VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: பிக்கிள்பால் விளையாட்டும் ஆறாத விரிசலும்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > பிக்கிள்பால் விளையாட்டும் ஆறாத விரிசலும்
சிறுகதைகள்

பிக்கிள்பால் விளையாட்டும் ஆறாத விரிசலும்

சில விரிசல்கள் எல்லைகளை உடைப்பதில்லை. அவை புதிய பிணைப்புகளுக்கான வழிகளைத் திறந்துவிடுகின்றன.

கங்கா
Last updated: June 30, 2026 12:41 pm
11 Views
Share
8 Min Read
பிக்கிள்பால் விளையாட்டும் ஆறாத விரிசலும்
SHARE

பிக்கிள்பால் விளையாட்டும் ஆறாத விரிசலும்

– கங்கா (காங்கேயன் பசுபதி)

கோர்ட்டில் ஒரு விபத்து

டப்ளின், கலிபோர்னியா. சில்லிடும் காலைக் காற்று.

ஃபாலன் ஸ்போர்ட்ஸ் பார்க்கில் அந்த பிக்கிள்பால் கோர்ட் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

மீராவுக்கு இன்று கோர்ட்டில் முதல் நாள். காங்கேயனுக்கு இரண்டாவது நாள். இருவருக்கும் குருநாதர் எதிர் வீட்டுக்காரரான டாக்டர் கிரிஸ். அவருக்கு ஒரு வருட அனுபவம் உண்டு. கிரிஸின் மனைவி ராதிகா (தகவல் தொழில்நுட்பத் திட்ட மேலாளர்) அவருக்கு இணையாக ஆடிக்கொண்டிருந்தாள்.

“பேடலை கொஞ்சம் தளர்வாப் பிடிங்க மீரா. இது டென்னிஸ் இல்லை!” கிரிஸ் கத்தினார்.

ஆட்டம் களைகட்டியது. சிரிப்பும், வியர்வையுமாக ஒன்றரை மணி நேரம் ஓடியதே தெரியவில்லை. “இன்னும் ஒரு இருபது நிமிடங்கள்… ஆட்டத்தை முடிச்சுக்கலாம்” என்றார் காங்ஸ்.

அப்போதுதான் அது நடந்தது.

மீரா பந்தை அடிக்க பின்னகர்ந்தபோது, அவளது ஷூவின் விளிம்பு தரையில் சற்று வழுக்கியது. சமநிலை குலைந்தது. கணுக்கால் ஒரு பக்கமாகச் சரிய, நரம்புகள் தெறிக்கும் வலியுடன் “ஆ” எனத் தடுமாறி தரையில் வேகமாக விழுந்தாள். சுற்றியிருந்த ஆரவாரம் ஒரு கணத்தில் மௌனமாகிப் போனது.

ஆட்டம் அப்படியே நின்றது. கிரிஸ் ஓடி வந்தார். “டோண்ட் மூவ்!”

“கால் ஊன முடியல கிரிஸ்…” மீராவின் கண்களில் நீர் முட்டியது.

கிரிஸ் உடனடியாக தனக்கே உரிய மருத்துவ அறிவை பயன்படுத்தினார். “கால்ல வெயிட் வைக்காதீங்க. வீட்டுக்குப் போனதும் ஆஸ்பிரின் போட்டுக்கங்க. கோல்ட் பேக் வைங்க. நடப்பதைக் குறைச்சுக்கங்க. மெயினா, ஸ்ப்ரெய்ன் ஆன கால்ல பிரஷர் கொடுக்கக் கூடாது.”

அன்றைய ஆட்டம் அத்தோடு முடிவுக்கு வந்தது.

மருத்துவப் பரிசோதனை

ஒரு வாரம் ஓடியது. காங்கேயன் தனது புதிய தொடக்கநிலை நிறுவனப் பணியில், சான்டா கிளாராவில் படு பிஸியாக இருந்தான். மீராவுக்கு வீட்டில் இருந்தபடியே இன்னொரு ஐடி கம்பெனியின் ரிமோட் வேலை. ஆனால் அவளது காலின் வலி மட்டும் கொஞ்சமும் குறையவில்லை.

கிரிஸிடம் போனில் சொன்னபோது, அவர் குரலில் லேசான கவலை தெரிந்தது. “மீரா, ஒரு வாரம் ஆகியும் வலி இருக்குன்னா… பெட்டர் கோ ஃபார் ஆன் எக்ஸ்-ரே.”

மருத்துவமனையில் ஊடுகதிர் சோதனை (X-ray) முடிவுகளைப் பார்த்துவிட்டு நர்ஸ் அந்த மருத்துவச் சொற்றொடரை உச்சரித்தாள்:

“Right fifth metatarsal base non-displaced fracture.”

சுருக்கமாக, வலது பாதத்தின் சுண்டுவிரலுக்குக் கீழே உள்ள எலும்பில் லேசான விரிசல். இடம் மாறாத முறிவு.

போராட்டமான நாட்கள்

இரண்டு வாரங்கள் உருண்டோடின. ராதிகா போன் செய்தாள். “மீரா, சமையல் வேலையில ஏதாவது ஹெல்ப் வேணுமா? நாங்க செஞ்சு தரட்டுமா?” அக்கம்பக்கத்து நண்பர்களும் உதவ முன்வந்தனர்.

மீரா புன்னகையுடன் மறுத்துவிட்டாள். அமெரிக்க வாழ்க்கையின் நிதர்சனம் அவளுக்குத் தெரியும். ஓரிரு நாட்கள் என்றால் பரவாயில்லை, வாரக்கணக்கில் மற்றவர்களை எத்தனை நாட்களுக்குத் தொந்தரவு செய்வது? எல்லாமே நாம்தான் செய்தாக வேண்டும்.

காலை ஏழு மணி.

காலில் அந்தப் பெரிய ‘வாக்கிங் பூட்’ (Walking boot). ஒற்றைக் காலில் உடம்பின் முழு எடையையும் பேலன்ஸ் செய்துகொண்டு, கிச்சன் கவுண்டரில் சாய்ந்தபடி தோசை திருப்புவது ஒரு பெரும் கலை.

அப்போது கவின் மெதுவாகச் சமையலறைக்குள் வந்தான். ஒரு கணம் தாயையும், அவள் காலில் இருந்த பெரிய பூட்டையும், கவுண்டரில் சாய்ந்து தோசை திருப்பும் சிரமத்தையும் பார்த்தான். அவனுக்குள் ஏதோ இறுக்கமாக உணர்ந்தான். ஆனால் என்ன சொல்வது, எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை.

“அம்மா… ஏதாவது ஹெல்ப் வேணுமா?” குரல் தயக்கத்துடன் வெளிப்பட்டது.

மீரா திரும்பிப் பார்த்தாள். மகனின் முகத்தில் அந்தக் கவலை தெரிந்தது. ஆனால் அவனுக்கு வீட்டு வேலைகள் செய்து பழக்கமில்லை என்பது அவளுக்குத் தெரியும். பாத்திரம் கழுவச் சொன்னால் டிஷ்வாஷரில் எப்படி அடுக்குவது என்றுகூடத் தெரியாது. துணி மடிக்கச் சொன்னால் எங்கே வைப்பது என்று குழப்பம்.

“இல்ல கவின், நீ போய் ரெடியாகு… ஸ்கூலுக்கு டைம் ஆகுது,” என்று புன்னகையுடன் சொல்லி அனுப்பிவிட்டாள்.

அவளுக்குத் தெரியும், காங்ஸ் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறான், பசங்களுக்கு வேலை ஏதாவது கொடு என்று. ஆனால் மீராவின் பதில் எப்போதும் ஒன்றுதான்: “உங்க அம்மா உங்களுக்கு எந்த வேலையும் கொடுக்காம, நல்லா தாங்கு தாங்குன்னு தாங்கினாங்கன்னு சொல்லுவீங்க. நான் என் பசங்கள தாங்கறேன்.”

அடுப்பில் காபி கொதிக்கும்போதே, மடிக்கணினியில் ‘ஸ்லாக்’ (Slack) மெசேஜ்கள் வந்து விழும். ஜூம் மீட்டிங்கில் ‘மியூட்’டில் வைத்துவிட்டு, பசங்களுக்குத் தேவையான காலை உணவை பேக் செய்ய வேண்டும். காவ்யா இன்னமும் அம்மா ஊட்டிவிட்டால்தான் சாப்பிடும் வகை. ஆனால் வேலை கொடுத்தால் நேர்த்தியாக முடிப்பாள், என்றாலும் மீரா பொதுவாக யாருக்கும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்தளிப்பதில்லை.

அன்று மாலை காங்கேயன் வீட்டுக்கு வந்தபோது, காலிங் பெல்லை அழுத்தாமல் சாவியால் கதவைத் திறந்தான். அவன் கையில் கணினிப் பை இருந்தது. சமையலறையில் இருந்து வெந்தயக் குழம்பின் மணம் வந்தது.

“வாவ்… என்ன மணம்!” என்றான்.

கவின் ஓடிவந்தான். “ப்பா… அம்மாவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் என்ன பண்ணட்டும்?”

காங்கேயன் மகனின் முகத்தைப் பார்த்தான். “நீ என்ன பண்ணுவே?”

“தெரியல… ஆனா ஏதாவது பண்ணணும்.”

இரவு உணவு முடிந்ததும், காங்கேயன் சமையலறைக்குச் சென்றான். “மீரா, நான் பாத்துக்கறேன். நீ போய் உட்காரு.”

மீரா தயங்கினாள்.

“நீ சமைக்க வேணாம் காங்ஸ்…”

“ஏன்?”

“உனக்குச் சமைக்கத் தெரியும். ஆனால் நீ எந்தக் குழம்புலயும் எந்தக் காயை வேணும்னாலும் போட்டுச் சமைச்சிடுவே. யார் சாப்பிடுறது.. சாம்பார்ல சோளத்தைப் போடுற சமையல்காரன் நீ. எனக்கு அந்த சாம்பார அரவே பிடிக்காது.”

காங்கேயன் சிரித்தான். அவனுக்கு நினைவிருந்தது, அன்று சாம்பாரில் இனிப்புச் சோளத்தைப் போட்டு மீரா முகத்தைப் பார்த்து அரண்டுபோன சம்பவம். “சரி, அப்ப நான் பாத்திரங்கள் கழுவறேன். டிஷ்வாஷர் லோட் பண்றேன். நீ கொஞ்சம் ஓய்வு எடு.”

மீரா தலையசைத்தாள். ஆனால் பத்து நிமிடம் கழித்து மீண்டும் எழுந்து வந்து, காங்கேயன் தவறாக டிஷ்வாஷரில் பாத்திரங்களை அடுக்கியதைச் சரிசெய்ய ஆரம்பித்தாள்.

ஒரு பக்கம் மென்பொருள் வேலையின் டெட்லைன்கள். மறுபக்கம் வீட்டின் அன்றாடச் சக்கரங்கள். சமையல், குழந்தைகளை கவனிப்பது, வீட்டை நிர்வகிப்பது என எல்லாமே அந்த உடைந்த எலும்பின் வலியோடுதான் நடந்தாக வேண்டும். ஒவ்வொரு முறை நடக்கும்போதும், பாதத்தில் ஒரு சிறிய ஊசி குத்துவது போன்ற வலி உயிரை எடுக்கும். ஆனாலும் மீராவின் சுழற்சி நிற்கவில்லை.

புயலுக்குப் பின்

வார இறுதி. காவ்யா அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தாள். அவள் கையில் ஒரு தாள். “அம்மா, நான் உனக்கு ஒரு லிஸ்ட் போட்டிருக்கேன்.”

“என்ன லிஸ்ட்?”

“நான் என்னென்ன உதவி பண்ண முடியும்னு. டாய்ஸ் அரேஞ் பண்றது, டேபிள் கிளீன் பண்றது, கவினோட பையை செக் பண்றது… எல்லாம் எழுதியிருக்கேன்.”

மீராவுக்கு தொண்டை அடைத்தது. காவ்யாவின் அந்த நேர்த்தியான கையெழுத்தில், ஒவ்வொரு வரியாக எழுதியிருந்தாள். அதில் கடைசி வரி: “அம்மாவுக்கு அடிக்கடி தண்ணீர் கொண்டு வந்து தருவது.”

“வேலை கொடுத்தா நீ நல்லா செஞ்சு முடிப்பேன்னு எனக்குத் தெரியும் கண்ணு,” மீரா மகளின் தலையைத் தடவினாள். “ஆனா அம்மா உனக்கு வேலை கொடுக்க விருப்பம் இல்ல.”

“ஏன்?”

“ஏன்னா… அம்மா அப்படி வளர்ந்துட்டு வந்திருக்கேன். எங்கம்மா எனக்கு எந்த வேலையும் கொடுக்காம படிக்க வச்சாங்க. ஆனா அப்போ ஊர்ல சொந்தக்காரங்க, உதவிக்கு ஆட்கள்னு யாராவது இருப்பாங்க. இப்போ இங்க நாம மட்டும்தான் இருக்கோம். ஆனாலும் என் மனசு உங்களை வேலை வாங்க ஒத்துக்கல.”

“ஆனா அம்மா, நீ இப்ப கஷ்டப்படுறியே. உதவி இப்போ நான் பண்ணிட்டா உனக்கு கால் சீக்கிரம் சரியாயிடுமே.”

போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க, அலுவலகத்திலிருந்து தாமதமாக கிளம்பி விரைவில் வீட்டுக்கு வருவது காங்ஸீன் வழக்கம். அன்று இரவு காங்கேயன் வீடு திரும்பியதும், மேசையில் சுடச்சுட சாப்பாடு இருந்தது. மீரா காலை நீட்டி சோபாவில் அமர்ந்திருந்தாள். பக்கத்தில் காவ்யா அமர்ந்து தன் பள்ளிப் பாடத்தைச் செய்துகொண்டிருந்தாள். கவின் மேசையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். சுவரில் சட்டமிட்டு வைக்கப்பட்டிருந்த காவ்யாவின் ஓவியத்தில், கோடுகளுக்கு இடையே உதித்த அந்த அதிகாலைச் சூரியன் மீராவைப் பார்த்துப் பெருமையாகச் சிரிப்பது போல் இருந்தது.

காங்கேயன் மீராவின் அருகில் வந்து அமர்ந்தான். அவளது சோர்வான முகத்தையும், கட்டுப் போட்டிருந்த வீங்கிய பாதத்தையும் பார்த்தபோது அவனுக்குள் ஏதோ ஒன்று பிசைந்தது. தன் அலுவலக வேலைகளிலும், புதிய நிறுவனத்தின் நெருக்கடிகளிலும் மூழ்கிப்போய், மீராவின் மெல்லிய முனகல்களையும் கிச்சனில் எழும் ஒற்றைக்காலடி ஓசைகளையும் கவனிக்கத் தவறியது அவனுக்கு இப்போது உரைத்தது. அவன் குரலில் குற்ற உணர்ச்சி எட்டிப் பார்த்தது.

“ஏன் மீரா இவ்வளவு சிரமப்படற? வேலை, வீடுன்னு எல்லாத்தையும் நீயே இழுத்துப் போட்டுட்டு செய்யணுமா? நான் பாத்துக்கறேன்னு சொன்னேன்ல? பசங்களும் உனக்கு உதவி பண்ண ஆசைப்படறாங்க.”

மீரா புன்னகைத்தாள். அந்தப் புன்னகையில் தாய்மையின் முரண் இருந்தது, குழந்தைகளைத் தாங்க விரும்பும் மனசும் அவர்களின் உதவியை ஏற்க முடியாத தடுமாற்றமும் சேர்ந்த கலவை அது. பெருமூச்சுடன் சோபாவில் சாய்ந்தாள்.

“நிரலாக்கத்துல பிழைகள் வந்தா, நாமளேதானே சரி செஞ்சாகணும் காங்ஸ்? வாழ்க்கையில் மாற்றங்கள் வந்து கொண்டேதான் இருக்கும், சில சமயம் எலும்புகளும் விரிசல் விடத்தான் செய்யும். ஆனா, வலியோடவே பேலன்ஸ் பண்ணிக்கக் கத்துக்கறதுதானே குடும்பம்?”

சற்று நேரம் மௌனம் நிலவியது. பிறகு மீரா காவ்யாவின் கையைப் பிடித்தாள்.

“ஆனா ஒன்னு… நாளைல இருந்து நீ மேசையை சுத்தம் செய்யலாம். கவின் டிஷ்வாஷர் லோட் பண்ணலாம்.”

காவ்யாவின் முகம் மலர்ந்தது. கவின் சமையலறையில் இருந்து, “ஐ வில், யூ டியூப் பாத்து கத்துக்கறேன் அம்மா!” என்று கத்தினான். காங்கேயன் சிரித்தபடி, “ஸ்வீட் கார்ன் சாம்பார் எப்படி பண்றதுன்னும் பாத்துக்கோ!” என்றான்.

அன்றைய இரவின் அமைதியில், டப்ளின் நகரின் குளிர்க்காற்று ஜன்னலை உரசிச் சென்றது. அந்த உடைந்த எலும்பும் அவளது தளராத மனமும் ஒன்றுக்கொன்று மௌனமாக ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தன. புதிதாய் ஓர் உண்மையும் உதித்தது. சில விரிசல்கள் எல்லைகளை உடைப்பதில்லை. அவை புதிய பிணைப்புகளுக்கான வழிகளைத் திறந்துவிடுகின்றன.

*****

You Might Also Like

அகத்தின் வண்ணம்
கதாவிலாசம்
குருதி…
ஜீவநதி
பயணம் (கிழமைபட வாழ்)
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் ஜூன் 2026
Byகங்கா
கங்கா (காங்கேயன் பசுபதி - Kangeyan Passoubady)
பாண்டிச்சேரியின் உப்புக் காற்றிலும் பிரெஞ்சுப் பண்பாட்டிலும் பிறந்து வளர்ந்த காங்கேயன் பசுபதி, இலக்கிய உலகில் ‘கங்கா’ என்ற புனைபெயரில் அறியப்படுகிறார். கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் தடம் பதித்து வரும் இவர், தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா வளைகுடாப் பகுதியில் (Bay Area) செய்யறிவு (AI) மற்றும் தன்னியக்கமாக்கல் (Automation) துறைகளில் வல்லுநராகப் பணியாற்றி வருகிறார்.
தொழில்நுட்ப உலகில் இருந்தாலும் இவரது உள்ளம் எப்போதும் அன்னைத் தமிழிலேயே ஒன்றிக் கலந்திருக்கிறது. வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (NATAWO) மற்றும் 'நடவு' காலாண்டு இதழின் ஆசிரியர் குழுவில் ஆக்கத்துடன் பங்காற்றி வருகிறார். தான் பெற்ற கணினி அறிவை அடுத்த தலைமுறைக்கும், குறிப்பாகத் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க 'கவின் பள்ளி' (Kavin School) என்ற அமைப்பை நிறுவிச் செயல்பட்டு வருகிறார்.
பழமையின் ஆழமும் புதுமையின் தேடலும் ஒருசேரக் கலந்த இவரது எழுத்துகள் நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் தனித்துவமானவை. கவிதை, சிறுகதைகள் எனத் தன் இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்து வரும் இவர், எளிய தமிழர்களுக்கும் அதிநவீனத் தொழில்நுட்பம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், 300-க்கும் மேற்பட்ட செய்யறிவு கலைச்சொற்களைப் பொருள்வாரியாகத் தொகுத்து "AI அலை: நீங்கள் தயாரா?" என்ற நூலையும் எழுதி வருகிறார்.
Previous Article கறுப்பி
Next Article அமெரிக்க சுதந்திர தினம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?