அந்த இரண்டு சம்பவங்கள் மட்டும் என் வாழ்க்கையில் நடைபெறாமலிருந்திருந்தால் இன்று
நான் கூட ஒரு சராசரி மனிதனைப் போல், ஏன் அதற்கும் மேலாகவே வாழ்ந்து கொண்டிருப்பேன்.
இப்போதும் கூட, என்னுடன் படித்த சக மாணவர்களைப் பார்க்கும்போது அந்த எண்ணம் லேசாகத்
தோன்றி மறையும். அவர்களைப் பேராசிரியர்களாகவோ, வங்கி மேலாளர்களாகவோ சந்திக்கும்போதும்
சரி அல்லது அவர்கள் என்னை ஒரு விதக் கழிவிரக்கத்துடன் பார்க்கும்போதும் சரி, என் மனம்
கூசும். இவ்வளவுக்கும் நான் படிப்பில் அவர்களை விட எவ்வளவோ மேல்; வகுப்பில் முதல் மாணவன்
கூட… என்னுடைய வகுப்பு நண்பர்களெல்லாம் அவர்களின் தந்தைமார்களின் பிரதாபத்தால் எங்கள்
ஆசிரியர்களை வசீகரித்தார்களென்றால் நான் மட்டும் என் சுய திறமையாலேயே அவர்களைத் திரும்பிப்பார்க்க
வைத்தேன் என்றால் உங்களுக்கே கூட ஆச்சரியமாக இருக்கும்.
நான், ராதாகிருஷ்ணன், மயில்சாமி மூன்று பேரும் முதல் பெஞ்ச் மாணவர்கள். ”என்ன, நீ
செந்தூரார் பையனா?” என்று ஒரு ஆசிரியர் ராதாகிருஷ்ணனைப் பார்த்து கேட்பார். இன்னொரு
ஆசிரியர், “சார், நான் இவனை ஏரோபிளேன்னுதான் கூப்பிடுவேன்” என்பார். காரணம், அவன் தந்தை
அப்பொழுது கைத்தறி வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார் (இன்று ராதாகிருஷ்ணன்
பறந்து கொண்டிருக்கிறான். மன்னிக்கவும், பறந்து கொண்டிருக்கிறார்). மயில்சாமியின் தந்தை
ஜவுளிக்கடை வைத்திருந்தார். ”தம்பி, உன் கடையில டெயிலர்ட்ட சொல்லி ஒரு டஸ்ட்டர் தெச்சட்டு
வாயேன்” என்று ஒரு ஆசிரியர் கோரிக்கை விடுப்பார். டஸ்ட்டர் வந்ததும் வகுப்பே இது மயில்சாமி
டஸ்ட்டர் என்று கொண்டாடும். இந்த இருவருக்கும் நடுவில் நான் மட்டும் ‘ஙே’ என்று விழித்துக் கொண்டிருப்பேன். ஒரு கூலித் தொழிலாளியின்
தந்தைக்கு என்ன அறிமுகம் இருக்க முடியும்! மனம் ஏங்கும்; நம்மை எந்த வாத்தியாருக்கும்
தெரியலியே என்று. ஆனால் அதற்கும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.
ஒரு முறை அம்மாவுக்காகக் கடைக்குச் சென்று சாமான் வாங்கிக்
கொண்டு வந்து கொண்டிருக்கும்போது என் தந்தை தமிழ் வாத்தியாருடன் வழியில் பேசிக்கொண்டிருந்தார்.
இது போதாதா எனக்கு… ஓடிப்போய் அப்பா என்று என் தந்தையின் கையைப் பிடித்ததும், ‘உங்க
பையனா?’ என்றார். என் அப்பா ‘ஆம்’ என்றதும் ‘நல்லா படிக்கிறான்’ என்றார். வீட்டிற்கு
போனதும் அப்பா அம்மாவிடம் சொன்னார். ‘பத்திரம் எழுதுறவர் பையனை பார்த்தேன், நம்ம பையனை
நல்லா படிக்கிறான்னு சொன்னார்; இவனை மாத்திரம் யாரு பாத்தாலும் நல்லா படிக்கிறன்னுதான்
சொல்றாங்க. ஆனா நம்ம பெரிய பையனை அப்படி ஒண்ணும் சொல்லக்காணோம்’. ஆம். இப்படி நானாகத்தான்
சுயமாக என் மதிப்பை சக ஆசிரியர்களிடமிருந்து சம்பாதித்துக் கொண்டேன். ஆனால், அதற்காக
நான் முதல் தேர்வு முடியும் வரை காத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் என் பராக்கிரமம்
வெளிப்படும். யார் இந்த பையன் என்று விழியை உயர்த்துவார்கள்.
ஒரு முறை ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, திருத்திய கட்டுரை
ஏடுகளைக் கொடுக்கும்போது, ஆங்கில ஆசிரியர் சண்முகம் சொன்னார். “தம்பி, உன்னுடைய கட்டுரையில ஒரு சின்ன தப்பு கூட இல்லடா;
மற்ற ஆசிரியர்கள் கிட்ட சொன்னப்ப கூட, அவனா… அவன் நல்லா படிப்பான் சார்னு சொன்னாங்கடா…
மாணவன்னா இப்பிடித்தான் இருக்கணும்” என்றார். ராதாகிருஷ்ணன் என் காதில் கிசுகிசுத்தான்,
“எப்பிடிரா இப்பிடி படிக்க முடியுது…” இதில் ஆச்சரியம் என்னவென்றால் இப்படிக் கேட்டவர்களெல்லாம்
இன்று பேராசிரியர்களாக, பேங்க் மேனேஜர்களாக இன்னும் என்னென்னவெல்லாமாகவோ இருக்கிறார்கள்.
ஆனால் நான் மட்டும்… காரணம், என் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட அந்த இரண்டு சம்பவங்கள்…
அன்று
சித்திரைப் புத்தாண்டு விடுமுறை. எங்கள் வீட்டின் அருகிலேயே ஒரு எலிமெண்ட்ரி ஸ்கூல்;
ஐந்தாம் வகுப்பு வரைக்கும் நான் அங்குதான் படித்தேன். விடுமுறை நாளென்றால் நண்பர்களெல்லோரும்
அங்குதான் கூடுவோம். கபடி, ஐஸ் விளையாட்டு, சமயத்தில் யாராவது புண்ணியவான் பேட் கொண்டு
வந்தால் கிரிக்கெட். அன்றும் ஆடினோம். மத்தியானம் ஆனதும், பசிக்குதுடா என்றபடி ஒவ்வொருவராக
ஜூட் விடத் தொடங்கினார்கள். இறுதியில் நான் மட்டும் எஞ்சியிருந்தேன்.
ஒரு மணிக்கு மில் சங்கு ஊதும்போதுதான் அம்மா புகையிலைக் குடோனில்
வேலை முடித்து வருவாள். மணி பன்னிரண்டரைதான் ஆகியிருக்கும்போல் தோன்றியது. சாவி அம்மாவிடம்
இருக்கும். எனவே வீட்டுக்கும் போக முடியாது. அந்தப் பள்ளியின் மைதானம் எல்லாம் மணலாகவே
இருக்கும். விளையாடும்போது கீழே விழுந்தால் கூட அடிபடாது. அதனாலேயே எங்களுக்கு அந்த
மைதானம் ரொம்பப் பிடிக்கும். யாருமில்லாததால் நான் மட்டும் மணலில் அமர்ந்தபடி கைகளால்
மணலை அளைந்தபடி இருந்தேன். அதில் ஒரு தனி சுகம் எனக்கு. அன்றும் அப்படித்தான் கைகளால்
மணலை அளைந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் அது என் கைக்குத் தட்டுப்பட்டது. அட, சாவி!
மிகவும் பழுப்பேறியிருந்தது யாரோ ரொம்ப நாள்களுக்கு முன் தொலைத்திருக்க வேண்டும்…
அப்போதுதான் எனக்கு அந்த விசித்திர எண்ணம் தோன்றியது. பள்ளிக்கூட
அறையின் பூட்டை இந்த சாவி திறக்குமா? உடனே செயல்படுத்தத் தொடங்கினேன். அந்த நேரம் பார்த்து,
வாட்ச்மேன் வர விதி விளையாடியது. என்னுடைய செய்கை சந்தேகத்தைத்தர, ‘யார்றா அது, அங்கெ
என்ன பண்றே?’ ஓடி வந்தார். நான் கையில் சாவியுடன்,சாவி பூட்டுடன். இது போதாதா அவருக்கு?
‘திருட வந்தியா?’ கேட்டபடி சட்டையைப் பிடித்தார். ‘இல்ல சார். இங்கெ இந்த சாவி கிடைச்சுது.
இந்த பூட்டைத் திறக்குமான்னு சும்மாவாச்சும் முயற்சி பண்ணேன்” உதறலில் டவுசர் நனைந்தது.
நிலைமையை மோசமாக்க வந்து சேர்ந்தார் அமிர்தசாமி வாத்தியார்.
நான் மூன்றாம்
வகுப்பு படிக்கும்போது எனக்கு வகுப்பாசிரியர் இந்த அமிர்தசாமி வாத்தியார். நான் ஆறு
வயது வரை பள்ளிக்குச் சென்றதில்லை. அதன்பின் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து
விட்டார் என் அப்பா. அந்த ஆசிரியருக்கு மாதம் ஒரு ரூபாய் சம்பளம். ஒன்றாம் அல்லது இரண்டாம்
வகுப்பு வரை, தமிழும் கணக்கும் மட்டும் சொல்லிக்கொடுப்பார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது.
அதற்கு மேல் அவராகவே மாணவர்களைக் கொண்டு அரசாங்கப் பள்ளியில் சேர்த்து விடுவார். விளையும்
பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல் நான் ஒரே வருடத்தில் முதல், இரண்டாம் வகுப்பு
தமிழ் மற்றும் கணக்கு முடித்து விட்டேன். அப்போது மாணவர்கள் சேர்க்கைக்கு அரசுப் பள்ளி
ஆசிரியர்கள் வீடு வீடாக வருவார்கள். எனவே இப்போது மாதிரி சட்ட திட்டங்கள் கிடையாது.
இருப்பினும் எனக்கு ஒரு சிக்கல் வந்தது. எங்கள் திண்ணைப்பள்ளி ஆசிரியர் ஒரு குரூப்பாக
மாணவர்களைக் கொண்டு சேர்ப்பார். ஒரு வருடமாக என்னுடன் படித்த மற்ற எல்லா மாணவர்களையும்
இரண்டாம் வகுப்பில் சேர்த்து விட்டு என்னை மட்டும் மூன்றாம் வகுப்பிற்கு சிபாரிசு செய்தார்.
இது அப்போது பொறுப்பிலிருந்த அமிர்தசாமிக்குப் பிடிக்கவில்லை. எவ்வளவோ சொல்லியும்,
என் திண்ணை ஆசிரியர் மசியவில்லை; மாறாக என் பராக்கிரமத்தைப்பற்றி விலாவாரியாகச்சொல்லி
மூன்றாவதில் சேர்த்து விட்டார். அப்போது ஆரம்பித்தது வினை. என்னை மீறி நீ மூன்றாவதுக்கு
வந்திருக்கிறாயா, உன்னை பார்த்துக்கொள்(ல்)கிறேன் என்று கருவினார்.
சொல்லி
வைத்தது போல் முதல் நாளே என்னைக் க்ளீன் போல்டாக்கினார். அங்கு மாலையில் வகுப்புகள்
முடியும் நேரத்தில் பாடம் நடத்த மாட்டார்கள். மாறாக, ’குத்தடி குத்தடி சைலக்கா, குனிஞ்சு
குத்தடி சைலக்கா…’ போன்ற பாடல்களை மாணவ மாணவியர் பாட வேண்டும். திண்ணை இது எதைப்பற்றியும்
சொல்லிக்கொடுத்ததில்லை. பாடம் மட்டுமே நடத்தியிருக்கிறார். பேக்கு மாதிரி விழித்துக்கொண்டு
நிற்க என்னை வசமாக மாட்டினார் அமிர்தசாமி. ’நீ லாயக்கில்லை, இரண்டாம் வகுப்புக்கு உன்
பழைய நண்பர்களுடன் போய்ச்சேர்’ என்று டீஸ் செய்ய ஆரம்பித்தார். எனக்கு இரவுகளில் உறக்கம்
வராமல் புரண்டேன். மானசீகமாக என் திண்ணை வாத்தியாரைத் திட்டினேன். பேசாமல் இரண்டாம்
வகுப்புக்கே போய் விடலாமா என்று எண்ணினேன்.
நல்ல வேளை, அப்போது நடந்த மறு வகுப்பு பிரிப்பில் நான் பேகம் டீச்சரிடம் மாற்றப்பட்டேனோ,
தப்பித்தேன். அந்த டீச்சர் நடத்திய முதல் டிக்டேஷன் டெஸ்டில் நான் ஒருவன் மட்டுமே தவறில்லாமல்
எழுதி கைதட்டல் பெற்றேன். அப்போது ஒரு வகுப்புக்கும் இன்னொரு வகுப்புக்கும் தடுப்புகள்
கிடையாது. எனவே, இதை பக்கத்து வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த அமிர்தசாமி கட்டாயம்
கவனித்திருக்க வேண்டும். ஆனாலும், ஏனோ அவருக்கு மட்டும் என் மேல் வன்மம் குறையவேயில்லை.
அதன்பின் ஐந்தாம் வகுப்பு முடித்து உயர் நிலைப் பள்ளிக்குச் சென்று விட்டேன்.
இப்போது
நீண்ட இடைவேளைக்குப்பின் அவருக்கு சந்தர்ப்பம் வாய்த்தது. வாட்ச்மேனிடம் என்ன விஷயம்
என்று வினவினார். அவன் சொல்லச் சொல்ல என்னை அப்படியே கொத்தாகத் தூக்கினார். “ராஸ்கல்,
நீ அப்பவே மூணாவது வந்தவன்தானேடா, அதான் இப்ப இந்த லெவலுக்கு வந்திருக்கே” என்றபடி
ஓங்கி அறைந்தார். வாட்சுமேனும் புதுசு; அவனுக்கு என்னைப் பற்றித் தெரிய நியாயமில்லை.
‘இவனை இப்பிடியே விட்டா சரி வர மாட்டான். நட, ஸ்டேஷனுக்குக் கொண்டு போய்டலாம்’ என்றவரிடம்,
”சார், சார் இந்த ஒரு தடவை… தெரியாம செஞ்சிட்டேன்” என்று கெஞ்சினேன். மசியவில்லை.
ஸ்கூல் அருகிலேயே போலீஸ் ஸ்டேஷன். நெட்டித்தள்ளிக் கொண்டு போனார்கள். என்ன என்று இன்ஸ்பெக்டர்
கேட்டதும் திருட்டு கேஸ் என்றார்கள். ’அடப்பாவிகளா, உங்களுக்கெல்லாம் இதயமே கிடையாதா.
மிஞ்சி மிஞ்சிப் போனா பஞ்சாயத்து போர்டு ஸ்கூல்ல ஒரு நாலு பெஞ்ச், ஒரு டேபிள் சேர்
இருக்குமா… நானோ பூஞ்சை, ஒல்லிப்பிச்சான் அதுகளைத் தூக்கக்கூட முடியாது. என்னைப்போயி
திருடன்னு பிராது கொடுக்கிறாங்களே’ மனதிற்குள் அரற்றினேன். ‘படிக்கிற வயசிலே திருட்டா,’ இன்ஸ்பெக்டர் பொளேர் என்று பொடனியில் அறைந்தார்.
அதற்குள் விஷயம் பரவி என் தந்தையும், தாயும், பெரியப்பாவும் மற்றவர்களும் வந்து விட்டார்கள்.
‘எம் பைய அப்பிடிப்பட்டவனில்லே, ஏதோ தெரியாம செஞ்சுட்டான். இந்த ஒரு தடவை வுட்ருங்க’
என்று என் தந்தை எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் காலில் விழாத குறையாகக் கெஞ்சினார். ஒரு
வழியாக பஞ்சாயத்து பேசி, இன்ஸ்பெக்டர் கடுமையாக எச்சரித்து அனுப்பினார்.
இதன் பிறகு
பள்ளிக்குச் சென்றபோது இதனுடைய தாக்கம் நன்றாகவே தெரிந்தது. பள்ளியில் யார் எதைத் தொலைத்தாலும்
என்னை சந்தேகக்கண் கொண்டு பார்க்க ஆரம்பித்தார்கள். போலீஸ் ஸ்டேஷன் பற்றி பாடங்களில்
வரும்போதெல்லாம், பாடம் நடத்தும் ஆசிரியர் ஜெயில் பத்தி ஏதாவது சந்தேகமிருந்தா என்னிடம்
கேட்டுக்கொள்ளச் சொல்வார். எல்லோரும் சிரிப்பார்கள். இவ்வளவுக்கிடையிலும் ஒரு ஆறுதல்
இருந்ததென்றால் அது சண்முகம் ஆசிரியர்தான். ’தம்பி, நீ இதைப் பத்தியெல்லாம் கவலைப்படாதே;
நல்லாப் படி. மார்க் வாங்கு. வசதியில்லைன்னு பயப்படாதே. நான் பாங்க்ல லோன் வாங்கித்
தர்றேன், தெரிஞ்ச மானேஜர் இருக்காரு’ என்று உற்சாகமூட்டினார். இதே வெறியில் இரண்டு
வருடங்கள் படித்தேன். எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நன்றாக எழுதினேன். விடுமுறையை அனுபவிக்க
ஆரம்பித்தேன்.
வளர்ந்து
விட்ட காரணத்தால் அப்போதெல்லாம் விளையாட்டை தவிர்த்து, பொது நூலகம் செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தேன்.
தவிரவும் சேரப்போகும் கல்லூரிகளின் விளம்பரங்களை எதிர்பார்த்தும், ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளும்
நோக்கத்துடனும் ஆங்கில செய்தித்தாள்களைப் படிப்பதற்காகப் போய்க்கொண்டிருந்தேன். அப்போதுதான்
இரண்டாம் முறையாக என் வாழ்க்கையில் விதி விளையாடியது.
நூலகத்திற்குப் போகும் வழியில் ஒரு மின்மாற்றி இருந்தது.
ஒரு நாள் நூலகத்திற்குப் போகும்போது இரண்டு லைன்மேன்கள் அதைப் பழுது பார்க்க வந்தார்கள்.
ஒருவர் அருகிலுள்ள கம்பத்தில் ஏறத்தயாராகும் முன், ’அண்ணே, டிரான்ஸ்பார்மரை ஆப் பண்ணுங்கண்ணே’
என்றார். உடனே அடுத்தவர் அதன் முன்னே சென்று, ஒரு குழாய் போன்ற லீவரைக் கீழே இழுத்து
வலப்புறம் தள்ள மேலே ட்ரான்ஸ்பார்மரின் மூன்று பேஸ்களும் செயலிழந்தன. இது எனக்கு மிகவும்
ஆச்சரியமாக இருந்தது. அதுவும் நான் எஸ்.எஸ்.எல்.சியில்
விருப்பப்பாடம் கணிதம். எங்களையெல்லாம் மற்ற மாணவர்கள் எஞ்ஜினியர்ஸ் என்பார்கள். அந்த
நேரத்தில் என்னை ஒரு எலக்ட்ரிகல் எஞ்ஜினியராகக் கற்பனை செய்து கொண்டு அவர்கள் செய்யும்
வேலைகளை மும்முரமாகக் கவனிக்க ஆரம்பித்தேன். வேலை முடிந்ததும் மீண்டும் அந்த லீவரை
ரிவர்ஸில் கொண்டு வந்து ட்ரான்ஸ்பார்மருக்கு உயிரூட்டினார்.
திரும்பச் செல்லும்போது, ‘ஏண்ணே, லாக் பண்ணலியா?’ என்று கேட்க,
’சாவியை எங்கியோ தொலைச்சிட்டேம்பா’, சொல்லியபடி ஒரு நட்டை செருகி போல்டைப்போட்டார்.
பின் இருவரும் நடக்க ஆரம்பித்தனர். நானும் அங்கிருந்து கிளம்பினேன்.
இது நடந்து
ஒரு பத்து நாளிருக்கும். நான் நூலகத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தேன். லேசாக இருட்ட
ஆரம்பித்திருந்தது. கடைகளிலும் வீதியிலும் மின் விளக்குகள் எரியத் தொடங்கியிருந்தன.
ட்ரான்ஸ்பார்மரை நெருங்கியதும் என் மூளையில் ’பளிச்’. ’இப்ப இந்த ட்ரான்ஸ்பார்மரை ஆப்
செஞ்சு பாக்கலாமா?’ நீ ஒரு எலக்ட்ரிகல் எஞ்சினியர்
ஆகப்போகிறாய் என்று உள்மனது ஓத மெதுவே அதை நோக்கிச்சென்றேன்.
அப்போது அந்த வழியே யாரோ வரவே சற்றே தாமதித்தேன். என்னை அந்த
யாரோ தாண்டிச்சென்றதும் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு நான் ட்ரான்ஸ்பார்மரை நெருங்கினேன்.
போல்ட்டிலிருந்து நட்டை உருவி,அந்த லைன்மேன் செய்தது போல் லீவரைக் கீழே இழுத்து வலப்புறம்
தள்ள, அனைத்து விளக்குகளும் அணைந்து எங்கும் ஒரே இருட்டு.
”டேய் யார்றாது, ட்ரான்ஸ்பார்மர்ல கை வச்சது?” சத்தம் கேட்டதும்தான்
என்னை யாரோ கவனித்திருக்கிறார்கள் என்று உணர்ந்தேன்.
ட்ரான்ஸ்பார்மரைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதா, இல்லை,
ஓடிவிடலாமா என்று யோசித்து முடிப்பதற்குள் சத்தம் போட்டவர் அருகில் வந்து விட்டார்.
இனி இருந்தால் ஆபத்து என்று உள்மனம் சொல்ல நானும் ஓட ஆரம்பித்தேன். உடனே அவர்,”திருடன்,திருடன்”
என்று கத்த, அருகில் கடையில் இருந்தவர்களும் சேர்ந்து துரத்தினர். கடைசியில் நான் மாட்டிக்கொண்டேன்.
அதற்குள் ஒருவர் ட்ரான்ஸ்பார்மரை சரி செய்து விட என்னை நன்றாக வெளிச்சத்தில் பார்த்தனர்.
என் ஸ்கூல் அனுபவத்தை முன்பே அறிந்த ஒருவர் அங்கேயிருந்தார். ” ஓ நீதானா, அங்க இங்கன்னு
இப்ப ட்ரான்ஸ்பார்மரை ஆப் பண்ணி திருட ஆரம்பிச்சுட்டியா”
“இல்ல சார்… சும்மா இந்த ட்ரான்ஸ்பார்மரை… ஆஃப் பண்ணா…”
உளறினேன்.
”பையனை பார்த்தா சின்னவனாத் தெரியறான், இவ்வளவு வேலை செய்றானா?”
கூட்டத்தில் ஒருவர். உடனே அங்கிருந்தவர்களில் இரண்டு மூன்று பேர் தர்ம அடி போட ஆரம்பித்தார்கள்.
ஒருவர் தடுத்து, ’ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆய்டப்போகுது; பேசாம போலீஸ்ல ஒப்படைச்சுடுங்க’
அறிவுறுத்தினார்.
மீண்டும் அதே போலீஸ் ஸ்டேஷன்; அதே சப் இன்ஸ்பக்டர். ”வாடா,
இப்ப என்ன?” விஷயம் கேள்விப்பட்டதும் என் சட்டையை உருவி முதுகில் சாட்டையால் நாலு விளாறு
விளாறினார். நான் ஐயோ என்று கதறும் சத்தம் கேட்டு என் தந்தை வந்து விட்டார். ”சார்,
சின்னப்பையன்…” குறுக்கே வந்த என் அப்பாவைப் பிடித்துத் தள்ளினார்.
”தாளி, அன்னிக்கே உன்னை பெண்டு எடுத்திருக்கணும். விட்டது
தப்பாப் போச்சு”
“சார் சார், அப்படியெல்லாம் சொல்லாதீங்க” என்ற அப்பாவிடம்,
“மரியாதையா இங்கிருந்து போய்டு. இல்லைன்னா, நீ சொல்லித்தான் உம் பையன் இப்பிடி பண்ணான்னு
சொல்லி உன்னையும் தூக்கி உள்ளெ போட்ருவேன்… கான்ஸ்டபிள் அந்த ஆளை முதல்லெ வெளியெ
தள்ளு”
உடனே கான்ஸ்டபிள் என் அப்பாவை நோக்கிச்செல்ல, “ஏண்டா, உம்புத்தி
இப்பிடிப்போகுது” என்று தலையிலடித்தபடி அவராகவே வெளியேறினார்.
மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர் படுத்தப்பட்டபோது, அரசாங்க சொத்தை
சேதப்படுத்த முனைந்தது, ஊர் அமைதிக்குப் பங்கம் விளைவிக்க முற்பட்டது, திருட முற்பட்டது…
போன்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. குற்றங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டும்,
அதே சமயம் குற்றம் ஏதும் நடைபெறாததாலும் என் வயது பதினாறைத் தாண்டாததையும் வைத்து என்னை
நாற்பத்தைந்து நாட்கள் சீர்திருத்தப் பள்ளியில் வைக்க உத்தரவிட்டார்.
நான் வெளியே வந்த அன்றுதான் எஸ்.எஸ்.எல்.சி
ரிசல்ட். நான் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றிருந்தேன். பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சியில்
முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு ஒவ்வொரு வருடமும் வாட்ச் பரிசளிப்பது வழக்கம். பள்ளிக்கு
மார்க் சீட் வாங்கச் சென்றபோது, எல்லோரும்
‘எப்படா ஜெயில்லருந்து ரிலீசானே’ என்று கேட்டனர். வேதனை, அவமானம், தலைகுனிவு
ஒன்று சேர்ந்து கண்ணீராக வழிந்தது. மெளனமாக வெளியேறும்போது ஒரு ஆசிரியர் தலைமையாசிரியரிடம்
கேட்டார். “சார் இந்த வருஷம் பர்ஸ்ட் பிரைஸ் இந்த பையனுக்குத்தானே கொடுக்கணும்”
“அதெப்படிங்க?” என்று அவசரமாக மறுத்தார் தலைமையாசிரியர்.
“டிஸிப்ளின்னு ஒண்ணு இருக்கல்ல” என்றார். ”சார் சொல்றதுதான் சரி” என்று ஆமோதித்தார்கள்
சக ஆசிரியர்கள்.
ஒரு வாரம் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தேன்.
மேலே படிக்க ஆசை. அப்பாவும் அம்மாவும் என்னோடு முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. தவிரவும்
வசதியும் இல்லை. சரி இப்படியே இருந்தால் வேஸ்ட் என்றெண்ணியபடி சண்முகம் ஆசிரியரைப்
பார்க்கச் சென்றேன். அவர்தானே சொன்னார், மேலே படிக்க வங்கியில் லோன் கொடுப்பார்களென்று.
அவரைப்பார்த்தபோது, ‘என்னப்பா?’ என்றார். தயங்கி தயங்கிக்கேட்டேன். ஒன்றும் சொல்லாமல்
அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்து பரிதாபப்பட்ட அவரது துணைவியார், ”பாவம் ஹெல்ப்
பண்ணுங்களே, பையன் நலலா மார்க் வாங்கியிருக்கிறானே…” என்றார். உடனே எழுந்து என்னை அழைத்துக்கொண்டுப்
புறப்பட்டார்.
வங்கியில் மேலாளரைப் பார்த்துப் பேசும்போது எல்லாம் நல்லபடியாகவே
போய்க்கொண்டிருந்தது, மேனேஜரின் அறைக்குள் ஹெட்கிளார்க் வரும் வரை. எங்கள் சம்பாஷணையை
கேட்ட அவர், ‘சார், இந்தப் பையனுக்கா லோன் தர்றீங்க. இவன் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவனாச்சே‘
என்று போட்டுடைத்தார். அதற்குப்பின் மேனேஜர் ஒற்றை வார்த்தையில் ஸாரி என்றார்.
“வீட்டிலெயே எத்தனை நாள்தான் இருப்பே, வேலை வெட்டி இல்லாமே”,
அப்பா சொன்னதோடு நிற்காமல் தனக்குத் தெரிந்தவர்களிடம் கூட்டிப்போனார். என்னைப்பற்றி
அனைவருக்கும் தெரிந்திருந்ததால் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லித்தட்டிக் கழித்தார்கள்.
கடைசியில் வெளியூருக்குக் கூட்டிப்போய் ஒரு ரைஸ்மில்லில் சேர்த்து விட்டார். நன்றாகப்
படித்திருந்தும் வசதியில்லாததால் வேலைக்கு அனுப்புவதாக அப்பா சொன்னார். உரிமையாளரும்
என் மேல் இரக்கப்பட்டு அங்கு வரும் மூட்டைகளை, வெளியில் செல்லும் மூட்டைகளை கணக்கு
வைப்பது. அரவைக் கணக்கை சரி பார்ப்பது போன்ற வேலைகளை சொல்லி சம்பளம் மாதம் நூற்றைம்பது
ரூபாய் என்றார். சமயத்தில் இரவில் லோடு வந்தால் இரவிலும் வேலையிருக்கும் என்று கண்டிஷன்
போட்டார். சேர்ந்ததிலிருந்து வேலை நன்றாகவே போய்க்கொண்டிருந்தது, ஒரு நாள் போலீஸ் என்
வீட்டுக்கு வரும் வரை. முந்திய இரவு நிறைய லாரிகள் வந்ததால் அன்று வேலை முடிய ஏறத்தாழ
விடியற்காலையானது. ஓனர் மறு நாள் லேட்டாக வந்தால் போதுமென்று சொல்லியிருந்தார். எனவே
தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது அம்மா வந்து எழுப்பினாள்,’டேய், போலீஸ் வந்திருக்குடா,
நம்ம வீட்டுக்கு”. ஏற்கனவே நிறைய அனுபவமானதால் அலறிக்கொண்டு எழுந்து வெளியே வந்தேன்.
ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர் கூப்பிட்டதாக சொன்னார்கள். ‘என்ன சார் விஷயம்…?’என்று தயங்கியவனிடம்,
‘தொரை, சொன்னாத்தான் வருவீங்களோ, சும்ம வாடா” இழுத்துக் கொண்டு சென்றார்கள்.
ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர், ’சொல்லுடா, நேத்து நடந்த திருட்டில
உன் பங்கென்ன?’என்று கேட்டார்.
“ஐயோ சார், நான் இப்பத்தான் ஒழுங்கா வேலைக்குப் போயிட்டிருக்கேன்.
இந்த மாதிரி தப்புத்தண்டாவுக்கெல்லாம் போக மாட்டேன்” கதறினேன்.
”இத பார், நேத்து ராத்திரி செட்டியார் கடையில புகுந்து மூணு
பொட்டி சிகரெட்(சிகரெட் பிடித்தல் உடல் நலத்திற்குத் தீங்கானது), நாலு பண்டல் பீடி
திருடியிருக்கீங்க. மரியாதையா யார் யார் சேந்து பண்ணதுன்னு சொல்லிட்டா தப்பிச்சீங்க…
இல்லே, மகனே கைமா பண்ணிடுவேன் ஜாக்கிரதை”
”சார் நான் நேத்து
ராத்திரி பூரா ரைஸ்மில்லிலதான் இருந்தேன்…”
”ஓ, அலிபி கிரியேட் பண்ற அளவுக்கு வளர்ந்திட்டியா?”
’நான் சத்தியமாக’ என்று அரற்றியதும் என்ன தோன்றியதோ
தெரியவில்லை, இன்ஸ்பெக்டர் ஒரு கான்ஸ்டபிளை அழைத்து என்னைக் கூட்டிப்போய் தகவல் சரிதானா
என்று பார்க்கச் சொன்னார். ’தலை தப்பியது யார் புண்ணியமோ’ நினைத்தபடி போலீஸுடன் ரைஸ்மில்
சென்றேன். போலீசைப் பார்த்ததும் ஓனர் நெற்றி சுருங்கியது. ‘சார், நேத்து நைட் இவன்
உங்க மில்லிலதான் இருந்தானா?’ என்ற போலீசின் கேள்விக்கு ஆமென்றார். அப்பாடா என்று பெருமூச்சு
விட்டேன். போலீஸுக்கு ஏமாற்றம். ’ஏன் கேக்கறீங்க’ ஓனர் வினவினார். ’ஒரு திருட்டு கேஸ்
சம்பந்தமா இவனை விசாரிக்க வேண்டியிருந்தது. அதனாலெதான்’ என்றதும் திருட்டா என்று திடுக்கிட்டு
என்னைப் பார்த்தார் ஓனர். ‘இவனைப்பத்தித் தெரியாதா உங்களுக்கு’ என்றபடி என் சுயபுராணத்தை
அரங்கேற்றினார்கள் போலீஸார்.
’என்னை அப்படிப்பார்க்காதீர்கள்,
நான் அப்படிப்பட்டவனில்லை’ என்பது போல் என் முதலாளியைப் பார்த்தேன்.
‘சரி சார், அப்ப நாங்க வர்றோம்’ போலீசார்
நடையைக்கட்ட ஓனர் என்னை அழைத்தார். ‘இந்தா தம்பி பத்து நாள் சம்பளம். நீ நாளையிலிருந்து
வேலைக்கு வர வேண்டாம்”
வீட்டில் வெறித்தபடியே உட்கார்ந்திருந்தேன். பைத்தியம் பிடிக்கும்போல்
இருந்தது. சற்றே வெளியே சென்றால் தேவலாமென்று கருதிக் கிளம்பினேன். மனம் போன போக்கில்
நடந்தவனை ஒரு கும்பல் அணுகியது. ‘எங்க கூட சேந்துக்கிறியா, எல்லாத்துக்கும் சம பங்கு’
என்றான் தலைவன் போலிருந்தவன்.
“நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு புரியலியே’’
“இதப் பார்றா, ஐயா
இவ்ளோ சாதுவா இருக்கார்” என்று கிண்டலடித்தவனை கையமர்த்திவிட்டு முதலில் பேசியவனே மீண்டும்
பேசினான்.
“ஸாரி, நீங்க நெனைக்கற
மாதிரி ஆள் இல்ல நான்” என்றேன்.
“இதப்பாருப்பா, போலீஸ் கண்ணு எப்ப உன் மேல விழுந்ததோ, அதுக்குப்பிறகு
நீ எங்க ஏறி நின்னு கத்தினாலும் எடுபடாது. யாரு உன்னை வேலைக்கும் எடுத்துக்கமாட்டாங்க;
அப்பிடியே எடுத்தாலும் எது காணாமப்போனாலும் நீதாம்பாங்க. பேசாமே நாங்க சொல்றதைக்கேள்”
ஆளாளுக்கு மாறி மாறிக் கரைத்தனர். பக்கத்தில் வண்ணார் ஓங்கி ஓங்கி அடித்து துவைக்கும்
சத்தம் கேட்டது. இறுதியாக ஒத்துக்கொண்டேன்.
அன்றிரவே என் முதல் அரங்கேற்றம் ஆரம்பமானது.’ஆமா நீ கம்பியில
பூட்டை நல்லாத் திறப்பியாமே?’ கேள்விக்கு பதில் பேசாமல் நடந்தேன். ஆயிற்று; முதல் போனி
முடிந்தது. சுளையாக என் பங்காக அறுநூறு ரூபாய் கிடைத்தது. ’எப்பவாவது மாட்டிக்கிட்டா
உயிரே போனாலும் காட்டிக்கொடுக்கூடாது’ என்றார்கள். தலையாட்டினேன். ‘பரவாயில்லையே, ரைஸ்மில்லில்
இது நான்கு மாத சம்பளம்.’. மனம் குதூகலித்தது. அதற்குப்பிறகு நாலைந்து முறை வெற்றிகரமாக
நடந்தது. ஒருமுறை எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டேன். அன்று சிலேட்டில் என் பெயர், நம்பர்
எழுதி போட்டோ எடுத்தார்கள். அதன்பின் என் போட்டோ பஸ் ஸ்டேண்ட், ரெயில்வே ஸ்டேஷன் என்று
நிறையப்பேர் கூடும் இடத்தில் இவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்ற வாசகத்துடன் வைக்கப்பட்டது.
அதனால்தான் இப்போதும் என் நண்பர்களை எப்போதாவது எங்காவது பார்த்தால் தலை குனிந்து நடக்கிறேன்.
இதற்கு யாரைக் குற்றம் சொல்ல?
அன்று பொங்கல் தினம்.
சன் டிவியில் கஜினி படம். படத்தின் துவக்கத்தில் ஒரு டாக்டர் விளக்கிக் கொண்டிருந்தார்.
‘இதோ மூளையின் இந்த பாகமான செரிப்ரம் என்ற பகுதிதான் நம்முடைய வெறுப்பு, கோபம், அவ்வப்போது
தோன்றும் திடீர் எண்ணங்களுக்குக் காரணகர்த்தா’… ஆம், என் மூளையிலுள்ள செரிப்ரம் இரண்டு
முறை எனக்கு அப்படி கட்டளை இடாமல் இருந்திருந்தால் இன்று நானும் அவர்களைப்போல, ஏன்,
உஙகளைப்போல ஒரு நல்ல நிலையில் இருந்திருப்பேன்.


