கதாவிலாசம்
–செ. இராஜாராம்
சமீபத்தில் நான் வாசித்த புத்தகங்களில் மிகவும் மனதிற்கு நெருக்கமான புத்தகமாகிப் போனது எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் எழுதிய ‘கதாவிலாசம்’.
இந்தத் தொகுப்பை வாசிக்க… வாசிக்க இவ்வளவு நாளாக ஏன் என் பார்வையில் படாமலே இருந்தது என்ற ஆதங்கமும், இவ்வளவு நாளாக வாசிக்கத் தவறிவிட்டோமே என்ற வருத்தமும் எனக்குள் ஒரு சேர எழுந்தது.
இது மிகவும் வித்தியாசமான நூல்தான், கிட்டதட்ட ஐம்பது எழுத்தாளர்களை நமக்கு அறிமுகம் செய்கிறார். பொதுவாக நாம் வாசிக்கும், சிறுகதையோ, நாவலோ அனேகமாக எழுத்தாளரின் கற்பனையாகவோ அல்லது உண்மைச் சம்பவங்களின் தழுவலாகவோ இருக்கும். ஆனால் இந்த நூலிலோ ஒரு எழுத்தாளர், அவரின் சிறுகதை, அதில் வரும் சம்பவத்தோடு ஒத்துப்போகும் எழுத்தாளருக்கு நிகழ்ந்த, அவர் பார்த்த அனுபவங்கள் என மிக அழகாக, முற்றிலும் வித்தியாசமாக எழுதியிருக்கிறார் எஸ்.ரா.
எழுத்தாளர் மௌனியில் தொடங்கி பாரதியாரில் முடிக்கிறார். இதை இன்னும் சிறப்பாகச் சொல்ல வேண்டுமென்றால்… பாரதியாரில் தொடங்கி தற்பொழுது எழுதிவரும் எழுத்தாளர் தமயந்தி வரை எழுதியிருக்கிறார் எனலாம்.
ஒரு சில எழுத்தாளர்களைப் பற்றி இந்த நூலின் மூலமாகத்தான் நான் அறிந்து கொண்டேன். அதேபோல் நாம் ஆத்மார்த்தமாக எழுதிய பல எழுத்தாளர்களை இழந்திருக்கிறோம் என்பதுடன் அவர்களைப் பற்றிய தகவல் கூட நம்மிடம் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டேன். ஆம், பெரும்பாலான எழுத்தாளர்களின் வாழ்க்கை ஐம்பதை கடக்கவில்லை. அவர்களின் எழுத்துக்கள் சிறப்பு என்றாலும் காலத்தின் போக்கில் அவர்கள் கரைந்து போய்விட்டார்கள், தமிழகம் கடந்து வந்துவிட்டது என்பது வருத்தமாக விஷயம்தானே…
வாசிப்பதற்கு எந்த அயற்சியும் இல்லாமல், அத்தனை சுவாரசியமாக இருக்கிறது இத்தொகுப்பு. ஒவ்வொரு எழுத்தாளருக்குமான குறிப்புகள், அவர்களின் சிறுகதை ஒன்றைச் சொல்லி, அதனுடன் இணைத்துப் பார்க்கும் விதமாகத் தன் வாழ்வில் நடந்த சுவாரசியமான விடயங்களோடு ஒப்பிட்டு எழுதியுள்ளார்.
பெரும்பாலும் எஸ்.ரா அவர்களின் கதை மாந்தர்கள் விளிம்புநிலை மனிதர்களாக இருப்பார்கள். இதில், ‘புகையும் வயிறு’ என்ற கட்டுரையில் எஸ்.ரா மதுரையிலிருந்து சென்னை செல்லும் ஆம்னி பஸ்ஸில் அமர்ந்திருக்கிறார். அந்த பேருந்தும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் கிடைக்காமல் தாமதமாகிக் கொண்டே இருக்கும் சமயத்தில் ஒரு வயதான வட இந்திய தம்பதியினர் பேருந்து ஏஜென்டிடம் அரைகுறை இந்தியில் பேசி பேருந்தில் அமர்கின்றனர். பேருந்து நகர்ந்த சில மணி நேரங்களில், அருகில் இருப்பவரிடம் அதிகாலை இராமேஸ்வரம் சென்று விடுமா? என்று கேட்க இது சென்னை செல்லும் பேருந்து என்ற பதில் கிடைக்கிறது. உடனே அந்தப் பெரியவர் டிரைவரிடம் போய் கேட்க, அவரோ ஏஜென்டிடம் கேளுங்க என்கிறார்.
பெரியவர் உடனே பேருந்தில் இருந்து இறங்க முற்பட, டிரைவர் வண்டியை நிப்பாட்டுகிறார். பெரியவர் இறங்கி பேருந்து முன் ரோட்டில் அமர்ந்து கொண்டு தான் ஏமாற்றப்பட்டதை சொல்லி மறியல் செய்கிறார். கொஞ்ச நேரத்தில் ஏஜென்ட் அங்கு ஆட்டோவில் வர, நீங்கள் திருச்சியில் இருந்து போவதற்காக இந்த பேருந்தில் ஏற்றி விட்டேன் என்று சமாளிக்க, அந்தப் பெண்மணியோ பேருந்தில் இறங்க மறுக்கிறார்.
இந்தப் போராட்டங்களின் போது அந்த முதியவள் வைத்திருந்த பையைப் பிடிங்கி ஜன்னல் வழியாக வெளியே எறிகிறார் ஏஜென்ட். கீழே விழுந்த பையிலிருந்து சிறிய கலயம் உடைந்து சாம்பல் ரோட்டில் சிதறுகிறது. அது தன் மகனின் அஸ்தி அதைக் கரைப்பதற்காகத்தான் குவாலியரிலிருந்து இராமேஸ்வரம் சென்று கொண்டிருக்கிறோம் என்று அழுது கொண்டே உடைந்த கலயத்தை வாரி அள்ளுகிறார் அந்த முதியவள்.
இதை பேருந்தில் இருந்த அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம், அந்த சமயத்தில் டிரைவர் ஏஜென்டை ஓங்கி அறைந்து இவர்களை இராமேஸ்வரம் அனுப்ப வேண்டிய பொறுப்பு உன்னுடையது என்று கூறிவிட்டு, அந்த பெரியவரிடம் அவர் தந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறார். அந்த தம்பதியினர் ஆட்டோவில் ஏறிச் செல்கின்றனர் என்று தன் முன் நடந்த நிகழ்வை, ‘புயல்’ என்ற சிறுகதையுடன் இணைத்து எழுதியிருக்கிறார்.
மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் கோபி கிருஷ்ணனின் எழுதிய கதைதான் ‘புயல்’. இக்கதை விளிம்புநிலை மனிதர்களின் குடும்ப வாழ்வைப் பேசுகிறது.
இதைப்போலத்தான் எல்லாக் கட்டுரைகளும் இருக்கிறது. ‘அலையும் நுரையும்’ கட்டுரையை வாசிக்கும்போது எழுத்தாளர் கி.ரா.வின் ‘கதவு’ சிறுகதையைப் பற்றியும், ‘கதவை தட்டும் காமம்’ என்ற கட்டுரையில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘மௌனம் ஒரு பாஷை’ என்ற சிறுகதையைப் பற்றியும், அதேபோல ‘குருதிக் கடன்’ என்ற கட்டுரையின் மூலமாக எழுத்தாளர் சுஜாதாவின் ‘நகரம்’ என்ற சிறுகதையைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.
இவ்வாறு ஒவ்வொரு கட்டுரையின் வழியாகவும் எழுத்தாளர்களின் சிறுகதையுடன் ஆகச்சிறந்த வாழ்வியலை சொல்லிக் கொண்டே வருகிறார். அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் என்பதைத் தாண்டி வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம் என்று சொல்லலாம். ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் ஒரு பொன்மொழி போல அழகான வாழ்வியல் தத்துவங்களை பாவிச் சென்றிருக்கிறார்.
--------------------------------------
கதாவிலாசம்
எஸ்.இராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள் : 360
விலை. ரூ.400
--------------------------------------
*****


