VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: நினைவுச் சாரல்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > சிறுகதைகள் > நினைவுச் சாரல்
சிறுகதைகள்

நினைவுச் சாரல்

மழையப் பார்த்தா, உலகத்தையே மறந்துடுவீங்களே!

புனிதா பார்த்திபன்
Last updated: June 29, 2026 4:42 pm
9 Views
Share
10 Min Read
நினைவுச் சாரல்
SHARE

நினைவுச் சாரல்

– புனிதா பார்த்திபன்

“அம்மா! இன்னைக்கு மேக்ஸ் டெஸ்ட்ல இருந்து தப்பிச்சுட்டேன், மழைனால ஸ்கூல் லீவுன்னு சொல்லிட்டாங்க” என வரவேற்பறையில் கத்திக்கொண்டிருந்த மகனின் குரல் கேட்டதும், நான் அறியாமலே என் இதழோரம் மெல்லிய புன்னகை தவழ அறையிலிருந்து வெளியே வந்தேன். அடுத்த நொடியே கதவுகள் வழியாய் ஊடுருவி வந்த மழையின் குளிர், அன்பான சிநேகிதன் போல் ஓடிவந்து உடலோடு அணைத்துக்கொண்டது. அக்குளிருக்கு இதமாய் மனைவி கையில் சூடான தேநீரைக் கண்டதும், இப்புவி வாழ்வே சொர்க்கமெனத் தோன்ற, தேநீரை வாங்கிக் கொண்டு சாளரத்தை நோக்கி நகர்ந்தேன்.

வெண் செவ்வந்தி மலரிதழ்களை உதிர்த்தது போல், விண்ணிலிருந்து மண்ணிற்குப் பாய்ந்து கொண்டிருந்தன மழைத் துளிகள். ஊமைப்படமென தெரிந்த காட்சியின் அழகை முழுதாய் கிரகிக்க, சாளரத்தின் கண்ணாடிக் கதவினை மெல்லத் தள்ளினேன். சில்லென்ற காற்று முகம் முழுவதும் இதமாய் உறவாடுகையில், “டேய் ஸ்கூல் குரூப்ல லீவுன்னு மெசேஜ் வந்துருச்சு, பாத்தியா?” என மகன் அவன் நண்பனுடன் கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்த வார்த்தைகள் என் செவிகளில் விழ, இதே மழைநாட்களில் பலநாட்கள் மழைக்காக பள்ளி விடுமுறை விடப்பட்டிருப்பது தெரியாமல் வீட்டில் காய்கறி வாங்கிய நெகிழிப் பையைத் தலையில் போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடிய நினைவுகள், என் விழிகளுக்குள் வந்து சென்றன.

நினைவுகளை எண்ணிப் புன்னகைத்தவாறே நான் வெளியில் பார்க்க, மண் வாசம் தந்த மழை அதன் துளிகளுக்குள் என்னை ஏந்தி என் இளமைக்குள் என்னை இறக்கிவிட்டு தானும் சூழ்ந்து அமர்ந்து கொண்டது.

வயதைத் தூக்கிச் சுமந்தபடி வருடங்கள் கடந்திருந்தாலும், சில நினைவுகள் மட்டும் ஓவியம் போல் மனதினில் நிரந்தரமாய் தங்கிவிடும். என் நினைவுப் படங்களில் எனது ஆறாம் வகுப்பு ஒளிர ஆரம்பித்தது. அன்றும் பள்ளி சென்றபின் மழைக்காக விடுமுறை என்று தெரிந்ததும் வேண்டுமென்றே மழைத்தண்ணீரில் விளையாடி சீருடையை நனைத்து வீடு திரும்பிய காட்சி இன்னும் என் விழிகளுக்குள் இருக்கிறது.

வீட்டிற்கு வந்தவுடன், “அம்மா டிவி போட்டுக்கிறேன்மா” என நான் கெஞ்ச, “அமைதியா உட்காரு இடி இடிக்குது” எனப் பின்னால் இணைந்திருந்த கேபிள் வயரைக் கழற்றிவிட்டாள் அம்மா.

“அப்ப மழையிலயாவது நனைஞ்சுட்டு வரேம்மா” என நான் கத்தியபோது, “வெளிய கால வச்சுப்பாரு விளக்கமாறு பிஞ்சுரும்” என அதற்கும் தடைபோட்டுவிட்டாள். பள்ளிக்கூடங்கள் பிள்ளைகளை கிடுக்குப்பிடி பிடிக்கும் போது, தனது சிபாரிசில் இது போல் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விடுமுறை வாங்கித்தரும் மழை, பெரும்பாலும், “பிள்ளைகளுக்கு விடுமுறை கிடைத்துவிட்டது இனி போட்ட சட்டத்தை மாற்ற முடியாது” என்ற எண்ணத்தில் துள்ளிக் குதித்து ஓடி மறைந்துவிடும். அன்று இத்தனை நாட்களாய் அது செய்யும் சூழ்ச்சியால் கையும் களவுமாக மாட்டிக் கொண்டதோ என்னவோ, காலையிலிருந்து கால் கடுக்க கவிதை மீட்டிக் கொண்டிருந்தது. நண்பர்களுடன் விளையாடலாமென்ற என் ஆசை நிராசையாகி எதிரிலிருக்கும் என் நண்பன் குமாரின் வீடு கூட என் கண்களுக்குப் புலப்படாமல் அருவியாய் கொட்டிக்கொண்டிருந்தது மழை.

மழைக்காக மயில் காத்திருக்கிறதோ இல்லையோ, எங்கள் மின் ஊழியர் காத்திருப்பார். பத்தே நிமிடங்களில் மின்சாரம் பறிக்கப்பட்டுவிட்டது. என்னால் ஒரே இடத்தில் உட்கார முடியவில்லை. வாசல் தடுப்பைத் தாண்டி உள்ளே வந்த தண்ணீரை அவ்வப்போது தள்ளி விட்டுக் கொண்டிருந்த அம்மாவை வேடிக்கை பார்த்துக்கொண்டே, “அம்மா பணியாரம் சுட்டுத் தாம்மா” எனக் கேட்டேன்.

“பணியாரம் கேட்டதும் மாவு தானா வந்து சட்டியில ஒட்டிக்கிடுமா, சோளம் அவிச்சுத் தரேன் இரு” என்ற அம்மா, வாங்கி வைத்த சோளக்கதிரின் குதிரை வால் போல் இருந்த முடியைப் பிய்த்துக் கீழே போட்டாள். அந்த முடிக்கற்றை அத்தனை மென்மையாக இருந்தது. நிலக்கதவிற்கு அருகில் அமர்ந்து, கையில் வைத்து அதைத் தேய்த்தபடி வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தாழ்வாரத்திலிருந்து வெண்முத்தாய் விழுந்த மழை, என்னை ஏந்திக்கொள் என அன்புக் கட்டளையிட்டது. திரும்பிப் பார்த்தேன், அம்மா அருகில் இல்லை. வேகமாய் வெளியில் என் உள்ளங்கையை நீட்டினேன். என் உள்ளங்கைக்குள் ஒவ்வொரு துளியாய் சிநேகம் பேசியது மழைத்துளி. வான் தீர்த்தத்தால் கை நிறைந்து மனம் குளிர்ந்தது. வேகமாய் உள்ளங்கையை என் வாய்க்குள் சாய்த்து, அமிர்தத்தின் சுவையை உணரும்முன் முதுகில் பளிரென ஒரு அடியை வைத்திருந்தாள் அம்மா.

“போன தடவ இப்படி செஞ்சுதான சளி பிடிச்சுச்சு, இந்த தடவை சளி பிடிக்கட்டும் வச்சுக்குறேன்” என அம்மா சொல்லிவிட்டு நகர, கசிந்த என் விழிகளுக்கு விருந்தாய், சின்னதொரு காகிதக் கப்பல் வீட்டிற்கு முன் செல்லும் சிறிய வாய்க்காலில் ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது. என் மனதிற்குள் மகிழ்ச்சி துள்ளிக் குதித்தது. எதிர் வீட்டிலிருக்கும் என் நண்பன் தான் இக்கப்பலை விட்டிருப்பான். அவன் வீட்டருகே புறப்படும் வாய்க்கால் எங்கள் வீட்டைக் கடந்த பின்தான் பெரிய சாக்கடையில் இணையும்.

அவனுடைய முதல் கப்பலைத் தவற விட்டு விட்டேன். பின்னாலே அழகாய் நீந்தி வந்தது மற்றொரு கப்பல். அதில் ஒற்றைப் பொட்டுக்கடலை ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்தது. மழைபெய்தால் போதும், பொட்டுக்கடலையும், சீனியையும் கலந்து தின்ன ஆரம்பித்துவிடுவான் குமார். விரைந்து கை நீட்டி அதிலிருந்த பொட்டுக்கடலையை எடுத்துக் கொண்டேன். ஏதோ புதையல் எடுத்த உணர்வு என்னுள். அடுத்த சில நிமிடத்தில், குங்குமம் புத்தகத்தின் பக்கங்களால் செய்யப்பட்ட என் கப்பல் தண்ணீரில் தள்ளாடாமல் தவழ்ந்து சென்றது.

மாறி மாறி கப்பற்போர் அரை மணி நேரம் தொடர, “ஆரம்பிச்சிட்டியா, சாக்கடை அடைச்சா உன் மகன் கப்பல் விட்டுத்தான்னு பக்கத்து தெருக்காரி எங்கூட சண்டைக்கு வருவா, எதுக்குத் தான் உனக்கு லீவு விடுறாகளோ?” என்றபடி அவித்த மக்காச் சோளத்தை அருகில் வைத்துவிட்டுச் சென்றாள் அம்மா.

சோளத்தின் சுவையொரு இன்பம் என்றால், மணம் பேரின்பம். குளிர் காற்றில், சில்லென்ற சாரலில், சுடச்சுட இருந்த சோளத்தை மென்று ருசித்துக் கொண்டிருந்த போது மழை குறைந்திருந்தது. “சோ”வென்ற சத்தம் குறைய, மிக அருகில் பிஞ்சுக் குரலொன்றின் முனகல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. மெல்ல கதவைத் தாண்டி எட்டிப் பார்த்தேன். மழை குறைந்திருந்தாலும், சில துளிகள் என் தலையில் ஆசையாய் கொட்டு வைத்துச் சென்றன. வலப்புறமிருந்த வீட்டின் அம்மிக்கல் அருகே சின்னஞ்சிறு குட்டிநாய் ஒன்று மழையில் நனைந்தபடி முனகிக் கொண்டிருந்தது. “அம்மா, நாய்க்குட்டிமா” எனக் கத்தினேன்.

“கால உடைக்கப்போறேன் பாரு” என உள்ளிருந்து கத்திய அம்மா வெளியே வந்து பார்த்துவிட்டு, அதைத் தூக்கி வர எனக்கு அனுமதி தந்தாள். சின்னஞ்சிறு உடலில் விழிகள் கூட சரியாய் திறவாத அக்குட்டி, தலையை ஆட்டி ஆட்டிக் கத்திக் கொண்டே இருந்தது. என் முகத்தைப் பார்த்த அம்மா, “மழை விட்டதும் வெளிய போய் இத விட்டுட்டு வரல தோல உரிச்சிருவேன் பாத்துக்க” என என் மனம் அறிந்து முன்னதாகவே எச்சரித்து விட்டுச் சென்றாள்.

நாய்க்குட்டியின் உடலில் இருந்த ஈரம் குறைந்தாலும், அதன் சிறு தொண்டையில் நிறைய ஈரம் இருந்தது போல, தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தது. வசவுகளை அள்ளி வீசியபடி வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்த அம்மா என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அடுக்களைக்குள் சென்று ஒரு சிறிய தட்டில் கொஞ்சம் பாலை ஊற்றி மேற்படி கொஞ்சம் தண்ணீரை ஊற்றிக் கொண்டு வந்து குட்டிக்கு அருகே வைத்தாள். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. வேகமாய் தட்டை எடுத்து அதன் வாயருகே வைத்தேன். சிறிய நாக்கு எட்டிப் பார்க்க லேசாய் சுவைத்துப் பார்த்த நாய்க்குட்டி,  அம்மா சோறு பொங்குகையில் கேட்கும் உலைத் தண்ணீர் சத்தம் போல், உறிந்து உறிந்து மூச்சுவிடாமல் குடித்தது. அம்மா உள்ளே சென்றுவிட்டதை அறிந்து அதனை என் மடியில் தூக்கி வைத்தேன். என் அரைக்கால் ட்ரவுசர் அதற்கு இதமாய் இருந்தது போல, தொடை மீது தலை வைத்துப் படுத்துக்கொண்டது. எப்போது மழைவிடும் குமாரோடு விளையாடச் செல்லலாம் எனக் காத்திருந்த நான், மழையே நிற்கக் கூடாதென வேண்டிக் கொண்டேன்.

மழை விடுவதற்குள் அப்பா வந்துவிட்டால் எப்படியாவது இந்தக் குட்டி நாயை வளர்க்க அனுமதி வாங்கலாம். அது இப்போது என் மடி மீது படுத்திருக்கும் அழகைக் கண்டால் அப்பா மனமிறங்கிவிடுவார் என்ற என் எண்ணத்தைத் தவிடாக்க, சில நிமிடங்களிலே மழை ஒய்வெடுக்கச் சென்றுவிட்டது. மழை நின்றதன் அடையாளமாய் தாழ்வாரத்திலிருந்து விழுந்த மழைநீர் “டொங் டொங்” என்று மழைநீருக்காக அம்மா வைத்த பித்தளை குடத்தின் விளிம்பின் மீது விழும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

“அம்மா வெளிய வந்துறக்கூடாது” என்ற என் வேண்டுதலும் பொய்த்து, முன்னேற்பாடாய் சல்லிக் கரண்டியோடே அம்மா வந்திருந்தாள். அடுத்த நொடியே, “நான் அப்பாட்ட கேட்டு வளர்த்துக்குவேன் போ” என்று கத்தியபடி நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு தெருவில் ஓடிவிட்டேன். அப்பா வர இன்னும் எவ்வளவு நேரமாகும் என்பதை யோசித்துக்கொண்டே பூட்டப்பட்ட ஒரு வீட்டுவாசலில் நான் அமர்ந்திருக்க, எதிரிலிருந்த பொட்டலில் மீண்டும் பிஞ்சுக் குரலில் முனகல் சத்தம் கேட்டது. குட்டியை என் சட்டைக்குள் வைத்துக்கொண்டு மெல்ல எட்டிப் பார்த்தேன். இவன் போல் இன்னும் நால்வர் சுவரோரத்தில் முண்டிக் கொண்டிருக்க, பெரிய நாயொன்று பொட்டலில் அங்கும், இங்கும் ஓடி எதையோ தேடிக்கொண்டிருந்தது. அது தொலைந்துபோன தன்னுடைய குட்டியைத் தேடுகிறது எனத் தெரிந்ததும், பயமும், அழுகையும் ஒருங்கே என்னை ஆட்கொண்டுவிட்டன. ஒருவேளை அந்த நாய் என்னைக் கடித்துவிட்டால் அம்மா என்னைத் தொலைத்தே விடுவாள் என பயமாக இருந்தது.

வேகமாய் ஓடிச்சென்று சற்று தூரம் தள்ளிக் குட்டியை இறக்கிவிட்டு நான் திரும்ப, என்னைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தது தாய் நாய். என் கால்கள் கிடுகிடுவென நடுங்க, வாலை ஆட்டியபடி என்னை முகர்ந்து பார்த்துவிட்டு, குட்டியை தன்னிடத்திற்கு அழைத்துச் சென்று அமர்ந்து கொண்டது. அடுத்த நொடியில் ஊர்ந்து ஊர்ந்து சென்ற ஐந்து குட்டிகளும், குளிருக்கு இதமாய் அன்னை மடிக்குள் நுழைய, தன் தலையைத் தரையில் வைத்து முத்துக்களைக் கொண்ட சிப்பி போல் தன்குட்டிகளை அணைத்துக் கொண்டது தாய் நாய். அக்காட்சியைக் கண்டபின் ஏனோ என்னையும், அம்மாவையும் நினைத்துப் பார்த்துக்கொண்டேன். என் கையை உற்றுப் பார்த்தபடி வாசலுக்கு வந்த அம்மாவிடம், “நாய விட்டுட்டேன்மா, விளையாடிட்டு வரேன்” எனச் சொல்லிவிட்டு வீதிக்கு ஓடினேன். நான் அழைக்கும் முன்னே குமாரும் வந்து விட்டான்.

இத்தனை நேரம் திரையிட்டிருந்த வானம், திரையகற்றி தெள்ளத் தெளிவாய் நிற்க, அதன் அழகான வெளிச்சம் இனம் புரியா மகிழ்வை எங்களுக்குள் விதைத்தது. சிறிது நேரத்தில் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர, வீதிப் பள்ளங்களில் தேங்கிய நீரைக் கண்ணாடியாக்கி வானம் தன் முகம் பார்ப்பதை ரசித்தபடி, தண்ணீரில் இறங்கி கால்களால் தாளம் போட்டு, கூச்சலிட்ட நாட்கள் மறக்கவே முடியாத பொக்கிஷங்கள்.

எங்கோ ஆரம்பித்து என்னை மறந்து நதி போல் ஓடிக் கொண்டிருந்த என் பள்ளிப்பருவ நினைவுகளில் மூழ்கியிருந்த என்னை, என் தோளின் மீது பட்ட மனைவியின் கை நினைவிற்கு கொண்டுவந்தது.

“மழையப் பார்த்தா, உலகத்தையே மறந்துடுவீங்களே! குடுங்க சூடு பண்ணித் தரேன்” என ஆறிப்போயிருந்த தேநீரை வாங்கிச் சென்றாள் மனைவி. பேரழகான சொப்பனம் கிடைக்கப்பெற்ற மனம் தூக்கத்தைக் கலைக்க விரும்பாமல், தான் தூங்குவதாய் நினைத்துக் கொள்வது போல், என் நினைவுகளிலிருந்து வெளிவர மறுத்தது மனம். மனமின்றி சாளரத்திலிருந்து திரும்பினேன்.

பன்னிரெண்டு ஆண்டுகள் நான் ஆசைப்பட்டும் கிடைக்காத ஜிப் வைத்த மகனின் புத்தகப்பை மேசை மீது கிடந்தது. அழகு வண்ணத்தில் மழைச்சட்டை கொடியில் தொங்கியது. இதோ என் மகன் விரும்பிக் கேட்டு வாங்கிய பீகில் நாய்க்கு சாப்பாடு வைக்க மனைவி சென்று கொண்டிருக்கிறாள். எனக்குக் கிடைக்கா இன்பங்களையெல்லாம் என் மகனுக்குத் தந்த நான், அனுபவித்தவற்றைத் தர மறந்துவிட்டேனோ என்கின்ற ஏக்கத்தில், வெளியில் மழையா, வெயிலா என எதையும் கண்டு கொள்ளாமல் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்த என் மகனைப் பார்த்து, “கண்ணா இங்க வந்து பாரு எப்படி மழை பெய்யுதுன்னு” என அழைத்தேன்.

“போங்கப்பா, நானே மழைனால இன்டர்நெட் கிடைக்காம உட்கார்ந்துருக்கேன்” என்றான் மகன்.

தலைமுறை இடைவெளியை எண்ணியபடி பெருமூச்செறிந்த என்னை சாளரத்தின் வழியாய் நுழைந்த சாரல் ஆசுவாசப்படுத்தியது. சொட்டுச் சொட்டாய் வழிந்து கொண்டிருந்த நீர் ஒவ்வொரு முறையும் என் பெயரை அழைத்துக் கொண்டு கீழே விழுவது போல் இருந்தது. சாளரத்தைத் தாண்டி என் உள்ளங்கையை நீட்டினேன். அம்மா பிசைந்து தரும் பிடிசோறு போல் மெல்ல மெல்ல கையை நிறைத்தது மழைத்துளி. என் உள்ளங்கை முழுதும் மழைத்தீர்த்தத்தால் நிரம்பியிருந்தது.

மெதுவாய் பின்னால் திரும்பிப் பார்த்தேன். மனைவி அருகில் இல்லை, மகன் கைப்பேசியில் லயித்திருந்தான். இது தான் சமயம் என வேகமாய் என் உள்ளங்கை நீரை சத்தமின்றி  உறிந்தேன். பத்து வயதில் நான் பருகிய அமிர்தம் ருசி மாறாமல் அப்படியே இருந்தது. என் விழிகள் அதுவாக மூடின.

“கழுத வயசாச்சு, வங்கியில மேனேஜர் பதவியில இருக்குறோம்ங்குற எண்ணமில்லாம சின்னப்புள்ள மாதிரி இப்பவும் மழைத் தண்ணிய உறிஞ்சுறியா? சளி பிடிக்கட்டும் வச்சுக்குறேன்” என மறைந்து போன அம்மாவின் குரல், மழைத்துளிகளின் வழியே எங்கிருந்தோ கேட்டுக்கொண்டிருந்தது. 

*****

You Might Also Like

யார் சிறந்தவர்கள்?
ஓ.கே. கண்மணி
ஸெரிப்ரம்
நானும் எனது எஜமானியம்மாவும்
பின்னல்
TAGGED:Short Storiesசிறுகதைகள்விண்மீன் ஜூன் 2026
Previous Article “மாயத்தின் விளைவுதான் உணர்வுப்பூர்வமான படைப்பு” – கரன் கார்க்கி
Next Article இடியாப்பமும் ஃப்ராடும்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?