசாயம் செய்து பிழைத்துக் கிடந்த மக்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

மறு புறம் இன்றும் கொடும் பாலை மணற் குன்றுகளுக்கு நடுவே கூடாரங்களில் வாழும் ஓமானி சமூகங்களும் இருக்கின்றன. அந்த நிலப்பரப்பிற்குப் பரிட்சையமற்றவர்களால் ஒரு போதும் அம்மக்களின் துணையின்றி அவர்களது வாழ்விடத்திற்குள் கால் வைத்து மீள முடியாது. அவர்களாக விருப்பப் பட்டாலொழிய புதியவர்களால் அவர்களை அந்தப் பெரும் வெளியில் நெருங்கக் கூட இயலாது.

இதுபோன்ற எந்த இயற்கை அரணும் இல்லாத சமவெளிப் பகுதிகளிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமூகங்கள் தழைத்துச் செழித்து வளர்ந்திருக்கின்றன. அச்சமூகங்களில் ஒன்று இன்றும் வேர்பிடித்து உறுதியாக நிலைத்து நின்று ஓமானின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

பஹலா என்ற இந்தப் புராதான நகரம் தன்னை நாடி வரும் விருந்தினர்களுக்குத் திகட்டத் திகட்ட அமானுஷ்யமான கதைகளைப் படைத்து விருந்தோம்புகிறது. “ஜபல் ஷாம்ஸ்” ல் இருந்து கீழே இறங்கினால் “ஹம்ரா” என்ற சிறு நகரத்தை அடைவோம். அந்த ஊரில் இருந்து இடது புறம் சென்றால் “நிஸ்வா” வை அடையலாம். அவ்வழியாகவே நாம் “மிஸ் ஃபாத்தையும்”, “ஜபல் ஷாம்ஸ்” ஐயும் அடைந்தோம்.

திரும்பச் செல்லும் வழியில் வலது புறம் திரும்பினால் பத்து நிமிடத்தில் பழம் பெரும் நகரமான “பஹலா” நம்மை வரவேற்கும். நகரத்தினுள் நுழையும் போதே ஓங்கு தாங்காகப் ப்ரம்மாண்டமான தொரு கோட்டை நம்மை அண்ணாந்து பார்க்க வைத்துக் கட்டிப் போடும். 9000 சதுர மீட்டர்கள் பரப்பளவிற்குப் பரந்து விரிந்து கிடக்கும் மண்ணாலும், கற்களாலும் கட்டப்பட்டுள்ள இக்கோட்டையின் “அல் கஸாபா” என்ற பகுதி கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்போ அல்லது அவர் பிறப்பிற்குப் பிந்தைய 200 ஆண்டுகளுக்குள்ளோ கட்டப் பட்டிருக்கக் கூடும்.

ஓமானின் மிகப் பெரிய கோட்டையான இதனுள் மேலும் இரு பகுதிகள் உள்ளன. “பைத் அல் ஜபல்” என்ற மலை வீடு 18 ஆம் நூற்றாண்டு வாக்கிலும் “பைத் அல் ஹடித்” என்ற புதிய வீடு 19ம் நூற்றாண்டிலும் கட்டப் பட்டிருக்கின்றன. அரபியில் “பைத்” என்றால் “வீடு” என்றும் “ஹடித்” என்றால் “புதியது” என்றும் அர்த்தம். இப்படி கிட்டத்தட்ட 2500 ஆண்டு வரலாற்றைத் தாங்கி நிற்கும் இக்கோட்டையில் கால் பாவி நடப்பதும் இந்நகரின் கதைகளைக் கேட்டு ரசிப்பதும் ஒரு தனித்தன்மையான அனுபவத்தைக் கொடுக்கும்.

1987 ஆம் ஆண்டு “யுனெஸ்கோ” இந்த பஹாலா கோட்டையை ஓமானின் முதல் புராதானச் சின்னமாக அறிவித்தது. இதன் மிகவும் மோசமான சிதிலமடைந்த நிலையைக் கருத்தில் கொண்டு 1988 ஆம் ஆண்டு இதனைப் பாதுகாக்கப் பட வேண்டிய புராதானக் கட்டமைப்பு என்றறிவித்தது. மிக விரிவான திட்டமிடல் மற்றும் புதுப்பிக்கும் பணிக்குப் பின்னர் 2004 ஆம் ஆண்டு திட்டம் நிறைவடைந்து இக்கோட்டை புத்துயிர் பெற்றது.

உண்மையில் பஹலா கோட்டையைவிட 12 கி.மீ சுற்றளவும் சில இடங்களில் 10 மீட்டருக்கும் அதிகமான உயரமும் கொண்ட அதன் பெரும் மதில் சுவரே வியந்தோதப் பட வேண்டிய பெருமைக்குறியது. இம்மதிற்சுவர் நெடுகிலும் ஆங்காங்கே குறிப்பிட்ட இடை வெளிகளில் 36 கண்காணிப்புக் கோபுரங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவற்றோடு ஏழு பெரும் கோட்டைக் கதவுகள் இருந்தன. இன்று மூன்று நுழைவாயில்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. சுற்றுச் சுவரின் பல பகுதிகள் மற்றும் பல கண்காணிப்புக் கோபுரங்கள் காலச் சுழற்சியில் பராமரிப்பின்றிக் கரைந்து காணாமல் போய் விட்டன.

 

இந்த நீண்ட மதிற்சுவருக்குப் பின் பேரீட்சை மரத் தோப்புகளும், விளை நிலங்களும், வாய்க்கால்களும், சந்தையும், மசூதிகளும், குடியிருப்புப் பகுதிகளும் அமைந்திருந்தன. இப்படி அச்சுவர் கோட்டையை மட்டுமின்றி பஹ்லா வாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்தது.

என்னதான் உயர்ந்த மதிற் சுவர்களும் கண்காணிப்புக் கோபுரங்களும், படை பரிவாரங்களும் காவலுக்காக நிறுவப் பட்டிருந்தாலும் அவை மட்டுமே பஹலாவின் பாதுகாப்பிற்குப் போதுமானவையாக இல்லை.

இயற்கை அரண்கள் எதுவும் இல்லாத பஹலாவின் ஆதி குடிகள் தங்களைக் காத்துக் கொள்ளப் பல விதமான புனை சுருட்டுக்களைத் திரித்து விட்டிருக்கின்றனர். அதில் முதன்மையானது அவ்வளவு பெரிய மதிற் சுவரும், ஃபலஜ் என்ற நீர் பாசன வாய்க்காலும் ஒரிரவில் “ஜின்” எனப் படும் பூதங்களால் கட்டமைக்கப் பட்டவை என்ற கதையே.

“மைத்தா” என்ற சகோதரி மதிற்சுவரையும் “கைத்தா” எனும் சகோதரி நீர்ப்பாசன வாய்க்காலைக் கட்டியதாகவும் நம்பும் மக்கள் இன்றும் இருக்கின்றனர் எனில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இக்கதை எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும்? இதனாலேயே பஹலா, ‘மந்திர நகரம்’ எனப் பொருள்படும் “மதீனத் அல் செஹ்ர்” என்றழைக்கப்பட்டது.

மேலும் இருள் கவிந்த பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லும் மனிதர்கள் கழுதைகளாக மாறிவிடுவர் என்பதும் இந்நகர எல்லைக்குள் ராப் பொழுதுகளில் ஆடு, மாடுகளைக் கொன்று புசிக்கும், நெருப்பைக் கக்கும் ஓநாய்கள் உலவியதாகவும் மக்கள் நம்பினர். 

ஊரின் மையத்தில் இருக்கும் சந்தையில் ஒரு மிகப்பெரிய சபிக்கப் பட்ட மரம் இருந்ததாகவும் ஒரு கதை உலவுகிறது. ஒரு சக்தி வாய்ந்த மந்திரவதியால் சபிக்கப்பட்ட அம்மரத்தைத் தொட்டவர்கள் வாழ்வு நாசமாகும் என்றும் விரைவில் நோய்வாய்ப்பட்டு இறந்து போவர் என்றும் நம்பப்பட்டது. குறிப்பாக வெளியூர்காரர்கள் அந்த மரத்தின் நிழலைத் தொடுவதும் பெரும் தீங்கை விளைவிக்கக் கூடும் என்பது போன்ற கதைகள் உலா வந்தன.

தங்களது இறை நம்பிக்கைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட ஒரு மந்திரவாதி மிகக் கொடூரமான முறையில் கொல்லப் பட்டிருக்கிறான். துர் மரணம் அடைந்த அவன் ‘ஜின்’னாக மாறி இந்நகரில் இன்றும் உலா வருவதாக நம்பப்படுகிறது. அப் பழம் பெரும் கோட்டை புதுப்பிக்கப் பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் பகலில் புத்தம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டமைப்புகள் இரவு நேரத்தில் தொடர்ந்து சிதைக்கப் படுவதாகத் தொழிலாளர்கள் புலம்பித் தள்ளியாதாக இன்றும் காற்றில் கதைகள் அலைந்து கொண்டிருக்கின்றன. 

அர்த்த ராத்திரியில் மாட்டின் காம்புகளில் இருந்து கண்னுக்குத் தெரியாத அருவத்தால் பால் பீய்ச்சப் படும் ஒலி கேட்பது, ஆங்காங்கே நள்ளிரவில் தீப்பிழம்புகள் பற்றியெரிவது, நடு ஜாமத்தில் கல் மழை பொழிவது, வீடுகளிலும் தோப்புகளிலும் இருக்கும் பொருட்கள் உருட்டிவிடப் பட்டுக் கலைந்து கிடப்பது எனப் பஹலாவில் நிகழ்ந்த அமானுஷ்மான விஷயங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இப்பொழுது கேட்பதற்குச் சிறு பிள்ளைத் தனமாக இருந்தாலும் அந்தக் காலத்தில் இருட்டிய பிறகு வீட்டை விட்டுத் தனியே வெளியே செல்லத் துணிவோரைக் கட்டிப் போட இக் கதைகள் பெருமளவில் உதவியிருந்திருக்க வேண்டும். குறிப்பாகக் குழந்தைகளையும், பெண்களையும். அது மட்டுமின்றி “பஹலா” வைத் தாக்கத் திட்டமிட்ட எதிகளின் மனோ திடத்தைக் குறைப்பதற்கும் இக்கதைகள் பெருமளவில் கைகொடுத்திருக்கக் கூடும்.

யாரோ ஒரு தாத்தனோ, பாட்டியோ கிளப்பி விட்ட பேய்க்கதையொன்று வைரலாகிவிட ஆளாளுக்குத் தங்கள் கற்பனைக் குதிரையை விரட்டு விரட்டென விரட்ட “பஹலா” சுவையான மந்திரக் கதைகள் உலாவும் மர்மதேசமாகிப் போயிருக்கிறதென்பதே இப் பெரியார் தாசனின் அனுமானம்.

உண்மையில் பஹலாவின் வலிமை அதன் மண்ணில் இருந்தும் நீரில் இருந்தும் பிறந்தது. பஹலாவின் மட்பாண்டங்கள் அரபு தேசத்தில் மிகப் புகழ் பெற்றவை. வெறும் மண்ணை நீரில் குழைத்து கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட பல நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் வீடுகளும், கோட்டையும், மதிற் சுவர்களும் இம் மண்ணின் பெருமையை இன்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

பஹலாவின் “அல் முதர்” ஹம்ராவின் “அல் சர்பூக்” மற்றும் மஸ்கட்டின் “ அல் ஹஜாரியா” என விதவிதமான மண் வகைகளைப் பயன்படுத்திக் குடிநீர்ப் பானைகள், சமையல் பாத்திரங்கள், பேரீட்சை மற்றும் இதர உணவுப் பொருட்களைப் பத்திரப் படுத்தி வைக்கும் கலங்கள், அலங்காரப் பொம்மைகள், தட்டுகள், நினைவுப் பரிசுகள், சாம்பிராணித் தூபங்கள் என வித வித மான மட்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டு அமீரகம், கத்தார், சவுதி அரேபியா எனப் பல அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இன்றும் இங்கு இயங்கி வரும் ஒரு புராதான மட்பாண்ட தொழிற்கூடம் சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்கள் வரலாற்றையும் செயல்பாடுகளையும் ஒரு சிறு கட்டணம் வாங்கிக் கொண்டு செயல்முறையில் விளக்குகின்றது. மேலும் நீங்கள் ஒரு ரியால் செலுத்தினால் அந்நிறுவனத்தினர் உங்களுக்கும் ஒரு சிறு பானை வனையும் அனுவத்தை உருவாக்கிக் கொடுக்கின்றனர். பஹலாவைக் கடக்கும் சுற்றுலாப் பயணிகள் தவற விடக் கூடாத அனுபவம் இது.

மற்றபடி பிற ஓமானி நகரங்களைப் போலவே பஹலாவின் பழமையான சூக்கும், 16 ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்ட மிகப் புகழ்பெற்ற பெரிய மசூதியும் இந்நகரின் முக்கியத் தலங்களாகும்.

இவற்றையெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு பஹலாவில் இருக்கும் எண்ணற்ற பண்ணை வீடுகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓரிரவு அங்கு தங்கலைப் போட்டு அரேபிய உணவு, சுடுவான், இசை, சீஷா, நீச்சல் குளம் எனக் களித்துக் கிடந்தால் நிஸ்வாவின் பயணம் கிட்டத்தட்ட முழுமையடைந்து விடும்.

இப்படிப் பஹலாவின் கதையானது அம்மண்ணைச் சலித்தெடுத்து, அந்நிலத்தில் ஊறி வரும் நீரில் குழைத்து, கற்களைகையும், கதைகளயும் அடுக்கி, அவை சரிந்து விடாது நிற்க மண்பூச்சுப் பூசி தங்கள் தொழில் நுட்பத்தால் எல்லைகள் கடந்து வர்த்தகத்தை விஸ்தரித்துப் பொருள் ஈட்டிப் பெரும் புகழ் பெற்று இன்றும் வாழும் ஒரு மூவாயிரம் ஆண்டு கால நெடிய வரலாறு.

நல்ல விருந்திற்குப் பிறகு ஆழ்ந்த நித்திரையில் வீழ்ந்து எழுந்தால் மறுநாள் காலை உங்களை “ஜிப்ரீன்” என்ற மற்றொரு அழகிய கோட்டைக்கு அழைத்துச் செல்வதாகத் திட்டம்.

பதினைந்தாவது அத்தியாயமான “மயக்கும் ஜிப்ரீன்” என்ற கோட்டைப் புராணத்துடன் இக் குறும் பயணம் ஒரு முடிவிற்கு வரப் போவதை முன்னறிவித்து நவம்பர் மாத “வீண்மீன்” மூலம் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து மீண்டும் ஒரு முறை தற்காலிகமாக விடை பெறுகிறேன்.

அதுவரை பஹலாவின் மந்திரக் கதைகளுக்குள் ஆழ்ந்து உங்கள் பால்யத்தில் நீங்கள் கடந்து வந்த புனை சுருட்டுக்களை மீட்டெடுக்க முயற்சி செய்யுமாறு வேண்டுகிறேன். அம்முயற்சி சர்வ நிச்சயமாக உங்களைக் குதூகலப் படுத்தும். உங்கள் நினைவிற்கு வரும் சிறந்த கதைகளை விண்மீனுக்கு அனுப்பி நீங்கள் பெற்ற இன்பத்தை பிறருக்கும் பகிர்ந்திட வேண்டுகிறேன்!!!  

You Might Also Like

பகுதி 4: நட்சத்திர சாட்சி – சிலேடையில் சிக்கிய சோழம்
பேசக் கூடாது – பெஸ்கி ஹாஸ்டல்
மனிதனின் உடல் உழைப்பும் மாறிவரும் வாழ்க்கை முறையும்
நாம் ஏன் சினிமா பிரபலங்களைக் கொண்டாடுகிறோம்?
சந்தைக்குப் போவோமா… நிஸ்வா – பகுதி 2
TAGGED:Seriesகட்டுரைதொடர்கள்நிஸ்வாவிண்மீன் செப்டம்பர் 2026
Previous Article எது நகைச்சுவை?
Next Article பகுதி 3: கங்கா என்னும் மர்மம் – சிலேடையில் சிக்கிய சோழம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (17) கட்டுரைகள் (29) கவிதைகள் (36) குறுநாவல் (1) சிறுகதைகள் (92) திரைப் பார்வை (13) தொடர்கள் (26) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (16) புத்தகப் பார்வை (43) விண்மீன் மின்னிதழ் (17)

பதிவுகள்

  • November 20265
  • October 202619
  • September 202613
  • August 202612
  • July 202617
  • June 202620
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?