VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: சாலமன் பாப்பையா
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > கட்டுரைகள் > சாலமன் பாப்பையா
கட்டுரைகள்

சாலமன் பாப்பையா

சொல்லின் சுவை அறிந்த தமிழ்த் தேனீ

பா. நூருல்லாஹ்
Last updated: September 29, 2026 2:09 pm
4 Views
Share
11 Min Read
SHARE

“சொல்லின் சுவை அறிந்த தமிழ்த் தேனீ “

சாலமன் பாப்பையா

 பா.நூருல்லாஹ்

                    தமிழ் என்பது வெறும் மொழியல்ல, அது தலைமுறைகளின் நினைவையும், பண்பாட்டின் உயிரையும், மனித வாழ்வின் அனுபவங்களையும் சுமந்து செல்லும் பேராறு. அந்தப் பேராற்றில் இருந்து இலக்கியத் தேனைத் தேடி எடுத்து, அதை எளிய தமிழில் மக்களுக்குப் பருகக் கொடுத்தவர்களில் தனித்துவமானவர் சாலமன் பாப்பையா. அவரது பேச்சைக் கேட்டவர்கள் இலக்கியத்தைப் புரிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், இலக்கியத்தை ரசிக்கவும் கற்றுக்கொண்டார்கள்.

ஒரு மனிதரின் இலக்கியத் தொடர்பை அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையால் மட்டும் அளந்துவிட முடியாது.  அவர் இலக்கியத்தை எவ்வாறு வாழ்வோடு அணைத்தார்; எத்தனை மனிதர்களின் உள்ளங்களில் அதை விதைத்தார் என்பதில்தான் அவரது இலக்கியப் பங்களிப்பின் உண்மையான அளவு இருக்கிறது. அந்த வகையில் சாலமன் பாப்பையாவின் இலக்கியப் பயணம் தனித்துவமானது.

இலக்கியத்தின் மீது கொண்ட தீராத தாகம்:

                               “தாகம்” என்ற சொல்லுக்கு ஒரு சிறப்பு உண்டு. தாகம் கொணடவன் நீரைப் பருகியவுடன் தாகம் தீர்ந்துவிடும். ஆனால் இலக்கியத் தாகம் அப்படியல்ல.

படிக்கப் படிக்க மேலும் படிக்க வேண்டும்.

அறிய அறிய மேலும் அறிய வேண்டும்.

ஒரு கருத்தை உணர்ந்தவுடன் அதற்குள் மறைந்திருக்கும் இன்னொரு கருத்தைத் தேட வேண்டும். சாலமன் பாப்பையாவின் இலக்கியத் தாகமும் அத்தகையதே.

தமிழின் தொன்மையான இலக்கியங்களிலிருந்து, நவீன வாழ்க்கை வரையிலான பல்வேறு அனுபங்களை அவரது பேச்சில் காண முடிந்தது. இலக்கியம் என்பது நூலக அலமாரியில் வைக்கப்பட வேண்டிய பொருள் அல்ல. அது வீட்டிலும், தெருவிலும், பள்ளியிலும், சமூகத்திலும் பேசப்பட வேண்டிய  உயிருள்ள அறிவு என்பதை பேச்சு உணர்த்தியது. அவரது பட்டிமன்ற மேடை இதற்குச் சிறந்த சான்று. பட்டிமன்றத்தை வெறும் வாதம்-எதிர்வாதம் நடைபெறும் அரங்கமாக அவர் அணுகவில்லை. கருத்துகளை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைத்து, நகைச்சுவையையும் நயத்தையும் கலந்து, இலக்கியத்தின் ஆழமான கருத்துகளை எளிமையாக எடுத்துச் சென்றார்.

சங்க இலக்கியத்திலிருந்து சமகால வாழ்வுக்கு:

               தமிழ் இலக்கியத்தின் பெருமை அதன் தொன்மையில் மட்டும் இல்லை. அது இன்றைய மனிதனின் வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடியதாக இருப்பதில்தான் உள்ளது. சங்கப் பாடல்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருந்தாலும், அவற்றில் பேசப்படும் அன்பு, பிரிவு, வீரம், நட்பு, அறம், மனிதநேயம் ஆகியவை இன்றும் நம்மோடு பேசுகின்றன. இந்த உண்மையை மக்கள் எளிதில் உணரச் செய்ததில் சாலமன் பாப்பையாவின் பேச்சுக்கு முக்கிய இடமுண்டு.

கடினமான இலக்கியச் சொற்களைக் சேர்த்து, கேட்பவரை அச்சப்படுத்தும் பாணிக்கு மாறாக, அவர் அன்றாட வாழ்க்கையின் எடுத்துக்காட்டுகளைக் கொண்டு இலக்கியம் படித்தவர்களின் சொத்தாக மட்டும் இல்லாமல், பொதுமக்களின் உரையாடலாகவும் மாறியது.

ஒரு நல்ல ஆசிரியர் பாடத்தை மாணவரின் மனநிலைக்கு ஏற்ப எளிமைப்படுத்துவார். அதுபோல சாலமன் பாப்பையா இலக்கியத்தை மக்களின் மனநிலைக்கு ஏற்ப எடுத்துரைத்தார். இதனால்தான் அவரது பேச்சில் தமிழ் இருந்தது. அதே நேரத்தில் வாழ்க்கையும் இருந்தது.

திருக்குறளோடு கொண்ட நெருக்கம்: 

              தமிழ் இலக்கிய உலகில் திருக்குறளுக்கு இருக்கும் இடம் அளப்பரியது. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பெரும் வாழ்க்கைத் தளங்களையும் இரு அடிகளில் சொல்லும் வள்ளுவரின் மேதைமை உலகையே வியக்கச் செய்கிறது.

திருக்குறள் போன்ற உயர்ந்த இலக்கியத்தை மக்களிடம் கொண்டு செல்லும்போது, வெறும் உரைநடையில் அதன் பொருளைச் சொல்வது மட்டும் போதாது. அதன் வாழ்க்கைப் பயன்பாட்டையும் விளக்க வேண்டும்.  இந்தப் பணியை சாலமன் பாப்பையா தனது தனித்துவமான பேச்சு நடையில் செய்தார். வள்ளுவர் கூறிய கருத்துகளை குடும்பம், உறவு, நட்பு, பண்பு, சமூக வாழ்க்கை போன்றவற்றுடன் இணைத்து பேசும்போது, திருக்குறள் பழைய நூல் என்ற எண்ணம் மறைந்து, திருக்குறள் இன்றும் நமக்காகப் பேசும் வாழ்க்கை நூல் என்ற உணர்வு உருவானது.

அவரது உரைகளில் குறள் ஒரு மேற்கோளாக மட்டும் வரவில்லை. அது வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் கருவியாக மாறியது.

பட்டிமன்றம் – அவருக்கு ஒரு மேடை மட்டுமல்ல:

                       சாலமன் பாப்பையாவின் பெயரைச் சொன்னவுடன் பலரது நினைவிலும் முதலில் வருவது பட்டிமன்றமே. ஆனால் அவரது பட்டிமன்றப் பங்களிப்பை வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகக் குறைத்துப் பார்க்க முடியாது. பட்டிமன்றம் என்பது கருத்துப் பரிமாற்றத்திற்கான தமிழ் மரபின் நவீன வடிவமாக அவரிடம் வெளிப்பட்டது. கருத்து வேறுபாடுகளை சிரிப்போடு எதிர்கொள்ளலாம். எதிராளியை மதித்தபடியே கருத்தை எதிர்க்கலாம். கடினான விஷயங்களையும் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பேசலாம். அறிவும் நகைச்சுவையும் ஒன்றாகப் பயணிக்கலாம். இவற்றை அவர் தனது மேடைப் பணியின் வழியாக நிரூபித்தார்.

அவரது பேச்சில் நகைச்சுவை இருந்தது. ஆனால் அது வெறும் சிரிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படவில்லை. சிரிப்பின் வழியாக ஒரு சிந்தனையை விதைப்பதே அவரது தனிச்சிறப்பு. சில நேரங்களில் ஒரு நீண்ட உரையால் சொல்ல முடியாத கருத்தை ஒரு சிறிய நகைச்சுவைத் துணுக்கு மக்களின் மனதில் ஆழமாகப் பதித்துவிடும். அந்த உத்தியை அவர் இயல்பாகக் கையாண்டார்.

எளிய மொழியில் எட்டிய உயர்ந்த இலக்கியம்:

                               இலக்கியத்தின் மிகப்பெரிய சவால் அதன் ஆழத்தை இழக்காமல் எளிமைப்படுத்துவதாகும்.  மிக எளிய மொழியில் பேசுபவர் ஆழமற்றவர் என்றும், கடினமான சொற்களைப் பயன்படுத்துபவர் மட்டுமே அறிவாளி என்றும் நினைப்பது தவறு. உண்மையில், ஆழமான கருத்தை எளிமையாக எடுத்துச் சொல்லக்கூடியவரே சிறந்த பேச்சாளர். சாலமன் பாப்பையாவின் பேச்சில் இந்த ஆற்றல் காணப்பட்டது.

அவரது மொழிநடை மக்கள் பேசும் தமிழோடு நெருக்கமாக இருந்தது. அதனால் அவர் மேடையில் பேசும்போது தொலைவில் நிற்கும் ஒரு அறிஞராக அல்லாமல், நம் வீட்டில் அமர்ந்து பேசும் ஒரு அறிவார்ந்த பெரியவரைப் போன்ற உணர்வை ஏற்படுத்தினார். இதுவே அவரது இலக்கியப் பரப்பின் மிகப்பெரிய பலமாக அமைந்தது. தமிழ் இலக்கியத்தைப் பற்றி பேசும்போது தமிழறிஞர்களிடம் மட்டுமே பேசாமல், இலக்கியத்தை அதிகம் படிக்காதவர்களிடமும் பேசினார். இதனால் பலருக்கு இலக்கியத்தின் கதவு திறந்தது.

இலக்கியமும் மனிதநேயமும்:

                          தமிழ் இலக்கியத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்று மனிதநேயம்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சிந்தனை, மனிதர்களுக்கிடையிலான எல்லைகளைத் தாண்டி உலக சகோதரத்துவத்தைப் பேசுகிறது. திருக்குறள் அறத்தை முன்னிறுத்துகிறது. சங்க இலக்கியம் மனித உணர்வுகளின் பல்வேறு பரிமாணங்களைப் பதிவு செய்கிறது. இந்த மனிதநேயப் பார்வையை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைப்பதும் சாலமன் பாப்பையாவின் பேச்சின் முக்கிய அம்சமாக இருந்தது. இலக்கியம் என்பது தேர்வுக்காக மனப்பாடம் செய்ய வேண்டிய பாடப்பகுதி அல்ல. நல்ல மனிதனாக வாழ வழிகாட்டும் வாழ்க்கைப் பாடம் என்ற உணர்வை அவரது உரைகள் ஏற்படுத்தின.

ஒரு குறளைப் படிப்பது அறிவு.

அதன் பொருளைப் புரிந்து கொள்வது தெளிவு.

அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது பண்பு.

இந்த மூன்றையும் இணைக்கும் பாலமாக அவரது பேச்சு செயல்பட்டது.

நகைச்சுவையின் வழியாக அறிவை விதைத்தவர்:

                             நகைச்சுவை என்பது ஒரு கலை. ஆனால் நகைச்சுவையின் பின்னால் சிந்தனை இருக்கும்போது அது இன்னும் உயர்ந்த கலையாகிறது. சாலமன் பாப்பையாவின் நகைச்சுவையில் வாழ்க்கையின் நுணுக்கங்களைப் பார்க்க முடிந்தது. குடும்ப உறவுகள், கணவன்-மனைவி உறவு, பெற்றோர்-பிள்ளைகள் உறவு, நண்பர்கள், சமூகப் பழக்கவழக்கங்கள் என அன்றாட வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளை அவர் நகைச்சுவையுடன் அணுகினார். ஆனால் அந்தச் சிரிப்புக்குப் பின்னால் ஒரு கருத்து இருந்தது. சிரித்துவிட்டு மறந்து விடும் நகைச்சுவைக்கும், சிரித்த பிறகு சிந்திக்க வைக்கும் நகைச்சுவைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அவரது சிறந்த பேச்சுகள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவை. அதனால்தான் அவரது பேச்சைக் கேட்டவர்கள் சிரிப்பதோடு நின்றுவிடாமல், அவர் சொன்னதில் ஒரு உண்மை இருக்கிறதே! என்று சிந்திக்கத் தொடங்கினர்.

இளைஞர்களிடம் இலக்கியத்தை எடுத்துச் சென்ற பணி”

                             இன்றைய தலைமுறையை இலக்கியத்தோடு இணைப்பது எளிதான காரியமல்ல. வேகமான தகவல் உலகம், சமூக ஊடகங்கள், குறுந்தகவல்கள் ஆகியவற்றின் காலத்தில் நீண்ட இலக்கிய நூல்களை வாசிக்கச் செய்வது பெரும் சவால். இந்தச் சூழலில் இலக்கியத்தைப் பேசக்கூடிய மொழியில் மக்களிடம் கொண்டு செல்வது மிக முக்கியம். சாலமன் பாப்பையாவின் பேச்சு இதற்குப் பயன்பட்டது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை பல தரப்பினரும் தமிழ் இலக்கியக் கருத்துகளை அவரது வாயிலாகக் கேட்டனா். இலக்கியம் என்பது பயப்பட வேண்டிய பாடமல்ல. ரசிக்க வேண்டிய அனுபவம் என்பதை அவரது மேடை உணர்த்தியது.

ஒரு மாணவன், முதலில் ஒரு குறளை அவரது பேச்சில் கேட்கலாம். பின்னர் அதன் பொருளைத் தேடலாம். அங்கிருந்து திருக்குறளைப் படிக்கலாம். அதிலிருந்து சங்க இலக்கியத்திற்குச் செல்லலாம். இப்படிப் பார்த்தால், ஒரு பேச்சு ஒரு வாசகரை உருவாக்கும் தொடக்கப்புள்ளியாக மாறுகிறது.

இலக்கியத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய குரல்:

                           தமிழ் இலக்கியத்தின் வரலாற்றில் பல அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளால் பெரும் பங்களிப்புகளைச் செய்துள்ளனர். பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளால் வாசகர்களை உருவாக்கியுள்ளனர். பல பேச்சாளர்கள் மேடையின் வழியாக சிந்தனைகளைப் பரப்பியுள்ளனர். சாலமன் பாப்பையாவின் தனிச்சிறப்பு – இந்த மூன்று உலகங்களுக்கிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தியதுதான்.

அறிஞர்களிடம் இருக்கும் கருத்தை அவர் பொதுமக்களிடம் எடுத்துச் சென்றார். பொதுமக்களின் வாழ்க்கை அனுபவத்தை இலக்கியத்தோடு இணைத்தார். இலக்கியத்தன் உயரத்தையும் மக்களின் இயல்பான மொழியையும் ஒரே மேடையில் சந்திக்கச் செய்தார். அதனால் அவரது பட்டிமன்றங்கள் வெறும் நிகழ்ச்சிகளாக இல்லாமல், ஒரு வகையான மக்கள் இலக்கியப் பள்ளிகளாக அமைந்தன. சொற்களை மட்டும் பேசவில்லை. சொல்லின் பின்னால் இருந்த வாழ்வைப் பேசினார். ஒரு நல்ல இலக்கியப் பேச்சாளர் சொற்களின் பொருளை விளக்குவார். ஒரு சிறந்த பேச்சாளர் அந்தச் சொல்லுக்குள் மறைந்திருக்கும் வாழ்க்கையை விளக்குவார். சாலமன் பாப்பையாவின் பல உரைகளில் இந்த இரண்டாவது பண்பை உணர முடிந்தது.  அன்பு என்ற சொல்லைச் சொன்னால், உறவுகளை நினைக்கச் செய்தார்.

அறம் என்ற சொல்லைச் சொன்னால் மனிதப் பொறுப்பை நினைக்கச் செய்தார்.

நட்பு என்ற சொல்லைச் சொன்னால் நம்பிக்கையை நினைக்கச் செய்தார்.

குடும்பம் என்ற சொல்லைச் சொன்னால் மனித உறவுகளின் மதிப்பை நினைக்கச் செய்தார். இதுவே இலக்கியத்தின் உண்மையான பயன்.

நூலில் இருக்கும் சொல் வாழ்க்கைக்குள் வரும்போது அது இலக்கியமாக மட்டும் இருப்பதில்லை. அது பண்பாடாகிறது. அந்தப் பண்பாட்டை மக்களிடையே உயிரோடு வைத்திருக்க சாலமன் பாப்பையாவின் குரல் உதவியது.

ஒரு தலைமுறையின் நினைவில் நிற்கும் குரல்: 

                              ஒரு கலைஞரின் புகழ் அவர் வாழும் காலத்தோடு முடிவடையாது. அவர் உருவாக்கிய தாக்கம் அடுத்த தலைமுறையிலும் தொடரும்போது மட்டுமே அந்தப் புகழ் நிலைத்ததாகிறது. சாலமன் பாப்பையாவின் பேச்சைக் கேட்ட தலைமுறையினர், அவரது குரலில் தமிழின் இனிமையைக் கேட்டனர். அவரது நகைச்சுவையில் வாழ்க்கையின் உண்மையைக் கண்டவர். அவரது இலக்கியச் சுட்டுக்களில் தமிழ் நூல்களின் பெருமையை உணர்ந்தனர். அதனால் அவரது குரல் ஒரு தனிநபரின் குரலான மட்டுமே இல்லாமல், தமிழ் இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சென்ற ஒரு காலத்தின் குரலாகவும் நினைவில் நிற்கிறது.

இலக்கியத் தாகம்–என்றும் தீராத பயணம்: 

                                ஒரு மனிதரின் வாழ்வில் சில பயணங்கள் இலக்கை அடைவதற்காகத் தொடங்கப்படுகின்றன. ஆனால் இலக்கியப் பயணம் அப்படியல்ல. அது இலக்கில்லாத தேடல். இன்று ஒரு நூலைப் படித்தால் நாளை இன்னொரு நூல் அழைக்கும். ஒரு குறளைப் புரிந்துகொண்டால் அதன் பின்னால் நிற்கும் வாழ்க்கை அழைக்கும். ஒரு சங்கப் பாடலை ரசித்தால் அதன் காலத்தையும் பண்பாட்டையும் அறிய வேண்டும் என்ற ஆர்வம் உருவாகும். இந்தத் தீராத தேடலே இலக்கியத் தாகம்.

சாலமன் பாப்பையாவின் வாழ்க்கையிலும் இந்தத் தாகம் அவரது பேச்சின் வழியாக வெளிப்பட்டது. தமிழ் இலக்கியத்தைப் பற்றி பேசுவது மட்டுமல்ல. அதை மக்கள் ரசிக்கும் வகையில் மாற்றுவது அவரது தனித்துவமாக இருந்தது. அவர் இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சென்றார். மக்கள் இலக்கியத்தைத் தங்கள் வாழ்க்கையோடு இணைத்துக் கொள்ளும் சூழலை உருவாக்கினார்.

நிறைவுரை:

            சாலமன் பாப்பையாவைப் பற்றி எழுதும்போது, ஒரு பட்டிமன்றப் பேச்சாளரைப் பற்றி மட்டுமே எழுத முடியாது. ஒரு தமிழ்ப் பேச்சாளரைப் பற்றி மட்டுமே எழுத முடியாது. இலக்கியத்தை நேசித்த ஒரு மனிதரைப் பற்றியும் மட்டும் எழுதிவிட முடியாது. அவர் இலக்கியத்துக்கும் மக்களுக்கும் இடையே அமைந்த ஒரு உயிர்ப்பாலம். புத்தகங்களின் பக்கங்களில் உறங்கிக் கொண்டிருந்த பல இலக்கியக் கருத்துகளை அவர் மேடைகளின் வழியாக மக்களின் காதுகளுக்குக் கொண்டு சென்றார். அந்தக் கருத்துகள் காதுகளில் நின்றுவிடாமல், சிரிப்பாக மாறின. சிந்தனையாக மாறின. சில நேரங்களில் வாழ்க்கைப் பாடமாகவும் மாறின.

தமிழ் இலக்கியத்தின் பெருமையைச் பேச பல அறிஞர்கள் இருந்தார்கள். ஆனால் அந்தப் பெருமையைப் பாமரனும் ரசிக்கும் மொழியில் சொல்லியவர் சாலமன் பாப்பையா.

    அவரது குரல் நின்றுவிட்டாலும், அவர் நேசித்த தமிழ் நிற்காது. அவரது மேடை அமைதியானாலும், அவர் விதைத்த இலக்கியச் சிந்தனைகள் அமைதியாகாது. அவரது உரை முடிந்தாலும், அவர் எழுப்பிய சிந்தனை முடிவடையாது. ஒரு நல்ல பேச்சாளர் மறைந்தால் ஒரு குரல் மறைகிறது. ஒரு நல்ல இலக்கியவாதி மறைந்தால் ஒரு சிந்தனைப் பயணம் தொடர்கிறது. ஆனால் இலக்கியத்தை மக்களின் இதயத்துக்குள் கொண்டு சென்ற ஒருவர் மறைந்தால், அவர் பேசிய ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் அவருக்குப் பதிலாகப் பேசத் தொடங்குகிறது. சாலமன் பாப்பையாவின் இலக்கியத்தாகம் அப்படிப்பட்டது. அது ஒரு மனிதனின் தாகமல்ல. தமிழைத் தேடிய ஒரு தலைமுறையின் தாகம். அவர் பருகிய தமிழ் தேன், அவர் பேசிய தமிழ்ச் சொல், அவர் விதைத்த இலக்கியச் சிந்தனை இவை தலைமுறைகள் கடந்தும் தமிழின் நெஞ்சில் வாழட்டும்.

சொல் முடிந்தாலும் சுவை முடியாது.

குரல் ஓய்ந்தாலும் தமிழ் ஓயாது.

சாலமன் பாப்பையாவின் இலக்கியப் பயணத்தை நினைவுகூரும் ஒவ்வொரு தருணத்திலும், நம் உள்ளத்தில் ஒலிக்க வேண்டிய ஒரே உண்மை. தமிழை நேசிப்பது என்பது தமிழைப் பேசுவது மட்டும் அல்ல. தமிழின் இலக்கியச் செல்வத்தை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைப்பதும் ஆகும். அந்தப் பணியைத் தன் வாழ்நாள் முழுவதும் செய்த சாலமன் பாப்பையாவுக்கு தமிழின் சார்பில் ஒரு தலைவணக்கம். 

Loading

You Might Also Like

செல்லங்களும் செல்களும்
உடல்நலத்தை கவனிக்கத் தூண்டுவது எது?
அரேபியாவின் ஆபரணம்
விண்மீன் செப்டம்பர் 2026 மின்னிதழ்
வாசி வாசியென
TAGGED:essaysகட்டுரைகள்விண்மீன் செப்டம்பர் 2026
Previous Article எது சரி? எது தவறு?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (16) கட்டுரைகள் (25) கவிதைகள் (31) குறுநாவல் (1) சிறுகதைகள் (84) திரைப் பார்வை (9) தொடர்கள் (20) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (14) புத்தகப் பார்வை (41) விண்மீன் மின்னிதழ் (16)

பதிவுகள்

  • September 20264
  • August 202612
  • July 202617
  • June 202620
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?