மனிதர்கள்
நாம் பழகும் மனிதர்கள் பலவிதமாய்த்தான் இருப்பார்கள். இந்த நாட்டுக்கு வந்தது முதல் பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சமீபத்தில் கேலக்ஸியின் பாராட்டு விழாவில் அதீப் குழுமத் தலைவர் டாக்டர் அன்சாரி வாஹித் அவர்கள் பேசும் போது தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் ஆபீஸ் பாயை அப்படி அழைக்க விரும்புவதில்லை என்றும் அலுவலக உதவியாளர் என்றுதான் அழைப்பேன் என்று சொன்னார். உண்மையிலேயே பாராட்டக்கூடிய விசயம் இது. நம்மில் பலர் அப்படியெல்லாம் பார்ப்பதுமில்லை, யோசிப்பதுமில்லை.
இங்கே நாம் தங்கும் அறைகளில் பலதரப்பட்ட வேலைகளில் இருக்கும் நண்பர்களுடன்தான் தங்க வேண்டியிருக்கும். என்னைப் பொறுத்தவரை அறைக்கு வந்து விட்டால் எல்லாரும் ஒன்றுதான். அங்கே நம்ம ஊர் சாதீயப் படிநிலைபோலெல்லாம் வேலையை மனதில் வைத்துப் பிரித்துப் பார்ப்பதில்லை. இங்கு வந்தது முதல் என்னுடன் நெருங்கிப் பழகிய நண்பர் சாதாரணப் பணியில் இருந்தார். அறையில் பேசிக் கொண்டிருப்பது, வெளியில் செல்வது எல்லாமே அவருடன்தான். என்னுடன் இருந்த ஒரு இஞ்சினியர் ரொம்பவே தராதரம் பார்ப்பார். ‘நீங்க என்ன அவருடன் நெருக்கமா இருக்கீங்க… வெளியில போகும் போதெல்லாம் அவரோட போறீங்க‘ன்னு சொல்வார். ‘எனக்குப் பிடிச்சிருக்கு நான் அவரோட நட்பா இருக்கேன். அதுபோக என்னோட அவர் ஒத்துப் போறார், இதிலென்ன இருக்கு‘ என்பது ஆரம்ப நாட்களில் என்னிடமிருந்து வரும் பதிலாக இருந்தது. அதையே அவர் தொடரும் போது, ‘இங்க எல்லார்க்கிட்டயும் வாடகை ஒரு மாதிரித்தானே வாங்குறீங்க, இல்லை அவருக்கிட்ட குறைச்சலா வாங்குறீங்களா..? அப்படிப் பாக்குறதா இருந்தா உங்களை மாதிரி இஞ்சினியர்களை மட்டுமே அறை நண்பர்களாக ஆக்கியிருக்க வேண்டும்‘ என்று சற்று சூடாகவே சொல்ல ஆரம்பித்ததும்தான் அவர் பேசாமல் இருந்தார்.
இங்கே அன்சாரி அவர்கள் தனது பணியாளர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துப் பேசியதைப் பார்த்த போது அதனால்தான் அவர் இன்னும் உயரங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார் எனத் தோன்றியது. சமீபத்தில் சாதி பற்றிக் கேட்டார் என்ற பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் சுழன்றடித்தது. ஆளாளுக்கு அடித்து ஆடினார்கள். இந்த சமூக வலைத்தளங்கள் ஒரு கேடு. என்ன ஏது என்ற ஆராய்ச்சியெல்லாம் யாரும் செய்வதில்லை, வடிவது அடுத்தவனின் ரத்தம் என்றால் நாமும் அதை இன்னும் கொஞ்சம் அதிகமாக்குவோம் என்ற மனநிலைதான் நம் எல்லோருக்கும். என்ன சாதி எனக் கேட்ட இடத்தில் என் சாதி தெரிந்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர் கேள்வியை அழுத்தமாய் வைத்திருந்தால் போதும், பிறகு எப்படி நம்மிடம் மீண்டும் சாதியைக் கேட்க நினைப்பார்கள்..? படித்தோம், பட்டம் பெற்றோம், உயர் பதவியில் இருக்கிறோம் என்றெல்லாம் சொல்லும் போது உடைந்து அழுதோம் என்று ஏன் சொல்ல வேண்டும். அந்தக் கேள்வியை விட உடைந்து அழுவதுதான் கேவலம். கேள்வி கேட்டவரை உடைத்திருந்தால் நம் படிப்பிற்கு மட்டுமல்ல மண்ணிற்கும் பெருமைதானே.


